மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து 2.0 - இதயத்தை வலுவாக்கும் தாமரை! - ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை!

செந்தாமரை
பிரீமியம் ஸ்டோரி
News
செந்தாமரை

மருத்துவம் 22 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

செந்தாமரை இதய வலிமைக்கும் வெண்தாமரை மூளை வலிமைக்கும் நல்லது. தாமரை இலையில் உணவு உண்பதைத் தவிர்ப்பது நலம்.

தாமரை... இது இரு நீர்வாழ்த் தாவரமாகும். இந்தப் பூவின் அழகில் மயங்காத மனிதர்களுமில்லை;

செந்தாமரை
செந்தாமரை

இதைப் பற்றிப் பாடாத கவிஞர்களுமில்லை. அரவிந்தம், எல்லிமனை, சூரியநட்பு, பொன்மனை, விந்தம், புண்டரீகம், பதுமம், கமலம், நளினம், முளரி, முண்டகம், மாலுந்தி, சரோகம், கோகனம், இண்டை, கஞ்சம், அப்புசம், அம்போருகம், சலசம், வனசம், வாரிசம், சரசீருகம், பங்கேருகம், சரோருகம், பங்கசம். இவை அனைத்தும் தாமரையின் வேறு பெயர்கள் எனக் குணபாடம் நூலாசிரியர் க.ச.முருகேச முதலியார் குறிப்பிடுகிறார்.

வெண்தாமரை
வெண்தாமரை

‘வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு’ என்கிறார் வள்ளுவர். இது, நம் தமிழ்ச்சமுதாயம் தாவரங்களை எந்த அளவு கூர்ந்து கவனித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு. தாமரையில் வெள்ளை, சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் மலர்கள் மலரும். இவற்றில் வெள்ளை, சிவப்பு நிற மலர்களைப் பரவலாக ஆறு, குளம், தெப்பக்குளம் போன்ற நீர்நிலைகளில் காணலாம். இதில், மஞ்சள், நீல நிற பூக்களைப் பார்ப்பது மிகவும் அரிது. மனித உடலில் ராஜ உறுப்புகள் என அழைக்கப்படுபவை மூளையும் இதயமும் ஆகும். செந்தாமரை இதய வலிமைக்கும் வெண்தாமரை மூளை வலிமைக்கும் நல்லது. இதைக் குறிக்கும் விதமாக மூளையை வலிமைப்படுத்தி அறிவைப் பெருக்கும் வெண்தாமரை மலர்மேல் அறிவுக்கரசியான ‘கலைமகள்’ சரஸ்வதி அமர்ந்து இருப்பதையும், செல்வத்தைப் பெருக்கவும் இதயத்தை வலிமைப்படுத்தவும் செந்தாமரை மலர்மேல் ‘திருமகளா’ன லட்சுமி நின்று கொண்டிருப்பதாகப் படங்களில் வரையப்பட்டிருப்பதைக் காணலாம்.

தாமரையின் தண்டு, பூவிதழ், மகரந்தங்கள், பூத்தளமேடை, விதை, கிழங்கு என அனைத்துமே மிகுந்த மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை. தாமரைப் பூவிதழ்கள் 1 கிலோ, பன்னீர் ரோஜாப் பூவிதழ்கள் 100 கிராம் ஆகியவற்றை 6 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி ஒன்றரை லிட்டராக வற்ற வைக்க வேண்டும். பிறகு, ஆறவிட்டுக் கைகளால் நன்றாகப் பிசைந்து வடிகட்டி அதனுடன் 700 கிராம் சீனா கற்கண்டுப்பொடி கலந்து நன்றாகக் கலக்க வேண்டும். பிறகு, மீண்டும் அடுப்பிலேற்றி, தேன் பதம் வந்தவுடன் இறக்கி உடனடியாக வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும். இதுவே ‘தாமரைப்பூ மணப்பாகு’ ஆகும். இதைத் தினமும் மூன்று வேளை உணவுக்குப் பிறகு 2 தேக்கரண்டி (100 மி.லி) அளவு எடுத்து நன்கு ஆறவைத்த வெந்நீருடன் கலந்து குடித்து வர உடற்சூடு குறைவதுடன், உடலின் உள்ளுறுப்புப் புண்கள், வெள்ளைப்படுதல், ஒழுங்கற்ற மாதவிடாய் முதலியவையும் குணமாகும். அத்துடன் மன அமைதியும் கிடைக்கும். இம்மணப்பாகில் கற்கண்டு சேர்வதால் சர்க்கரை நோயாளிகள் இதை உட்கொள்ளக் கூடாது.

