
ஊரே முடங்கிக்கிடக்குற இந்த நேரத்துல மத்திய அரசு செய்யற வேலையைப் பாரேன். இலவச மின்சாரம் இருக்குறதாலதான் கொஞ்ச நஞ்சமாவது விவசாயம் நடந்துக்கிட்டு இருக்கு.
தோட்டத்திலிருந்து வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. சற்று தூரத்தில் தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்துக்கொண்டு வீடு திரும்பிய ‘காய்கறி’ கண்ணம்மாவும் அவருடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்.
“என்ன கண்ணம்மா... நாளைக்கு வியாபாரத்துக்குக் காய் பறிச்சுக்கிட்டு வர்றியா...’’ என்று கேட்டார் வாத்தியார். “ஆமாங்கய்யா... காலையில சீக்கிரமா கொண்டுபோய் வித்தாத்தான், சீக்கிரமா வீட்டுக்கு வந்து மத்த வேலைகளைப் பார்க்க முடியும்’’ என்றார் கண்ணம்மா.
அப்போது சைக்கிள் மணி சத்தம் கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர். ‘ஏரோட்டி’ ஏகாம்பரம் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அவர்கள் அருகே வந்ததும் சைக்கிளை நிறுத்தியவரிடம், “என்னய்யா... இன்னிக்கு சைக்கிள்ல வர்றே... மாடுக எங்கே’’ என்றார் வாத்தியார்.

“அக்னி வெயிலு நம்மளையே வறுத்தெடுக்குது. அதனால, மாட்டை மேய்ச்சலுக்கு அனுப்பலை. அதுக்குத்தான் புல்லுக்கட்டைக் கொண்டு போய்க்கிட்டு இருக்கேன்’’ என்ற ஏகாம்பரம், “இனிமே எல்லாரும் சைக்கிள்லதான் போகணும். பெட்ரோல், டீசல் விலைதான் கூடிக்கிட்டே இருக்குதுல்ல... வெளிநாட்டுல ஓசியாக் கொடுத்தாக்கூட நம்ம நாட்டுல விலை குறைக்க மாட்டாங்கபோல’’ என்றார் நக்கலாக. மூவரும் பேசியபடியே ஊரை நோக்கி நடக்க, மாநாடு ஆரம்பமானது. “விவசாயிகளின் அருமை உலகத்துக்கு இப்பத்தான் புரியுது. காசு பணத்தைவெச்சு உயிர் வாழ முடியாது. சோறுதான் முக்கியம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க வாத்தியாரே...’’ பெருமை பொங்கியது கண்ணம்மா குரலில். “அட நீ வேற... நம்ம ஆளுங்களைப் பத்தி நீ புரிஞ்சுவெச்சிருக்கறது அவ்ளோதான். அந்தந்த சீஸன்ல கண்ணீர்விடுவாங்க. ஆதரவாப் பேசுவாங்க. பிறகு பொழப்பைப் பார்க்கப் போயிடுவாங்க. நம்ம பொழப்பை நாமதான் பார்க்கணும். இம்புட்டு பேசுறியே... ‘இந்தியா விவசாய நாடு’னு சொல்றாங்க. ஆனா, விவசாயிகளை ஊக்குவிக்குற மாதிரி ‘சிறந்த விவசாயி’ அப்படின்னு விவசாயிகளைப் பாராட்டி தேசிய விருது கொடுத்திருக்காங்களா? இல்லையே... ஆனா, சினிமாக்காரங்களுக்கு மட்டும் வருஷா வருஷம் தேசிய விருது கொடுக்குதே அரசாங்கம். இப்போ தெரியுதா... அரசாங்கத்துக்கு யார் முக்கியம்னு?’’ வேதனையோடு பேசினார் ஏரோட்டி.
