
வரப்பில் முளைத்திருந்த கீரைகளைப் பறித்துக்கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அந்த நேரத்தில் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் தோட்டத்துக்கு வந்தனர்.
அவர்களைப் பார்த்ததும், வேகமாக வேலையை முடித்துவிட்டு வந்தார் ஏரோட்டி. ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கினார், வாத்தியார்.
“தென்னை விவசாயிகள், தேங்காய் விலை குறையும் சமயங்களில் தேங்காயை முற்றவிட்டுக் கொப்பரையாக விற்பனை செய்றது வழக்கம். ஆனா, கொப்பரை ஏல நிலையங்கள் இல்லாத பகுதிகளில் கொப்பரையை வெளி மார்க்கெட்லதான் விற்க வேண்டிய நிலை இருந்தது. ‘இந்தச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கிட்டு வியாபாரிகள் குறைவான விலைக்குத்தான் கொள்முதல் செய்றாங்க. அதனால, அரசே கொப்பரையைக் கொள்முதல் செய்யணும்’னு ரொம்ப நாளா விவசாயிகள் கோரிக்கை வெச்சுட்டு இருந்தாங்க.
கொப்பரை ஏல மையங்கள்லயும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைச்சுக்கிட்டு குறைவான விலைக்குதான் ஏலம் கேட்டு வந்தாங்க. அதையும் சரி செய்யணும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சாங்க. இப்போ அதை நிறைவேற்றுகிற வகையில்… தமிழ்நாட்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருப்பூர், ஈரோடு, தேனி, தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலேயே கொப்பரை கொள்முதல் செய்யச்சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டுருக்கு.
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் 28 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மொத்தம் 50,000 டன் அளவு கொப்பரையை… குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப் போறாங்க. மத்திய அரசு 2019-ம் வருஷத்துல, பந்து போன்ற கொப்பரைக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையா 1 கிலோவுக்கு 99.20 ரூபாய்னும் அரவைக் கொப்பரைக்கு 95.21 ரூபாய்னும் நிர்ணயிச்சிருக்கு. வருகிற 2020-ம் வருஷம் ஜனவரி முதல் வாரம்வரை கொப்பரையைக் கொள்முதல் செய்வாங்க.
அரசு மையங்களில் கொப்பரை விற்பனை செய்ய விரும்புகிற விவசாயிகள், பக்கத்திலிருக்கிற கொள்முதல் நிலையங்களில்… பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தக நகல் எல்லாத்தையும் கொடுத்துப் பதிவு செய்து கொள்ளணும். கொப்பரை, மத்திய அரசு நிறுவனமான தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையம் (நாபெட்) நிர்ணயிச்சு இருக்கிற தரத்தில் இருக்கணுமாம்” என்றார் வாத்தியார்.
அதை ஆமோதித்த ஏரோட்டி, “கிட்டத்தட்ட 20 வருஷம் கழிச்சு அரசாங்கமே கொப்பரையைக் கொள்முதல் செய்றது வரவேற்க வேண்டிய விஷயம்தான். பல மாவட்டங்களில் தென்னை விவசாயிகள் சந்தோஷத்தில் இருக்கிறாங்க. ஆனா, ‘இதுல ரெண்டு விஷயம் நெருடலா இருக்கு’னு சில விவசாயிகள் சொல்றாங்க. ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் கொள்முதல் செய்கிறதுக்குக் குறைந்த அளவுதான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கு. அதனால, அந்த மாவட்டத்தில் விளையும் மொத்தக் கொப்பரையையும் கொள்முதல் செய்யமாட்டாங்க. முதல்ல கொண்டு செல்கிற விவசாயிகள் மட்டும்தான் விற்பனை செய்ய முடியும். கொள்முதல் இலக்கை எட்டிட்டா விவசாயிகளைத் திருப்பி அனுப்ப வாய்ப்பிருக்கு.

இரண்டாவது விஷயம் தர நிர்ணயம். இதைக் காரணம் காட்டியும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய மறுக்க வாய்ப்பிருக்கு. அதுமூலமா வேண்டப்பட்ட விவசாயிகளும், லஞ்சம் கொடுக்கத் தயாரா இருக்கிற வியாபாரிகளும் கொண்டு வர்ற கொப்பரையை மட்டும் கொள்முதல் செய்ய வாய்ப்பிருக்கு. கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாத விவசாயிகள், வேற வழி இல்லாமல் வெளி விவசாயிகளிடம் குறைந்த விலைக்குத்தான் விற்பனை செஞ்சாகணும். வியாபாரிகள், அதை வாங்கி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வாய்ப்பிருக்கு.
