
நான் வாய்க்கால்லயும் போவேன், வரப்புலயும் போவேன். அது என்னோட இஷ்டம். நீ எதுக்குய்யா இதெல்லலாம் கேக்கற’’ பதிலுக்கு நக்கலடித்தபடியே நகர்ந்தார் கண்ணம்மா.
வி “ஏய்... இந்தா புள்ள... அதென்ன ஹைவேஸ் ரோடுன்னு நினைச்சியா... வரப்பு மேல ஏறிப்போக மாட்டியா?’’ தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் காலால் தண்ணீரைத் தெளித்து விளையாடியபடியே நடந்துகொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவை அதட்டினார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம்.
“நான் வாய்க்கால்லயும் போவேன், வரப்புலயும் போவேன். அது என்னோட இஷ்டம். நீ எதுக்குய்யா இதெல்லலாம் கேக்கற’’ பதிலுக்கு நக்கலடித்தபடியே நகர்ந்தார் கண்ணம்மா.
அதே வரப்பில் குடை பிடித்தபடி வந்துகொண்டிருந்தார் வாத்தியார். சத்தத்தைக்கேட்டு நிமிர்ந்து பார்த்தவர், “என்ன கண்ணம்மா, ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி இருக்கு. என்ன விசேஷம்?’’ என்றார்.
“விசேஷம் எல்லாம் ஒன்னும் இல்லைய்யா... இன்னிக்குக் காய்கறி எல்லாம் சீக்கிரமே வித்துப்போச்சு. அதுதான் கொஞ்சம் சந்தோஷம். அது பொறுக்கலை அந்தாளுக்கு’’ என்று ஏரோட்டியைப் பார்த்து நக்கலாகச் சொன்னார்.
அதைக் கேட்டு வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஏரோட்டியும் அங்கு வர, தொடங்கியது அன்றைய மாநாடு.

“கண்ணம்மா ரொம்ப சந்தோஷமா இருக்க. நானும் ஒரு சந்தோஷமான செய்தியைச் சொல்றேன் கேட்டுக்க. சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கச் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியம் கொடுக்குறது உங்களுக்குத் தெரியும். அதோட இன்னொரு தகவல் சொல்றேன் கேட்டுக்குங்க. சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கப்போற விவசாயிகள், ஏற்கெனவே அமைச்ச விவசாயிகள் எல்லோருக்கும் கூடுதலா சில மானியங்களும், பொருள்களும் கொடுக்குது தோட்டக்கலைத்துறை. சொட்டு நீர்ப் பாசனம் அமைச்ச விவசாயிக்கு, நீர்த்தேக்க தொட்டி கட்ட ரூ.40,000, மின் மோட்டார் வாங்க ரூ.15,000, தண்ணி போற பி.வி.சி குழாய் வாங்க ரூ.10,000 மானியமா கொடுக்குறாங்க. இந்த மானியம் தேவைப்படுறவங்க, தோட்டக்கலைத்துறைக்குப் போய் மனு கொடுக்கணும்’’ என்றார் வாத்தியார்.
“உண்மையிலயே சந்தோஷமான சேதிதான் வாத்தியாரே. அதை வாங்க என்ன ஆவணம் கொண்டு போகணும்னும் சொல்லிடுங்க’’ எனக் கேட்டார் ஏகாம்பரம்.
“கிராம நிர்வாக அலுவலர் சான்று, சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகல், நிலத்தோட வரைபடம், கூட்டுநில வரைபடம், விவசாயிப் புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், குத்தகை நிலமாக இருந்தால் 7 வருஷத்துக்குக் குத்தகைக்குப் பதிவு செஞ்ச பத்திரம் எல்லாம் கொண்டு போகணும்’’ என்றார் வாத்தியார்.
“சரிங்க வாத்தியாரே... கொரோனா ஊரடங்குன்னு பொழப்பு இப்படி ஆகிப்போச்சே. ‘2020-ம் வருஷம் இந்தியா வல்லரசு ஆகும்’னு சொன்னாங்க. ஆனா இப்ப, கண்ணுக்குத் தெரியாத கிருமிக்குப் பயந்துகிட்டு இருக்கோம்’’ எனப் புலம்பினார் ஏரோட்டி.
