
உண்மைதானே. திடீர்னு காரணம் இல்லாம நிப்பாட்டுனா சந்தேகம் வரத்தானே செய்யும்’’ என்றார் ஏகாம்பரம்.
“இந்தத் தடவை மழை வெளுத்து வாங்கிடுச்சு போல’ ஆற்றில் ஓடிய தண்ணீரைப் பார்த்துச் சொன்னார் வாத்தியார் வெள்ளைச்சாமி. கூடவே ஏரோட்டி ஏகாம்பரம், கையில் ஆடு பிடித்தபடி காய்கறி கண்ணம்மாவும் வர மூவரும் பேசிக்கொண்டே ஆற்றைக் கடந்தனர்.
‘‘ஆமாங்கய்யா... இப்படியே மழை பெய்ஞ்சா காடு, கரை செழிச்சிடும்’’ என்றார் கண்ணம்மா.
‘‘இப்படியே போனா விவசாயம் நல்லா இருக்கும். இப்ப நம்ம ஊர்ல இளைஞர்கள் அதிகமா விவசாயம் பக்கம் வர்றாங்க. இப்படி மழை பெய்ஞ்சாதான் அவங்களும் ஆர்வமா வேலை செய்வாங்க. இயற்கை விவசாயமும் அதிகமாகும்’’ என்றார் வாத்தியார்.
வாத்தியார் பேச்சு இடையில் புகுந்த ஏகாம்பரம், ‘‘அதெல்லாம் இருக்கட்டும் ஐயா. பசங்களுக்கு இருக்குற ஆர்வம் அரசாங்கத்துக்கு இல்லியே. புதுசா சட்டம் போட்டு இருக்குற விவசாயத்தைக் குழிதோண்டி புதைக்குற வேலையிலதான முனைப்பா இருக்காங்க’’ வேதனையோடு சொன்னார்.
‘‘உண்மைதான் ஏகாம்பரம். இப்ப போட்டிருக்க புதுச் சட்டம் மோசமானதுன்னு தான் சொல்றாங்க. வட மாநில விவசாயிங்க இதைப் புரிஞ்சுகிட்டு போராட்டத்துல இறங்கிட்டாங்க. ஆனா, தமிழ்நாட்டுலதான் அங்கொன்னும் இங்கொன்னுமா போராடுறாங்க. இன்னும் அதோட முழுமையான பாதிப்பு விவசாயிகளுக்குத் தெரியலை’’ சலிப்புடன் சொன்னார் வெள்ளைச்சாமி.
“நம்ம ஊர்ல சினிமா தியேட்டர் எப்ப திறப்பாங்கன்னு பொதுஜனம் கவலையில இருக்கு. விளைஞ்ச பொருளுக்கு விலை இல்லாம வேதனையில இருக்காங்க விவசாயிங்க. இதுல எங்கிட்டு போராடுறது’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘ஐயா, இயற்கை விவசாயம்னு சொன்னீங்களே. அதுல ஒரு சந்தேகம். இதுவரைக்கும் நாங்க சூடோமோனஸ் பயன்படுத்திட்டு வந்தோம். ஆனா, இனிமே சூடோமோனஸ் பயன்படுத்தக் கூடாது. அது மூலமா நோய் பரவுதுன்னு சொல்றாங்களே நிஜமாய்யா’’ சந்தேகத்தைக் கேட்டார் கண்ணம்மா.
‘‘அது புரளின்னு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல சொல்றாங்க கண்ணம்மா. பல்கலைக்கழகம் ரசாயன உரங்களுக்குப் பதிலா உயிரி பூஞ்சணக்கொல்லிகளைக் கண்டுபிடிச்சு விவசாயிகளுக்குக் கொடுத்துட்டு இருக்காங்க. அதுல பாக்டீரியா வகையைச் சேர்ந்தது ‘சூடோமோனஸ்’ங்கிற உயிரி பூஞ்சணக்கொல்லி. இது கண்டு பிடிச்சு 20 வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. இந்த நிலைமையில, ‘இனிமேல் பல்கலைக்கழகத்துல சூடோமோனஸ் உற்பத்தி செய்ய மாட்டோம். அதுக்குப் பதிலா ‘பேஸில்லஸ் சப்டிலிஸ்’(Bacillus subtilis)ங்கிற பூஞ்சணத்தைப் பயன்படுத்தலாம்னு பல்கலைக்கழகம் அறிவிச்சது. அதைப் பார்த்ததும் சில பேர் கிளப்பி விட்டுட்டாங்க. ‘சூடோமோனஸ் பயன்படுத்துறதால மனுசங்களுக்கு நோய் வருது’னு பரப்பிட்டாங்க. ‘இத்தனை வருஷமா பயன்படுத்திட்டு இருந்த பூஞ்சணத்தைத் திடீர்னு ஏன் நிறுத்தணும். அதனால சந்தேகம் வர்றது இயல்புதானே’னு விவசாயிகள் தரப்புல சொல்றாங்க’’ என்றார் வாத்தியார்.
