நாட்டு நடப்பு
Published:Updated:

மாதம் ரூ.15,000... நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி முட்டை!

நாட்டுக்கோழிகளுடன் ராஜேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டுக்கோழிகளுடன் ராஜேந்திரன்

கோழி வளர்ப்பு

சென்னை, குரோம்பேட்டையில் வசித்து வருபவர், ராஜேந்திரன். இவர், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பரபரப்பான பகுதியில் நாட்டுக்கோழி பண்ணை நடத்தி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

குரோம்பேட்டையில் உள்ள லட்சுமி புரம் துர்க்கை அம்மன் கோயில் அருகில் இவருடைய வீடும் நாட்டுக்கோழி பண்ணையும் ஒருங்கிணைந்து அமைந் துள்ளது. ஒரு காலைப்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். கோழி களுக்குத் தீவனம் கொடுத்துக்கொண் டிருந்த ராஜேந்திரன், மிகுந்த உற்சாகத் தோடு நம்மை வரவேற்று, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த தன்னுடைய அனுபவங்களை ஆர்வத்தோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

நாட்டுக்கோழிகள்
நாட்டுக்கோழிகள்

“துர்க்கை அம்மன் கோயிலோட அறங்காவலரா இருக்கேன். தினமும் காலையிலயும் சாயந்த நேரங்கள்லயும்தான், கோயில் தொடர்பான பணிகள்ல ஈடுபடுவேன். மற்ற நேரங்கள்ல நாட்டுக்கோழி வளர்ப்புல கவனம் செலுத்துறேன். கோயில், என்னோட வீடு, நாட்டுக்கோழி பண்ணை... இந்த மூணும் பக்கத்து பக்கத்துல இருக்குறதுனால எனக்குப் பல வகைகள்லயும் வசதியா இருக்கு. பசுமை விகடன் தொடர்ந்து படிச்சிட்டு வர்றதால, விவசாயம் செய்ய ணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனா, இங்க விவசாயம் செய்ற அளவுக்கு நிலம் இல்லை. மாடு வளர்க்கலாம்னு பார்த்தா, அதுக்கு இட வசதி பத்தாது. கார்ப்பரேஷனும் அதுக்கு அனுமதிக்காது. சரி... விவசாயம் சார்ந்து வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்பதான், எங்க வீட்டுக்கு பக்கத்துல உள்ள காலிமனையில, நாட்டுக் கோழி வளர்க்கலாம்ங்கற ஒரு யோசனை தோணுச்சு. எங்க வீட்டைச் சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கு. குறிப்பா, எங்க வீட்டுக்கு பக்கத்துல உள்ள இந்த 1,800 சதுர அடி காலிமனையில கொய்யா, வில்வம், நொச்சி உட்பட இன்னும் நிறைய மரங்கள் இருக்கு. இந்தச் சூழல், நாட்டுக்கோழி வளர்ப்புக்கு ரொம்பவே சிறப்பானதா அமைஞ்சது.

நாட்டுக்கோழிகளுடன் ராஜேந்திரன்
நாட்டுக்கோழிகளுடன் ராஜேந்திரன்

10 வருஷத்துக்கு முன்னாடி, வந்தவாசிக்கு போயி அங்கவுள்ள ஒரு விவசாயிகிட்ட இருந்து சிறுவிடை, பெருவிடை ரகங்களைச் சேர்ந்த 5 நாட்டுக்கோழிகள் வாங்கிக்கிட்டு வந்தேன். நாளடைவுல பல மடங்கா பெருகி, இப்ப என்கிட்ட 130 கோழிகள் இருக்கு. இதுல 115 தாய்க்கோழிகள், 15 சேவல்களும் இருக்கு’’ என்று சொன்னவர், வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘இந்தப் பகுதியில நாட்டுக்கோழி முட்டை களுக்கு மக்கள்கிட்ட அதிக வரவேற்பு இருக்கு. என்னோட பண்ணைக்கே வந்து முட்டைகள் வாங்கிகிட்டுப் போறாங்க. ஒரு நாளைக்கு சராசரியா 30 முட்டைகள் விற்பனை செய்றேன். ஒரு முட்டை 20 ரூபாய்னு கொடுக்குறது மூலமா தினமும் 600 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒரு மாசத்துக்கு மொத்தம் 18,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல தீவனம், பராமரிப்புச் செலவுகள் போக, ஒரு மாசத் துக்கு 15,000 ரூபாய் லாபமா கிடைக்கும். ஒரு வருஷத்துக்கு 1,80,000 ரூபாய் லாபம் கிடைக்குது. ஒரு தாய்கோழி அதிகபட்சம் இரண்டு வருஷம் வரைக்கும்தான் முட்டையிடும். அதுக்குப் பிறகு, அந்தக் கோழியை விற்பனை பண்ணிடுவேன். ஒரு கோழிக்கு 450 ரூபாய் விலை கிடைக்கும். அந்த வருமானம் தனி.

நாட்டுக்கோழிகள்
நாட்டுக்கோழிகள்

கொட்டகை...

என்னோட கோழிகளைப் பெரும்பாலான நேரங்கள், திறந்தவெளியில மேயவிட்டு வளர்க்குறேன். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியோடு நல்லா ஆரோக்கியமா வளருது. இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 1,800 சதுர அடி. 40 அடி நீளம், 6 அடி அகலத்துக்குத் தகரக் கொட்டகை அமைச்சுருக்கேன். இந்தக் கொட்டகை உள்ளார... 4 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட 10 கூண்டுகள் அமைச்சுருக்கேன். சாயந்தரம் 6 மணியில இருந்து மறுநாள் காலையில 6 மணி வரைக்கும் தான் இந்தக் கூண்டுகள்ல கோழிகள் அடைஞ்சுக் கிடக்கும். அதுக்குப் பிறகு திறந்த வெளியில மேய ஆரம்பிச்சுடும்.

