மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

வாத்தியாரே... தூத்துக்குடியில விளைஞ்சு நிற்குற வாழை, நெல் பயிர்களை அழிச்சுட்டு எரிவாயுக் குழாய்களைப் பதிக்கிறாங்கன்னு போராட்டம் பண்றாங்களாம். என்னய்யா விஷயம்...’’ என்றார் ஏகாம்பரம்.

யலில் ஆட்கள் வேலை செய்துகொண்டிருக்க, நாற்காலியில் அமர்ந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார் வாத்தியார் வெள்ளைச்சாமி. அப்போது அங்கு வந்த ஏரோட்டி ஏகாம்பரம், “என்ன வாத்தியாரே வெயில்ல குடையைப் பிடிச்சுக்கிட்டு உக்காந்திருக்கீங்க... நம்ம ஆளுங்க வேலையைச் சுத்தமாச் செய்வாங்க. நீங்க வீட்டுப் பக்கம் போய் நிழல்ல உக்காருங்க’’ என்றார்.

“அட வீட்டுலயே அடைஞ்சுகிடக்க முடியலைனுதான் வயலுக்கு வந்தேம்ப்பா... ஆனா, இங்கே வெயிலு இந்தப் போடு போடுது’’ என்றார். ``இன்னிக்கு வெயில் கொஞ்சம் அதிகம்தாம்யா... கொஞ்சம் இருங்க, நான் உங்களுக்கு இளநி வாங்கிட்டு வர்றேன்’’ என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார் ஏடோட்டி.

ஏகாம்பரம் அந்தப் பக்கம் போகவும், இந்தப் பக்கம் காய்கறி கண்ணம்மா வரவும் சரியாக இருந்தது. ‘‘வாம்மா... வியாபாரத்தை முடிச்சுட்டிய்யா... அதென்ன சுரைக்காய் மட்டும் விக்கலையாக்கும்’’ என்று கேட்டார் வாத்தியார். “காயெல்லாம் வித்துடுச்சு வாத்தியாரே... வர்ற வழியில அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கேயிருந்து வீட்டுக்காக இந்தச் சுரைக்காயைப் பிடிங்கிட்டு வந்தேன்’’ என்றார் கண்ணம்மா. அப்போது கையில் இளநீரோடு ஏகாம்பரம் வந்து சேர, களை கட்டியது மாநாடு.

‘‘விவசாயம் செய்யறதைவிட விளையுற பொருளை விக்குறதுக்குத்தான் படாதபாடு பட வேண்டியிருக்கு’’ என்றார் கண்ணம்மா. “ஆமாங்கய்யா... அது ஒண்ணுதான் நம்ம விவசாயிகளுக்குப் பெரிய பிரச்னை. அதுக்காகத்தான் அரசாங்கம் சில பொருள்களுக்குக் கொள்முதல் நிலையம் அமைச்சிருக்கு. ஆனா, அங்கேயும் இதே சிக்கல்தான். இந்த வருஷம் காவிரி டெல்டா மாவட்டங்கள்ல சம்பாப் பட்டத்துல நல்ல மழை கிடைச்சுது. விளைச்சலும் திருப்தியா இருந்தது. ஆனாலும், விவசாயிகளால அதைக் கொண்டாட முடியலை. காரணம், கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு போற நெல்லை விற்பனை செய்யறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுதாம். `ரொம்ப நேரம் காக்கவெக்கிறாங்க... லஞ்சம் கேக்குறாங்க’னு விவசாயிங்க புலம்புறாங்க. `ஏன் இப்படிப் பண்றீங்க?’னு கேள்வி கேட்டா, ‘சாக்கு இல்லை, இடம் இல்லை, ஆள் இல்லை’னு அலைக்கழிக்கிறாங்களாம் கும்பகோணத்துல இருக்குற எங்க சொந்தக்காரங்க நொந்துபோய்ச் சொன்னாங்க’’ என்றார் ஏகாம்பரம்.