‘‘உண்மைதானே. திடீர்னு காரணம் இல்லாம நிப்பாட்டுனா சந்தேகம் வரத்தானே செய்யும்’’ என்றார் ஏகாம்பரம்.
‘‘இது சம்பந்தமா பல்கலைக்கழக மத்திய பயிர் பாதுகாப்புத்துறை இயக்குநர் பிரபாகரன் ஒரு விளக்கம் சொல்லி இருக்காரு. அதாவது, ‘சூடோமோனஸ் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காது. ஆண்டுக்கு ஆண்டு பாக்டீரியா வகை பூஞ்சணத்தின் வீரியம் குறையும். அதோட மூலக்கூறுகள்லயும் மாற்றம் உண்டாகும். தற்போது அறிமுகம் செய்துள்ள ‘பேஸில்லஸ் சப்டிலிஸ்’ என்ற பூஞ்சணம் வீரியமானது. எல்லா சூழலையும் இது தாங்கும். சூடோமோனஸுக்கு அந்தத் தன்மை இல்லை’னு சொல்லி இருக்காரு’’ என்றார் வாத்தியார்.
‘‘இந்த வருஷம் முழுக்க வைரஸ் பிரச்னைதான் ஓடும்போல இருக்கு’’ என்றார் கண்ணம்மா.
‘‘சரியா சொன்ன கண்ணம்மா. இப்ப நாமக்கல், சேலம் மாவட்டங்கள்ல மரவள்ளியில மாவுப்பூச்சித் தாக்குதல் அதிகமா இருக்குன்னு சொல்றாங்க. இதுவும் வெளிநாட்டுல இருந்து வந்ததாம். பூச்சிக்கொல்லிகளை வெச்சு இதுங்களை ஒண்ணும் செய்ய முடியாதாம். இதை அழிக்கத் தனியா ஒட்டுண்ணி இருக்காம். அது மூலமாத்தான் இதைத் தடுக்க முடியும். ஆனா, அது தெரியாம நம்ம முதலமைச்சர் என்னென்னமோ மருந்துகளைச் சொல்லிட்டு இருக்காரு. ஆனா, ஒட்டுண்ணி மூலமாதான் இதை அழிக்க முடியும்னு தைவான்ல இருக்க உலக காய்கறி மைய மூத்த விஞ்ஞானி சீனிவாசன் ராமசாமி உறுதியாச் சொல்றாரு. அரசாங்கம் அதை வாங்கி, மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த முயற்சி செஞ்சா மரவள்ளி விவசாயிங்களுக்கு உதவியா இருக்கும்’’ என்றார் வாத்தியார்.
‘‘அரசாங்கம்தான் இதுல கவனம் செலுத்தணும்’’ என்றபடியே கண்ணம்மா கிளம்ப முடிவுக்கு வந்தது மாநாடு.
முகநூல் பதிவைத் தீர்ப்பில் சொன்ன நீதிபதி

சாகித்ய அகாடமி விருதுபெற்ற `சூல்’ நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் சோ.தர்மன், தன் முகநூலில் ‘ஒரு கண்மாய்க் கரையில் குத்தகைக்காரர் அனுமதியுடன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது மாடுமேய்க்கும் ஒருவர் என்னிடம் வந்து, ‘ஐயா ஆடு, மாடுகளுக்குத் தண்ணீர் காட்டணும். அதுக்கு நீங்க அனுமதிக்கணும். எல்லாக் கண்மாய்களையும் அரசு குத்தகைக்கு விட்டுருச்சு. குத்தகைக்காரர்கள் மாடுகளைத் தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. எங்களை அடித்து விரட்டுகிறார்கள். மாடுகளைக் கற்களால் எரிந்து விரட்டுகிறார்கள்’ எனச் சொல்லி இருக்கிறார். அதைக்கேட்ட தர்மன், மன்னர்கள், ஜமீன்தார்கள், வெள்ளையர்கள் காலத்தில் நீர் நிலைகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் தன் ஆதங்கத்தை முகநூலில் பதிவிட்டிருந்தார். அவரது அப்பதிவை மேற்கோள்காட்டி மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். பதினொரு பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பில் அவரது முகநூல் பதிவு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.