விளைபொருள்களைக் கொண்டு செல்ல கைகொடுக்கும் மோனோ ரயில்... கரூரில் முன்னாள் எம்.எல்.ஏ முயற்சி!

கண்டுபிடிப்பு
சாலைவசதி இல்லாத விவசாய நிலங்களுக்கு இடுபொருள் களைக் கொண்டு செல்வதும்... அறுவடை செய்த விளைபொருள்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவதும் விவசாயி களுக்குப் பெரும் சவாலானது. இதை எதிர்கொள்ள மிகுந்த சிரமங்களைச் சந்திக்கிறார்கள். இந்நிலையில்தான் இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் கரூரைச் சேர்ந்த விவசாயியும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுமான சிவசுப்ரமணியன், தன்னுடைய பண்ணையில் மோனோ ரயில் (சரக்கு ரயில்) அமைத்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் வழிகாட்டுதலோடு இது உருவாக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியைச் சேர்ந்தவர், சிவசுப்ரமணியன். 2001 - 2006-ம் ஆண்டு வரையிலான காலகட்டத் தில் கரூர் தொகுதி (காங்கிரஸ்) சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், 25 ஏக்கரில் நெல், தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறார். தற்போது, இவர் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள மோனோ ரயில் குறித்து அறிந்துகொள்ள பகல்பொழுதில் அங்கு சென்றோம்.

வயலின் எல்லையில் உள்ள சாலைப் பகுதியிலிருந்து வயலுக்குள் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு... வரப்புக்கு மேலே சில அடி உயரத்தில் தண்டவாளம் போன்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழே தொங்கிய நிலையில் மோனோ ரயில் நகர்ந்து செல்கிறது. இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நம்மை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்ற சிவசுப்ரமணியன், வாழைப் பழங்களைக் கொடுத்து உபசரித்தார்.
‘‘எங்களோட பூர்வீகத் தொழிலே விவசாயம்தான். எங்க குடும்பத் துக்கு மொத்தம் 25 ஏக்கர் நிலம் இருக்கு. நான் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். விவசாயத்துல எனக்கு ஆர்வம் இருந்தாலும்கூட, இதைக் கவனிச்சு கிட்டே, என்னோட படிப்புக்கேத்த தொழில்கள்ல ஈடுபட்டேன். டேபுள் ஃபேன் தயார் செஞ்சு விற்பனை செஞ்சேன். சில காரணங்களால 1980-ம் வருஷம் அதைக் கைவிட்டுட்டு, ஜெனரேட்டர்கள் தயாரிப்பு தொழிலைத் தொடங்கினேன். 2020-ம் வருஷம் வரைக்கும் அதை வெற்றிகரமா நடத்தினேன்.
இதுக்கிடையில விவசாயத்துலயும் தீவிர கவனம் செலுத்திக்கிட்டு இருந்தேன். 1990-களோட தொடக்கத்துல விவசாயத்துக்கான வேலையாள்கள் பற்றாக்குறை அதிகமாச்சு. அதனால, 3 ஏக்கர்ல இருந்த தென்னை சாகுபடியை 15 ஏக்கருக்கு விரிவு படுத்தினேன். மீதியுள்ள 10 ஏக்கர் பரப்புல நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை வெள்ளாமை செஞ்சுகிட்டு இருந்தேன். வேலையாள்கள் தட்டுப்பாடுனால, அதுலயும் கடுமையான நெருக்கடி களைச் சந்திக்க வேண்டியிருந்துச்சு. எங்க பகுதி விவசாயிங்க எல்லாருமே இந்தப் பிரச்னையால திணறிப்போனாங்க. இதுக்குத் தீர்வு காண, 1991-ம் வருஷம், ‘பொது விவசாயிகள் சங்கம்’ங்கிற அமைப்பை உருவாக்கினோம். இதுல, சுத்துபட்டுல இருக்கும் 500 விவசாயிகள் உறுப்பினர்களாகச் சேர்ந்தாங்க.

