மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து 2.0 - எலும்புகளை வலுவாக்கும் எளிதான பிரண்டை!

பிரண்டை
பிரீமியம் ஸ்டோரி
News
பிரண்டை

மருத்துவம் 17 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

தற்குமே பயன்படாது என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் தன்னிச்சையாக வளரக்கூடிய தாவரங்களை, ‘வறள்நிலத் தாவரங்கள்’ என்பார்கள். அந்த நிலங்களை ‘பாலை நிலம்’ என்கிறோம்.

இங்கு `பாலை’ என்று குறிப்பிடப்படுவது பாலைவனம் அல்ல. முல்லையும் மருதமும் மழையின்றி இருப்பதால், `பாலை’ எனப்படுகின்றன. இங்கே வளரக்கூடிய தாவரங்களான கள்ளி, வெட்பாலை, அரளி முதலிய தாவரங்களில் பால்சத்து காணப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் முதலான தாவரங்களின் பெயர்களைக்கொண்டு நிலங்கள் பெயரிடப்பட்டதுபோல, பால்சத்துள்ள தாவரங்களைக் குறிப்பிடும் சொல்தான் `பாலை.’ அந்த மரங்கள் அதிகமிருப்பதால் பாலை என அழைக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அடுத்து ‘திருப்பாலைவனம்’ என்று ஒரு ஊரே இருக்கிறது.

நல்மருந்து 2.0 - எலும்புகளை வலுவாக்கும் எளிதான பிரண்டை!

பிரண்டை

நேர்க்கோட்டில் வளராமல் பிரண்டு, பிரண்டு வளர்வதால் `பிரண்டை’ என்ற பெயரானது. ஓலைப்பிரண்டை, உருட்டுப்பிரண்டை, முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, கோப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பல்வேறு வகைகள் இருப்பதாக நூல்கள் கூறுகின்றன. ஆனால், தற்போது பிரண்டை, ஓலைப்பிரண்டை, உருட்டுப்பிரண்டை ஆகியவையே தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மரபுவழி அனுபவமிக்க மூத்த மருத்துவர்கள் முப்பிரண்டை குறித்து சிலாகித்துப் பேசுவார்கள். உண்மையில் முப்பிரண்டை என்று ஓர் இனம் இல்லை. ஓலைப்பிரண்டை என்ற இருபக்கப் பிரண்டையில் சில வளரியல் மாறுபாடுகளால் (Morphological Changes) மூன்று பக்கங்கள் ஏற்பட்டு `முப்பிரண்டை’ என்று அழைக்கப்படுகிறது.

எந்த வகைப் பிரண்டைகளாக இருந்தாலும், அவை ஒரே மாதிரியான மருத்துவத்தன்மைகளைக் கொண்டிருக்கும். `உடலுறுப்புகளின் வடிவத்தை ஒத்த வடிவமைப்புடைய மூலிகைகள், அந்தந்த உறுப்புகளில் ஏற்படும் நோய்களை குணமாக்கும்’ என்பது இயற்கையின் நியதி. அதன்படி பிரண்டை, மனித உடலிலுள்ள நீள எலும்புகளின் வடிவத்தை ஒத்திருக்கிறது. பிரண்டையை நம் அன்றாட உணவுகளிலிருந்து ஒதுக்கியதன் விளைவுதான் இன்றைக்கு அதிகமாகக் காணப்படும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனப்படும் எலும்பு மற்றும் மூட்டுத் தேய்மான நோய்.

பிரண்டையை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம், குடலில் தேவையற்ற வாய்வு மற்றும் மலப்பொருள்கள் அகற்றப்படும்; உணவுப் பாதையிலுள்ள புண்கள் குணமாகும். உடலிலுள்ள அனைத்து எலும்புகளும் வலிமை அடையும். காரணம், பிரண்டையில் அதிகமான சுண்ணாம்புச்சத்து இருக்கிறது. நமது பாட்டன்மார்கள் சுண்ணாம்பு மற்றும் பிற உயிர்ச்சத்துகளுக்கென்று தனியாக மாத்திரையோ, டானிக்கோ எடுக்கவில்லை. பிரண்டையைச் சேகரிக்கும்போது, கள்ளித் தாவரங்களின் மீது படர்ந்திருக்கும் பிரண்டைகளைச் சேகரிக்கக் கூடாது. கள்ளியிலிருக்கும் விஷம், பிரண்டையிலும் சேர வாய்ப்பிருக்கிறது. எலும்பு தொடர்பான அனைத்து நோய்களையும் குணமாக்குவதால் பிரண்டைக்கு ‘வஜ்ஜிர வல்லி’ என்ற பெயரும் உண்டு.

