மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை! மானிய விலையில் கருவிகள்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

அதோட, பெரம்பலூர் மாவட்ட வேளாண் இயக்குநர் கணேசனைச் சேலம் மாவட்டத்துக்கும், அங்கு இருந்த இணை இயக்குநர் இளங்கோவனைத் திருச்சிக்கும் மாத்தியிருக்காங்க.

ச்சி வெயில் உக்கிரம் தாங்காமல் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. முதல் தெருவில் நுழைந்தவுடன் ‘காய்கறி’ கண்ணம்மா வீட்டுக் கட்டிலில் சோர்வாக அமர்ந்தார்.

“என்ன வாத்தியாரே வெயில்ல வெந்துபோய் வந்திருக்கீக... கர்ணன் கவச குண்டலம் மாதிரி எப்பவும் கையில குடை வெச்சிருப்பீங்களே... எங்க காணோம்” என்றார் அங்கு நெல் குத்திக்கொண்டிருந்த கண்ணம்மா.

“அத ஏம்மா கேக்குற... இன்னிக்குன்னு பார்த்துக் குடையை மறந்துட்டுப் போயிட்டேன். வெயில் இந்த வாங்கு வாங்குது. அதான் வந்து உக்காந்துட்டேன்’’ சோர்ந்துபோன குரலில் சொன்னார் வாத்தியார். வீட்டுக்குள் சென்று மோர் கொண்டு வந்து கொடுத்த கண்ணம்மா, “இதைக் குடிச்சுட்டு கொஞ்ச நேரம் உக்காந்து எந்திரிச்சுப் போங்க’’ என்றபடி மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தார். அப்போது மேய்ச்சலுக்குப் போன கிடாவை இழுத்துக் கொண்டு ஏரோட்டி ஏகாம்பரமும் அங்கு வர மாநாடு தொடங்கியது.

‘‘என்ன வாத்தியாரே டவுனுக்குப் போகணும்னு சொன்னீங்க. இங்க உக்காந்துட்டீங்க’’ என்றார் ஏகாம்பரம். “போய்ட்டு வந்துட்டேனப்பா... இந்த வெயில் தாங்காம உக்காந்தேன். நீ ஆட்டைப் பிடிச்சுட்டு எங்கப் போயிட்டு வர்ற.... வா உக்காரு’’ என்றார் வாத்தியார்.

“கைச்செலவுக்குக் காசு இல்லை. இந்தக் கிடாயை வித்துட்டு வரலாம்னு யாவாரி வீட்டுக்குப் போனேன். அந்தாளு வெளியூருக்குப் போயிட்டாராம். அதான் வீட்டுக்கு இழுத்துகிட்டு வர்றேன். இந்தப் பாழாப்போனா கொரோனா வரலைன்னா, இம்புட்டு இம்சை இருக்காது. இப்ப ஆடு, மாடுகளை அவசரத்துக்கு விக்க முடியலை’’ புலம்பியபடி அமர்ந்தார் ஏரோட்டி.

“ஆடு, மாடு விக்குறதுக்கும் கொரோனாவுக்கும் என்னய்யா சம்பந்தம். ஆடு கிடைக்காம வியாபாரிங்க அலையுறாங்களே. அதுல விக்குறதுல என்ன பிரச்னை உனக்கு?’’ ஏகாம்பரத்துக்கும் மோர் கொடுத்தபடியே கேட்டார் கண்ணம்மா.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

“அவங்க தேடி வந்தா, நாம சொல்ற விலை கொடுக்குறாங்க. ஆனா, நம்ம அவசரத்துக்குக் கொண்டு போனா அவங்க கொடுக்குறதுதான் விலை. இந்த வாரச்சந்தைகள் இருந்தா இந்தச் சிக்கலே இல்லை’’ நொந்துகொண்டார் ஏகாம்பரம்.

“உண்மைதான்யா. ஒவ்வொரு மாவட்டத் துலயும் வாரச்சந்தைகள் இருக்கும். அங்கதான் ஆடு, மாடுகளை விப்பாங்க... வாங்குவாங்க. ஆனா அது இல்லாம விவசாயிக மட்டுமில்ல, வியாபாரிகளும் கஷ்டப்படுறாங்களாம்’’ என்றார் வாத்தியார்.

“காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் எல்லாம் தொறந்துட்டாங்க. ஆனா, கால்நடை சந்தைகளை மட்டும் இன்னும் தொறக்காம இருக்காங்க. அரசாங்கமும் அதிகாரிகளும் மனசு வெச்சு வாரச்சந்தையைத் திறக்க ஏற்பாடு செய்யணும்’’ என்றார் ஏகாம்பரம்.

“அதிகாரிகளே ரொம்ப பிஷியா இருக்காங்க. யாரைக் கேட்டாலும் கொரோனா வேலையில இருக்கேன்னு சொல்லிடுறாங்க. ஆனா, இந்த நோய் காலத்துலயும் கோடிக்கணக்குல ஆட்டையைப் போட்டுறுக்காங்க. அதுக்கு மட்டும் நேரமிருக்குமாக்கும்’’ வாயை நொடித்துக் கொண்டு சொன்னார் கண்ணம்மா.

