மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

இந்தத் தடவை ரொம்ப உபயோகமான செய்தியாச் சொல்றீங்க வாத்தியாரே...’’ என்று புகழ்ந்தார் கண்ணம்மா.

வெயிலுக்குக் குடையைப் பிடித்தபடி கையில் பையுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார் வாத்தியார் வெள்ளைச்சாமி. அதைப் பார்த்தவுடன், வாத்தியார் நகரத்துக்குப் போகிறார் எனப் புரிந்துகொண்டார் ஏரோட்டி ஏகாம்பரம். ‘‘சித்திரையே பிறக்கலை... அதுக்குள்ள வெயிலு இந்தப் போடு போடுது...’’

என்றபடியே மாட்டை இழுத்துக்கொண்டு வாத்தியாரை நெருங்கினார். ‘’உண்மைதான்யா... பல மாவட்டங்கள்ல 90 டிகிரியை தாண்டிடுச்சு வெயில். அதுலயும் மதுரையில சதம் அடிச்சிடுச்சாம். வரப்போற கோடையை நினைச்சா கலக்கமா இருக்குது. கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்துட்டு இருக்குது. இப்போ உலகத்தையே அலற வெச்சுக்கிட்டு இருக்குது கொரோனா வைரஸ். வெயில் 90 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல இருந்தா அந்த வைரஸ் தாக்கம் குறையுமாம். இதை நம்ம சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. அப்படிப் பார்த்தா வெயிலு இன்னும் நல்லா அடிக்கட்டும்னுதான் தோணுது’’ என்றவர், “இருய்யா, பதநீர் குடிச்சுட்டுப் போகலாம்’’ என்றபடி சாலையோரமாக இருசக்கர வாகனத்தில் பதநீர், நொங்கு விற்பனை செய்து கொண்டிருந்த இடத்தை அடைந்தனர்.

இருவரும் பதநீர் குடித்து முடிக்கும் நேரத்தில், காய்கறியும் வந்து சேர்ந்தார். அவருக்கும் பதநீர் வாங்கிக்கொடுத்தார் வாத்தியார். பதநீர் குடித்த தெம்பில் மூவரும் பேசிக்கொண்டே நடையைத் தொடர்ந்தார்கள்.

“ `உழவர் கடன் அட்டை’ (கிசான் கிரெடிட் கார்டு) அப்படினு சொல்றாங்களே... அது என்ன வாத்தியாரே?’’ வெள்ளந்தியாகக் கேட்டார் ஏரோட்டி. ‘‘அந்த அட்டை இருந்தா, 3 லட்சம் ரூபாய் மதிப்புல விவசாயத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கலாம். 1,60,000 ரூபாய் வரைக்கும் பிணையம் இல்லாம கடன் வாங்கிக்கலாம். அதுக்கு ஏழு சதவிகிதம் வட்டி. அந்தக் கடனை உரிய காலத்துல அடைச்சுட்டா, வட்டியில மூணு சதவிகிதம் தள்ளுபடி ஆகிடும். இது நல்ல திட்டம்தான்’’ விளக்கமளித்தார் வாத்தியார்.

“அதுக்கு என்ன செய்யணும்னு சொல்லிடுங்கய்யா...’’ ஆர்வமாகக் கேட்டார் கண்ணம்மா. “அதுக்கு சிட்டா, அடங்கல், போட்டோ, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வருஷத்துக்கு 6,000 ரூபாய் மத்திய அரசு கொடுக்குதுல்ல... அது வந்து சேர்ற வங்கிக் கணக்குப் புத்தகம் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு, பொதுச்சேவை மையத்துக்குப் போனாப் போதும். அவங்களே மத்ததைப் பார்த்துப்பாங்க’’ என்றார் வெள்ளைச்சாமி.

“அப்படியா...’’ என்ற கண்ணம்மா, “அய்யா, எனக்கு மோடி கொடுக்குற 6,000 ரூபாயே இன்னும் வரலை. அதுக்கு எப்படி விண்ணப்பம் போடணும்னு சொல்லிடுங்கய்யா’’ என்றார் அப்பாவியாக.

“அட... பலபேர் பணத்தை வாங்கிட்டாங்க. நீ இன்னமும் வாங்காம இருக்கியா... உடனே இ-சேவை மையத்துக்குப் போய்ப் பதிவு பண்ணு. வி.ஏ.ஓ ஆபீஸ் போனாக்கூட அவங்க பதிவு பண்ணிக் கொடுத்துடுவாங்க. செல்போன்லகூட இதுக்கு விண்ணப்பம் போடலாம். `பி.எம் கிசான்’னு (PM Kisan) ஒரு ஆப் இருக்கு. அதைப் பிளே ஸ்டோர்ல போய் பதிவிறக்கம் செஞ்சுக்கணும். அதுல கேக்குற விவரங்களைப் பதிவு செஞ்சும் விண்ணப்பிக்கலாம்’’ என்றார் வாத்தியார்.

