
இந்த கொரோனாவே பொழப்பைக் கெடுத்திருச்சு. இதுல இன்னொரு கிருமியா. போற போக்கைப் பார்த்தா, இந்த வருஷம் முழுக்க இப்படித்தான் இருக்கும்போல.
வயலிலிருந்து வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ‘ஏரோட்டி’ ஏகாம்பரமும். அப்போது காய்கறிகளை விற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவும் அவர்களுடன் இணைந்து கொண்டார். பேசிக்கொண்டே மூவரும் வரப்பில் நடக்கத் தொடங்கினார்கள். அப்போது திடீரென மழைத்தூறல் தொடங்கியது.
வாத்தியார் கையிலிருந்த குடையை விரித்துப் பிடித்துக்கொண்டார். காலி கூடையைத் தலையில் கவிழ்த்துக்கொண்டார் கண்ணம்மா. தூறலைச் சட்டை செய்யாமல் நனைந்துகொண்டே நடக்கத் தொடங்கினார் ஏகாம்பரம். “மழை வராதான்னு தவம் கெடக்குறோம். இந்த மழையில நனைஞ்சா முளைச்சுப் போயிடுவீங்களா? இத்தணூண்டு தூறலுக்கே குடை பிடிக்கிறீங்களே’’ எனச் சலித்துக்கொண்டார் ஏகாம்பரம்.
‘‘அட நீ வேற... ஏற்கெனவே கொரோனா பயத்துல இருக்கோம். இதுல மழையில நனைஞ்சு காய்ச்சல் வந்தா அம்புட்டுதான். அப்புறம் தனிமைப்படுத்திடுவாங்கள்ல’’ என்றார் கண்ணம்மா.
‘‘தமிழ்நாட்டுல பரவுனது வீரியமான கொரோனா வைரஸ் இல்லையாம். இங்க பரவுனது ‘கினாட் ஏ 3’ங்கற வைரஸ்னு சொல்றாங்க. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் (சி.சி.எம்.பி) மையம் ஹைதராபாத்ல இருக்குது. அந்த மையத்துல இருந்து ஓர் அறிக்கை கொடுத்திருக்காங்க. அதுல, ‘தென்மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானாவில் புதிய வகை வைரஸ் பரவியிருக்குது. அதுக்கு கிளாட் ஏ 3-ன்னு பேர் வெச்சிருக்கோம். தெலங்கானா, தமிழ்நாட்டுல எடுத்த மாதிரிகள்ல பெரும்பாலானவை கிளாட் ஏ 3 வைரஸ் தான்’னு அந்த மையத்தோட இயக்குநர் ராகேஷ் சொல்லியிருக்காருன்னு பேப்பர்ல படிச்சேன்’’ என்றார் வாத்தியார்.
‘‘இந்த கொரோனாவே பொழப்பைக் கெடுத்திருச்சு. இதுல இன்னொரு கிருமியா. போற போக்கைப் பார்த்தா, இந்த வருஷம் முழுக்க இப்படித்தான் இருக்கும்போல. இதுல அரசாங்கம் வேற ‘சத்தம் இல்லாம பல சட்டங்களைப் போடுது’ன்னு சொல்றாங்க. சம்சாரி பொழப்பு, சாண் ஏறுனா முழம் சறுக்குது’’ என்றார் ஏரோட்டி.

‘‘பரவாயில்லையே... பல விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்க. நாட்டுல என்ன நடக்குதுன்னு ஒவ்வொரு விவசாயியும் தெரிஞ்சு வெச்சுக்கணும்யா... அப்பத்தான் இந்த அரசியல் வியாதிககிட்ட இருந்து தப்பிக்க முடியும். மின்சாரச் சட்ட திருத்தம் கொண்டு வரப்போகுது மத்திய அரசு. அது வந்தா, இலவச மின்சாரம் இருக்காதுன்னு சொல்றாங்க’’ என்றார் வாத்தியார்.
‘‘ஆனா, ‘இலவச மின்சாரம் எப்பவும்போல இருக்கும்’னு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதா டிவியில சொன்னாங்க’’ வெள்ளந்தியாகக் கேட்டார் கண்ணம்மா.
‘‘ ‘இலவச மின்சாரம் கொடுங்க, கொடுக்காம போங்க. ஆனா, பயன்படுத்துற மின்சாரத்துக்குக் கட்டணத்தைக் கட்டிடுங்க. நீங்க எப்படி வேணும்னாலும் கொடுத்துக்கோங்க. அதுல எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’னு நிதியமைச்சர் நிர்மலா அம்மா சொல்றாங்க. என்ன செய்யப் போறாங்கனு விவசாயிகதான் திக்கு தெரியாம முழிச்சுகிட்டு இருக்காங்க’’ என்றார் வாத்தியார்.