நல்மருந்து 2.0 - இதயத்தை வலுவாக்கும் தாமரை! - ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை!

தாமரைப்பூவை நன்றாக நிழலில் உலர்த்திப் பொடி செய்து, பசும்பாலில் கலந்து உண்டுவர உடற்சூடு தணியும். சர்க்கரை நோயில் ஏற்படும் உடல் எரிச்சல், கை, கால் காந்தல் குணமாகும். இதன் விதைப்பருப்பை 2 கிராம் எடுத்துப் பசும்பால் விட்டு அரைத்து, பாலில் கலந்து உண்டுவர, உடல் சூட்டைக் குறைத்து விந்தணுக்களைப் பெருக்கும். இப்பருப்பு தாதுவிருத்தி லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.

வெங்காயத்தாமரை எனப்படும் ஐகோர்னியா
வெங்காயத்தாமரை எனப்படும் ஐகோர்னியா

“சண்டளையுஞ் சண்டனையுந் தள்ளாமல ருண்ளுறையுல்

சண்டளையுஞ் சண்டளையுஞ் சார்”

- தேரையர் வெண்பா

‘தாமரைப்பூவின் மகரந்தப்பொடியுடன் சர்க்கரையும் தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில், கற்ப முறைப்படி பத்தியம் காத்து உண்டு வர ஆண்மையின்மை, ‘அலி’ என்கிற பேடித்தனம், காதுகேளாமை முதலிய நோய்கள் நீங்கும்’ என்பது மேற்கண்ட பாடல் வரியின் விளக்கம். இக்கருத்து ஆய்வுக்குரியது. 150 கிராம் உலர்த்திய தாமரைப்பூ இதழ்களுடன் ஒன்றரை லிட்டர் தண்ணீர் சேர்த்து ஓரிரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை, வாலையில் (தீநீர் காய்ச்சும் கருவி) வடித்து எடுத்துக்கொள்ளவும். இதற்குத் ‘தாமரைப்பூ தீநீர்’ என்று பெயர். இதை 30 மி.லி அளவு மூன்றுவேளை உணவுக்குப் பிறகு குடித்து வர இதயத்துக்கு வலுவைக் கொடுப்பதுடன் அதிக தாகம், உடற்சூட்டையும் குணமாக்கும்.

குளிர்தாமரை
குளிர்தாமரை

6 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ உலர்ந்த தாமரைப் பூவிதழ்களைப் போட்டு ஓரிரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அடுப்பிலேற்றி ஒன்றரை லிட்டராக வற்ற வைக்க வேண்டும். ஆறிய பிறகு நன்றாகப் பிசைந்து வடிகட்டி, அதனுடன் ஒன்றரை லிட்டர் சர்க்கரை சேர்த்து மீண்டும் அடுப்பிலேற்றி தேன் பதத்தில் இறக்கி, உடனே வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி வைத்துக்கொள்ளவும். இதற்கு ‘தாமரைப்பூ சர்பத்’ என்று பெயர். இதை 10 மி.லி அளவு மூன்றுவேளை உணவுக்குப் பிறகு, ஆறவைத்த வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உடற்சூடு தணியும். ரத்தக்கடுப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், கண்ணெரிச்சல் ஆகியவையும் குணமாகும். கோடையைக் குளிர்விக்கும் குளிர்பானமாகவும் இதைப்பயன்படுத்திப் பலன் பெறலாம். மேல்தோல் சீவப்பட்ட தாமரைக்கிழங்கு 2 கிராம் எடுத்து, பசும்பால் விட்டு அரைத்து, பாலில் கலந்து 20 நாள்கள் தொடர்ந்து உண்டு வந்தால் நீடித்த நீர்க்கடுப்பு, மேகச்சூடு முதலியவை மாறுவதுடன் முகம் மற்றும் உடல் அழகாகும். இக்கிழங்கையே பசும்பால் விட்டு அரைத்து நல்லெண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, கண்ணெரிச்சல், கண்களில் நீர்வடிதல், கண்கள் சிவந்து இருத்தல், கண் அழுத்தம் முதலான பல்வேறு கண்நோய்களைக் குணமாக்கும். தாமரைப் பூவிதழ் சேர்த்துச் செய்யப்படும் ‘குணஜோதி லேகியம்’, இதயத்தசைகளை வலுப்படுத்தி, மாரடைப்பு வராமல் தடுக்கும் தன்மையுடையது.

நல்மருந்து 2.0 - இதயத்தை வலுவாக்கும் தாமரை! - ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை!