இயந்திரங்களைக் கொண்டு வந்து பயன்படுத்துறது மூலமா... வேலையாள்களோட தேவையைக் குறைக் கலாம்னு தீர்மானிச்சு, அதுக்கான முயற்சிகள்ல இறங்கினோம். இயந்திரங்கள் உற்பத்தி தொடர்பான ஒர்க்ஷாப் என்கிட்ட இருந்ததால, ஒரு சில இயந்திரங் களை நானே வடிவமைச்சு உருவாக்கினேன். இதுக்கிடையில, 2001-ம் வருஷம், நான் கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்களோட அறிமுகம் கிடைச்சது. அவங்களோட நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கிட்டேன். பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள்ல ஆயிரக்கணக்கான ஏக்கர்ல இயந்திரங்கள் மூலம் எளிதா விவசாயம் செய்றதை நேரடியா போயி பார்த்துட்டு வந்தேன். எங்க ஊர்ல கரும்பு சாகுபடி அதிகம். நானும் கரும்பு பயிர் பண்றேன். வயல்ல இருந்து சாலைப்பகுதிக்குக் கரும்பை கொண்டு வர்றது ரொம்ப சிரமம். காரணம் வாகனங்க வந்து போகுற அளவுக்குப் பாதை வசதியில்லை. தலைசுமையா ஆள்கள்தான் தூக்கிக்கிட்டு வந்தாகணும். மனித உழைப்பு அதிகமா தேவைப்படும். இந்தச் சூழ்நிலையில தான் இதுக்குத் தீர்வு காணும் முயற்சியில இறங்கினேன்’’ என்று சொன்னவர், தற்போது அமைத்துள்ள மோனோ ரயில் குறித்து விவரித்தார்.
‘‘ஐ.ஐ.டி பேராசிரியர்களோட இணைஞ்சு, நாலு வருஷத்துக்கு முன்னாடி, இந்த மோனோ ரயில் அமைப்பை உருவாக்கினேன். இதை விவசாய நிலங்களுக்கான சரக்கு ரயில்னு எளிமையான வார்த்தைகள்ல சொல்லலாம். வரப்புக்கு மேல 6 அடி உயரத்துல, அரை கிலோமீட்டர் தூரத்துக்குத் தண்டவாளம் அமைச்சிருக்கோம். தண்டவாளத்தை நல்ல உறுதியா தாங்கி நிக்கிறதுக்காக, தலா 6 மீட்டர் இடைவெளியில இரும்புத் தூணை ஊன்றி, கான்கிரீட் அமைச்சிருக்கோம். தண்டவாளத்துல நகர்ந்து செல்லக்கூடிய வகையில, ஒரு இன்ஜினோடுகூடிய 10 டிராலிகள் அமைக்கப்பட்டுருக்கு. இந்த டிராலிகள்ல சங்கிலி தொடங்கவிடப் பட்டுருக்கு. இதுல பொருள்களை அடுக்கி நிரப்பிட்டு, இன்ஜின்ல உள்ள ஸ்விட்சை ஆன் பண்ணி விட்டுட்டா போதும். தண்ட வாளத்தோட எல்லைக்குப் போயிடும். இது ரொம்ப மெதுவாதான் நகர்ந்து போகும். இதனால ஒரு சின்ன பாதிப்புகூட ஏற்பட வாய்ப்பில்லை. ஸ்விட்சை ஆஃப் பண்ணி, இதோட இயக்கத்தை நிறுத்தி, பொருள்களை எடுத்துக்கலாம்.
இதை உருவாக்க மொத்தம் 30 லட்சம் ரூபாய் செலவாச்சு. இந்த மோனோ ரயில்ல, மொத்தம் 10 டிராலிகள் இருக்கு. ஒவ்வொரு டிராலியிலயும் 40 கிலோ எடையுள்ள பொருள்களை ஏற்ற முடியும். 10 டிராலிகள் மூலம் ஒரே சமயத்துல மொத்த 400 கிலோ எடை கொண்ட பொருகளைக் கொண்டு போகலாம். ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா போதும்... இரண்டு தடவை பொருள்களைக் கொண்டு போகலாம். இந்த அமைப்பை உருவாக்குறதுக்கான தளவாடங்களையும் உதிரிபாகங்களையும் அதிக எண்ணிக்கையில உற்பத்தி செஞ்சு, விற்பனைக்குக் கொண்டு வந்தால், இன்னும் குறைந்த முதலீட்டுல விவசாயிகள் இதை அமைச்சுக்க முடியும்.