கடந்த காலங்களில் நடந்த விஷயம்தான் இது. 1996-ம் வருஷத்திலிருந்து 2001-ம் வருஷம் வரையான தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொப்பரைக்கு வெளி மார்க்கெட்டில் மிக குறைவான விலைதான் கிடைச்சது. மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையா 32 ரூபாய் நிர்ணயிச்சிருந்தது. ஆனா, வெளிமார்கெட்டில் விவசாயிகள் 20 ரூபாய்தான் விலை கொடுத்தாங்க. அப்போ கூட்டுறவுச் சங்கங்கள்ல கொப்பரையை கொள்முதல் செய்ய உத்தரவிட்டார், அப்போதைய முதல்வர் கருணாநிதி. அந்தச் சமயத்தில் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள், சங்கத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் எல்லாரும் கூட்டணி வெச்சு, விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதலில் பெரிய அளவு ஊழல் செய்ததா குற்றச்சாட்டு கிளம்பியது. அதேமாதிரி இப்பவும் நடந்திடக் கூடாது. அதுக்குத் தமிழக அரசு உத்தரவாதம் கொடுக்கணும்” என்றார்.
“நல்லபடியா கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு நாலு காசு கிடைச்சா நல்லதுதான்” என்ற காய்கறி, கூடையிலிருந்து ஆளுக்குக் கொஞ்சம் நாவல் பழங்களை எடுத்துக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

“விழுப்புரம் பக்கத்தில் இருக்கிற மயிலம் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்புத்துறை நான்காம் வருஷ மாணவர்கள், தென்னை மரத்தில் ஏறித் தேங்காயையும் இளநீரையும் பறிக்கிற மாதிரி ஒரு ரோபோவை உருவாக்கியிருக்காங்க. அதை ரிமோட் கன்ட்ரோல் மூலமா இயக்க முடியும். இந்த ரோபோவை உருவாக்க 2,000 ரூபாய்தான் செலவாச்சாம். இது மூலமா, ஒரு மணிநேரத்தில் 15 மரங்கள் ஏற முடியுமாம்” என்றார்.
அடுத்த செய்தியை ஆரம்பித்த ஏரோட்டி, “தமிழக அரசாங்கம், குறிப்பாகக் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஒரு புதிய சட்டத்தினை கொண்டு வருவதாக, ஆங்கிலப் நாளிதழில் செய்தி வந்துள்ளது. தமிழ்நாடு போவைன் பிரீடிங் ஆக்ட் (Tamilnadu Bovine Breeding Act-2019) என்ற சட்டத்தைக் கொண்டு வருவதாகவும், இந்தச் சட்டத்தைக் கொண்டு ஓர் அமைப்பை உருவாக்குவதாகவும் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ‘இந்தச் சட்டத்தால் ஹோல்ஸ்டைன், ஃபெர்சியன் போன்ற வெளிநாட்டு மாட்டு இனங்கள் வைத்திருப்பவர்கள் காளைகளை வைத்து இருக்கக் கூடாது. இதனால, மாடுகளுக்குச் சினை ஊசிதான் செலுத்தப்பட வேண்டும் என்னும் நிலை உருவாக்கப்படும். சினை ஊசி தயாரிப்பவர்கள் அரசு அமைப்பின் கீழ் பதிவு செய்து இருக்க வேண்டும். இவ்வமைப்பு அவர்களைச் சோதனைகளுக்கு உட்படுத்த முழு அதிகாரம் வழங்கப்படும் என்றெல்லாம் சட்டத்திருத்தம் கொண்டுவர உத்தேசித்துள்ளது கால்நடை பராமரிப்புத் துறை.
இச்சட்டத்தின் நோக்கம், ஆயிரக்கணக்கான கோடிகள் அடங்கிய வர்த்தகம் இதில் உள்ளது. தமிழகத்தில் பல லட்சம் மாடுகள் உள்ளன. இவற்றில் வருடம் ஒருமுறை மாடு சினைப் பிடிக்க 40 ரூபாய் பெற்று கால்நடைத்துறை மூலம் ஊசிகள் போடப்பட்டு வருகிறது.
இதைத் தனியார் வசப்படுத்தினால், குறிப்பாகக் காளைகள் பிறக்காத ஊசிகள் இப்போது வந்துள்ளது. இவற்றைப் பிரபலப்படுத்த ஒரே ஒரு தனியார் அமைப்பிற்குக் கொண்டு செல்ல இவ்வேலைகள் நடைபெறுகின்றன. கூடிய விரைவில் சினை ஊசி 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்கக் கூடியதாக மாறும். பல லட்சம் மாடுகளுக்கு 500 ரூபாய் எனில் கணக்கு வைத்தால், இதில் எவ்வளவு பெரிய வர்த்தகம் உள்ளது என அறிய முடியும். பாரம்பர்ய கால்நடைகளின் வளர்ச்சியிலும் பெரும் வில்லங்கத்தை இது உருவாக்கும். 8,000 வருட காலமாக இந்த மாட்டு இனங்களைப் பராமரித்து வந்த மக்களிடமிருந்து இந்த கால்நடைகளைப் பிரித்து எடுப்பதற்கான முயற்சிதான் இது’ என்று குறிப்பிட்டுள்ளார் சேனாபதி.
‘பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்’ தொடர், இந்த இதழில் இடம் பெறவில்லை.
அந்த நேரத்தில் வானம் இருட்டிக்கொண்டு சில மழைதுளிகள் விழ… அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.