மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு!

‘‘இந்த கொரோனா வந்தாலும் வந்துச்சு... மனுசங்க வீட்டுக்குள்ளேயே மொடங்கிட்டாங்களே... விளைஞ்சதை வாங்க வியாபாரி வரலை. சம்சாரியே எடுத்துட்டுப் போயி விக்கறதுக்கும் வண்டி வாகனம் கிடைக்கலை. எது வந்தாலும் எங்களுக்குத்தான் அடி விழுகுது...’’ புலம்பிக்கொண்டே வந்தார் ஏரோட்டி ஏகாம்பரம்.

‘‘உலகத்துக்கு ஆனதுதான் நமக்கும். ஆனானப்பட்ட அமெரிக்காவே அலறிக்கிட்டு கெடக்கு. இதுக்கு யாரு என்ன செய்யறது... நம்ம ஊர்ல சீக்கிரம் சரியாகிடும். கொஞ்சம் பொறுமையா இருப்போம்’’ என்றார் வாத்தியார் வெள்ளைச்சாமி.

தற்காலிகமாக அமைக்கப்பட்ட சந்தையில் காய்கறி வாங்க வாத்தியாருடன் வந்த ஏகாம்பரமும் நகர்ந்தார். சமூக இடைவெளிக்காகப் போடப்பட்டிருந்த வட்டத்தில் நின்றபடி பேசிக்கொண்டே காய்கறி கண்ணம்மாவின் கடைக்குச் சென்றனர்.

‘‘என்ன கண்ணம்மா... வியாபாரம் எப்படி இருக்கு..?’’ கேட்டார் வாத்தியார். ‘‘வாங்க வாத்தியாரே... வீடு வீடாப் போய் விக்க முடியலை. இங்கே கடை போட்டுக்கலாம்னு சொன்னாங்க. மதியம் வரைக்கும்தான் கடை. ஆனா, 11 மணிக்குள்ள எல்லாம் வித்துப் போயிடுது. உங்களுக்கு என்ன காய் வேணும்?’’ என்று கேட்டார் கண்ணம்மா.

தனக்கு வேண்டிய காய்கறிகளை வாத்தியார் சொல்ல, அவற்றை எடுத்து எடை போட்டுக்கொண்டிருந்த கண்ணம்மா, ‘‘வாத்தியாரே... உங்களோடவே வந்திடுறேன்’’ என்றார். ‘‘சரிம்மா... வா வெளியே இருக்கோம்’’ என்றவர்கள் காத்திருந்து, கண்ணம்மா வந்தவுடன் நடையைக்கட்ட மாநாடு தொடங்கியது.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘என்ன ஏகாம்பரம், நெல்லை வித்துட்டியா?’’ கேட்டார் வாத்தியார். ‘‘அட எங்க விக்கிறது... ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்குக் கொண்டுபோனாலும் காக்கவெச்சிடுறாங்க. மழை வந்து நெல்லு நனைஞ்சிபோகுது. எதுக்கு வம்புன்னு வீட்டுலயே வெச்சிருக்கேன்’’ என்றார் ஏரோட்டி.

‘‘அரசாங்கம் விவசாயிகளுக்காகப் பல வேலைகளைச் செஞ்சிக்கிட்டு இருக்குய்யா... நெல் விக்க முடியாதவங்ககிட்ட `நாங்க நெல்லை வாங்கிக்கிறோம்’னு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சொல்லியிருக்காரு. ‘அனைத்து மாவட்ட விவசாயிகளும் நெல்லை நேரடிக் கொள்முதல் செய்ய 044 26426773 நம்பருக்கு கூப்பிடுங்க’னு அறிவிச்சிருக்காரு. நீ அந்த நம்பர்ல பேசிப்பாரு’’ என்றார் வாத்தியார்.