அடுத்தடுத்த நிலங்களைக் கொண்ட விவசாயிகள் 20-30 பேர் ஒண்ணா சேர்ந்து, இதை அமைச்சுக்கிட்டா, இதுக்கான செலவு களைப் பகிர்ந்துக்கலாம். இந்த வசதியை விவசாயிகளுக்கு செஞ்சு தர, அரசாங்கமும் சிறப்புத் திட்டங்களை நடைமுறைப் படுத்தணும். நான் இப்போதைக்கு முதல் கட்டமா அரைகிலோமீட்டர் தூரத்துக்கு மட்டும் தண்டவாளம் அமைச்சிருக்கேன். தேவைக்கேற்ப இதோட தூரத்தை அதிகப் படுத்திக்கிட்டே போகலாம். நாற்றுக்கட்டுகள், இடுபொருள்களை வயலுக்குள் கொண்டு போகுறதுக்கும், அறுவடை செய்யப்பட்ட கரும்பு, நெல் உள்ளிட்ட விளைபொருள்களைச் சாலைப் பகுதிக்குக் கொண்டு வர்றதுக்கும் இது ரொம்ப ஒத்தாசையா இருக்கும். விவசாயத் தொழிலாலர்கள், அதிகப்படியான எடையுள்ள பொருள்களைத் தலைச்சுமையா, அதுவும் ரொம்பச் சின்ன வரப்புல நடந்து தூக்கி போறதுங்கறது சிரமம். அவங்களுக்குக் கழுத்து வலி, முதுகுத்தண்டுவடப் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கு. அதைத் தவிர்க்க மோனோ ரயில் அமைப்பு உதவியா இருக்கும். ஒரு தடவை செலவு பண்ணி இதை அமைச்சுட்டா, பல வருஷங்களுக்குச் செலவில்லாம இதைப் பயன்படுத்தலாம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்புக்கு,
சிவசுப்ரமணியன்,
செல்போன் 94437 10471
கரும்பு ஏற்றிச் செல்லும் டிரைலர்
“டிராக்டர் மூலம் இயங்கக்கூடிய டிரைலரை, கரும்பு ஏத்திக்கிட்டு போறதுக்கு விவசாயிகள் அதிகம் பயன்படுத்துறாங்க. அது தவறான நடைமுறை. காரணம், எரு, உரம், மண்... இது மாதிரியான பொருள்களை வயல் வழியா எடுத்துக்கிட்டு போறதுக்காகதான் டிராக்டர் மூலம் இயங்குற டிரைலர் உருவாக்கப்பட்டுச்சு. அதுல கரும்பு ஏத்திக்கிட்டு போறதுக்கு ஏத்த வாகனம் கிடையாது. டிரைலர்ல பல அடி உயரத்துக்குக் கோபுரம் மாதிரி நிறைய கரும்புகளை அடுக்கி எடுத்துக்கிட்டு போறதுனால, அதிகமான விபத்துகள் நடக்குது. அதிக எடை கொண்ட பொருள்களைக் குவியலா கொண்டு போகும்போது, தேவைப்பட்டா திடீர்னு பிரேக் போடுறதுக்கான வசதியும் அதுல இல்லை. இந்தச் சூழ்நிலையிலதான்... கரும்பு ஏத்திக்கிட்டு போறதுக்கான டிரைலரை, 8 வருஷத்துக்கு முன்ன வடிமைச்சேன். வழக்கமான டிரைலரோட நீளம் நாலரை மீட்டர்தான். ஆனா, நான் வடிவமைச்ச டிரைலரோட நீளம் 6 மீட்டர். தேவைப்பட்டா திடீர்னு வண்டியை நிறுத்துறதுக்கான ஏர் பிரேக் வசதியும் அமைச்சிருக்கேன். வழக்கமான டிரைலர்களோட அடிப்பாகம் தரையில இருந்து இரண்டு அடி உயரத்துல இருக்கும். ஆனா நான் வடிவமைச்சிருக்குற டிரைலரோட அடிபாகம்... தரையில இருந்து மூணேகால் அடி உயரத்துல இருக்கு.

வழக்கமான டிரைலர்ல சுமார் 15 டன் கரும்பை 10 அடி உயரத்துக்கு அடுக்கி கொண்டுப்போறதுனால, மேடு, பள்ளத்துல தள்ளாடி சாஞ்சிடுது. ஆனா, நான் வடிவமைச்சிருக்குற டிரைலர்ல, 15 டன் லோடு கரும்பையுமே டிரைலருக்குள்ளேயே அடக்கிடலாம். மேலே உயரமா அடுக்க வேண்டிய தேவையே ஏற்படாது. இதனால மேடு, பள்ளமான சாலையில போனாலும்கூட விபத்து ஏற்படுறதுக்கான வாய்ப்பு ரொம்பக் குறைவு. இந்த டிரைலரை உருவாக்க மத்திய அரசு எனக்கு 3 லட்சம் ரூபாய் மானியம் தந்தது. மேற்கொண்டு 3 லட்சம் ரூபாய் எனக்கு செலவாச்சு. இந்த டிரைலரை இதுவரைக்கும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்திப் பார்த்துடடு, ‘ரொம்ப அருமையான வடிவமைப்பு’னு சொன்னாங்க’’ என்கிறார் சிவசுப்ரமணியன்.
