
மருத்துவம் 21 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
சீந்தில், மிகவும் வலிமையான ஏறுகொடியினத் தாவரம். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். காய்கள் பச்சை நிறத்திலும், பழங்கள் சிவப்பு நிறத்திலும் காணப்படும்.
தக்கையான சாறுள்ள தண்டுகள், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சக்கரம் போன்ற அழகிய அமைப்புடன் காணப்படும். இந்தத் தண்டின்மேல் காகிதம் போன்ற புறத்தோல் காணப்படும். தண்டு முதிர முதிர இந்தப் புறத்தோல் ஆங்காங்கே உரிந்து காணப்படும். சீந்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது. சீந்தில்போலவே அனைத்து வடிவமைப்புகளுடன் காணப்படுவது ‘பொற்சீந்தில்.’ இதன் தண்டு மற்றும் இலைகளின் பின்புறம் காணப்படும் முடி போன்ற வளரிகளில் சூரிய ஒளி படும்போது ‘பொன்’போல மின்னும் இயல்புடையதால் ‘பொற்சீந்தில்’ என அழைக்கப்படுகிறது. சீந்திலுக்குரிய அனைத்து மருத்துவ குணங்களும் பொற்சீந்திலுக்கும் பொருந்தும். ஆனால், பொற்சீந்தில் சாதாரணச் சீந்திலைவிடக் கூடுதலான மருத்துவத் திறன் உடையது. ‘பேய்ச்சீந்தில்’ எனப்படும் கொல்லங்கோவையாகிய ஆகாச கருடன், சீந்திலிலிருந்து முற்றிலும் வேறானது. கோவையைப் பற்றி (15-வது தொடர்) எழுதியபோது கொல்லங்கோவையைப் பற்றியும் ஏற்கெனவே விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

சோமபானம் தயாரிக்கப் பயன்படும் கொடியினங்களில் சீந்தில் கொடியும் ஒன்று என்பதால், இது, ‘சோமவல்லி’ என்றும், அமிர்தத்துக்கு ஒப்பானது என்பதால் ‘அமிர்தவல்லி’, ‘அமிர்தை’, ‘அமிர்தக்கொடி’ ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ‘குண்டலினி சக்தி’ பெருகும் என்பதால், ‘குண்டலினி’ என்றும் வெட்டிவிட்டாலும், விழுதுகளை உருவாக்கித் தொடர்ந்து வளர்வதால், ‘சாகா மூலிகை’ என்றும் பல பெயர்களைப் பெற்றுள்ளது. இதன் கொடியும் வேர்க்கிழங்குமே மிகுந்த மருத்துவப் பயன் உடையவை. இதன் தண்டு எவ்வளவு பருமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மிகுந்த கசப்பாகவும், அதிக மருத்துவப் பலன் உடையதாகவும் இருக்கும். கோடைக்காலங்களான மாசி, பங்குனி மாதங்களில்தான் இந்தத் தண்டுகள் பருத்துக் காணப்படும். அந்த மாதங்களில் இதைச் சேகரிப்பதே நல்லது.
சீந்தில்கொடி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதால்தான் எல்லாச் சுரக்குடிநீர் வகைகளிலும் சீந்தில் தண்டு சேர்க்கப்படுகிறது.
இப்போது பிரபலமாகப் பேசப்படும் கபசுரக் குடிநீரிலும் இந்தத் தண்டு சேர்கிறது.
சீந்தில் தண்டுகளைத் துண்டுகளாக நறுக்கி, நிழலில் உலர்த்தி, இடித்து சூரணம் செய்து, கால் பங்கு சர்க்கரை சேர்த்து, இரண்டு அல்லது மூன்று கிராம் எடுத்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) இரு வேளை தொடர்ந்து உண்டுவந்தால், பல வகையான சுரங்கள், உடம்பு மறத்தல், நீர்க்கடுப்பு, உடல் மெலிவு ஆகியவை தீரும். நாடி சமநிலையை அடையும். இது ஒரு சிறந்த காயகற்ப முறை. முதிர்ந்த கொடியின் சூரணத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வர, நீரழிவால் ஏற்படும் கை, கால் அசதி, அதிக தாகம், உடல் மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் முதலான அனைத்துத் துன்பங்களும் தீரும். இனிப்புக்காகப் பனங்கற்கண்டைக் கூடுதலாக அள்ளிப்போட்டு விடக் கூடாது. ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற நம் முன்னோர் சொல்லை மறக்கக் கூடாது.