‘‘அரசாங்கம் ஒவ்வொண்ணுக்கும் ஒரு நம்பரைக் கொடுக்குது. அதுல கூப்பிட்டா சில இடங்கள்ல பதில் சொல்றாங்க. பல இடங்கள்ல போனையே எடுக்குறதில்லை. எல்லாம் அறிவிப்பாத்தான் இருக்கு வாத்தியாரே...’’ என்றார் கண்ணம்மா.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயிற்சி, கருத்தரங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகும் `தண்டோரா’ மற்றும் வேளாண் விளைபொருள்களை வாங்கவும் விற்கவும் வழிகாட்டும் ‘பசுமை சந்தை’ ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.

‘‘உண்மைதான் கண்ணம்மா. நம்ம கவர்மென்ட்டை நினைச்சு அழுகுறதா, சிரிக்கிறதான்னே தெரியலை. ஊரடங்குல வண்டி வாகனமே போகாத நாள்ல சுங்கச்சாவடியில காசு வாங்க மாட்டோம்னு சொன்னாங்க. ஆனா, இப்போ அத்தியாவசியப் பொருள்கள், நிவாரணப் பொருள்களை எடுத்துட்டு வர்ற வண்டிக்கெல்லாம் 5 முதல் 12 சதவிகிதம் அதிகமா வசூலிக்கிறாங்க. கேட்டா, `இத்தனை நாள் வருமானம் இல்லாம இருந்ததுக்காக வசூலிக்கிறோம்’னு சொல்றாங்க’’ என்ற வாத்தியாரை இடைமறித்த ஏகாம்பரம், ‘‘அட நீங்க வேற... ஆளில்லா கடையில டீ ஆத்த அவங்க என்ன முட்டாளா... மெத்தப் படிச்ச மேதாவிங்க. சுங்கச்சாவடிகள்ல இந்தச் சூழ்நிலையில அதிகமா வசூல் பண்றது கொள்ளை யடிக்கிறதுக்குச் சமம். வீட்டு ஓனரை `வாடகை வாங்கக் கூடாது’னு சொல்ற கவர்மென்ட், சுங்கச்சாவடிகளைத் திறந்து வசூல் பண்ணுது. அதுவும் வழக்கத்தைவிட அதிகமா வசூல் பண்ணுது. இது எந்த வகையில நியாயம்?’’ கொதித்தார்.

‘‘டி.வி-யில நாலஞ்சு பேர் உட்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பாங்கள்ல... அதுல நேத்து ஒருத்தரு ஒரு விஷயம் சொன்னாருங்கய்யா... கொரோனா டெஸ்ட் பண்ற மெஷின் (ரேபிட் கிட்) ஒண்ணு 377 ரூபாய்னு சத்தீஸ்கர் அரசு வாங்கியிருக்காம். அதே மெஷினை தமிழ்நாடு அரசு 600 ரூபாய்க்கு வாங்கியிருக்காம். அதுமட்டுமில்ல... கம்மி விலைக்கு வாங்கின சத்தீஸ்கர் அரசுக்கு 5 சதவிகிதம்தான் ஜி.எஸ்.டி வரி. அதிக விலைக்கு வாங்கின நமக்கு 12 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியாம். கேட்டதுல இருந்து கோபம் கோபமா வருது வாத்தியாரே...’’ என்றார் கண்ணம்மா.

உப்பை உறிஞ்சும் தாவரம்
உப்பை உறிஞ்சும் தாவரம்

‘‘ஒரு மாநிலம் 377 ரூபாய்க்கு வாங்கியிருக்குன்னா ஒண்ணு அதே விலை, இல்லைன்னா அதைவிடக் கம்மியாத்தான் அந்தப் பொருளோட விலை இருக்கும். சரி... அதை விடு, அதெல்லாம் வேற கணக்கு. ஆனா, கொரோனா விஷயத்துலகூடக் காசு பார்க்க நினைக்கிற மனுசங்களை என்னன்னு சொல்றதுனு தெரியலை. எல்லாம் நம்ம தலையெழுத்து’’ என்று அலுத்துக்கொண்டார் வாத்தியார்.

