மரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம்! - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்!

இந்தச் சேதி, அந்தப் பகுதி பசுமை விகடன் நிருபருக்குத் தெரிஞ்சதும், உடனடியா வனத்துறை அதிகாரிககிட்ட தகவலைச் சொல்லி இருக்கார்.
களத்துமேட்டில் பால் கறந்து கொண்டிருந்தார் ஏரோட்டி ஏகாம்பரம். அப்போது அங்கு வந்த வாத்தியார் வெள்ளைச்சாமி, ‘‘என்னப்பா மழை வர்ற மாதிரி இருக்கு. ஆனா, வெயில் வறுத்தெடுக்குது’’ என்றபடியே சிமென்ட் பலகையில் அமர்ந்து அங்கிருந்த செய்தித் தாளைப் பார்வையிட்டார்.
அப்போது பானையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அந்த வழியாகச் சென்ற காய்கறி கண்ணம்மா, ஏரோட்டி சொன்னதைக் கேட்டு அருகே வந்தார். ‘‘மனுஷங்கதான் தங்கத்துக்குப் பேராசைப்படுறாங்கனு பார்த்தா, குரங்குகளுக்குக்கூடத் தங்க நகை மேல ஆசை வந்திடுச்சுய்யா’’ என்றார் நக்கலாக. ‘‘குரங்கும் நகை கேக்குதா. கொஞ்சம் விளக்கமா சொல்லும்மா’’ என்றார் வாத்தியார்.
‘‘தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பக்கத்துல வீரமாங்குடினு ஒரு ஊர் இருக்காம். 10 வருஷமா, இந்த ஊர் ஜனங்களைக் குரங்குகள் கூட்டம் ஆட்டிப் படைக்குதாம். எவ்வளவுதான் விரட்டினாலும் கூட்டம் கூட்டமாக வந்துக்கிட்டே இருக்குதாம். தென்னந்தோப்புகள்ல ஒரு தேங்காயைக்கூட விட்டு வைக்கிறதில்லை. இதனால, அந்த ஊர்ல தென்னைச் சாகுபடியையே கை விட்டுட்டாங்களாம். வீடுகளுக்குள்ள புகுந்து உணவு, அரிசி, பருப்பு எதையும் விட்டு வைக்கிறதில்லையாம். இதுல மனுஷங்களை மாதிரியே இந்தக் குரங்குகளுக்கும் இப்ப நகை, பணத்து மேல ஆசை வந்துடுச்சு. ரெண்டு நாளைக்கு முன்னாடி இந்த ஊர்ல இருக்க ஒரு பாட்டியோட குடிசை வீட்டுக்குள்ள கூரையைப் பொத்துக்கிட்டு, கொள்ளைக்காரங்க கணக்கா குரங்குக் கூட்டம் உள்ளார குதிச்சிருக்கு. சில்வர் பாத்திரத்துல மூட்டைக் கட்டி வெச்சிருந்த அரை பவுன் மோதிரம், அரை பவுன் தோடு, 25,000 பணத்தைத் தூக்கிக்கிட்டுப் போயிடுச்சாம். பாவம், அந்த ஏழைப் பாட்டி எவ்வளவோ கத்தியும் மூட்டையோட அந்தக் குரங்குக் கூட்டம் ஓடிடுச்சாம்.
இந்தச் சேதி, அந்தப் பகுதி பசுமை விகடன் நிருபருக்குத் தெரிஞ்சதும், உடனடியா வனத்துறை அதிகாரிககிட்ட தகவலைச் சொல்லி இருக்கார். தஞ்சாவூர் பகுதிக்கான வனச்சரகர் ஜோதிக்குமார், இப்ப தன்னோட டீமை அங்க அனுப்பி, குரங்குக் கூட்டத்தைப் புடிக்குற முயற்சியில இறங்கியிருக்காறாம்’’ என்றார் கண்ணம்மா.