முதிர்ந்த சீந்தில்கொடி மற்றும் நெற்பொரி 50 கிராம் எடுத்து நன்றாகச் சிதைத்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி 150 மி.லி-யாக வற்றவைக்க வேண்டும். அதை வேளைக்கு 50 மி.லி வீதம் மூன்று வேளையும் உணவுக்குப் பிறகு குடித்துவந்தால் மிக அதிகமான உடற்சூடு, தாகம் ஆகியவை குணமாகும். அடிக்கடி விட்டுவிட்டு வரும் காய்ச்சல் உள்ளவர்களும் இந்தக் குடிநீரைத் தொடர்ந்து குடித்துவர, காய்ச்சல் வருவது நிற்கும். சமவெளிப் பகுதிகளிலுள்ள சீந்தில் தண்டு மிகவும் கசப்பாக இருக்கும். அதேசமயம், கோடியக்கரை, வேதாரண்யம் முதலிய கழிமுகப் பகுதிகளில் வளரும் சீந்தில் தண்டு மிகவும் இனிப்புச் சுவையுடன் காணப்படும். அந்தப் பகுதிகளில் வாழும் வலையர் இனப் பழங்குடி மக்கள், மாசி மற்றும் பங்குனி மாதங்களில் இந்த முதிர்ந்த சீந்தில்கொடிகளைச் சேகரித்து, துண்டு துண்டாக நறுக்கி, இட்லிக் கொப்பரையில் போட்டு லேசாக அவிப்பார்கள். அதை முருங்கைக்காயைச் சாப்பிடுவதுபோல சாப்பிட்டுச் சக்கையைத் துப்பிவிடுவார்கள். `இப்படி உட்கொள்வதால் வலையர் இன மக்களுக்குச் சர்க்கரைநோயும் சுரமும் அதிகம் வருவதில்லை’ என மத்திய அரசின் மூலிகைக் களப்பணி அலுவலராகப் பணிபுரிந்த செல்லதுரை என்பவர், தன் களப்பணி ஏட்டில் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வீடுகளில் பந்தல் அமைத்துச் சீந்தில்கொடிகளைப் படரவிட்டு, சமையலிலும் அவ்வப்போது சேர்த்துவரலாம்.
‘தெள்ளவே சிரசிலுள்ள வாயுவெல்லாம்
சிந்துமே அமிர்தம்தான் நாடி சுத்தி’,
‘சீந்தி நீர்க்கண்டம் தெறிசுக்கு தேனளாய்
மோந்தபின் யார்க்கும் தலைகுத்தல் மாறுமே’
என்ற தேரையர் பாடல் வரிகள், `சீந்தில் தலைவலிக்குச் சிறந்த மருந்து’ என்பதை உணர்த்துகிறது. சீந்தில் தண்டுகளால் செய்யப்படும் சீந்தில் சூரணம், சீந்தில் கிருதம் (நெய்) முதலான மருந்துகளைச் சித்த மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு உண்டுவந்தால் நாள்பட்ட தலைவலி, மூக்கடைப்பு, மூக்குப்புண்கள் முதலான நோய்கள் நிரந்தரமாக குணமாகும். ஏதேனும் நாள்பட்ட தோல் நோய்களால் வருந்துவோர் ‘சீந்தில் கிருதம்’ எனும் மருந்தை இரவு மட்டும் அரை முதல் ஒரு தேக்கரண்டி உண்டுவந்தால் முற்றிலும் குணமாகும்.

சீந்தில் சர்க்கரை செய்யும் முறை

சர்க்கரை என்றவுடன் இனிப்பாக இருக்கும் என நினைக்க வேண்டியதில்லை. இது மிகவும் கசப்பாக இருக்கும் மாவு போன்ற சத்துப் பொருள். மாசி, பங்குனி மாதங்களில் சேகரிக்கப்படும் மிகவும் தடிமனான தண்டுகளைக் கல் உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். பிறகு ஓர் அகலமான பாத்திரத்தில் அவற்றைப் போட்டு, நன்கு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு கைகளால் நன்கு வலுவாகப் பிசைந்துவிட வேண்டும். ஆறு மணி நேரம் ஊறிய பிறகு மீண்டும் பிசைந்து, பிழிந்து சக்கைகளை மட்டும் நீக்க வேண்டும். பிறகு அந்தப் பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்துப் பார்த்தால் தண்ணீர் முழுவதுமாகத் தெளிந்து அடியில் மாவுபோலப் படிந்திருக்கும். தெளிந்த நீரை மெதுவாக வடிகட்டிவிட்டு, அடியில் படிந்துள்ள மாவுடன் மீண்டும் தண்ணீர் கலந்து தெளியவைத்து வடிகட்டவும். இப்படி இரண்டு, மூன்று முறை செய்துவிட்டுக் கடைசியில் இளநீர் ஊற்றித் தெளியவைத்து, அடியில் படிந்ததைச் சேகரித்து, நன்கு காயவைத்து மாவுபோல ஆக்கிக்கொள்ளவும். இதுதான் ‘சீந்தில் சர்க்கரை.’ இதைச் ‘சீந்தில் உப்பு’, ‘அமிர்த மாவு’ என்றும் அழைக்கிறார்கள்.

