மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

ஆடுமாடுகளுக்கான தீவனப்புல்லை அறுத்து, கட்டாகக் கட்டி தலையில் வைத்தபடி வந்துகொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வியாபாரத்தை முடித்து வந்துகொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவும் அவரோடு இணைந்துகொண்டார்.

ருவரும் பேசிக்கொண்டே நடந்து செல்ல, வழியில் தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த வாத்தியார் வெள்ளைச்சாமி இவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்தார். மூவரும் பேசிக்கொண்டே தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். போகும் வழியிலேயே ஒரு சுவாரஸ்யமான செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் தொடக்கிவைத்தார், வாத்தியார்.

“தமிழகம் முழுதுமே கடுமையா வறட்சி நிலவுது. கிணறு, போர்வெல் எல்லாமே வற்றிப்போனதால, ஆடு மாடுகளுக்குத் தீவனம் விளைவிக்கக்கூட வழியில்லாம இருக்குறாங்க விவசாயிங்க. தமிழகம் முழுக்க மழை வேண்டி யாகங்கள், பிரார்த்தனைகள்னு நடந்துட்டிருக்கு. அதோட நீட்சியா, ஒரு கிராமத்தில கழுதைகளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க. கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர்ப் பகுதியில் அக்கரை செங்கப்பள்ளி, லக்கேபாளையம், எல்.கோவில்பாளையம்னு கிராமங்கள் இருக்கு. இந்த மூன்று கிராம மக்களும் கூடி, ஊர்க்கூட்டம் போட்டு, ‘மழை பெய்யறதுக்கு என்ன பண்ணலாம்’னு பேசியிருக்காங்க. அப்போ ஊர் பெரியவங்க சிலர், ‘கழுதைகளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சா மழை பெய்யும். 35 வருஷத்துக்கு முன்ன, இப்படி வறட்சி வந்தப்போ கழுதைகளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சோம். மறுநாள்ல இருந்து தொடர்ந்து மூன்று மாசத்துக்கு விட்டு விட்டு மழை பெய்து கண்மாய் குளமெல்லாம் நிறைஞ்சு போச்சு’ன்னு சொல்லியிருக்காங்க. உடனே ஊர்க்காரங்க கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு செஞ்சு ரெண்டு கழுதைகளைக் கொண்டு வந்திருக்காங்க. அந்தக் கழுதைகளைக் குளிப்பாட்டி, ஆண் கழுதைக்கு வேட்டியும், பெண் கழுதைக்குச் சேலையும் அணிவிச்சு கோயில் முன்னாடி மேளதாளம் முழங்கக் கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க. கல்யாணத்துக்கு வந்த மக்களுக்குக் கம்பங்கூழ், நீர் மோர், டீ கொடுத்து உபசரிச்சிருக்காங்க. கல்யாணத்துல 12,400 ரூபாய் மொய் வசூலாகியிருக்கு” என்றார்.

வாத்தியார் சொல்லி முடிப்பதற்கும் மூவரும் தோட்டத்துக்கு வருவதற்கும் சரியாக இருந்தது. ஆடு மாடுகளுக்குத் தீவனத்தை வைத்துவிட்டு வந்து அமர்ந்த ஏரோட்டி ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார். “தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள்ல அதிக அளவுல கால்நடைகள் வளர்க்கிறாங்க. அதனால, பசுந்தீவனத்துக்கும் உலர் தீவனமான வைக்கோலுக்கும் அதிக தேவை இருக்கு. அதேபோல, காளான் வளர்ப்பில் வைக்கோல் முக்கியமான மூலப்பொருள். அதனால, தமிழகம் முழுக்கவே காளான் பண்ணையாளர்களுக்கு வைக்கோல் தேவை இருக்கு. இப்போ பல பகுதிகள்ல கடுமையான வறட்சி நிலவுது. இதனால, நிறைய பகுதிகள்ல நெல் சாகுபடி நடக்கலை. வைக்கோலுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கு. இதனால, நெல் அறுவடை செய்கிற பகுதிகள்ல வைக்கோல் வியாபாரம் சூடு பிடிச்சிருக்கு. ஒரு ஏக்கர் பரப்பில் இருக்கிற வைக்கோல் 10,000 ரூபாய்ல இருந்து 20,000 ரூபாய் வரை விலை போகுது. வியாபாரிகள் அதை வாங்கிக் கட்டுக்கட்டி, ஒரு கட்டு வைக்கோல் 250 ரூபாய் வரை விலை வெச்சு விற்பனை செய்யறாங்க. நெல் சாகுபடி செய்யற விவசாயிகளுக்கு நெல்லில் கிடைக்கிற வருமானத்துக்கு இணையா வைக்கோல் மூலமாகவும் வருமானம் கிடைச்சிட்டிருக்கு” என்றார்.

மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்!

அடுத்த செய்தியை ஆரம்பித்த வாத்தியார், “பொள்ளாச்சி ஆனைமலைப் பகுதியில தென்னை (இளநீர்) விவசாயிகள் இணைஞ்சு ‘டெண்டர் கோகனட் குரோவர்ஸ் அசோசியேஷன்’னு சங்கம் ஆரம்பிச்சிருக்காங்க. இந்தச் சங்கம் மூலமா ஒவ்வொரு பருவத்திலும் இளநீருக்கு விலை நிர்ணயம் செய்யறாங்க. அந்த விலைக்குத்தான் விவசாயிகள் விற்பனை செய்யறாங்க. இப்போ சென்னை, மதுரை, திருச்சி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, பெரம்பலூர் பகுதிகள்ல வெயில் தாக்கம் அதிகமா இருக்கிறதால, அந்தப் பகுதிகள்ல இளநீருக்கு அதிக தேவை இருக்கு.

சென்னை, மதுரை, திருச்சி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, பெரம்பலுார் பகுதிகள்ல வெயில் தாக்கம் அதிகமா இருக்கிறதால, அந்தப்பகுதிகள்ல இளநீருக்கு அதிக தேவை இருக்கு. ஒரு கட்டு வைக்கோல் 250 ரூபாய் வரை விலை வெச்சு விற்பனை செய்றாங்க.

இதோட மும்பை, ஆந்திர மாநிலங்கள்ல இருந்தும் வியாபாரிகள் இளநீரை அதிக அளவில் கொள்முதல் செய்யறாங்க. அதனால, ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்து ‘டிஜே’ ரக இளநீர் ஒன்றுக்குப் பண்ணை விலையா 25 ரூபாய்னு டெண்டர் கோகனட் குரோவர்ஸ் அசோசியேஷன் நிர்ணயம் செஞ்சு, வியாபாரி களுக்கு இந்த விலைக்குத்தான் விற்பனை செய்யணும்னு அறிவிச்சிருக்கு” என்றார்.

“ஆடு மாடுகளுக்குத் தண்ணி காட்டிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டே ஏரோட்டி எழுந்து செல்ல, அன்றைய மாநாடு அத்துடன் முடிவுக்கு வந்தது.