“ ‘கிசான் சம்மான்’ திட்ட மோசடியைத்தான சொல்ற. இதுல மத்திய அரசு ரொம்ப கோபமாகிடுச்சாம். வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இதுல தீவிரமா இருக்காராம். முறைகேட்டுல ஈடுபட்ட அதிகாரிகள் யாரா இருந்தாலும் நடவடிக்கை எடுத்துகிட்டு இருக்காராம். ஒவ்வொரு மாவட்டத்திலயும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிங்க விசாரிச்சு, வழக்கு பதிவு செஞ்சுட்டு வர்றாங்களாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில ரெண்டு வேளாண் உதவி இயக்குநர்கள் தற்காலிகப் பணிநீக்கம், 7 வட்டார தொழில்நுட்ப ஊழியர்கள், 6 பயிர் அறுவடை பரிசோதகர்கள் பணி நீக்கம். அதில 4 ஒப்பந்த ஊழியர்கள் கைது. விழுப்புரம் மாவட்டத்துல வேளாண் உதவி இயக்குநர் பணியிடை நீக்கம், 3 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம். கடலூர் மாவட்டத்தில 10 ஒப்பந்த பணியாளர்கள் பணி நீக்கம், தொழில்நுட்ப மேலாளர்கள் ரெண்டு பேர் பணியிடை நீக்கம். திருவண்ணாமலை மாவட்டத்துல 34 பேர் சிக்கியிருக்காங்க. 3 கோடி ரூபாய் பறிமுதல் செஞ்சிருக்காங்களாம். கடலூர் மாவட்டத்துல 4.2 கோடி ரூபாய் பறிமுதல். விழுப்புரத்துல 4 கோடி பறிமுதல்னு சிங்கு சாட்டையைச் சுழட்டுறாராம்.

அதோட, பெரம்பலூர் மாவட்ட வேளாண் இயக்குநர் கணேசனைச் சேலம் மாவட்டத்துக்கும், அங்கு இருந்த இணை இயக்குநர் இளங்கோவனைத் திருச்சிக்கும் மாத்தி யிருக்காங்க. அதேபோலத் திருச்சி மாவட்ட இணை இயக்குநர் பெரிய கருப்பனை நாகை மாவட்டத்துக்கும், அங்க இருந்த இணை இயக்குநர் கருணாநிதியைப் பெரம்பலூர் மாவட்டத்துக்கும் இடமாற்றம் செஞ்சிருக்காங்க. விசாரணை முடிவுல கடும் நடவடிக்கை பாயும்னு கலக்கத்தில இருக்காங்க அதிகாரிகள்’’ என்றார் வாத்தியார்.

“நல்ல அதிகாரிகளுக்கு மத்தியில ஒரு சில அதிகாரிங்க செய்ற தப்புனால எல்லாருக்கும் கெட்டப் பேரு. ஒரு வருஷத்துக்கு மேல உயிர் உரங்களைப் பயன்படுத்துறதுனால எந்தப் பிரயோஜமும் இல்லைன்னு விவசாயத்துறையில தான் சொல்றாங்க. ஆனா, திருவாரூர் மாவட்டத்துல உயிர் உரங்கள்னு கொடுக்குறாங்க. ஆனா, அது 2018-ம் வருஷம் உற்பத்தி செஞ்சதாம். இதனால புலம்புறாங்க விவசாயிங்க. அதுபோல வேம் உரம் மேலயும் புகார் சொல்றாங்க விவசாயிங்க. பல மாவட்டங்கள்ல வேம் உரத்துல மண்ணுதான் இருக்காம்’’ என்ற ஏகாம்பரம் எழுந்து நடையைக் கட்ட முடிவுக்கு வந்தது மாநாடு.

வேளாண்மைப் பொறியியல் துறையில் தொழில் தொடங்க மானியம்!

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அறுவடைக்குப் பின் சார்பு பொருள்களை ‘மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் பரவலாக்கம்’ திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு 50% மற்றும் பட்டய பிரிவினருக்கு 60% மானியத்தில் கருவிகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் கீழ்க்கண்ட அளவு மானியங்கள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் உள்ள கருவியின் மொத்த விலையை அரசுக்குச் செலுத்திய பிறகு, கருவி அமைத்த பின்பு பின்னேற்பு நடவடிக்கையாக மானியத் தொகை தனிநபர் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அனைத்து வகை எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் (மர மற்றும் உலோகத்திலான உருளைகள்) மொத்த விலை ரூ.2,00,600 (5 மாடல்கள்) பொதுப்பிரிவினருக்கு ரூ.1,00,300.

பட்டைய வகுப்பினருக்கு ரூ.1,20,360. தென்னை தோலுரிக்கும் மட்டை உரிக்கும் இயந்திரம் மொத்த விலை ரூ.1,40,000. பொதுப்பிரிவினருக்கு ரூ.60,000. பட்டய வகுப்பினருக்கு ரூ.75,000. ராகிச் சுத்தம் செய்து கல் நீக்கும் இயந்திரம் மொத்த விலை ரூ.65,100 மற்றும் 82,950 (2 மாடல்கள்) பொதுப்பிரிவினருக்கு ரூ.26,040, 33,180

பட்டய வகுப்பினருக்கு ரூ.32,550, 41,475. மாவு அரைக்கும் இயந்திரம் மொத்த விலை ரூ.47,250, 58,880, 89,250, 64,310 (4 மாடல்கள்). பொதுப்பிரிவினருக்கு 23,625, 29,400, 44,625, 32,155. பட்டய வகுப்பினருக்கு ரூ.28,350, 35,280, 44,625, 38,586. கால்நடை தீவனம் தயாரிக்கும் இயந்திரம் மொத்த விலை ரூ.76,650. பொதுப்பிரிவினருக்கு ரூ.38,325. பட்டய பிரிவினருக்கு ரூ.45,990. தேவைப்படும் நபர்கள் அருகில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும்.

ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், பாஸ்போர்ட் போட்டோ, சிட்டா அடங்கல், மும்முனை மின்சார வசதியுடன்கூடிய 10 அடி நீளம் 10 அடி அகலம் உள்ள இடம். ஆகிய ஆவணங்கள் அவசியம். குறைந்த அளவே ஒதுக்கீடு உள்ளதால் தேவைப்படுவோர் உடனடியாக விண்ணப்பிக்கவும்.