கள்ளித் தாவரங்களின் மீது படர்ந்திருக்கும் பிரண்டைகளைச் சேகரிக்கக் கூடாது. அது விஷமாகும். எலும்பு நோய்களை குணமாக்குவதால் பிரண்டைக்கு ‘வஜ்ஜிர வல்லி’ என்ற பெயரும் உண்டு.

பிரண்டைத் துவையல்

பிரண்டையின் இளந்தண்டுகளைச் சிறிது பசுநெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, மிளகு சேர்த்துத் துவையலாக அரைத்து உணவுடன் தொடர்ந்து உட்கொண்டுவந்தால் வாய்வுத் தொல்லை முற்றிலும் நீங்கிவிடும். மலச்சிக்கல் இருந்தால் பசுநெய்க்கு பதிலாக விளக்கெண்ணெய்விட்டு வதக்கிப் பயன்படுத்தவும். பிரண்டைத் தண்டுகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, சிறிது நெருப்பில் வதக்கிப் பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்.

பிரண்டை
பிரண்டை

இந்தச் சாற்றுடன் உப்பு, புளி சேர்த்து லேசாகக் காய்ச்ச வேண்டும். குழம்புப் பதத்தில், பொறுக்கும் சூட்டில் பற்றுப் போட சதைப்பிழற்சி, எலும்பு முறிவு வீக்கம், அடிபட்ட வீக்கம் குணமாகும். பிரண்டை வேரை மண் இல்லாமல் நன்றாகக் கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு காயவைத்துப் பொடி செய்துகொள்ள வேண்டும். அந்தப் பொடியில் 1-2 கிராம் எடுத்து தேன் அல்லது பாலில் கலந்து இரண்டு வேளை உண்டுவந்தால் முறிந்த எலும்புகள் விரைவில் கூடும்.

எலும்பு முறிவுக்குப் பிரண்டையைப் பயன்படுத்தும்போது, மூங்கில் தப்பையைக்கொண்டு, அனுபவம்மிக்க ‘நுட வைத்தியரால்’ கட்டுக் கட்ட வேண்டும். பிரண்டையின் இளந்தண்டுகளை அவித்து, சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து உண்டு வந்தால் பசியின்மை நீங்கி, நன்றாகப் பசியெடுக்கும். இளம் பிரண்டைத் தண்டுகளை நெய்விட்டு வதக்கி, நன்கு அரைத்து 3-5 கிராம் உப்பு, புளி, காரம் குறைத்து அல்லது நீக்கி எட்டு நாள்கள் உண்டுவந்தால் தீராத மூலக்கடுப்பு, ரத்தமூலம் ஆகியவை நீங்கும். இளந்தண்டுகளை இலையுடன் சேகரித்து நிழலில் உலர்த்தி, பொடி செய்து அதனுடன் சுக்குத்தூள், மிளகுத்தூள் கலந்து வைத்துக்கொண்டு காய்ச்சிய பசும்பாலில் போட்டு, சிறிது கற்கண்டுத்தூள் கலந்து குடித்துவந்தால் சுவையின்மை, பசிமந்தம் ஆகியவை நீங்கி நன்றாகப் பசியெடுக்கும்.

ஓலைப்பிரண்டை
ஓலைப்பிரண்டை

பிரண்டை உப்பு தயாரிப்பு

பிரண்டைத் தண்டுகளை நிறைய சேகரித்துக் குறுகத் தரித்து நல்ல வெயிலில், முடிந்தால் பாறைகள்மேல் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அந்தச் சாம்பலைச் சேகரித்துத் தண்ணீரில் கரைக்கவும். பிறகு தெளிந்த நீரை எடுத்து ஒரு மண்சட்டியில் போட்டு சுண்டக் காய்ச்சவும். உப்பு உறையும் பக்குவத்தில் அடுப்பிலிருந்து இறக்கி, நல்ல வெயிலில் இரண்டு, மூன்று நாள் காயவைத்தால் அழுக்கு கலந்த வெண்மை நிறத்தில் பிரண்டை உப்பு கிடைக்கும். 100 கிலோ பிரண்டையிலிருந்து அரைக் கிலோ உப்பு கிடைக்கும். இதைக் கூடுமானவரை கண்ணாடிப் பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும். உலோகம், பிளாஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்க்கவும். ஏனென்றால், இது கடுங்காரமான சுண்ணாம்பு.