பெண்கள் கர்ப்பக்காலத்தின் 10 மாதங்களிலும் வயிற்று வலி ஏற்பட்டுக் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும், அதிலும் முதல் மூன்று மாதங்கள் தாமரைப்பூவைப் பக்குவம் செய்து உட்கொள்ளச் சில மருத்துவமுறைகள் கூறப்பட்டுள்ளன. முதல் மாதத்தில் கர்ப்பிணிகளுக்குச் சிறிது வலி ஏற்பட்டாலே தாமரைப்பூ, சந்தனம், விலாமிச்சைவேர் ஆகியவற்றைத் தண்ணீர் விட்டு அரைத்துக் கொடுக்க வலி தீர்ந்து, கர்ப்பம் தங்கும். இரண்டாம் மாதத்தில் வலி ஏற்பட்டால் தாமரைப்பூவும் தக்கோலமும் (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கடைச்சரக்கு) அரைத்துப் பசும்பால் கலந்து குடிக்க வலி நிற்கும். மூன்றாம் மாதத்தில் வயிறு வலித்தால் வெண்தாமரைப் பூவும் செங்கழுநீர்க்கிழங்கும் அரைத்துப் பாலில் கொடுத்தால் வலி நீங்கும். தாமரைப்பூ மற்றும் தண்டுகளில் மிகவும் அதிகமான போலிக் அமிலச்சத்து இருப்பதாகத் தற்கால ஆய்வுகள் கூறுகின்றன. இதனாலேயே இளங்கருவை வளர்ப்பதற்குத் தாமரை கலந்த மருந்துகளை நம் முன்னோர்கள் வழங்கியுள்ளனர். தாமரை இலைகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவ்விலையில் உணவு சாப்பிடுவதால் சளி உண்டாக வாய்ப்புள்ளது என நூல்கள் கூறுவதால், தாமரை இலையில் உணவு உண்பதைத் தவிர்ப்பது நலம். தாமரை இலைச்சாறு சங்குபற்பம் செய்யப் பயன்படுகிறது.

குளிர்தாமரை

குழித்தாமரை, குளிர்தாமரை, அந்தரத்தாமரை, ஆகாயத்தாமரை எனப் பல்வேறு வட்டார வழக்குப் பெயர்களில் வழங்கப்படும் நீர்த்தாவரமாகும். இது தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்து காணப்படும். ஆனால், தற்போது ‘அமலைச்செடிகள்’, ‘வெங்காயத்தாமரை’ என்று அழைக்கப்படும் ஊதா நிறத்தில் பூப்பூத்து ஆறு, குளங்களில் ஆக்கிரமித்து, தண்ணீரை ஆவியாக்கி வற்ற செய்யும் நீர்த்தாவரம் வேறு. வெங்காயத்தாமரையையும், ஆகாயத்தாமரையையும் ஒன்று என மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். இவ்விரண்டுக்குமுள்ள வேறுபாடுகளைப் படத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

வெங்காயத்தாமரை எனப்படும் ‘ஐகோர்னியா’ வகைத் தாமரை, நமது நீர்நிலைகளை அழிப்பதற்காக, ஆங்கிலேய ஆட்சியாளர்களால் இரண்டாம் உலகப்போரின்போது, தென் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டுப் பரப்பப்பட்ட தாவரமாகும்.

இதன் பரவலால் பல நீர்நிலைகள் அழிந்தன என்பது கடந்த 50 ஆண்டுக்கால வரலாறு. மருத்துவ குணமிக்கக் குளிர்தாமரை மூலநோயைக் குணமாக்குவதில் சிறப்பு வாய்ந்தது.

குளிர் தாமரையைச் சேகரிக்கும்போது முதலில் அதன் கறுப்பு நிற வேர்களை அடியோடு நீக்க வேண்டும். பின்னர், நன்கு கழுவிவிட்டு அதை அப்படியே அரைத்து, லேசாக விளக்கெண்ணெயில் வதக்கி மூலமுளைக்கட்டி மற்றும் அடித்தள்ளிய மூலம்மீதும் வைத்துக் கோவணம் பாய்ச்சிக்கட்டி உறங்கினால் குணமாகும். வாய்க்குறுகிய மண்பாத்திரத்தில் குளிர்தாமரை இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அடுப்பைவிட்டு இறக்கி, அந்த ஆவியானது மூலத்தில் படுமாறும் 10 நிமிடங்கள் செய்துவர மூலமுளைக்கட்டிகள் கரையும். குளிர் தாமரைச்சாறு 4 பங்குடன், ஒரு பங்கு நல்லெண்ணெய் சேர்த்துத் தைலமாகக் காய்ச்சி, தகுந்த பதத்தில் இறக்கும் முன்னர், பூலாங்கிழங்கு, சந்தனச்சிறாய், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, வெட்டிவேர் ஆகியவை கலந்த பொடியைப் போட்டு இறக்கி ஆறவிடவும். இத்தைலத்தை வாரத்துக்கு 2 அல்லது 3 முறை தலைக்குத் தேய்த்து இளம் வெந்நீரில் குளித்து வர மூலச்சூடு, மூலக்கடுப்பு தணியும்.

