மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : வெங்காயம் கோழிக்கால் நோய் தீர்க்கும் பூஞ்சணக்கொல்லி!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

சின்ன வெங்காயத்துல கோழிக்கால் நோய் தாக்குதலால வெங்காய விவசாயிகள் கவலையில இருக்காங்க.

“இது ரசாயனத்துல விளைஞ்ச மாதுளையா? இல்ல இயற்கையில விளைஞ்ச மாதுளையா?’னு சொல்லியே ஆகணும்’’ எனக் ‘காய்கறி’ கண்ணம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம்.

‘‘இயற்கையில விளைஞ்சதுதான்யா... ரசாயனத்துல விளைஞ்சது எதையும் நான் விக்கிறதில்லைனு உனக்குத்தான் தெரியுமே. அப்புறம் எதுக்கு கேள்வி கேட்டு இம்சை பண்ற. ஒண்ணு பழத்துக்குக் காசைக் கொடு... இல்லைன்னா இலவசமாகவே வெச்சுக்க. நான் யாவாரத்துக்குப் போகணும்’’ என்று எரிச்சலாகச் சொன்னார் காய்கறி கண்ணம்மா.

அப்போது அந்த வழியாக வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ‘‘சின்ன பிள்ளைங்க மாதிரி ஏன் ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க. அது இயற்கையில விளைஞ்ச மாதுளைதான்யா. அங்கப்பாரு உன்கூடச் சண்டைபோட்டுட்டு கூடையைக் கீழே வெச்சிருக்கு கண்ணம்மா. கூடையில இருக்கப் பழங்களைக் கொறிக்க எத்தனை அணில்கள் சுத்தி வருது பாருய்யா. ரசாயன உரம் போட்டு விளைஞ்ச பழமா, இயற்கை உரம் போட்டு விளைஞ்ச பழமானு மனுஷங்களைவிட மத்த உயிர்களுக்குத் தெரிஞ்சிடும்யா. அதான் அணில் ஆசையா வந்திருக்கு’’ என்றார்.

‘‘அது எனக்கும் தெரியும்யா... கண்ணம்மாவுக்கு அதைச் சரியா சொல்லத் தெரியுதான்னு செக் பண்ணிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்க வந்திட்டீங்க’’ என்று அசடு வழிந்தார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘‘இந்தியாவுல விவசாயம் ஒரு வாழ்க்கையா இருந்துச்சு. இந்த 50 வருஷத்துல வாழ்க்கையை வியாபாரமாக்கி இருக்கிறோம்’னு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வாரு. எல்லாமே வியா பாரமானதாலதான் இன்னிக்கு இத்தனை இம்சைகள்ல சிக்கிட்டுத் தவிக்கிறோம். காசுக்காகச் சாப்பிடுற பொருள்லயே ரசாயனத்தைச் சேர்க்குறாங்க... என்னத்தச் சொல்ல. நடுங்க வைக்கிற குளிர்லயும் இன்னிக்கு விவசாயிகள் டெல்லியில படுத்துக் கிடக்காங்களே அதுக்கு அடிப்படையே பெரும் வியாபாரிகளுக்கும் அரசுக்கும் இடையே நடக்குற வியாபாரம்தான... இங்க எல்லாமே வியாபாரமாகிப் போச்சுய்யா’’ வேதனையோடு சொன்னார் வாத்தியார்.

‘‘உண்மைதான் வாத்தியாரே. இந்த வேளாண் சட்டங்கள் விஷயத்துல மத்திய அரசு ஏன் இம்புட்டுப் பிடிவாதம் பிடிக்குறாங் கன்னு தெரியல. ‘விவசாயிகளோட நண்பன் மோடி’ங்கற தலைப்புல பா.ஜ.க-காரங்க டெல்டா மாவட்டங்கள்ல கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துனாங்களாம். இதுக்கு விவசாயிங்களை அழைச்சிக்கிட்டு வர்றதுக்குப் படாத பாடு பட்டுருக்காங்க. மூணு வேளாண் சட்டங்களையும் பத்தி கேள்வி மேல கேள்வி கேட்டு, விவசாயிங்க நிகழ்ச்சிக்கு வர மறுத்துட்டாங்களாம். விவசாயிங்க இல்லாமலேயே கூட்டத்த நடத்தியிருக்காங்க. இந்தச் சட்டங்களைப் பத்தி விளக்கிப் பேச வந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு விவசாயத்தைப் பத்தி எதுவும் பேசத் தெரியலையாம். ‘திமுக, காங்கிரஸ் காரங்கதான், இடைத்தரகர்கள்... அதனாலதான் வேளாண் சட்டங்களை எதிர்க்குறாங்க’னு அந்தப் பொண்ணு வாயில வந்ததை எல்லாம் அடிச்சி விட்டுருக்கு. ஆனா, அந்தச் சட்டத்துனால விவசாயிகளுக்கு என்ன நன்மைனு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையாம்’’ என்றார்.

