
மருத்துவம் 16 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
மருந்துகளைக் கூறிவிட்டு நோய் குணமாகவில்லை என்றால், தன் பெயரை மாற்றிக் கொள்வதாகச் சவால்விடுவது தேரனின் சிறப்பு.
சளி, இருமல், காய்ச்சல் குணமாகும். அளவை அதிகரித்துக் கொடுத்தால் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புகள் உள்ளன.
இண்டு, இசங்கு, தூதுவேளை, கண்டங்கத்திரி ஆகியவை சளிநோயைக் கட்டுப்படுத்தும் மூலிகை மருந்துகளின் செய்முறைகளில் நிறைய இடங்களில் கையாளப்படுகின்றன. இவற்றில் இண்டு, சிறந்த முட்கொடி. மீள முடியாத பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் கிராமப்புற மக்கள், ‘இண்ட முள்ல தலைய விட்டாப்ல...’ என்று ஒரு சொலவடையைச் சொல்வார்கள். காரணம், இண்டு முள்ளில் தலையைவிட்டால் எடுக்க முடியாது. அப்படிப்பட்ட மீள முடியாத அல்லது தப்ப முடியாத புதர்க்கொடியான இண்டு முள்ளைத்தான் சிறந்த உயிர்வேலித் தாவரமாக நமது முன்னோர்கள் வைத்திருந்தார்கள். இண்டு வேலியைக் கண்டு புலிகூட நடுங்குவதால், ‘புலித்துடக்கி’ என்ற பெயரும் இதற்கு உண்டு. சங்க இலக்கியங்கள் இண்டு தாவரத்தை ‘ஈங்கை’ என்றே குறிப்பிடுகின்றன. இன்றளவும் குமரி மாவட்டத்தில் இது `ஈங்கை’ என்றே அழைக்கப்படுகிறது. `இண்டு’, `ஈங்கை’, `ஈயக்கொழுந்து’ எனப் பல பெயர்களிலும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இண்டுவில் `வெள்ளிண்டு’, `சிவப்பிண்டு’ என இரு வகைகள் உள்ளன. வெள்ளிண்டுதான் மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