“இதோட வாழப் பழகிக்கோங்கன்னு மத்திய மந்திரி சொல்றாரு. இனி, ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு தமிழ்நாட்டு முதலமைச்சர் சொல்லிட்டாரு. வேற வழியில்லய்யா... இதோட வாழப் பழகிக்கணும்’’ நீட்டி முழங்கினார் கண்ணம்மா.

“உனக்கென்னம்மா காய்கறிகளைக் கொண்டு போய் வித்துட்டு வந்துடுற... என்ன மாதிரி விவசாயிக தோட்ட வேலையைப் பார்க்குறதா? பொருளைத் தூக்கிட்டு விக்குறதுக்கு ஓடுறதா? அப்படியே கொண்டுபோனாலும், அடிமாட்டு விலைக்குக் கேக்குறாங்க. அதனால, வாழையை வெட்டாம வயல்லயே விட்டுட்டேன். அதனால எம்புட்டு நஷ்டம் தெரியுமா?’’ என வேதனைப்பட்டார் ஏகாம்பரம்.
“உண்மைதான்யா. இந்தத் தடவை எல்லா விவசாயிகளுக்கும் நஷ்டம்தான். அதுலயும் வாழை விவசாயிகளும், பூ விவசாயிகளும்தான் ரொம்ப நஷ்டப்பட்டுப் போயிட்டாங்க. ஆனால், கர்நாடகாவுல கங்காதர்னு ஒரு விவசாயி. உன்னை மாதிரிதான் அவருக்கும் வாழை விக்கலை. உடனே அவரு ஒரு யோசனை பண்ணுனாரு. வாழைப்பழத்தைக் காயவெச்சு, மதிப்புக்கூட்டினாரு. காய்ஞ்ச வாழைப்பழத்தை சந்தைக்குக் கொண்டுப்போனாரு. அது நல்ல விலைக்கு வித்துச்சாம். வாழையில கிடைக்குற லாபத்தைவிட அதிக லாபம் கிடைச்சிருக்கு’’ என்றார் வாத்தியார்.
“ ‘விளைபொருள்களை அப்படியே விக்குறதுனாலதான் இதுமாதிரி சிக்கல்ல அப்பப்ப மாட்டிக்குறோம். ஆனா, விளைவிக்குற பொருளுக்கு மதிப்புக்கூட்ட தெரிஞ்சுகிட்டா இந்தப் பிரச்னையை ஓரளவுக்குச் சமாளிக்கலாம்’னு என் மகன்கூடச் சொன்னான். இனிமே மதிப்புக் கூட்டுறதப் பத்தியும் யோசிக்கணும்’’ என்றார் ஏகாம்பரம்.

“மதிப்புக்கூட்டுற முறையைத் தெரிஞ்சுகிட்டா விலை கிடைக்கும்போது பொருளை வித்திடலாம். விலை கிடைக்காதப்ப மதிப்புக்கூட்டி இருப்பு வெச்சு வித்திடலாம். விளைபொருள்ல மதிப்புக்கூட்டுறது எப்படினு தஞ்சாவூர்ல இருக்க உணவுப் பதனீட்டுக் கழகத்துல சொல்லிக்கொடுக்குறாங்க. அங்கப்போய்த் தெரிஞ்சுக்க ஏகாம்பரம்’’ என்றார் கண்ணம்மா.
“அட பரவாயில்லையே... பல விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கே. ஆனா, இப்ப ஊரடங்கு நேரத்துல எப்படிப் போய்க் கத்துக்கிறது’’ என்றார் ஏரோட்டி.
