
சேவை
இயற்கையில் கிடைக்கும் முள் சீத்தாப் பழத்துக்கு அத்தனை மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பழம் சந்தையில் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், அதன் விலை அதிகம். இணையதளத்தில் தேடிப் பார்த்தாலும் அதன் விலையும் தேவையும் அதிகமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில், கோவை உருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கௌதம் பிரபு, முள் சீத்தாப்பழம் மற்றும் இலைகளை மருத்துவ உதவிக்காக இலவசமாகக் கொடுத்து வருகிறார் என்ற தகவல் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கச் சென்றோம்.
உருமாண்டம்பாளையம் பகுதியில் உள்ள அவரின் தோட்டத்தில் பழத்துக்கு முன்பதிவு செய்துவிட்டு சிலர் காத்திருந்தனர். சிறிது நேரத்தில், அவர்களின் விவரங்களை வாங்கிக்கொண்டு தோட்டத்துக்குள் அனுமதித்தனர். அவர்களுக்குப் பழங்கள், இலைகளைக் கொடுத்து அனுப்பி விட்டு நம்மிடம் பேசினார் கௌதம் பிரபு.

“நாங்க விவசாயக் குடும்பம். நான் பி.பி.எம் படிச்சுட்டு, வெளிநாட்ல வேலையில இருந்தேன். அப்பா டெக்ஸ்டைல் தொழில்ல இருந்தாரு. ஆரம்பத்துல இருந்தே விவசாயமும் பண்ணிட்டு இருக்கோம். ஒரு கட்டத்துல டெக்ஸ்டைல் விட்டுட்டு, வேற தொழில்ல இறங்கிட்டோம். அதேநேரத்துல, நம்மளோட அடையாளமான விவசாயத்தையும் பாது காக்கணும்னு, விடாம பண்ணிட்டு இருக்கோம். அப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்துச்சு. அப்போ முள் சீத்தாப்பழம் கொடுத்தா குணமாகும்னு சொன்னாங்க. அப்ப அது கிடைக்க்கிறதே அபூர்வமா இருந்துச்சு. இங்கே ஒரு கடைல முன்னாடியே புக் பண்ணணும். அப்ப கிலோ ரூ.500-600 வித்துட்டு இருந்துச்சு. கொஞ்சம் பெரிய பழம் எடுத்தா எப்படியும் ரூ.1,000 வந்துரும். அதோட இலையும் கிடைக்கல. இதைப் பற்றிச் சரியான தகவல்களும் யாருக்கும் தெரியல.

வருமானவரித்துறைல இருந்த எங்க குடும்ப நண்பர் ராமலிங்கம், முள் சீத்தாப்பழத்தைப் பற்றி நிறைய சொல்லி, கையில ஒரு மரத்தைக் கொடுத்தார். அதைக் கொண்டு வந்து வெச்சோம். அது நல்லா தழைக்கவும் செஞ்சுது. ஆனா, அப்பா தவறிட்டார். சரி, முள் சீத்தா வைக்கலாம்னு இங்க நிறைய இடத்துல விசாரிச்சேன். எல்லாரும் விலை அதிகமா சொன்னாங்க. அப்புறம் ஒருமுறை கேரளா போனப்ப, அங்க ஒரு நர்சரியில ரூ.20-க்கு முள் சீத்தாச் செடி வைச்சுருந்தாங்க. விலை கம்மிதான்னு, நிறைய மரக்கன்றுகளை கார்ல அள்ளிப் போட்டுட்டு வந்துட்டேன். வட அமெரிக்கால என் நண்பர் ஒருத்தர்கிட்ட பேசுறப்ப, ‘இந்த மரத்துக்கு வெயில் அதிகம் படக்கூடாது. கொஞ்சம் குளிர்ச்சி வேணும்’னு சொன்னார். அதனால, தென்னைக்கு ஊடுபயிரா போட்டோம். அதுக்கு முன்னாடி, வெயில் படுற மாதிரி வெச்சுருந்தோம். அது சரிவரல. ஆனா, தென்னை பக்கத்துல வெச்சதும் நல்லா வளந்துச்சு. முதல்ல 60 மரங்கள் இருந்துச்சு. இப்ப 250 மரங்கள் இருக்கு. அப்பாவுக்குக் கிடைக்காம இருந்த மாதிரி, மத்தவங்க கஷ்டப்படக்கூடாதுனு நினைச்சோம். முள் சீத்தா குறித்து விழிப்புணர்வு பண்ணவும், அப்பா நினைவுக்காகவும் 2005-ம் ஆண்டிலிருந்து இலவசமா கொடுக்க ஆரம்பிச்சோம்.