‘‘பாவம் அந்த வயசான அம்மா... பசுமை விகடன் நிருபரையும் பாராட்டணும்’’ என வாத்தியார் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இடைமறித்த ஏகாம்பரம், “நானும் ஒரு தஞ்சாவூர் சேதி வெச்சிருக்கேன்ல’’ என்றவர், “சம்பாச் சாகுபடிக்கு எந்த நிபந்தனையும் இல்லாம, பயிர்க்கடன் கொடுக்கணும்னு டெல்டா விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை வெச்சுகிட்டு இருக்காங்க. ஏற்கெனவே வாங்குன கடன்களைக் கட்டினாதான் புதுக் கடன் கொடுப்போம்னு நிபந்தனை விதிச்சா, இந்த வருஷம் டெல்டா விவசாயிகள் யாருமே சம்பாச் சாகுபடியை நிம்மதியா செய்ய முடியாது. கொரோனாவால, எந்த வருமானமும் இல்லாமல் கிடக்குறோம். எங்களுக்கு வங்கிகளை விட்டா வேற வழியே இல்லைனு சொல்றாங்க’’ என முடித்தார்.
‘‘அவங்க சொல்றதும் நியாயம்தானே. கடன் வாங்காம விவசாயம் செய்ய முடியலை. விளைச்சல் இல்லாம கடனைக் கட்டலைன்னா பேங்க்காரங்க ஆளையே கொன்னுடுறாங்க. கடனுக்கு பயந்து எத்தனை விவசாயிகள் தற்கொலை செஞ்சுகிட்டு செத்துப் போயிருக்காங்க’’ என்று வேதனையை வெளிப்படுத்தினார் கண்ணம்மா.
‘‘போன மாசம் திருப்பூர் மாவட்டத்துல குழந்தைபாளையம் கிராம விவசாயி ராஜாமணிகூடத் தற்கொலை பண்ணி கிட்டாருனு பேசுனோம்ல, அந்த விவசாயி யோட கடனை பேங்க்காரங்க தள்ளுபடி பண்ணிட்டாங்களாம். விவசாயச் சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் செஞ்சதுனால இது நடந்திருக்குது. அடமானமா வெச்சிருந்த நிலத்து பத்திரத்தையும் தாசில்தார், டி.எஸ்.பி. மூலமா ராஜாமணியோட மனைவி செளந்தரிகிட்ட ஒப்படைச்சுட்டாங்களாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘கொரோனா காலத்திலயும் இம்புட்டு டார்ச்சர் கொடுக்குறாங்களே. கோடிக்கணக்குல வாங்கிக்கிட்டு வெளிநாட்டுக்குப் போறவனுக்கெல்லாம் சலாம் போடுறாய்ங்க. சம்சாரின்னா சாகடிக்குறாங்க. எப்பத்தான் இதுக்கெல்லாம் விடிவு வருமோ?’’ என்று சலித்துக்கொண்டார் கண்ணம்மா.
‘‘சரிங்க வாத்தியாரே, வேற நல்ல செய்தி எதுவும் இருந்தாச் சொல்லுங்க’’ என்றார் ஏகாம்பரம்.
‘‘ஒரு செய்தி இருக்குய்யா. சின்ன அளவுல உணவுப் பதப்படுத்தும் தொழில் செய்ற வங்களுக்கான செய்தி. மத்திய அரசோட ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங் களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை மானியம் கொடுக்கப் போறாங்களாம். மத்திய அமைச்சக உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை வழியா, தமிழ்நாட்டுல வேளாண்மை விற்பனைத் துறைமூலம் இந்தத் திட்டம் செயல்படுமாம். மாவட்ட அளவுல கலெக்டர் தலைமையில இதுக்காக ஒரு குழு இருக்குமாம். ஏற்கெனவே உணவுப் பதப்படுத்தும் தொழில்ல ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்த, புதிய நிறுவனங்கள் தொடங்க, பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள்னு இதுக்கெல்லாம் நிதியுதவி செய்வாங்களாம். உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்களளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்னு சொல்றாங்க.
ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில மாவட்ட வாரியா தோ்ந்தெடுக்கப்பட்ட விளைபொருள்களைப் பதப்படுத்தும் தொழில்ல ஈடுபட்டுள்ள, ஈடுபடவுள்ள சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுமாம். இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக 10 லட்சம் வரைக்கும் நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்பிருக்காம். வா்த்தக முத்திரை, சந்தைப்படுத்துறதுக்கு 50 சதவிகிதம் மானியம் கொடுப்பாங்களாம். சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குத் தேவைப்படுற தொழில் கடன் தொகையை, வங்கிமூலம் ஏற்பாடு செஞ்சு கொடுப்பாங் களாம்’’ என்றார் வாத்தியார்.
‘‘வாய்ப்பிருக்கிறவங்க இந்த நல்ல திட்டத்தைப் பயன்படுத்திக்கோங்க’’ என்றபடி பானையை எடுத்துக்கொண்டு கண்ணம்மா நடையைக் கட்ட முடிவுக்கு வந்தது மாநாடு.
சர்க்கரைக் கட்டுமானத்தை கருத்தில் கொள்ள கூடாது!
2020-21 அரவைப் பருவத்தில் 10% சர்க்கரைக் கட்டுமானம் உள்ள ஒரு டன் கரும்பின் விலை ரூ.2,850 என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் (CIFA) தேசிய தலைவர் ஆர்.விருத்தகிரியிடம் பேசினோம். ‘‘10% சர்க்கரைக் கட்டுமானமுள்ள (sugar reccovery) கரும்புக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும். 9.5%-க்கு குறைவாக சர்க்கரைக் கட்டுமானம் கொண்டுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.2707.50 மட்டுமே விலையாகக் கிடைக்கும். சொல்லப்போனால் 8.9% கீழேதான் தமிழ்நாட்டு கரும்பில் சர்க்கரைக் கட்டுமானம் உள்ளது. 10 சதவிகிதம் என அறிவித்ததை மாற்றி சர்க்கரைக் கட்டுமானத்தை கருத்தில் கொள்ளாமல் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே விலையை நிர்ணயிக்குமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்கிறோம்.
கரும்புப் பயிரை நம்பி விவசாயம் செய்கிற 5 கோடி கரும்பு விவசாயக் குடும்பங்கள், 5 லட்சம் ஆலைத் தொழிலாளர்கள், அதில்லாமல் கரும்பு நடவு, களையெடுப்பு, கரும்பு வெட்டும் கோடிக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் அனைத்தும் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகும் நிலை உருவாகிவிட்டது.
முன்பு அனைத்து கரும்பு விவசாய அமைப்புகளிடமும் கருத்துக் கேட்டு அதை தொகுத்து ஆய்வு செய்து மத்திய அரசு விலையை அறிவிக்கும். இப்போது விவசாய அமைப்புக்களின் கருத்துகளைக் கருத்தில் கொள்வதில்லை. உள்நாட்டுப் பயன்பாட்டுக்கான சர்க்கரை, ஏற்றுமதிக்கான சர்க்கரை, கையிருப்புக்கான சர்க்கரை போக மிகுதியான கரும்பு பாகை நேரடி எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தினால் மட்டுமே கரும்பு விவசாயமும், சர்க்கரைத் தொழிலும் நிலைக்கும். இல்லையேல் சர்க்கரை ஆலைகளுக்கு படிப்படியாக மூடுவிழாதான். கரும்பு விவசாயிகள் கரையேற வேண்டுமானால் கரும்புக்கு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ₹300 வழங்க வேண்டும். இல்லையேல் கரும்பு விவசாயம் கடும் பாதிப்பைச் சந்திக்கும்.’’
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகப் பயிற்சி, கருத்தரங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகும் `தண்டோரா’ பகுதி இந்த இதழில் இடம்பெறவில்லை.
இயற்கை வேளாண்மைத் தொடர் இந்த இதழில் இடம்பெறவில்லை.