மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

நம்ம நாட்டுல எல்லாமே அரசியல் தான்யா... சரி நாம ஏதாவது நல்ல விஷயம் பேசுவோம்’’

‘‘வெயில் இந்தப் போடு போடுது. மழை வரும்னு ரேடியோவுல சொன்னாங்க. ஆனா, மழையைக் காணோமே. ஒரு மழைக் கெடச்சு. குளம் குட்டைகள்ல தண்ணி வந்துட்டா, ஆடுகளுக்குத் தண்ணி பிரச்னை இருக்காது’’ தனக்குத்தானே பேசிக்கொண்டு அடிகுழாயில் தண்ணீரை அடித்து ஆடுகளுக்குக் காட்டிக் கொண்டிருந்தார் ஏரோட்டி ஏகாம்பரம்.

அப்போது அந்த வழியாக வந்த வாத்தியார் வெள்ளைச்சாமி, ‘‘என்ன ஏகாம்பரம். தண்ணியடிச்சுட்டு இருக்கியா’’ என நக்கலாகக் கேட்டார்.

அவரை முறைத்துப் பார்த்த ஏரோட்டி, “ஏற்கெனவே வெயில் மண்டையைப் பொளந்துகிட்டு இருக்குது. இதுல நீங்க வேற எகத்தாளம் பேசாதீங்க வாத்தியாரே’’ என்றார் எரிச்சலாக.

‘‘அட சும்மா தமாசுக்கு சொன்னேன்யா. உனக்குத்தான் அந்தப் பழக்கம் இல்லைனு ஊருக்கே தெரியுமே’’ என்று வாத்தியார் பேசிக்கொண்டிருக்கும்போதே, காய்கறிகள் விற்பனையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த கண்ணம்மாவும் அங்கு வந்து சேர்ந்தார்.

‘‘என்ன புள்ள... கையில என்னமோ வெச்சிருக்கப்போல இருக்கு. எதையாவது கொறிக்கணும்போல இருக்கு. டவுனுக்குப் போயிட்டு வர்ற ஏதாவது நொறுக்குத்தீனி வாங்கிட்டு வந்தியா’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘அட ஒண்ணும் வாங்கலையா. மக்காச்சோளக் கதிரு ரெண்டு இருக்கு. அதை வேணா தர்றேன்’’ என்றபடி கையில் இருந்த மக்காச்சோளக் கதிரை எடுத்து வாத்தியாரிடம் ஒன்றைக் கொடுத்தவர், ‘‘உனக்கு ஒண்ணு இருக்குய்யா... வந்து வாங்கிக்க’’ என்றார்.

மூவரும் மக்காச்சோளத்தை மென்று சாப்பிட்டபடியே மாநாட்டைத் தொடங்கினர்.

‘‘அய்யா இந்த வேளாண் சட்டம் வந்ததுனால விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. கார்ப்பரேட் வியாபாரிகளுக்குத்தான் லாபம்னு விவசாய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் எல்லாம் சொல்றாங்க. ஆனால், அந்தச் சட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம். அது மூலமா விவசாயிகளுக்கு ரொம்ப ஆதாயம் இருக்குனு மத்திய, மாநில அரசுகள் சொல்லுதே. இதுல எதை நம்புறதுன்னே தெரியலை. ஒரே குழப்பமா இருக்கு’’ என்றார் கண்ணம்மா.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘இதுல என்ன குழப்பம் இருக்கு கண்ணம்மா. நீயும் ஒரு விவசாயிதான? உன் வயல்ல விளையிற காய்கறிகளை உன்னால இப்ப விக்க முடியாமயா இருக்கு. நீயே கொண்டு போய் வித்துட்டுதான வர்ற... ஆனால், அரசாங்கம் என்ன சொல்லுதுன்னா, மார்க்கெட் கொண்டு்போனா வியாபாரிகள் உங்களை ஏமாத்திடுவாங்க. அதனால நீங்க அந்த மார்க்கெட்டுக்குத்தான் கொண்டு போய் விக்கணும்னு இல்லை. இந்தியாவுல எங்க வேணும்னாலும் கொண்டு்போய் விக்கலாம்னு சொல்றாங்க.

விற்பனையில எந்தச் சிக்கலும் இல்லை. ஆனா, இதுல இருக்கப் பிரச்னை நியாயமான விலை இல்லைங்கிறதுதான். விவசாயிகளுக்காகச் சட்டம் போடுறோம்னு சொல்றவங்க, அதுக்கு பதிலா எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையில சொன்ன மாதிரி, உற்பத்தி பொருள்களுக்கான செலவுத் தொகையோடு 50 சதவிகிதம் அதிக விலை கொடுக்கணும்னு சொன்னதை நிறைவேத்தி இருந்தாலே போதும். விவசாயிகளுக்குப் போதுமான விலை கிடைச்சிருக்கும். இப்ப புரியுதா இவங்க யாருக்காகச் சட்டம் போட்டாங்கன்னு’’ என்று பொறுமையாக விளக்கினார் வாத்தியார்.