வாரத்துக்கு 2 நாள்கள்ல முன்பதிவு செஞ்சுட்டு வந்து இலவசமா முள் சீத்தாப்பழம், இலைகள் எடுத்துக்கலாம். மக்களே பறிச்சுக்கலாம். 3-4 பழம் எடுத்துக்கலாம். இலைக்கு எந்தக் கணக்கும் இல்ல. இதுக்குனு நாங்க பெருசா மெனக்கிடறது இல்ல. சில நேரங்கள்ல மரம் முழுசா காய்ஞ்சு போயிடும். அப்ப, அதே இடத்துல வேறொரு மரம் நட்டுருவோம். நட்டு 2 வருஷத்துல பழம் வந்துடும். பெருசா பராமரிக்கிறது இல்ல. தண்ணி விடுறது மட்டும்தான். அப்பப்ப, மாட்டுச் சாணத்தை உரமா போடுவேன். இதுல எறும்பு நிறைய வந்து, கொஞ்சம் பிரச்னை பண்ணும். ஆனா, மக்களுக்குக் கொடுக்கிறதால நான் எந்த மருந்தும் அடிக்கறது இல்ல. அப்படியே விட்டிருவேன்” என்றவர், தோட்டத்தில் பழம் பறித்துக்கொண்டிருந்த ஒருவரிடம், ‘அவங்க இப்ப நல்லாருக்காங்களா?’ என்று விசாரித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“எங்க தோட்டம் மொத்தம் 5 ஏக்கர். அதுல சப்போட்டா, தென்னை போட்டிருக்கோம். முள் சீத்தா மட்டும் சேவை மனப்பான்மையா பண்றோம். அதுல எவ்ளோ விளையுது என்ன ஏதுனு தெரியாது. சப்போட்டா கேரளாவுக்கு அனுப்பறோம். இதுலயும், பெரிய அளவுக்கு வருவாய்ப் பாக்கறது இல்லை. நாங்க கஷ்டப்பட்ட ஒரு விஷயம், மக்களுக்குச் சுலபமா கிடைக்கணும்கிறது மட்டும்தான். அதுக்கு பலனும் கிடைச்சுருக்கு. தமிழ்நாட்டுல மட்டும் இல்லாம, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா போன்ற பகுதிகள்ல இருந்தும் வராங்க. சிலர், விதைகள் வாங்கி நடவும் செய்யுறாங்க. இது இன்னும் நிறைய பேருக்குப் பரவணும். சந்தையில கொய்யாப் பழம் கிடைக்கற மாதிரி, எங்கயும் கிடைக்கணும். விலை கம்மியா கிடைக்கணும். நாங்க இதைச் சேவையா பண்றதுக்கு அரசாங்கத்தோட உதவி ரொம்பவே உதவியா இருக்குது.
புற்றுநோய், நீரிழிவு, குழந்தையின்மைனு நிறைய பிரச்னைக்கு முள்சீத்தா எடுத்துட்டுப் போறாங்க. நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கவும் எடுத்துட்டுப் போறாங்க. நிறைய மருத்துவக் குணங்கள் இருந்தாலும், மக்களுக்கு இது எளிதா கிடைக்கிறதில்ல. இப்பவும், இணையதளத்துல முள் சீத்தாப்பழங்கள், இலைகள் அதிக விலைக்கு விக்கிறாங்க. நான் இதைச் சேவை மனப்பான்மையா பண்ணாலும், இதோட பழம், இலை ரெண்டுக்கும் நல்ல டிமாண்டு இருக்கு. அதனால, விவசாயிங்க பெரிய அளவுல முள் சீத்தா சாகுபடி பண்ணா, நல்ல வருமானம் கிடைக்கும்” என்றார் உறுதியான குரலில்.
தொடர்புக்கு,
கெளதம் பிரபு,
(வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்)
வாட்ஸ்அப் எண்: 90431 33666.