மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

நல்லாத்தான் சொல்றீங்க. ஒவ்வொரு தடவையும் திட்டங்களைச் சொல்றீங்க. அதை விவசாயிகள் அதிகாரிகள்கிட்ட போய்க் கேட்டா, பல மாவட்டங்கள்ல கிடைச்சிடுதாம்.

னது வயலுக்கு வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமிக்கு, கொடுப் பதற்காக இளநீர் சீவிக்கொண் டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். “என்னய்யா... இளநியை சீவுவன்னுப் பார்த்தா, கல்லுல படுக்க வெச்சு வெட்டிக் கிட்டு இருக்க’’ என நக்கல் செய்தார் வாத்தியார்.

‘‘உங்களுக்குத் தேவை இளநிதானே. அது வரும். ரிடையர்ட்மென்ட் ஆகியும் உங்களுக்கு இன்னும் குசும்பு போகலைய்யா’’ என்றார் ஏகாம்பரம்.

அப்போது காய்கறி கண்ணம்மாவும் அங்கு வந்து சேர ஆரம்பமானது மாநாடு.

‘‘வாப்புள்ள... இளநி குடிக்கிறியா?’’ என்று வரவேற்றார் ஏகாம்பரம். “என்னய்யா இவ்வளவு தாராளம்? மழை கிழை வந்துடப் போகுது’’ சிரித்துக்கொண்டே ஏரோட்டியை நக்கல் செய்தார் கண்ணம்மா. “இது மழைக்காலம்தானே... மழை வரத்தான் செய்யும். வந்தா நல்லதுதானே... அப்பத்தான காடுகரை செழிச்சு, புல்லு பூண்டு முளைக்கும். ஆடு மாடுகளுக்கு மேய்ச்சலுக்கான புல்லும் கிடைக்கும்’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘புல், பூண்டு மட்டுமா முளைக்குது. இப்பல்லாம் குடோன்ல வெச்சிருக்க நெல்லே முளைச்சிடுது’’ என்றார் கண்ணம்மா. “சொல்றதைத் தெளிவாச் சொல்லு புள்ள... எங்க நெல்லு முளைச்சுச்சாம்’’ எரிச்சலாகக் கேட்டார் ஏரோட்டி.

“அட டெல்டா மாவட்டங்கள்ல நடந்ததைச் சொல்லுதய்யா... இந்த வருஷம் வழக்கத்தைவிட நல்ல விளைச்சல் கிடைச் சிருக்குதுனு அரசாங்கம் சந்தோஷப்பட்டாங்க. ஆனா, விவசாயிங்க சந்தோஷப்பட முடியலை. அதைக் கொண்டுபோய் விக்குறதுக்குள்ள படாதபாடு பட்டுட்டாங்க. இந்த நிலைமையில பல இடங்கள்ல கொள்முதல் நிலையங்கள்ல விக்குறதுக்காக வெளியே அடுக்கி வெச்சிருந்த நெல்லு, அரசாங்கம் வாங்கி வெச்சிருந்த நெல் மூட்டைகள் மழையில நனைஞ்சுப் போச்சு. சில இடங்கள்ல முளைவிட ஆரம்பிச்சிடுச்சு. அதைத்தான் கண்ணம்மா சொல்லுது’’ என்றார்.

‘‘அதை நானும் படிச்சேன்யா... எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்கூட அதைக் கண்டிச்சு இருந்தாருன்னு பேப்பர்ல போட்டிருந்துச்சு. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. சும்மா புரளியைக் கிளப்புறாங்கனு அ.தி.மு.க அமைச்சர் ஒருத்தர் சொல்லியிருக்காருன்னும் நியூஸ்ல சொன்னாங்க. என்னதான்யா நடக்குது’’ வாத்தியாரைப் பார்த்துக் கேட்டார் ஏகாம்பரம்.

‘‘நிலத்தைத் தயார் செஞ்சு கல்தூண் ஊன்றி, கம்பியை வெச்சு வலை அமைச்சதும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வந்து பார்த்து ஆய்வு பண்ணுவாங்களாம். அதுக்குப்பிறகு மானியம் கொடுப்பாங்களாம்.’’

‘‘அது ஒண்ணும் இல்லையா... சில இடங்கள்ல மழையில நனைஞ்சு நெல்லு முளைவிட்டது உண்மைதான்யா. தார்பாய் எல்லாம் கிழிஞ்சுப் போச்சாம். அதான் நெல் மூட்டையெல்லாம் நனைஞ்சுப் போச்சு. பல இடங்கள்ல நெல்லோட ஈரப்பதம் அதிகமா இருக்குன்னு காரணம் சொல்லிக் கொள்முதல் செய்ய மாட்டேங்கிறாங்க. ஆனா, ‘இனிமே 17 சதவிகிதத்துல இருந்து 22 சதவிகிதமா உயர்த்த தமிழக அரசுப் பரிந்துரை செய்துள்ளது. ஈரப்பதத்தைக் காரணம் சொல்லி, நெல்லை கொள்முதல் செய்யாம இருக்கக் கூடாதுனு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்கோம்’னு சொல்லியிருக்காரு அமைச்சர் காமராஜ்’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

“அதெல்லாம் பெரிய இடத்துச் சமாச்சாரம். வாத்தியாரே, எங்களுக்குப் பயன்படுற மாதிரி நாலு விஷயத்தைச் சொல்லுங்க’’ என்றார் கண்ணம்மா.