‘‘அதை விடுங்க வாத்தியாரே... அரசியல் நமக்கு வேண்டாம். விவசாய விஷயம் ஏதாவது சொல்லுங்க’’ அலுப்போடு சொன்னார் ஏகாம்பரம். ‘‘மண்ணுல படிஞ்ச உப்புகளை உறிஞ்சி, மண்ணை வளமாக்குற ஒரு செடியைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியிருக்கு. அது, ‘ஓர்பூடு’ங்கிற செடி. மண்ணுல இருக்குற உப்பை உறிஞ்சிடுமாம். சோடியம் உப்புனால ரொம்ப மாசுபட்ட நிலங்கள்ல இந்தச் செடியை வளர்த்தா, அந்தப் பிரச்னை தீருமாம். இயற்கையாகவே ஆற்று மணல் படுகையில உப்பை உறிஞ்சி வளரும். நிலத்துல வளர்த்தா 70 முதல் 80 சதவிகிதம் உப்பை உறிஞ்சிடுமாம். பிச்சாவரம் பகுதிகள்ல இதன் இலைகளை இப்பவும் இறால் மீன்கூடச் சேர்த்து சமைச்சுச் சாப்பிடுறாங்களாம். இலைகளை மாட்டுத் தீவனமாகவும் பயன்படுத்தலாமாம். புற்றுநோய்க்கு எதிரான மருத்துவ குணமும் இதுல இருக்காம். உப்பு அதிகமா இருக்குற நிலங்கள்ல இதைச் சாகுபடி செஞ்சு, அறுவடை செஞ்ச பிறகு, மத்த பயிர்களை விதைக்கலாம். நல்ல விளைச்சல் கிடைக்கும். இது பொன்னாங்கண்ணிக் கீரை மாதிரியே இருக்கும். எல்லா மாவட்டங்கள்லயும் சதுப்பு நிலங்கள்ல இது இயற்கையா வளருதாம். இதுல எதுவும் சந்தேகமிருந்தா தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்துல இருக்குற சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில கேட்டா சொல்லுவாங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘அருமையான தகவல். நிறைய விவசாயிங்க மண்ணு உப்பா இருக்குறதால விவசாயம் செய்யாம, தரிசாகப் போட்டுவெச்சிருக்காங்க. அவங்களுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும்’’ என்றார் ஏரோட்டி.

அப்போது அவர்கள் தலைக்கு மேல் ஒரு ட்ரோன் சென்றது. ‘‘இதென்ன வாத்தியாரே குட்டி ஹெலிகாப்டர் மாதிரி இருக்குது’’ வெள்ளந்தியாகக் கேட்டார் வாத்தியார். ``அதுவா, ஊரடங்கு நேரத்துல வெளியே யாரும் நடமாடுறாங்களான்னு பார்க்குற துக்காக போலீஸ் இதை அனுப்புறாங்க. இது மூலமா, அவங்க உட்கார்ந்த இடத்துல இருந்தே எங்கே, யார், என்ன பண்றாங்கன்னு பார்க்க முடியும்’’ என்றார் வாத்தியார்.

‘‘அப்படியா... இது நல்லாயிருக்கே... அப்போ இதை ஆத்துப் பக்கம், குளத்துப் பக்கம் அனுப்பி, மணல், மண் கடத்துறவங்களை ஈசியா கண்டுபிடிக்கலாம்ல... அதை ஏன் போலீஸ் செய்ய மாட்டேங்குது?’’ கேட்டார் ஏரோட்டி.

‘‘மணல் எடுக்குறவங்கதான் போலீஸுக்கு மாமுல் கொடுத்துடுறாங்களே...’’ என்றார் வாத்தியார். வாத்தியாரும், ஏரோட்டியும், கண்ணம்மாவும் அவரவர் வீட்டுக்குக் கிளம்ப, அத்தோடு முடிவுக்கு வந்தது மாநாடு.