விரல் பருமனுள்ள இண்டந்தண்டுகளை 4-6 இன்ச் அளவு துண்டுகளாக்கி, ஒரு முனையை வாயில்வைத்து பலூன் ஊதுவதுபோல் ஊத… மறுமுனையில் நீர்க்குமிழிபோல் தண்ணீர் கொட்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மூலிகைத் தண்ணீர் 15 மி.லி-யுடன், அரை கிராம் திப்பிலிப்பொடியைச் சேர்த்து உண்டுவர எந்த மருந்திலும் தீராத இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு குணமாகும். இதையே குழந்தைகளுக்கு 5 மி.லி வீதம் கொடுத்துவர நாள்பட்ட இருமல் முதலான அனைத்து கப நோய்களும் குணமாகும்.
தேரன் விடும் சவால்
மருந்தறிவியலில் தேரன் சித்தர் பாடிய பாடல்கள் மிகவும் பயனுள்ளவை. சில மருந்துகளைக் கூறிவிட்டு, அது தொடர்பான நோய் குணமாகவில்லையென்றால், தன் பெயரை மாற்றிக்கொள்வதாகச் சவால்விடுவது தேரனின் சிறப்பு.
‘எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத் தேனில் கலந்துண்ண – விக்கலும்
விட்டுப் போகும் விடாவிடில் போத்தகமும்
சுட்டுப் போடு யான் தேரனுமல்லனே.’
`எட்டுப் பங்கு திப்பிலியையும், பத்துப் பங்கு சீரகத்தையும் பொடியாக்கி தேனில் கொடுக்க விக்கல் குணமாகும். விக்கல் நிற்கவில்லையென்றால், மயிலிறகைச் (போத்தகம்) சுட்டுச் சாம்பலாக்கிக் கலந்து கொடுக்கலாம். அப்படியும் விக்கல் விடவில்லையெனில், என் பெயர் தேரன் இல்லை’ என்பது இதன் பொருள்.
‘‘மீள முடியாத அல்லது தப்ப முடியாத புதர்க்கொடியான இண்டு முள்ளைத்தான் சிறந்த உயிர்வேலித் தாவரமாக நமது முன்னோர்கள் வைத்திருந்தார்கள்.’’
இன்னும் ஒருபடி மேலே போய், ‘யான் தேரனுமல்லனே’ என்பதோடு, தண்டமும் (அபராதமும்) தருவதாகப் பின்வரும் பாடல் உள்ளது.
‘இண்டிலை தூதுவேளை யிசங்கு திப்பிலி
கண்டரி சுக்குடன் கலந்து வெந்தநீர்
உண்டில் வொருதர மிரும லுற்றிடில்
தெண்டமுந் தருவன்யான் தேரனு மல்லனே.’ – தேரன் 100
`இண்டு இலைக் கொழுந்து, தூதுவேளை, சங்கன் இலை, திப்பிலி, கண்டங்கத்தரி, சுக்கு ஆகியவற்றில் வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராகக் காய்ச்ச வேண்டும். அதை 60 மி.லி குடித்துவர, எல்லாவித இருமல்களும் குணமாகும். குணமாகவில்லையெனில் நான் தண்டம் தருகிறேன். என் பெயரான தேரன் என்பதை மாற்றிக்கொள்கிறேன்’ என்பது இதன் பொருள்.
சிறுமாந்த எண்ணெய்
தற்போது குழந்தை வளர்ப்பில் ஆன்டிபயாட்டிக் சிரப்புகள் முக்கிய இடம்வகிக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளுக்கு மாந்த எண்ணெய், கணை எண்ணெய்கள் கையாளப்பட்டு வந்தன. சித்த மருத்துவத்தில் குழந்தைகள் மருத்துவ முறைக்கு ‘பாவாகடம்’ என்று பெயர். இதில் அதிகமாகக் கணை எண்ணெய், மாந்த எண்ணெய் தயாரிப்பு முறைகளும் கூறப்பட்டுள்ளன. நிறைய வகைகளின் மூலிகைச் சாறுகள் சேருகின்ற மாந்த, கணை எண்ணெய்கள் கூறப்பட்டிருந்தாலும், இண்டங்கொடிச்சாறு சேர்த்துச் செய்யக்கூடிய சிறு மாந்த எண்ணெய் மிகவும் சிறப்புக்குரியது.

இண்டங்கொழுந்துச் சாறு, சிற்றாமணக்கு எண்ணெய் இரண்டிலும் வகைக்கு ஒரு லிட்டர் சேர்த்து அடுப்பிலேற்றி, மெதுவாக எரிந்து அடியில் படியும் வண்டல் மெழுகு பதமாகத் தொடங்கியவுடன் 20 கிராம் கருஞ்சீரகப் பொடியைப் போட வேண்டும். நன்றாகக் கலக்கிக் காய்ச்சி, வடிபாத்திரத்தில் மூன்று கிராம் உலர்ந்த கோரோசனத்தை நன்கு அரைத்துப் போட வேண்டும். பிறகு தைலத்தை வடித்து, ஆறவிட்டுப் பத்திரப்படுத்தவும். இதை காலையில் மட்டும் ஒருவேளை கொடுக்கவும். 1-3 வயதுக் குழந்தைகளுக்கு 3 மி.லி-யும், 3-5 வயதுள்ள குழந்தைகளுக்கு 5 மி.லி-யும், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 7 மி.லி-யும் கொடுக்க, நன்கு பேதியாகி சளி, இருமல், காய்ச்சல் குணமாகும். இம்மருந்தைக் கையாள்வதில் அளவு மிக முக்கியமானது. அளவை அதிகரித்துக் கொடுத்தால், பேதி அதிகமாகி ஆபத்தை விளைவிக்க வாய்ப்புகள் உள்ளன.
கழற்சி
இது ஆற்றங்கரைகளில் இயல்பாக வளரும் ஒரு முள் தாவரம். இதன் இலை, வேர், விதை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. இதன் கொழுந்து இலைகளுடன் சிறிது தேங்காய்த்துருவல் சேர்த்து லேசாக விளக்கெண்ணெயில் வதக்க வேண்டும். அதை ஒரு மெல்லிய துணியில் முடிந்து ஒத்தடம் கொடுத்த பிறகு, வைத்துக் கட்டிவர வீக்கங்கள் குறையும். விதை வீக்கம் மறையும். இதன் காய்கள் உருவத்தில் மனிதனின் விதைப்பைகளை ஒத்திருப்பதால், விதைப்பை தொடர்பான நோய்களுக்கு உள்ளுக்கும் வெளிக்கும் பயன்படுத்துகிறோம்.