‘‘20 லட்சம் கோடியில திட்டங்களை அறிவிச்சாங்களே அந்தம்மாவைச் சொல்றீங்களா. அவங்க ரொம்பத் தெளிவா இருக்காங்க. ஏற்கெனவே நடைமுறையில இருக்கத் திட்டத்தையெல்லாம் புதுசா சொல்ற மாதிரி அறிவிச்சு விளம்பரம் தேடிக்கிட்டாங்க. விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி கடனுக்காக ஒதுக்கியிருக்கோம்னு சொன்னாங்க. ஆனா, பேங்க்ல போயி கேட்டா ‘ஏற்கெனவே வாங்கியிருக்கீங்கள்ல அதுதான்.’ அந்தம்மா சொன்னது அந்தக் கடனைத்தான்னு பேங்க்ல சொல்றாங்க. எதைக் கேட்டாலும், அதுதான் இதுனு செந்தில், கவுண்டமணி வாழைப்பழ காமெடி மாதிரி சொல்றாங்க வாத்தியாரே... காது குத்துறதுக்கும் ஒரு அளவு வேணாமா?’’ கோபமாகப் பேசினார் ஏகாம்பரம்.
“இப்படியெல்லாமா இருப்பாங்க. மக்கள் எது சொன்னாலும் நம்பிடுவாங்கன்னு நினைக்கிறங்களா?’’ ஆவேசமானார் கண்ணம்மா.
‘‘இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. கைத்தட்டுங்க, விளகேத்துங்கன்னு சொன்னப்ப, மூச்சுவிடாம செஞ்சோம்ல... அப்பவே நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் ஏமாளிகள்னு நினைச்சிருக்கும் மத்திய அரசு’’ ஏகாம்பரம் வார்த்தைகளில் நக்கல் தெறித்தது.
‘‘ஊரடங்குன்னு ஊரே முடங்கிக் கிடக்கு. இந்த நேரத்துல பெரிய பெரிய பணக்கார கம்பெனிகளுக்காகப் புதுசு புதுசா சட்டம் போட்டுக்கிட்டே இருக்காங்க. அத்தியாவசியப் பொருள்கள் பட்டியல்ல இருந்து, உணவுத் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவு எண்ணெய் வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீக்கி, இன்றியமையாப் பொருள்கள் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்துருக்கு. இதனால இனிமே வர்ற காலங்கள்ல விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது. குறைந்தபட்ச ஆதார விலையும் இனி நிர்ணயம் செய்ய வாய்ப்பில்லைனு சொல்றாங்க. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செஞ்சாதான், தனியார் வியாபாரிகள், இந்த விலைக்குக் கீழ விலையைக் குறைக்க முடியாது. அந்தப் பாதுகாப்பு இதுக்கு முன்ன இருந்துச்சு. ஆனால், இனி அப்படியிருக்காது. தனியார் வியாபாரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சொல்ற விலைக்கு, விவசாயிகள் அவங்க விளைபொருள்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகிடும்.
அதே மாதிரி, ‘வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் – 2020’ என்ற புதிய சட்டம் மூலமா, கார்ப்பரேட் கம்பெனிகள், வேளாண் சந்தையில் கால் பதிக்க வாய்ப்பு உருவாகியிருக்குது. ‘பண்ணைச் சேவைகள் ஒப்பந்த அவசரச் சட்டம்’னு, ஒப்பந்தப் பண்ணையச் சட்டமும் இப்ப போட்டிருக்காங்க. இந்த மூணு சட்டங்களும் விவசாயிகளுக்குப் பெரிய சிக்கலை உண்டாக்கும்னு சொல்றாங்க’’ என்றார் வாத்தியார்.
‘‘இத்தனை விஷயம் நடந்திருக்கா... ஆனா, விவசாயிகளுக்கு அதைச் செய்றோம். இதைச் செய்றோம்னு பேசிக்கிட்டே இருக்காங்களே. விவசாயத்தை ஒழிக்காம விடமாட்டாங்க போலிருக்கே’’ வேதனையோடு சொன்னார் கண்ணம்மா.
‘‘மத்திய, மாநில அரசாங்கங்கள் விவசாயிகளோட பிரச்னைகளைப் புரிஞ்சுகிட்டு செயல்படணும். இல்லைன்னா விவசாயம் இன்னும் மோசமான நிலைக்குப் போயிடும்’’ என்றார் வாத்தியார். அதற்குள் ஊர் வந்துவிட, அவரவர் வீட்டுக்குப் போகும் வழியில் செல்லத் தொடங்கினார்கள். அத்தோடு முடிவுக்கு வந்தது மாநாடு.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயிற்சி, கருத்தரங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகும் `தண்டோரா’ மற்றும் வேளாண் விளைபொருள்களை வாங்கவும் விற்கவும் வழிகாட்டும் ‘பசுமை சந்தை’ ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.