மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

பத்திரிகை ஆன்லைன்ல அனுப்புனா, மொய் பணத்தையும் போட்டோ எடுத்து நாம, வாட்ஸ்அப்ல அனுப்பிட வேண்டியதுதான்’’ சிரித்துக்கொண்டே சொன்னார் ஏரோட்டி.

ழைய மாட்டு வண்டி அருகே மாடுகளைப் பிடித்தபடி நின்றிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அப்போது அந்த வழியாக வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ‘‘என்னய்யா வெளியூர் பயணமா’’ எனக் கிண்டலாகக் கேட்டார்.

‘‘இந்த கொரோனா காலத்துல பயணம் ஒன்னுதான் கொறைச்சலாக்கும். சும்மா பக்கத்து ஊர்வரைக்கும் போயிட்டு வந்தேன். போறப்ப மாடுகளை இந்த வண்டியில கட்டி வெச்சுட்டுப் போனேன். இப்ப அவுத்து மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன். இந்த ஊரடங்கு எப்பத்தான் முடிவுக்கு வரும்னே தெரியலை. ஒரு வேலையும் ஆகமாட்டேங்குது’’ எரிச்சலாகச் சொன்னார் ஏகாம்பரம்.

“எப்ப பார்த்தாலும் புலம்பிக்கிட்டே இருக்காதய்யா...’’ என்று ஏகாம்பரத்தை வம்புக்கு இழுத்தபடியே மாநாட்டில் ஐக்கியமானார் ‘காய்கறி’ கண்ணம்மா. மூவரும் கூடியதும் தொடங்கியது மாநாடு.

‘‘நிலைமை இப்படியே போனா, நம்ம மக்கள் இதுக்கு பழகிடுவாங்க. இப்பவே பாதிபேர் பழகிட்டாங்க. எல்லாமே ஆன்லைன்னு ஆகிப்போச்சு. விவசாய பயிற்சிக்கூட ஆன்லைன்ல பட்டையைக் கிளப்புது. நம்ம பசுமை விகடன்லகூட ஆன்லைன்ல பயிற்சி கொடுக்குறாங்க. பசங்ககிட்ட செல்போனைக் கொடுக்காதீங்கன்னு சொல்லிகிட்டே இருந்த வாத்தியாருங்க, இப்ப, செல்போன்ல வகுப்பெடுத்துகிட்டு இருக்காங்க. ஒரு காலத்துல நேர்ல பார்த்து மரியாதை செஞ்சு, கல்யாணப் பத்திரிகை கொடுக்காட்டி கொலை பலியே நடக்கும். ஆனா, இப்ப ஆன்லைன்லயே பத்திரிகை அனுப்புறாங்க. ஊரே ஆன்லைன் மயமாகிப்போச்சு’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

“பத்திரிகை ஆன்லைன்ல அனுப்புனா, மொய் பணத்தையும் போட்டோ எடுத்து நாம, வாட்ஸ்அப்ல அனுப்பிட வேண்டியதுதான்’’ சிரித்துக்கொண்டே சொன்னார் ஏரோட்டி.

“அப்படி வேற எண்ணம் இருக்கா. நம்ம பசங்க விவரமான ஆளுங்க. ஆன்லைன்ல பத்திரிகை கொடுக்கும்போதே, மொய் பணத்தை ‘கூகுள் பே’ பண்ணிடுங்கன்னு பேங்க் அக்கவுன்ட் நம்பரையும் சேர்ந்து அனுப்பிடுறாங்க. இவங்ககிட்ட இருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’’ என்றார் கண்ணம்மா.

“இன்னிக்கு வாட்ஸ்அப் குரூப் ஒவ்வொன்னுலயும் அந்த மானியம், இந்த மானியம்னு தகவல் வந்துகிட்டே இருக்குது. இதுல எது உண்மை எது பொய்யின்னே தெரியலை வாத்தியாரே’’ சலித்துக்கொண்டார் கண்ணம்மா.

‘‘விவசாயத்துறையில மானியம், சலுகைகள் அதிகமா இருக்குது கண்ணம்மா. ஆனா, அதோட முழுமையான விவரம் விவசாயிகளுக்குத் தெரியறதில்லை. விவரம் தெரிஞ்ச விவசாயிக மட்டும் அதை வாங்கி அனுபவிக்கிறாங்க. இதுக்கு அதிகாரிகளை மட்டும் குத்தம் சொல்ல முடியாது. நம்ம தப்பும் இருக்குது. நம்ம பகுதியில இருக்க அக்ரி ஆபீஸுக்கு அப்பப்ப போயிட்டு வரணும். ஒரு திட்டம் வந்தா, தெரிஞ்சவங்க, அடிக்கடி வர்றவங்களுத்தான் கொடுப்பாங்க அதிகாரிங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘விளைபொருள்களை காய வைக்குற, சோலார் டிரையர் (சூரிய கூடார உலர்த்தி) அமைக்க மானியம் இருக்காம். ஒரு டிரையர், 400 சதுர அடி முதல் 1,000 சதுர அடிவரைக்கும் அமைச்சுக்கலாமாம். இதுக்கு 3 லட்சத்துல இருந்து 7 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவாகுமாம். அந்தச் செலவுத்தொகையில 60 சதவிகிதம் சிறு குறு, ஆதி திராவிடர், பெண் விவசாயிகளுக்கு மானியமாகக் கிடைக்குமாம். இதர விவசாயிகளுக்கு 50 சதவிகித தொகை மானியமா கொடுப்பாங்களாம். அதிகபட்சமாக 3.50 லட்ச ரூபாய் மானியமா வழங்கப்படுமாம். இப்படியொரு தகவல் வருதுய்யா. அது உண்மையா?’’ சந்தேகத்தோடு கேட்டார் ஏகாம்பரம்.