‘‘அட போன தடவை தேர்தல் நேரத்துல நாங்க ஆட்சிக்கு வந்தா எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை நிறைவேத்துவோம்னு வாக்குறுதி வேற கொடுத்தாரு மோடி ஜி. ஆனா ரெண்டாவது தடவை ஆட்சிக்கு வந்தும் அதை நிறைவேத்தலயே’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘நம்ம நாட்டுல எல்லாமே அரசியல் தான்யா... சரி நாம ஏதாவது நல்ல விஷயம் பேசுவோம்’’ என்ற வாத்தியார், “மார்ச் மாசம் சட்டமன்றத்துல நடந்த வேளாண்துறைக்கான மானியக்கோரிக்கையில 7.50 கோடி செலவில் தொழில் முனைவோர்கள் மூலம் நாற்றங்கால் மற்றும் விதை உற்பத்திக்கான திட்டத்தை அறிவிச்சாங்க. அந்தத் திட்டப்படி காய்கறி விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தோட்டக்கலை தொழில்முனைவோர்கள் மூலம் 87.25 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 27.199 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட, உண்மைநிலை காய்கறி விதைகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிச்சு இருக்காங்களாம்.

இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள், தோட்டக்கலை தொழில் முனைவோர்களுக்கு வெங்காயம், முருங்கை, காராமணி, கொத்தவரை, அவரை, பாகல், புடல், பீர்க்கன், பூசணி மற்றும் கீரை ஆகிய காய்கறிகளின் சான்றளிக்கப்பட்ட உண்மை நிலை விதைகளை உற்பத்தி செய்றதுக்குப் பல்வேறு உதவிகள் தர்றாங்களாம். குறைந்தபட்சம் 0.2 ஹெக்டேர் முதல் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை உறுதி செய்யப்பட்ட நீர்ப்பாசன வசதியோட நிலம் இருக்க விவசாயிகள் இந்தத் திட்டத்துல சேர்ந்து பயனடையலாம். இதுல சேர்ந்து உற்பத்தி செய்ற விதைகளை, பிற விவசாயிகள், தனியார் நிறுவனங்கள், தமிழ்நாடு தோட்டக் கலை வளர்ச்சி முகமைனு யாருக்கு வேணும் னாலும் விற்பனை செய்யலாம்’’ என்றார்.

‘‘எது எதுக்கு எவ்வளவு மானியம்னு விவரமாச் சொல்லுங்க வாத்தியாரே’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘இந்தத் திட்டத்துல சான்றளிக்கப்பட்ட காய்கறி விதைகளை மட்டும் உற்பத்தி செய்வதற்கு விதை சான்றுக் கட்டணம் ஹெக்டேருக்கு 400 ரூபாய் கொடுக்கிறாங்களாம். ஒரு ஹெக்டேர்ல ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை நடைமுறைகளுக்காக 30 சதவிகித மானியம் கொடுக்குறாங்க. இது அதிகபட்சமா 1,500 ரூபாய். 9 மீட்டருக்கு 6 மீட்டர் அளவுள்ள சிப்பம் கட்டும் அறை கட்டுறதுக்கு 50 சதவிகித மானியம். அதிகபட்சமா 2,00,000 ரூபாய் கொடுக்குறாங்க. நிழல்வலைக்குடில் கட்டுறதுக்கு 50 சதவிகித மானியம். அதாவது, ஒரு சதுர மீட்டருக்கு அதிகபட்சமா 350 ரூபாய் கொடுக்குறாங்க. ஒரு ஹெக்டேரில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியமாக் கொடுக்குறாங்க. இந்த நுண்ணீர்ப் பாசனம் மானியம் மட்டும் இடைவெளி அடிப்படையில மாறுபடுமாம். இந்தத் திட்டத்தில சேர்ந்து பயன்பெற நினைக்கிற விவசாயிகள், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநரையோ, அந்தந்த வட்டாரத்தில இருக்கத் தோட்டக்கலை உதவி இயக்குநரையோ தொடர்பு கொள்ளலாம்னு அரசு அறிக்கை கொடுத்திருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘ரொம்ப விளக்கமாச் சொன்னீங்க வாத்தியாரே. நானும் முயற்சி பண்ணிப் பாக்குறேன்’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘தீபாவளி பண்டிகை களைகட்டிடுச்சுபோல இருக்கு. இதுக்கு முன்ன துணிக்கடைக்குத் தான் சலுகை விளம்பரம் செய்வாங்க. ஆனால், இந்தத் தடவை மதுரையில ஒருத்தர் நாட்டுக்கோழிக்கு ஒரு விளம்பரம் கொடுத்திருக்காரு. வாட்ஸ்அப்ல அது பரவிகிட்டு இருக்கு. அதுல என்ன சொல்லி யிருக்குன்னா, ‘பிளைட், டிரெய்ன், புதுப்பட டிக்கெட் மட்டும்தான் ரிசர்வ் பண்ண முடியுமா? நல்ல நாட்டுக்கோழியும் தீபாவளிக்கு ரிசர்வ் பண்ணலாம்.

இயற்கையான மேய்ச்சல் முறை பாரம்பர்ய கிராமத்து, சுத்தமான நாட்டுக்கோழி (கிலோ 600 ரூபாய்) முன்பதிவு செய்வோருக்கு 1 கிலோ சின்ன வெங்காயம் இலவசம். டோர் டெலிவரி கிடைக்கும்’னு விளம்பரப்படுத்தி இருக்காங்க’’ என்றார் காய்கறி கண்ணம்மா.

“இது நல்லாயிருக்கே’’ என்ற ஏகாம்பரம் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு நகர முடிவுக்கு வந்தது மாநாடு.

வெள்ளாடு வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் அக்டோபர் 13-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 15-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, 20-ம் தேதி ‘காடை வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’, 22-ம் தேதி ‘பண்ணையில் கூட்டு மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

இந்த இதழில் இயற்கை வேளாண்மைத் தொடர் இடம் பெறவில்லை.