“உன் கோபத்துல நியாயம் இருக்கு ஏகாம்பரம். அதே நேரத்துல இன்னொரு செய்தியும் சொல்றேன் கேட்டுக்க. ஒரு காலத்துல விவசாயம் செய்யறவங்களுக்கு பொண்ணு கொடுக்க யோசிப்பாங்க. ஆனா, இப்போ விவசாய மாப்பிள்ளைக்குத்தான் கிராக்கியாம். மகாராஷ்டிர மாநிலம், சடாரா மாவட்டத்துல விவசாய மாப்பிள்ளைக்கு பயங்கர டிமாண்டாம். அதனால பொத்தாம் பொதுவா எதையும் பேசக் கூடாது. விவசாயிகளை மதிக்குறவங்க மதிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

“எல்லாம் சரிதான் வாத்தியாரே... `இனிமே இலவச கரன்ட் இருக்காது’னு என்கிட்ட காய் வாங்கின ஒரு வக்கீல் சொன்னாரு. என்னால அதை நம்ப முடியலை. அது உண்மைங்களா...’’ ஆர்வத்தோடு கேட்டார் காய்கறி.
“கொரோனா பயத்துல ஊர் அடங்கிக் கிடக்கு. இன்னிக்கு எந்த ஊர்ல, எத்தனை பேருக்கு கொரோனானு தெரிஞ்சுக்குறதுலயே மக்கள் கவனம் இருக்கு. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த நினைக்குது மத்திய அரசு. இப்போ காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்துக்கு ஆப்புவெச்சிடுச்சு. அடுத்ததா இலவச மின்சாரத்துக்கும் வேட்டு வைக்கப்போகுது. ‘மின்சாரச் சட்டத்திருத்த மசோதா 2020’னு ஒரு மசோதாவைக் கொண்டு வந்திருக்கு மத்திய அரசு. இந்தச் சட்டப்படி, மின்சார உற்பத்தியைத் தனியாருக்குக் கொடுக்கப் போறாங்க. தனியார்கிட்ட மின்சாரம் போனா இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்னு சொல்ல முடியாது. இந்த மசோதாவை, கருத்துக் கேட்டு எல்லா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசாங்கம் அனுப்பியிருக்கு. இந்த மசோதா சட்டம் ஆகிட்டா இலவச மின்சாரம் கிடைக்காது. மின் கட்டணமும் அதிகமாகும்’’ என்றார் வாத்தியார்.
“ஊரே முடங்கிக்கிடக்குற இந்த நேரத்துல மத்திய அரசு செய்யற வேலையைப் பாரேன். இலவச மின்சாரம் இருக்குறதாலதான் கொஞ்ச நஞ்சமாவது விவசாயம் நடந்துக்கிட்டு இருக்கு. இலவச மின்சாரம் போச்சுன்னா அவ்வளவுதான்’’ விரக்தியுடன் சொன்னார் ஏகாம்பரம்.

“தமிழக விவசாயிகள் உயிரைக் கொடுத்து வாங்கின இலவச மின்சாரத்துல கைவெச்சா எதிர்ப்பு அதிகமாகும்னு அரசியல்வாதிகளுக்கும் தெரியும். என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்’’ சமாதானப்படுத்தினார் வாத்தியார். “இப்போ புதுசா `திராட்சை உரம்’னு சொல்றாங்களே... அதைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்கய்யா...’’ என்றார் கண்ணம்மா. “பொதுவா காய்கறிகள், பழங்கள் பளபளப்பா நல்ல வடிவத்துல இருந்தாத்தான் மக்கள் வாங்குறாங்க. பழங்கள்ல அந்த வடிவத்தைக் கொடுக்குறது பொட்டாசியம் சத்துதான். அதனால, `அறுவடைக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி திராட்சை உரம் தெளிச்சா பழங்கள் அதுக்கான வடிவத்துல இருக்கும்’னு சொல்றாரு நீர்மேலாண்மை வல்லுநர், திண்டுக்கல் பிரிட்டோ ராஜ்’’ என்றார் வாத்தியார்.