“உண்மைதான் ஏகாம்பரம். அந்த டிரையர் மூலமா, விவசாயிகள் அவங்க விளையவைக்குற நிலக்கடலை, கொப்பரைத் தேங்காய், கறிவேப்பிலை, வேர்க்கடலை, மிளகாய், வாழைப்பழம், மக்காச்சோளம், மல்லி, முந்திரி, கீரைகள்னு பலதையும் உலர்த்திக்கலாம். இது தொடர்பா இன்னும் விவரம் தெரிஞ்சுக்கணும், விண்ணப்பிக்கணும்னு நினைச்சா, அந்தந்த பகுதியில இருக்க விவசாய அலுவலகங்களுக்குப் போகணும்’’ என்றார் வாத்தியார்.

“வேற ஏதாவது மானியம் இருந்தாச் சொல்லுங்க வாத்தியாரே’’ என்றார் கண்ணம்மா.

“தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஒரு அறிக்கை கொடுத்திருக்காரு. அதைச் சொல்றேன்’’ என்ற வாத்தியார் விஷயத்தைச் சொல்லத் தொடங்கினார்.

“தூத்துக்குடி மாவட்டத்துல தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் அறிவிச்சிருக்காங்க. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்னு ஒரு திட்டம் இருக்கு. அந்தத் திட்டத்துல 2020-21-ம் வருஷத்துக்குத் தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும், ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கப் போறாங்களாம். 140 ஹெக்டேர்ல நடவு செய்றதுக்கு மா, கொய்யா, எலுமிச்சை, மாதுளை, பப்பாளி, சப்போட்டா கன்றுகளைக் கொடுக்கப் போறாங்களாம். பாரம்பர்ய வகை காய்கறி, பழப்பயிர்களைச் சாகுபடி செய்ற விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 15,000 ரூபாய்னு 20 ஹெக்டேருக்கு மானியம் தரப்போறாங்களாம்.

கத்திரி, மிளகாய், தக்காளி நாற்று வாங்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000, பாகல், வெண்டை, தர்பூசணி, புடல், சுரைக்காய் மாதிரியான காய்கறிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.10,000 மானியமா தரப்போறாங்களாம். முருங்கைச் சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000, உதிரிப்பூக்கள் சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு 16,000 ரூபாயும் கொடுக்கப் போறாங்களாம். வெங்காய சேமிப்புக் கிடங்கு அமைக்க ஒரு மெட்ரிக் டன் அளவுள்ள குடோனுக்கு 3,500 ரூபாய் கணக்குல 1,500 மெட்ரிக் டன் அளவுக்குக் குடோன் கட்டவும், சிப்பம் கட்டுற அறை கட்டுறதுக்கு, ஒரு அறைக்கு 2 லட்சம் ரூபாய் வீதம் 10 அறைகளுக்கு மானியம் கொடுக்கப்போறாங்களாம். இது மட்டுமில்லாம, வீட்டுத்தோட்டம், நிலப்போர்வை அமைக்க, தேனீப்பெட்டி, மண்புழு உரப்படுக்கைனு ஏகப்பட்ட மானியம் இருக்காம்’’ என்றார்.

‘‘ஆமா, இப்படித்தான் சொல்றாங்க. ஆனா, நேர்ல போய்க் கேட்டா, அதெல்லாம் முடிஞ்சுப் போச்சுனு சொல்றாங்க. வெட்டி அலைச்சலாப் போகுது’’ என்றார் ஏகாம்பரம்.

“உண்மைதான்யா... இதுல ஒரு விஷயம் இருக்குது. இந்த அறிவிப்பு மாவட்டத்துல இருக்க எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்காது. ஒவ்வொரு மானியமும் இத்தனை ஹெக்டேருக்குத்தான் கொடுக்கணும்னு வரையறை வெச்சிருப்பாங்க. அத்தனை ஹெக்டேருக்கு மட்டும்தான் கொடுக்க முடியும். அதனால, முந்துறவங்களுக்குத்தான் கிடைக்கும்’’ என்றார் வாத்தியார்.

‘‘இந்தத் திட்டம் எல்லா மாவட்டத்திலயும் இருக்கா வாத்தியாரே’’ ஆர்வமாகக் கேட்டார் கண்ணம்மா.

‘‘இல்லை கண்ணம்மா. தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படாத, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்கள்ல ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் செயல்படுது. அங்க மட்டும்தான் இந்த மானியம் கிடைக்கும். இதுல பயன்பெற விரும்புற விவசாயிகள், வயல்ல இருக்குற தோட்டக்கலைப் பயிர்கள் பெயரை அடங்கல்ல பதிவு செஞ்சிக்கணும். ரேஷன் கார்டு, அடங்கல், கம்ப்யூட்டர் சிட்டா, விவசாயி போட்டோ, ஆதார் அட்டை, பேங்க் பாஸ்புக், அனுபோக சான்று எல்லாத்திலயும் நகல் எடுத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்துல போய் விண்ணப்பிக்கணும்’’ என்றார் வாத்தியார்.

“சரிங்கய்யா...நேரமாச்சு. நான் மாடுகளைக் கொஞ்ச நேரம் மேய விடுறேன்’’ என ஏகாம்பரம் கிளம்ப, முடிவுக்கு வந்தது மாநாடு.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயிற்சி, கருத்தரங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகும் `தண்டோரா’, வேளாண் விளைபொருள்களை வாங்கவும் விற்கவும் வழிகாட்டும் ‘பசுமை சந்தை’ மற்றும் ‘இயற்கை வேளாண்மை-ஆய்வுப் பார்வையும் அறிவியல் உண்மையும்!’ ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.