புளிநரளைக் கிழங்கு
புளிநரளைக் கிழங்கு

இந்த உப்பில் 130 மில்லிகிராம் வரை எடுத்து மூன்று நாள்களுக்கு, மூன்று வேளை பாலில் கலந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நுரைத்த பேதி, சூட்டுக்கழிச்சல், பச்சைக்கழிச்சல் போன்ற பிறளி நோய்கள் குணமாகும். இந்த உப்பை 130 மி.கி – 250 மி.கி வரை எடுத்து வெண்ணெயில் கலந்து, உணவுக்குப் பிறகு மூன்று வேளை உண்டு வந்தால் வாய் முதல் குதம் வரையிலுள்ள அனைத்து உறுப்புகளின் புண்களையும் ஆற்றும். தொடர்ந்து, ஒன்று முதல் இரண்டு மண்டலம் வரை உண்ணலாம். பிரண்டை உப்பை 230 மி.கி வரை எடுத்து நெய்யில் கலந்து உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து மாதவிடாய்க் கோளாறுகளும் குணமாகும். குறிப்பாக அதிகமான மாதவிடாய் சம்பந்தமா வயிற்றுவலி இந்த மருந்தில் அற்புதமாக குணமாகிறது.

பிரண்டை உப்பைப் பாலில் கலந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நுரைத்த பேதி, சூட்டுக்கழிச்சல், பச்சைக்கழிச்சல் போன்ற பிறளி நோய்கள் குணமாகும்.

இதே அளவில் எடுத்து ஜாதிக்காய் சூரணத்துடன் கலந்து உண்டுவந்தால் நரம்புத் தளர்ச்சி, தாது பலவீனம் நீங்கி உடல் வலிமையடையும். பிரண்டையைக் கையாளும்போது கைகளில் அரிப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க, கையில் சிறிது விளக்கெண்ணெயைப் பூசிக்கொள்ள வேண்டும். இவ்வாறாகப் பிரண்டையைச் சேகரித்துப் பயன்படுத்த இயலாதவர்கள் ‘ஹஜ்ஜோடு’ (HAJJOD) என்ற பெயரில் பிரண்டைப்பொடி மருந்துக் குமிழ்களில் அடைத்து, கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி வேளைக்கு இரண்டு மாத்திரைகள் வீதம் மூன்று வேளை தொடர்ந்து உண்டுவந்தால், பிரண்டையினால் தீரக்கூடிய அனைத்து நோய்களும் தீரும்.

உருட்டுப்பிரண்டை
உருட்டுப்பிரண்டை

புளிநரளை (அ) புளிப்பிரண்டை

மூன்று மூன்று இலைகளாகக் கொடி வீசிப் படரும் புளிநரளை தாவரத்தைத்தான் `புளிப்பிரண்டை’ என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இலைகளும் தண்டுகளும் நன்கு சதைப்பற்றுடன் காணப்படும் இந்தத் தாவரத்தின் கிழங்குகளைத்தான் மருத்துவத்தில் பயன்படுத்துகிறோம். இந்தக் கொடியில் சிவப்பு நிறப் பழங்கள் இருக்கும்போது தோண்டினால் கிழங்குகள் கிடைக்கும்.

மருள்
மருள்

இரண்டு முதல் மூன்றடி நீளமுள்ள கிழங்குகளையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். இந்தக் கிழங்குகளைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நிழலில் காயவைத்து, பொடி செய்து ஒரு மெல்லிய சீலைத்துணியில் சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். தனியாகவோ, லேகியமாகவோ கிண்டி சாப்பிட்டுவர ரத்தமூலம், மூலக்கடுப்பு ஆகியவை குணமாகும். நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் கருணைக்கிழங்கு லேகியத்தில் புளிநரளைக்கிழங்குப் பொடியும் சேர்க்கப்படுகிறது.

மருள்

கிராமப் பகுதிகளில் இதை ‘மடல்’ என்று அழைப்பார்கள். வறண்ட நிலங்களில் மரங்களின் அடியில் குறிப்பாக, பனை மரங்களின் அடியில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். இதில் `சப்பை’, `உருண்டை’ எனப் பல்வேறு வகைகள் உள்ளன. இதன் தண்டை லேசாக அனலில் வாட்டிப் பிழிந்த சாற்றை ஒன்று அல்லது இரண்டு துளி காதுகளில் விட்டுவந்தால் காதுவலி, காதிலிருந்து சீழ் வடிதல் ஆகியவை குணமாகும்.

நல்மருந்து 2.0 - எலும்புகளை வலுவாக்கும் எளிதான பிரண்டை!

இதன் கிழங்கும் மூலநோய்க்கான லேகியங்களில் சேர்கிறது. இப்படித் தனித்தனியாக மூலிகைகளைச் சேகரித்துப் பயன்படுத்துவதைவிட மருள், கைவேளை முதலான 18 முதல் 21 வகை மூலிகைச் சாறுகளைச் சேர்த்துச் செய்யப்படும் காயத்திருமேனி தைலத்தைக் காதுகளில் விட்டும், தலைக்குத் தேய்த்துக் குளித்தும்வர காதுநோய்கள், ஆரம்பநிலை காது கேளாமை குணமாகும்.

பாலைத் தாவரங்கள் அடுத்த இதழிலும் தொடரும்.