‘‘பொதுவா காய்கறிகள், பழங்கள் பளபளப்பா, நல்ல வடிவத்துல இருந்தாத்தான் மக்கள் வாங்குறாங்க. பழங்கள்ல அந்த வடிவத்தைக் கொடுக்குறது பொட்டாசியம் சத்துதான்.’’
“அது எங்கே கிடைக்கும்?’’ இடைமறித்தார் ஏரோட்டி. “அதை நாமே தயார் செஞ்சுக்கலாம். கறுப்புத் திராட்சையில தோல் இல்லாம, உள்ளே இருக்குற பழம், கொட்டைகளை மட்டும் எடுத்துக்கணும். அதுகூட சம அளவு நாட்டு வெல்லம் இல்லைன்னா சர்க்கரையைப் போடணும். அதாவது ஒரு கிலோ பழம் போட்டா, ஒரு கிலோ வெல்லம் போடணும். அதைக் காற்றுப் புகாத ஒரு பாட்டில்லயோ, டப்பாவுலயோ போட்டு மூடி, மண்ணுக்குள்ள புதைச்சு வெச்சிடணும். 18 நாள் கழிச்சு அதை எடுத்துப் பார்த்தா புளிச்சுப்போய், நுரை நுரையா இருக்கும். அதுல 100 மி.லி எடுத்து, 10 லிட்டர் தண்ணியில கலந்துக்கணும். அதை ஒரு வாரத்துல அறுவடை செய்யப்போற கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட அனைத்துத் தோட்டக்கலைப் பயிர்கள்லயும் தெளிக்கலாம். காய் மேல படுற மாதிரி தெளிக்கணும்’’ என்று விளக்கினார் வாத்தியார்.
“வாத்தியாரே... நீங்க சொல்றதைப் பார்த்தா ஒயின் தயாரிக்குற மாதிரியில்ல இருக்குது’’ என்றார் ஏரோட்டி. “அப்படியும் வெச்சுக்கலாம். இது பழங்களுக்குப் பளபளப்பையும்,வடிவத்தையும் கொடுக்கும்கிறதை மட்டும் மனசுல வெச்சுக்கய்யா. வேற எதையும் யோசிக்காதே’’ என்றார் வாத்தியார்.
“நான் வேற எதையும் யோசிக்கலை. மத்தவங்க யோசிக்காம இருந்தா சரிதான். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையா 40 நாளுக்கும் மேல டாஸ்மாக் இல்லாம நிம்மதியா இருந்துச்சு ஊரு. இவங்க சும்மா இருந்தாலும் அரசாங்கம் சும்மா இருக்குமா... ஊரடங்கு முடியறதுக்குள்ள கடையைத் தொறந்துட்டாங்க. நம்மாளுக சும்மாவே ஆடுவாங்க... இதுல சலங்கை வேற கட்டிவிட்டா கேட்கவா வேணும்... கொரோனா பரவிக்கிட்டு இருக்குற நேரத்துல கடையைத் திறந்துவிட்டிருக்காங்க. இது எங்க போயி முடியுமோ தெரியலை’’ என்று தலையில் அடித்துக்கொண்டார் ஏகாம்பரம்.
“வேலை வெட்டியில்லாம, கையில நாலு காசு இல்லாம ஏழைங்க தவிச்சுக்கிட்டு இருக்குற நேரத்துல இந்தக் கருமத்தை வேற தொறந்துட்டாங்க. நிவாரணம்னு ஆயிரம் ரூவா கொடுத்துட்டு, அதை வட்டியோட வசூலிக்கப் பார்க்குறாங்க’’ என்று சலித்துக்கொண்டார் கண்ணம்மா.
அதற்குள் ஊர் வந்துவிட, அவரவர் வீடுகளுக்குப் போகும் பாதையில் திரும்பினார்கள். அதோடு முடிவுக்கு வந்தது மாநாடு.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயிற்சி, கருத்தரங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகும் `தண்டோரா’ மற்றும் வேளாண் விளைபொருள்களை வாங்கவும் விற்கவும் வழிகாட்டும் ‘பசுமை சந்தை’ ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.