“அருமையாச் சொன்னீங்க வாத்தியாரே... நான் இந்தத் தடவை வயல்ல உயிர்வேலி அமைக்கலாம்னு நினைக்கிறேன். அதுக்கு எந்த மாதிரி மரங்கன்றுகளை வைக்கலாம்னு யோசனை சொல்லுங்கய்யா...’’ என்றார் ஏரோட்டி. ‘‘உயிர்வேலி அமைக்குறது நல்லதுதான். கரூர், நாமக்கல் பக்கத்துலதான் உயிர்வேலியை அருமையா பயன்படுத்துறாங்க. மேய்ச்சல் நிலங்கள்ல கிளுவை மூலமா உயிர்வேலி அமைச்சுடுவாங்க. உள்ளுக்குள்ள ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குவிட்டு அடைச்சுட்டு, வேற வேலை பார்க்கப் போயிடுவாங்க. கால்நடைகளும் வயலைச் சுத்தி அலைஞ்சு, மேய்ஞ்சுட்டு அங்கே வெச்சுருக்கிற தொட்டியில தண்ணியைக் குடிச்சுட்டு மரத்துல நிழல்ல படுத்து ஓய்வெடுக்கும். சாயங்காலம் வந்து வீட்டுக்கு ஓட்டிட்டுப் போவாங்க’’ என்ற வாத்தியார், ‘‘உயிர்வேலிக்கு கிளுவைதான் சிறந்த மரம். கிளுவைக் கொம்புகளை வரிசையா நடலாம். `மெல்ஜீரியா’னு முள்ளுச்செடி ஒண்ணு இருக்கு. அதுவும் நல்ல உயிர்வேலி. அதோடு கற்றாழை, சங்கன், சீங்கை, சதுரக் கள்ளி, வாழை கள்ளி, திருகுகள்ளி, சப்பாத்திக்கள்ளி, தொரட்டி வைக்கலாம். கொடுக்காப்புளி, இலந்தை, கலாக்காய், கொன்றை, வெவ்வேல், கிளரிசீடியா, முள்ளில்லா மூங்கில் கன்றுகளையும் வைக்கலாம்’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘நல்லது வாத்தியாரே... நான் இந்தத் தடவை உயிர்வேலி அமைச்சுடுறேன். இதுல ஒரு சிக்கல்... தரமான செடிகள்தான் கிடைக்க மாட்டேங்குது’’ என்று ஆதங்கப்பட்டார் ஏரோட்டி. “ஆமாங்கய்யா... எங்க வீட்டுக்காரரு எங்கேயோ ஒரு நாற்றுப் பண்ணையில கொய்யாச் செடி வாங்கிட்டு வந்து நட்டாரு. ரெண்டு வருஷமாச்சு. அது இப்போ வரைக்கும் காய்க்கலை’’ என்றார் கண்ணம்மா.

“இப்போ வனத்துறை, வேளாண் அறிவியல் நிலையங்களில்கூட நாற்றுகள் கிடைக்குது. அங்கே தரமான செடிகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும். அதை வாங்கிக்கலாம். கரூர் மாவட்டம், புழுதேரியில இருக்கும் வேளாண் அறிவியல் மையத்துல மா, பலா, சப்போட்டா, எலுமிச்சை, ஜம்பு நாவல், ஒட்டு பலா, லக்னோ-49, தைவான் சிவப்பு வகைக் கொய்யா, நெல்லி, உரிகம்புளி, ரெட்லேடி பப்பாளி உள்ளிட்ட பலவகையான நாற்றுகளை விற்பனை செய்யறாங்க. மொத்த ஆர்டர் கொடுத்தா, தமிழ்நாட்டுல எந்த ஊரா இருந்தாலும் டோர் டெலிவரி செய்யறாங்கலாம். 95665 20813 - இந்த நம்பர்ல போன் பண்ணி விவரம் கேட்டுக்கலாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘இப்போ வனத்துறை, வேளாண் அறிவியல் நிலையங்களில்கூட நாற்றுகள் கிடைக்குது. அங்கே தரமான செடிகள் குறைந்த விலைக்குக் கிடைக்கும்.’’

‘‘இந்தத் தடவை ரொம்ப உபயோகமான செய்தியாச் சொல்றீங்க வாத்தியாரே...’’ என்று புகழ்ந்தார் கண்ணம்மா.

‘‘இன்னொரு செய்தியும் சொல்லிடுறேன் கேட்டுக்கங்க. காய்கறி, பழங்கள், இலைதழைகள், இறைச்சி, மீன் எல்லாத்தையும் மதிப்புக்கூட்ட காயவெக்கணும். வெயில்ல காயவெச்சா அதுல இருக்குற உயிர்ச்சத்துகள் வீணாகிடும். அதுனால `சோலார் டிரையர்’னு சொல்லப்படுற சூரிய உலர்ப்பானை அரசு மானியத்துல கொடுக்குது. 400 சதுர அடி பரப்பளவுள்ள ஒரு சூரிய ஒளி உலர்ப்பான் கூடாரத்துல ஒரு டன் மிளகாயைக் காயவெக்கலாம். அந்த அளவுக்குக் கூடாரம் அமைக்க 3 லட்சம் ரூபாய் செலவாகும். 1,000 அடி அளவுல கூடாரம் அமைக்க 7 லட்ச ரூபாய் செலவாகும். இந்்தச் செலவு தொகையில சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிடர் பெண் விவசாயிகளுக்கு 60 சதவிகிதம் மானியமாகக் கிடைக்கும். இதர விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியம் கிடைக்கும். அதிகபட்சமாக 3,50,000 ரூபாய் வரைக்கும் மானியம் கிடைக்கும். தனிநபரும், சங்க விதிகளின் கீழ் பதிவு செய்த விவசாயக் குழுக்களும் இந்தத் திட்டத்துல பயன்பெறலாம். விருப்பமுள்ளவங்க அந்தந்த மாவட்டத்துல இருக்கும் வேளாண் பொறியியல்துறை, உதவி செயற்பொறியாளர் அலுவலங்கள்ல பெயரைப் பதிவு செய்யணும். முன்னுரிமை அடிப்படையில இந்த மானியம் கிடைக்கும்’’ என்றார் வாத்தியார்.

அந்த நேரம் பேருந்து வர, அதை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார் வாத்தியார். முடிவுக்கு வந்தது மாநாடு.