‘‘இந்தியா முழுக்க இருக்கச் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வெச்சிருக்குது. கடனை வாங்கிக் கரும்பு நடவு செஞ்ச விவசாயிக பலபேரு கரும்பு விவசாயத்தையே கைவிட்டுட்டு வேற வெள்ளாமைக்குப் போயிட்டாங்க. அந்த நிலுவைத்தொகையை வாங்கிக் கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கல. ஆனா, சர்க்கரை ஆலைகளுக்கு 3,500 கோடி ரூபாய் மானியம் அறிவிச்சிருக்காரு மோடி ஜி. அதுல விவசாயிகளுக்கு உதவுற நோக்கத் தோடதான் ஆலைகளுக்கு மானியம் கொடுக்குறோம்னு சொல்லி வெந்த புண்ணுல வேல் பாய்ச்சியிருக்காரு’’ வருத்தத்துடன் சொன்னார் வாத்தியார்.

‘‘இது நல்ல கதையா இருக்கே. கடனை வாங்கி, நெற்றி வியர்வை நிலத்துல விழுக உழைச்சுக் கரும்பு விளைய வெச்சது நாங்க. வெட்டிகிட்டுப்போன கரும்புக்கு இன்னும் காசு கொடுக்கலை. ஆனா, அந்தக் கரும்பை அரைச்சு, சர்க்கரையாக்கி வித்துப் பணம் கம்பெனிக்கு வந்திடுச்சுல்ல. ஆக, அவங்க பொருளுக்கு அவங்க காசு வாங்கிட்டாங்க. ஆனா, விவசாயிகதான் வீதியில நிக்குறோம். இந்த லட்சணத்துல ஆலைகளுக்கு மானியம் வேற கொடுக்குறாங்களா... மானியம். இவங்களுக்கு கம்பெனிக்காரனையே வாழ வெச்சிட்டு விவசாயி வயித்துல அடிக்குறதே பொழப்பாப் போச்சு’’ எனக் கோபத்தில் கொதித்த ஏரோட்டியை, சாந்தப்படுத்திவிட்டு, அடுத்த தகவலைச் சொல்லத் தொடங்கினார், வாத்தியார்.

‘‘சின்ன வெங்காயத்துல கோழிக்கால் நோய் தாக்குதலால வெங்காய விவசாயிகள் கவலையில இருக்காங்க. இதுக்கு ஒரு தீர்வு சொல்லி இருக்காரு. திண்டுக்கல்லைச் சேர்ந்த நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோராஜ். திண்டுக்கல்ல ஒரு விவசாயி நடவு செஞ்ச வெங்காயத்துலயும் கோழிக்கால் பிரச்னை வந்திடுச்சாம். அவரு பிரிட்டோகிட்ட ஆலோசனைக் கேட்டிருக்காரு. அதுக்கு அவரு, ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் டிரைக்கோ டெர்மா ஹர்சானியத்தை 10 லிட்டர் தண்ணியில கலந்து தெளிக்கலாம். இது கிடைக்கலைன்னா பேசிலஸ் சப்டிலஸ், சூடோமோனஸைத் தலா 50 மி.லி எடுத்து 10 லிட்டர் தண்ணியில கலந்து தெளிக்கச் சொல்லியிருக்காரு. வாரம் ஒரு தடவை இதைத் தரைவழியாகவும் இலை வழியாகவும் கொடுத்திருக்காங்க. இதைச் சோதனை முயற்சியாதான் செஞ்சு பார்த்திருக்காங்க. ஏக்கருக்கு 8 டன் மகசூலும் கிடைச்சிருக்குது. இது சம்பந்தமா சந்தேகம் இருந்தா பிரிட்டோ ராஜ்கிட்ட கேக்கலாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘உண்மையிலயே நல்ல தகவல்தான்’’ என்ற கண்ணம்மா, கூடையை எடுத்துக்கொண்டு புறப்பட முடிவுக்கு வந்தது மாநாடு.