“ஊரடங்கு நினைச்சு கவலையேப்படாத ஏகாம்பரம். இந்த நேரத்துல வெளியே போய்ப் பயிற்சி எடுக்க முடியாது. ஆனா, பயிற்சி கொடுக்குறவங்களை வீட்டுக்கே கொண்டு வந்திடுது பசுமை விகடன். ஆன்லைன் மூலமா, வல்லுநர்களைக் கூப்பிட்டுப் பயிற்சி கொடுக்குறாங்க. இன்டர்நெட் கனெக்ஷனோட செல்போன் இருந்தாப் போதும். நீ வயல்ல உக்காந்துகிட்டுகூடக் கத்துக்கலாம். வர்ற 16-ம் தேதி தஞ்சாவூர்ல இருக்க, இந்திய உணவு பதனீட்டுக் கழக இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன், ஆன்லைன்லயே சொல்லிக்கொடுக்கப் போறாராம். அதைப் பாருய்யா’’ என்று தகவல் சொன்னார் வாத்தியார்.
“கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி ஆகிப்போச்சு. பரவாயில்லையே நல்ல தகவலைச் சொல்லியிருக்கீங்க வாத்தியாரே... நான் செல்போன்லயே பார்த்துடுறேன்’’ என்றார் ஏகாம்பரம்.
“ரிசர்வ் பேங்க் சொன்னாலும் இந்த பேங்க் ஆளுங்க அடங்கமாட்டேங்குறான்க. ஊரடங்கு காலத்துல கடன் தவணை வசூல் செய்யக்கூடாதென்று சொல்லியிருக்கு ரிசர்வ் பேங்க். ஆனால், அதை மதிக்காம, வீட்டுல போய்த் தவணையைக் கேட்டு மிரட்டி ஒரு விவசாயியைக் கொன்னுட்டாங்கய்யா. இவங்க திருந்தவே மாட்டாங்களா?’’ என்றார் கண்ணம்மா.
“சொல்றதை விவரமா சொல்லும்மா...’’ பதற்றமாகக் கேட்டார் ஏகாம்பரம்.
“திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலூகாவுல இருக்க மானூர்பாளையம் அடுத்த குழந்தைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாமணி. இவரு தாராபுரத்துல இருக்க ஒரு தனியார் வங்கியில 2012-ம் வருஷம் விவசாயக் கடன் வாங்கியிருக்காரு. விவசாயத்துல தொடர்ச்சியா வறட்சி, நஷ்டம். ஆனாலும், கடனைக் கொஞ்சம் கொஞ்சமா கட்டிட்டு வந்திருக்காரு. கொரோனா காலத்துல ஊரடங்குனால அவரால ஒன்னும் செய்ய முடியலை. தவணையைக் கட்ட முடியலை. ஆனால், பேங்க்காரங்க போன்ல கடனைக் கேட்டுத் திட்டியிருக்காங்க. அடிக்கடி குண்டர்படையோட வீட்டுக்குப் போய்க் கடனைக் கேட்டு மிரட்டியிருக்காங்க. கடனைக் கட்டாத உனக்கு ஏண்டா தோட்டம், காடுனு வீட்டுல போய்த் திட்டுனதா சொல்றாங்க. இதுல மனசொடிஞ்சுப் போன ராஜாமணி, விஷம் சாப்பிட்டு தற்கொலை செஞ்சிகிட்டாரு. அவரு மகன் செல்வக்குமார் கொடுத்த புகார் அடிப்படையில வங்கி ஊழியர் மூன்று பேர் மேலே தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு போட்டிருக்குது போலீஸ்’’ என்றார் வாத்தியார்.
“மல்லையா மாதிரியான ஆளுங்களையெல்லாம் விட்டுடுவாங்க. அப்பராணிகச் சிக்குனா பொங்க வெச்சிடுறாங்க. என்னிக்குத்தான் இவங்க திருந்த போறாங்களோ தெரியலை’’ கவலையாகக் கண்ணம்மா சொல்லவும், தூறல் வரவும் சரியாக இருந்தது. அத்துடன் முடிவுக்கு வந்தது மாநாடு.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயிற்சி, கருத்தரங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகும் `தண்டோரா’, வேளாண் விளைபொருள்களை வாங்கவும் விற்கவும் வழிகாட்டும் ‘பசுமை சந்தை’ மற்றும் ‘வயல்வெளி பள்ளி’ ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.