ஓரிலைத்தாமரை
ஓரிலைத்தாமரை

ஓரிதழ் தாமரை

இதற்கும் தாமரைக்கும் எந்தவித தொடர்புமில்லை. மழைக்காலங்களில் தரிசு நிலங்களில் தன்னிச்சையாக வளரும் சிறு செடியினம். இதன் பூக்கள், செந்தாமரைப் பூவின் நிறத்தை ஒத்திருப்பதாலும், ஒவ்வொரு இதழாகக் காணப்படுவதாலும், ‘ஓரிதழ் தாமரை’ என்று பெயரானது. இதை அப்படியே வேருடன் பிடுங்கி நன்கு கழுவி அரைத்து, நெல்லிக்காயளவு காலையில் வெறும் வயிற்றில் உண்டு, சிறிது பசும்பால் குடித்துவர ஆண்மை பெருகும். வாலிப வயோதிகமும் குணமாகும். இதை உண்டுவரும் தம்பதியரில், பெண்கள் தங்கள் கணவர்களை ரத்தினமாகக் கருதி மதிப்பு கொடுப்பதால், இம்மூலிகைக்கு ‘புருசரத்தினம்’ என்ற பெயரும் உண்டு. இதன் மருத்துவகுணம் கருதி பல்வேறு ஆண்மைப் பெருக்கி லேகியங்களில் சேர்க்கப்படுகிறது. ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி, யானை நெருஞ்சில் ஆகிய மூன்றையும் அரைத்துப் பசும்பாலில் கலக்கி உண்டுவரத் தீராத வெள்ளைப்படுதல், கனவில் விந்துவெளியாதல், நாள்பட்ட சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.

ஓரிதழ் தாமரை
ஓரிதழ் தாமரை

ஓரிலைத்தாமரை

மிகுந்த நீர்வளமிக்கப் பகுதிகளில் வளரும் ஒரு சிறிய தாவரயினமாகும். இதன் இலைகள் தாமரை இலை வடிவத்தில் இருப்பதாலும், ஒவ்வொரு இலையாகக் காணப்படுவதாலும் ‘ஓரிலைத்தாமரை’ எனப்படுகிறது. ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்நிலைகளின் கரைகளில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஏராளமாகக் காணப்பட்டது. மதுராந்தகம் ஏரிக்கரையில் அதிகமாகக் காணப்பட்ட இத்தாவரம், பருவகால மாறுபாடுகளால் மிகவும் குறைந்துவிட்டது. இதன் கிழங்கு மற்றும் இலைச்சாறு கண்நோய்களைக் குணமாக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகிறது.

கல் தாமரை
கல் தாமரை

கல் தாமரை

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்காடுகளில் எப்போதும் தண்ணீர் கசிவுள்ள பாறைகளில் காணப்படும் ஓர் அரிய இனமாகும். கல்லின் மேல் காணப்படுவதாலும் இதன் இலை தாமரை வடிவில் காணப்படுவதாலும் ‘கல் தாமரை’ என அழைக்கப்படுகிறது. செம்புச்சத்து அதிகமாகக் காணப்படும் இத்தாவரம், கண்நோய்களைக் குணமாக்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்குத் தகுந்த சான்றாதாரங்கள் இல்லை. ஆனாலும், மூலிகை விரும்பிகளின் பேராசையால் இது வேகமாக அழிந்துவருகிறது. இதேபோல, கால்வலியைக் குணமாக்கும் என்ற நம்பிக்கையால், கொல்லிமலைப் பகுதியில் ‘முடவாட்டுக்கால்’ என்ற அரிய வகைத் தாவரமும், அங்குள்ள வணிகர்களால் சூப் தயாரிப்பதற்காகச் சேகரிக்கப்படுகிறது. அதனால், அத்தாவரமும் வேகமாக அழிந்து வருகிறது.

அடுத்த இதழில்... அல்லி முதலான பிற நீர்நிலைத் தாவரங்கள் குறித்துப் பார்ப்போம்.