இருவர் பேசுவதையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட வாத்தியார், ‘‘மக்கள் களத்துல இறங்கினாத்தான்யா விடிவு பிறக்கும். இதேபோல விற்பனை செய்யக் கஷ்டப்படுற விவசாயிகளுக்கு உதவி செய்யறதுக்காக இளசுக களம் இறங்கியிருக்காங்க. சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்துல இந்தத் தடவை நெல் விளைச்சல் நல்லா இருந்திருக்கு. விளைஞ்சதை வியாபாரிங்க கம்மியான விலைக்குக் கேட்டிருக்காங்க. அதனால உள்ளுர் இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்து விவசாயிககிட்ட நெல்லைக் கொள்முதல் செஞ்சிருக்காங்க.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

62 கிலோ எடையுள்ள மூட்டையை 1,100 ரூபாய்க்கு விவசாயிக வீட்டுக்கே போய் கொள்முதல் செஞ்சிருக்காங்க. அதனால விற்பனை பிரச்னை விவசாயிகளுக்கு இல்லை. அந்த நெல்லை அரிசியாக்கி, `வேப்பங்குளம் பிராண்ட்’னு ஊர் பேர்ல ஆன்லைன்ல விளம்பரம் போட்டு, ஆர்டரும் பிடிச்சிட்டாங்களாம். இதனால இந்தத் தடவை இடைத்தரகர்கள்கிட்ட ஏமாறாம வியாபாரிகள் சந்தோஷமாகிட்டாங்க. இதைக் கேள்விப்பட்டு, சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், அங்கே நேரடி கொள்முதல் நிலையத்தைத் தொடங்கி வெச்சிருக்காராம்’’ என்றார்.

‘‘அட இது நல்லாயிருக்கே... இப்போ பல மாவட்டங்கள்ல இளசுக இது மாதிரி நல்ல காரியத்துல இறங்கியிருக்காங்க. குளம் வெட்டுறது, பனை விதை நடவு செய்யறது, மரம் நடுறதுனு சுற்றுச்சூழல் ஆர்வம் இளைஞர்கள்கிட்ட உருவாகிவர்றது நல்ல விஷயம்தான்’’ என்றார் ஏரோட்டி.

‘‘வாத்தியாரே... தூத்துக்குடியில விளைஞ்சு நிற்குற வாழை, நெல் பயிர்களை அழிச்சுட்டு எரிவாயுக் குழாய்களைப் பதிக்கிறாங்கன்னு போராட்டம் பண்றாங்களாம். என்னய்யா விஷயம்...’’ என்றார் ஏகாம்பரம்.

“சென்னை எண்ணூர் முதல் திருவள்ளூர், பெங்களூரு, புதுச்சேரி, நாகை, மதுரை வழியா தூத்துக்குடி வரைக்கும் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செஞ்சுகிட்டு இருக்கு. ராமநாதபுரம் மறவர் கரிசல்குளம் பகுதியில இருந்து, ஓ.என்.ஜி.சி எரிவாயு மற்றும் சுழற்சி திரவ இயற்கை எரிவாயுவை ஆர்.எல்.என்.ஜி குழாய்கள் மூலம் எடுத்துட்டுப் போய், தூத்துக்குடியில இருக்குற ஸ்பிக், ஸ்டெர்லைட், தாரங்கதாரா கெமிக்கல் மாதிரியான பெரிய கம்பெனிகளுக்கு விநியோகம் செய்யறதுதான் இந்தத் திட்டத்தோட முக்கிய நோக்கம்.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத் தவரைக்கும் தாமிரபரணி பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர்ல வாழை, நெல் விளைஞ்சு அறுவடைக்குத் தயாரா இருக்கு. அந்த நிலங்கள்லயும் இப்போ பயிர்களை அழிச்சுட்டு எரிவாயுக் குழாயை பதிக்கிறாங்களாம். அதுதான் இப்போ அங்கே இருக்கிற பிரச்னை. அதை நிறுத்தணும்னுதான் விவசாயிக போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘அரசாங்கம்தான் விவசாயிகளைப் பாதுகாக்கணும். ஆனா, ஒருபக்கம் நல்லது செய்யற மாதிரியும் இருக்கு. இன்னொரு பக்கம் இடைஞ்சல் கொடுத்துக்கிட்டு இருக்கர மாதிரியும் இருக்கு’’ சலிப்புடன் சொல்லிக்கொண்டே காய்கறி கிளம்ப, முடிவுக்கு வந்தது மாநாடு.