“அதுவும் சரிதான் கண்ணம்மா. ஒரு நல்ல தகவல் சொல்றேன் கேட்டுக்குங்க. பந்தல் காய்கறிக்கு மானியம் கொடுக்குறாங்களாம். தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறைதான் அந்த மானியத்தைக் கொடுக்குதாம். ஒரு ஹெக்டேர்ல காய்கறி பந்தல் அமைக்கிறதுக்கு 4 லட்சம் ரூபாய் செலவா குமாம். அதுல 50 சதவிகிதம் மானியமாத் தர்றங்களாம். பந்தல் சாகுபடிக்கு நிலத்தைத் தயார் செஞ்சதும், கல்தூண் ஊன்றி, கம்பியை வெச்சு வலை அமைச்சதும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வந்து பார்த்து ஆய்வு பண்ணுவாங்களாம். அதுக்குப் பிறகு, மானியம் கொடுப்பாங்களாம். காய்கறிச் சாகுபடி செய்யுற விவசாயிகள், அதை இருப்பு வெச்சு, தரம் பிரிச்சுச் சிப்பம் கட்டுறதுக்காக ஒரு ரூம் கட்டிக்கலாம். சிப்பம் கட்டுற அறை அமைக்குற விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் மானியம் இருக்காம். காய்கறிகள் அதிகம் விளையாத காலங்கள்ல விளைய வைக்கிறவங்களுக்கும் மானியம் தர்றாங்களாம். ஒரு ஹெக்டேர் கத்திரிக்காய்ச் சாகுபடி செய்றவங்களுக்கு 3,750 ரூபாய், கீரைச் சாகுபடி செய்றவங்களுக்கு ரூ.2,000 மானியம் தர்றாங்களாம். இதை வாங்க அந்தந்த மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகத்துக்குப் போய் விண்ணப்பிக்கணும்’’ என்றார் வாத்தியார்.

“அருமையான தகவலைச் சொன்னீங்க வாத்தியாரே...’’ என்று மகிழ்ச்சியாகச் சொன்னார் கண்ணம்மா. “அவ்வளவுதானா வாத்தியாரே... எனக்கு எந்தத் தகவலும் இல்லையா’’ என்றார் ஏகாம்பரம்.

“அவசரப்படாதய்யா... உனக்கும் தகவல் இருக்குய்யா. விதை நேர்த்தி, குழித்தட்டு முறையில நாற்று உற்பத்தி செய்றதுக்கும் மானியம் இருக்காம். தோட்டத்துல களைகளைக் கட்டுப்படுத்த பாலித்தீன் சீட் மூலமா மூடாக்கு அமைக்கிறதுக்கு ஒரு ஹெக்டேருக்கு 16,000 ரூபாய் மானியம் கொடுக்குறாங்களாம். இதுக்கும் தோட்டக்கலைத்துறை மூலமாத்தான் தர்றாங்களாம்’’ என்ற வாத்தியார் தொடர்ந்து, “மண் வளத்தைக் காப்பாத்துறதுக்காக வேளாண்மைத்துறை மூலமா பசுந்தாள் உர விதைகளை 50 சதவிகித மானிய விலையில கொடுக்குறாங்களாம். இந்த மானியம் சென்னை, ராமநாதபுரம், நீலகிரி மூணு மாவட்டத்தைத் தவிர, மத்த மாவட்ட விவசாயிகள் வாங்கிக்கலாமாம்’’ என்றார்.

“நல்லாத்தான் சொல்றீங்க. ஒவ்வொரு தடவையும் திட்டங்களைச் சொல்றீங்க. அதை விவசாயிகள் அதிகாரிகள்கிட்ட போய்க் கேட்டா, பல மாவட்டங்கள்ல கிடைச்சிடுதாம். சில மாவட்டங்கள்ல கண்டுக்க மாட்டேங்கிறாங்களாம்’’ என்றார் ஏகாம்பரம்.

“இன்னொரு விஷயமும் இருக்குய்யா. காட்டுப் பன்றிகிட்ட இருந்து, பயிர்களைக் காப்பாத்துறதுக்காக வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் இருக்க கே.வி.கே மூலமா ஒரு இயற்கைக் காட்டுப்பன்றி விரட்டிக் கண்டுபிடிச்சிருக்காங்க. ஒரு ஏக்கருக்கு 500 மி.லி இயற்கை காட்டுப்பன்றி விரட்டித் தேவைப்படுமாம். நிலத்தைச் சுத்தி வரப்புகள்ல இரண்டடி உயரமுள்ள குச்சிகளை 10 அடிக்கு ஒண்ணு ஊன்றணும். ஒன்றரை அடி உயரத்துல சணல் இல்லைன்னா கம்பிகள் மூலமா குச்சிகளை இணைச்சு கட்டணும். ஒவ்வொரு குச்சிக்கும் நடுவுல ஒரு டப்பா கட்டணும். ஒரு ஏக்கருக்கு 100 டப்பாக்கள் தேவைப்படுமாம். டப்பாக்கள்ல 5 மி.லி காட்டுப்பன்றி விரட்டியை ஊத்தி மூடி, டப்பா கழுத்துப் பகுதியில நாலு ஓட்டைப் போட்டு வெச்சா, அது மூலமா வாசனை வெளியே வருமாம். அந்த வாசனைக்குக் காட்டுப்பன்றி ஓடியே போயிடுமாம். இந்த மருந்து வேணும்கிறவங்க 0416 2272221 என்ற நம்பர்ல வேலூர் கே.வி.கேவுல கேட்டுக்கலாம்’’ என்றார் வாத்தியார்.

“இன்னிக்குப் பல தகவலைச் சொல்லிட்டீங்க... வாத்தியாரே” என்றபடி கண்ணம்மா நடையைக் கட்ட முடிவுக்கு வந்தது மாநாடு.

இந்த இதழில் இயற்கை வேளாண்மைத் தொடர் இடம் பெறவில்லை.