மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : கிணறு வெட்ட ரூ. 12,25,000 மானியம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

‘‘ஒவ்வொரு புயலுக்கும் அதிகம் பாதிக்கப் படுறது டெல்டா விவசாயிகள்தான்யா’’ எனச் சோகமாகச் சொன்னார் கண்ணம்மா.

காலை நேரத்திலும் வானம் இருட்டு கட்டி நின்றது. மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. குடையைப் பிடித்தபடி ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், நாய்களை அழைத்துக் கொண்டு ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும் நடந்துகொண்டிருந்தனர். அப்போது வியாபாரத்துக்காகச் சென்றுகொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவும் இணைந்துகொள்ள மூவரும் பேசியபடியே ஊருக்கு வெளியே செல்லும் பாதையில் நடந்துகொண்டிருந்தனர்.

‘‘மழை வந்தாலும் வெயில் அடிச்சாலும் உங்களுக்குக் கவலையே இல்லீங்க வாத்தியாரே’’ என நக்கலடித்தார் ஏரோட்டி ஏகாம்பரம். ‘‘எதை வெச்சு சொல்றன்னு எனக்குத் தெரியும்யா?’’ சிரித்தபடியே சொன்னார் கண்ணம்மா. “ஆமா இது பெரிய சிதம்பர ரகசியம். குடை வெச்சிருக்குறதை வெச்சுத் தானய்யா சொல்லுற’’ என்றார் வாத்தியார். ‘‘ஆமா... ஆமா சரியா கண்டுபிடிச்சுட்டீங்க ஐயா. வாத்தியாரா கொக்கா?’’ ஏகாம்பரத்தை நக்கலாகப் பார்த்தபடியே சொன்னார் கண்ணம்மா.

‘‘சிதம்பர ரகசியம்னு சொன்னதும்தான்யா ஞாபகத்துக்கு வருது. சிதம்பரம் கோயில் உள்ளக்கூட மழைத்தண்ணி நுழைஞ்சிடுச்சாம்ல’’ என்றார் ஏரோட்டி.

‘‘ஆமாய்யா... கோயிலை விடு. அங்க ரெண்டு நாள்ல தண்ணி வடிஞ்சிடும். ஆனா, இந்தப் புயல்ல டெல்டா விவசாயிங்கதான் ரொம்பச் சிரமப்பட்டுட்டாங்க. பல ஆயிரக்கணக்கான ஏக்கர்ல விளைஞ்சு நின்ன பயிர்கள் தண்ணியில மூழ்கிக் கிடக்குதாம். அரசாங்கம் இவங்களுக்கு நிறைய நிவாரணம் கொடுக்கணும். நம்ம வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, ஒட்டுமொத்த பாதிப்புகளையும் மத்திய குழுவோட பார்வைக்குக் கொண்டு போயிட்டாராம். மத்திய, மாநில அரசுகள்தான் இனி நிவாரணம் அறிவிக்கணும்’’ என்றார் வாத்தியார்.

‘‘ஒவ்வொரு புயலுக்கும் அதிகம் பாதிக்கப் படுறது டெல்டா விவசாயிகள்தான்யா’’ எனச் சோகமாகச் சொன்னார் கண்ணம்மா.

அடுத்த தகவலுக்கு தாவினார் வாத்தியார்...

‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துல ஏழைகளுக்கு ஆடு, மாடு கொட்டகை கட்டுறதுக்குப் பணம் கொடுக்குறாங்களாம். இது மத்திய, மாநில அரசுகள் ரெண்டும் சேர்ந்து செயல்படுத்துற திட்டமாம். இதுல பயன்பெற நினைக்குறவங்க 100 நாள் வேலை திட்டத்துல இருக்கணும். குறைஞ்சது 10 ஆடுக இல்லைன்னா 2 மாடுக வெச்சிருக்கணும். கொட்டகை கட்டுற இடத்தோட பட்டா பயனாளி பேர்ல இருக்கணும். அந்தப் பட்டாவோட ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைச்சு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பா அந்தந்தப் பகுதியில இருக்கக் கால்நடை மருத்துவர் இல்லைன்னா ஊராட்சி செயலாளரைப் பார்த்துக் கேக்கணும்’’ என்றார்.

‘‘எவ்வளவு தொகை கொடுப்பாங்க வாத்தியாரே’’ எதிர்பார்ப்புடன் கேட்டார் ஏகாம்பரம்.

‘‘அவசரப்படாத சொல்றேன். ரெண்டு மாடுகள் வெச்சிருந்தா 53,425 ரூபாய், 5 மாடுகள் வெச்சிருந்தா 81,580 ரூபாய். 10 ஆடுகள் வெச்சிருந்தா 1,02,135 ரூபாய், 20 ஆடுகள் வெச்சிருந்தா 1,40,520 ரூபாய் கொடுப்பாங்க. ஒரு வருஷத்துக்கு மொத்தம் 3,000 பேருக்குத்தான் கொடுப்பாங்களாம். நான் தகவலைச் சொல்லிட்டேன். வாங்குறதும் வாங்காததும் உன் சமர்த்து’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘நல்ல தகவல் சொன்னீங்க வாத்தியாரே... நானும் முயற்சி பண்ணிப் பார்க்குறேன்’’ என்றார் கண்ணம்மா.

‘‘வேற ஏதாவது திட்டங்கள் இருந்தாலும் சொல்லுங்க. எனக்குப் பயன்படலைன்னாலும் நாலு பேருக்குச் சொல்வேன்ல’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘இதுவும் 100 நாள் திட்டப் பயனாளி களுக்கானதுதான். சிறு, குறு விவசாயிகள் கிணறு வெட்டுறதுக்காக ஒரு திட்டம் இருக்கு தாம். மூணு விவசாயிக ஒண்ணு சேர்ந்து அரசு மானியத்துல கிணறு வெட்டிக்கலாமாம். வறட்சியான பகுதிகள்ல இருக்க ஏழை விவசாயிகள் இதுல பயன்பெறலாம்னு சொல் றாங்க. இதுல பயன்பெற சிறுகுறு விவசாயிக்கான சான்று, 100 நாள் வேலை அடையாள அட்டை, கிணறு வெட்டுற நிலத்தோட சிட்டா, பட்டா வோட அவங்கவங்க யூனியன் ஆபீஸ்ல இருக்க பி.டி.ஓ-வைப் பார்க்கணுமாம். இதுல மூணு விவசாயிகள் ஒண்ணு சேர்ந்து கிணறு வெட்டுன பிறகு, தண்ணியை நாங்க மூணு பேரும் பிரிச்சுக்கு வோம்னு ஒப்பந்தம் போட்டுக் கொடுக்கணும். அதைக் கொடுத்தா போதும். 12,25,000 ரூபாய் செலவுல சமுதாயத் திறந்தவெளிக் கிணறு அமைச்சுக் கொடுப்பாங்களாம். மேலும் விவரங்கள் வேணும்னா சம்பந்தப்பட்ட பி.டி.ஓவைப் பார்த்துக் கேட்டுக்கோங்க மக்களே’’ என்றார் வாத்தியார்.

‘‘ரொம்ப நன்றி வாத்தியாரே... இன்னிக்கு உபயோகமான தகவல் சொன்னீங்க. நீங்க மெதுவா வாங்க, நான் போய் வியாபாரத்தைப் பார்க்குறேன்’’ என்றபடி கண்ணம்மா விரைய முடிவுக்கு வந்தது மாநாடு.