விதை வீக்கங்களில் குடலிறக்கம் தவிர மற்ற வாயு, நீர், ரத்தம் சேர்த்து ஏற்படும் எல்லா வீக்கங்களுக்கும் குணமளிக்கும். குடலிறக்கத்திலும், முதல் நிலை குடலிறக்கத்தில் கழற்சிப் பருப்பு சேர்ந்த மருந்துகள் பலனளிக்கின்றன. குடலிறக்கம் முற்றிவிட்டால் அறுவை மருத்துவம் ஒன்றுதான் தீர்வு. மேலும், குடல்வால் அழற்சிக்கும் (Appendicitis) கழற்சி பருப்பு நன்கு குணமளிக்கும்.
கழற்சி விதைகளை உடைத்து, அதன் உள்ளிருக்கும் பருப்புகளைத்தான் மருத்துவத்தில் பயன்படுத்த வேண்டும். கழற்சிப்பருப்பு 30 கிராம், சுக்கு 20 கிராம், களிப்பாக்கு 10 கிராம் என்ற அளவில் எடுத்து நன்கு பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை முட்டை வெண்கருவை விட்டு அரைத்து, நீர் கோத்து வரும் விதை வீக்கம் (Hydrocele), யானைக்கால் நோயில் ஏற்படும் விதை வீக்கம் ஆகியவற்றுக்குப் பற்று போட்டுவர அவை கரையும்.
100 கிராம் கழற்சிப்பருப்புடன் 25 கிராம் மிளகு சேர்த்துப் பொடி செய்து கழற்சியிலைச்சாறு விட்டு அரைத்து, சுண்டைக்காயளவு மாத்திரைகள் செய்து, நிழலில் உலர்த்தி வைத்துக்கொள்ளவும். அதை உண்டுவந்தால் குடல்வாயு, விதை வீக்கம் ஆகியவை குணமாகும்.

தோசைக்கல்லில் ஒரு நாட்டுக்கோழி முட்டையை உடைத்து ஊற்றி, அதன்மீது தயாரித்துவைத்திருக்கும் கழற்சிப் பொடியை ஒரு தேக்கரண்டியளவு தூவி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டுவர, சினைப்பைக்கட்டிகள்(PCOD) கரையும். இவ்வாறு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரைகூட உண்டு வரலாம். மேலும், வாய்வுப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் இது நல்மருந்து.
கழற்சி விதைப்பருப்பைக் கைமருந்தாகத் தயாரித்து உண்ண இயலாதவர்கள் சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் ‘கழற்சித் தைலம்’ எனும் தைலத்தை இரவு படுக்கப்போகும் முன்னர் 3-5 மி.லி உண்டுவர, அண்ட வாயு, அண்ட வீக்கம், குடல்வாயு, ஆரம்பகட்ட குடலிறக்கம் (Herenia) குடல்வால் அழற்சி (Appendicitis) ஆகிவை குணமாகும்.

பாலைநிலத் தாவரங்கள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.