தேங்காய் பறிப்பதற்கான கருவி
“நான் தென்னையும் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன். தேங்காய் பறிக்க ஆள் கிடைக்காததுனால 8 வருஷத்துக்கு முன்ன இதுக்கும் ஒரு தீர்வு கண்டேன். நான் முன்னாடி பிரேசில் போயிருந்தப்ப, அங்கவுள்ள விவசாயிகள், தேங்காய் பறிக்கப் பயன்படுத்தின ஒரு இயந்திரம் என் மனசுல பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்துச்சு. நம்ம ஊர்கள்ல தெருவிளக்குகள் பொருத்துறதுக்கும், கட்டடம் கட்டும்போது, பொருள்களை மேலே அனுப்புறதுக்கும் லிஃப்ட் மாதிரியான ஓர் இயந்திரத்தைப் பயன்படுத்துறோம்... பிரேசில் நாட்டு விவசாயிகள் கிட்டத்தட்ட இதேமாதிரியான ஓர் இயந்திரத்தைத் தேங்காய் பறிக்கப் பயன்படுத்துறாங்க.
அதேமாதிரி, நானும் ஒரு லிஃப்ட் உருவாக்கினேன். இதை டிரைலர் வண்டியில வச்சு, டிராக்டர் மூலம் தென்னந்தோட்டத்துல எங்க வேண்டுமானாலும் கொண்டு போயி தேங்காய் பறிக்கப் பயன்படுத்தலாம். தேவையான உயரத்துக்கு இதை உயர்த்திக்கலாம். இந்த இயந்திரத்துக்கு ‘கோக்கனட் லிஃப்ட்’னு பெயர் வச்சிருக்கேன். இந்த லிஃப்டை இயக்க, 2 ஹெச்.பி மோட்டார் பொருத்தியிருக்கேன். இது மூலம் ஒரு மணிநேரத்துல, 35-40 மரங்கள்ல ஏறி, சுமார் 1,000 காய்கள் பறிக்கலாம். ஆனால், ஆள்களை மரத்துல மேல ஏறி பறிக்க வச்சோம்னா, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 மரங்கள்தான் ஏறுவார். மரம் ஏறக்கூடிய தொழிலாளர்கள், வயசான காலத்துல மரம் ஏற முடியாததுனால வருமானம் இல்லாம தவிக்குறாங்க. அதுமாதிரியான நபர்களையும் இந்த கோக்கனட் லிஃப்ட் மூலம் தென்னை மரங்கள்ல ஏற வச்சு, வேலைவாய்ப்புக் கொடுக்கலாம். இப்பவுள்ள இளைஞர்களுக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகமாகி இருக்கு. ஆனா கடினமான வேலைகள் பார்க்க தயங்குறாங்க. விவசாய வேலைகளுக்கு இயன்ற வரைக்கு நவீன இயந்தரங்களைப் பயன்படுத்தக்கூடிய நிலை உருவாகிடுச்சுனா, இளைஞர்கள் ரொம்ப ஆர்வத்தோடு விவசாயத்துல ஈடுபடுவாங்க. இதுமாதிரியான இயந்திரங்களை வாடகைக்கு விடக்கூடிய தொழில் வாய்ப்புகளும் அதிகரிக்கும்’’ என்கிறார் சிவசுப்ரமணியன்.
உறுதுணையாக இருக்கும் ஐ.ஐ.டி
‘‘நடவு, பாசனம், களையெடுப்பு, அறுவடை உட்பட எல்லா விவசாய வேலைகளுக்குமே சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தணும்ங்கறதான் என்னோட அடுத்தகட்ட இலக்கு. என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் சென்னையில உள்ள ஐ.ஐ.டி நிறுவனம் ரொம்ப உறுதுணையா இருந்துகிட்டு இருக்கு. தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு மட்டுமல்லாம, நிதி ஆதாரங்களுக்கும் வழிகாட்டு றாங்க. மோனோ ரயில், கரும்பு கொண்டு போகுறதுக்கான டிரைலர், தென்னை மரம் ஏறும் கருவி... இந்த மூன்றையும் நான் உருவாக்க, ஐ.ஐ.டி நிறுவனம் பல வகைகள்லயும் உதவியா இருந்தாங்க’’ என்கிறார் சிவசுப்ரமணியன்.