இந்த மாவு சிறிது அழுக்குக் கலந்த வெண்மை நிறத்தில் காணப்படும். நன்கு வடிகட்டித் தயாரிக்கப்பட்டால் அதிகமான கசப்புச் சுவை இல்லாமலும், லேசான இனிப்புச் சுவையுடனும் இருக்கும். கடைகளில் ‘குடிஜி சத்வம்’ (Gudiji sathvam) என்ற பெயரில் கிடைக்கிறது. வட இந்தியாவிலிருந்து நமக்கு விற்பனைக்காக வரும் இந்தச் சீந்தில் மாவு மிகவும் வெண்மையாக, மைதா மாவுபோலக் காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல நாட்டுமருந்துக்கடை உரிமையாளரான எம்.எஸ்.எஸ்.ஆசான் எழுதிய, ‘அனுபவ வைத்திய களஞ்சியம்’ எனும் நூலில், `கடைகளில் வாங்கும் சீந்தில் சர்க்கரையைவிட, நமக்கு நாமே தயாரித்துக்கொள்வதுதான் மிகவும் சிறப்பானது’ என உறுதிப்படக் குறிப்பிட்டுள்ளார். இதே சீந்தில் சர்க்கரையை ‘சித்த மருத்துவப் பேரகராதி’யைத் தொகுத்த சாம்பசிவம்பிள்ளை, ‘சீந்திநீர்க்கண்டம்’ எனக் குறிப்பிடுகிறார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உடல் பலக் குறைவுக்கு இது சிறந்த மருந்து.
சர்க்கரைநோய் இல்லாதவர்களும் இதை ‘ஆரோக்கிய பானமாக’ செய்து உட்கொண்டு பலம் பெறலாம்.
அடுத்த இதழில்...
தாமரை, ஓரிலைத்தாமரை, ஓரிதழ் தாமரை குறித்துப் பார்ப்போம்.
ஆரோக்கிய பானம்
காய்ச்சிய பசும்பால் - 150 மி.லி
தேன் – 15 மி.லி
நாட்டுக்கோழி முட்டை – 1
சீந்தில் சர்க்கரை – 5 கிராம்
இவை அனைத்தையும் நன்கு கலக்கி காலை, மாலை இரு வேளை வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், உடல் பலம் பெறும். நாள்பட்ட நோய்களால் உடல்பலத்தை இழந்தவர்களும் இதை உட்கொண்டு பலம் பெறலாம். சர்க்கரை நோயாளிகள் இந்தப் பொருள்களில் தேனைத் தவிர்த்தும், சைவ உணவு உட்கொள்பவர்கள் முட்டையைத் தவிர்த்தும் உட்கொள்ளலாம். நாள்பட்ட சர்க்கரை நோயாளிகள், நாள்பட்ட மலேரியா, டைபாய்டு காய்ச்சல் நோயாளிகள், தோல் நோயாளிகள் ஆகியோர் சீந்தில் சர்க்கரையை தினமும் 2-3 கிராம் காலை, மாலை இரு வேளை பாலில் கலந்து உண்டுவர நன்மை கிடைக்கும். 10 கிலோ முற்றின சீந்தில் தண்டுகளிலிருந்து சீந்தில் சர்க்கரை தயாரித்தால் 100 கிராம் கிடைக்கும். இதைத் தயாரிப்பதில் சிரமங்கள் இருந்தாலும், இது ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சத்து மருந்து. நோய் எதிர்ப்பு சக்தி குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து வரும் இந்தக் காலகட்டத்தில் அதற்கு விடையளிப்பது சீந்தில்தான் என்பதில் ஐயமில்லை.