பண்ணையைச் சுற்றிலும் நாலும் பக்கமும் 7 அடி உயரத்துக்கு மதில் சுவர்கள் இருக்கு. வெளியாள்கள் யாரும், எங்களோட அனுமதி இல்லாம இந்தப் பண்ணைக்குள்ளார வர முடியாது. நாய், பூனைகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளும் தவிர்க்கப்படுது.

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

தீவனம்... மூலிகை மருத்துவம்...

கோதுமை, அரிசி, மக்காச்சோளம், கடலைப் புண்ணாக்கு, தவிடு... இவையெ ல்லாம் கலந்து தினமும் சுமார் 3 - 4 கிலோ தீவனம் கொடுப்போம்... இது 130 கோழி களுக்கும் போதுமானதா இருக்கு. வாரம் ஒரு தடவை, மீன் சந்தையில இருந்து 5 கிலோ மீன் கழிவுகள வாங்கிட்டு வந்து தண்ணில வேகவெச்சு மஞ்சள் கலந்து கொடுப்போம். இதுமூலமா கோழிகளுக்குப் புரதச்சத்து அதிக அளவுல கிடைக்குது.

இங்கவுள்ள கொய்யா, நொச்சி, வில்வ மரங்கள்ல இருந்து நிறைய இலைதழைகள் விழுந்து மட்குது. அதுல நிறைய புழு பூச்சிகள் உருவாகுது. எங்க கோழிகள் அதை விரும்பி சாப்பிடும். இதனால் மேய்ச்சல் மூலமும் இதுங்களுக்குத் தேவையான உணவு கிடைச் சிடும். நாட்டுக்கோழிகளைப் பொறுத்த வரைக்கும் மேய்ச்சலுக்குப் போயி தீனி சாப்பிட்டால்தான் அது ஆரோக்கியமாக வளரும்.

மழை, பனி காலங்கள்ல... சளி, காய்ச்சல் வராமல் தடுக்க... தலா 5 கிராம் மஞ்சள்தூள், மிளகு, 10 கிராம் சீரகம், தலா 3 ஆடாதொடை இலை, நொச்சி இலை... எல்லாத்தையும் 1 லிட்டர் தண்ணில போட்டு நல்லா கொதிக்க வச்சு, அதை 5 லிட்டர் தண்ணீர்ல கலந்து வச்சு ஒரு கோழிக்கு 5 மி.லி என்ற அளவுல கொடுக்குறோம். வாரத்துக்கு ஒரு முறை 10 பெருநெல்லிக்காய்களை நல்லா இடிச்சு, 1 லிட்டர் சுடுதண்ணீர்ல போட்டு 8 மணிநேரம் ஊற வச்சு, அதுக்குப் பிறகு, கசடுகளை நீக்கிட்டு, அந்தத் தண்ணீரை கோழிகளுக்குக் கொடுப்போம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்குது. வெள்ளை கழிச்சல், அம்மைநோய் தாக்குதல் ஏற்படாமல் இருக்க, 6 மாசத்துக்கு ஒரு முறை தடுப்பூசி போடுவோம்.

முட்டைகள்
முட்டைகள்

நான் கடந்த பத்து வருஷமா, நாட்டுக்கோழி வளர்ப்புல ஈடுபட்டு, ஓரவுளக்கு திருப்திகரமா லாபம் பார்த்துக்கிட்டு இருக்குறேனா, இதுக்குப் பசுமை விகடனும் ஒரு முக்கியக் காரணம். கோழி வளர்ப்புல கடைப்பிடிக்க வேண்டிய மிகவும் அவசியமான விஷயங்களை இதுல இருந்து தெரிஞ்சு கிட்டேன். வெள்ளாட்டு பால் விற்பனை சம்பந்தமா சமீபத்துல பசுமை விகடன் ஒரு கட்டுரை படிச்சேன். நானும் இதுல இறங்கலாம்ங்கற ஒரு யோசனையில இருக்கேன். அதுசம்பந்தமா பசுமை விகடன் நடத்திய வெள்ளாட்டுப்பால் பயிற்சியிலயும் கலந்துகிட்டு நிறைய விஷயங்கள தெரிஞ்சு வெச்சிருக்கேன்” எனச் சொல்லி முடித்தார்.


தொடர்புக்கு, ராஜேந்திரன்,

செல்போன்: 93822 56699.

சாயம் பூசிய முட்டை!

‘‘நாட்டுக்கோழி முட்டையிலதான் சத்துகள் அதிகம்னு மருத்துவர்கள் சொல்றாங்க. இதனால் மக்கள்கிட்ட இதுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருக்கு. இதுக்கு நல்ல விலை கிடைக்குறதுனால, பிராய்லர் கோழி முட்டைகள்ல சாயம் பூசி, நாட்டுக்கோழி முட்டைனு பொய் சொல்லி இந்தப் பகுதியில சிலர் விக்குறாங்க. அதைப் பார்க்குறப்ப எனக்கு ரொம்ப ஆதங்கமா இருக்கும். நான் நாட்டுக்கோழி வளர்ப்புல இறங்குறதுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்’’ என்கிறார் ராஜேந்திரன்.