
மருத்துவம் 15 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
கோவை தன்னிச்சையாக வேலிகளில் படர்ந்து, மிக வேகமாகவும் உயரமாகவும் வளரும் ஒரு கொடியினம். வெள்ளை நிறப் பூக்களையும், பச்சை நிறக் காய்களையும், சிவப்பு நிறக் கனிகளையும் உடையது. இதில் வரிக்கோவை, செங்கோவை, கருங்கோவை, கொல்லங்கோவை, அப்பக்கோவை, பேய்க்கோவை... எனப் பல வகைகள் உள்ளன. கோவைப் பழத்தின் சிவப்பு நிறத்தை பச்சைக் கிளியின் மூக்குக்கும், பெண்களின் உதடுக்கும் ஒப்பிட்டுப் பாடாத புலவர்களே இல்லை. கோவை இலைச் சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சி சொறி, சிரங்கு, கரப்பான் புண்கள் மீது பூசிவர அவை விரைவில் ஆறும்.

இதையே தலைக்கும் தேய்த்துக் குளித்துவர தலையில் ஏற்படும் பொடுகு முதலியவை குணமாகும்.
இந்தத் தைலத்தை ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், புண்கள் மீதும் பூசிவர விரைவில் குணம் கிடைக்கும். கோவை இலைகளைச் சிறிது நெய் சேர்த்து அரைத்து, அம்மைநோய்ப் புண்கள்மீது பூசிவர அவை விரைவில் மாறும். கோவை இலைச் சாற்றை மேலுக்குப் பூசிவர சர்க்கரைநோயில் ஏற்படும் கை, கால் எரிச்சல் குறையும். கோவை இலைச் சாறு சேர்த்து காயத்திருமேனித் தைலம், மேக சஞ்சீவி எண்ணெய் முதலியவை தயாரிக்கப்படுகின்றன.
கோவைக்காயைப் பச்சையாக மென்று தின்றுவர நாக்கு, உதடு ஆகிய இடங்களில் உள்ள புண்கள் ஆறும். இந்தக் காயை வட்டவட்டமாக நறுக்கி, உப்பிட்ட மோரை இதன்மீது தெளிக்க வேண்டும். இதை வெயிலில் உலரவைத்து, வற்றலாக்கி, பொரித்துச் சாப்பிட்டால் உணவுக்குச் சுவையைக் கூட்டும். தினந்தோறும் இரண்டு கோவைக்காயைப் பச்சையாகத் தின்றுவர சர்க்கரைநோய் வருவது தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இன்றும் மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது.
கோவைக்காயைப் பொரியல் அல்லது கூட்டுக்கறியாகச் செய்து சாப்பிட்டுவர சர்க்கரையின் அளவு குறையும். கோவைக்கொடி விரைவில் பட்டுப்போனாலும், பூமிக்கு அடியில் இதன் கிழங்கு அப்படியே இருக்கும். இந்தக் கிழங்கை எடுத்து அதன் மேல்தோலைச் சீவிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதை உலர்த்தி, பொடியாக்கி, ஒரு மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவும். இந்தக் கிழங்குப்பொடி மிகவும் கசப்பாக இருக்கும். இதனுடன் நான்கில் ஒரு பங்கு விபூதி சேர்த்து ஒரு வேளைக்கு மூன்று முறை உண்டுவர நாள்பட்ட வெள்ளைப்படுதல் குணமாகும். இந்தக் கிழங்கை இடித்து, சாறெடுத்துக் குடித்துவந்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும்.
ஆகாச கருடன் வற்றல் எல்லா வீடுகளிலும் இருக்கவேண்டிய ஒன்று. அப்பக்கோவைக் கிழங்கைச் சமைத்து உண்ணும் பழக்கம் இன்றைக்கும் ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களில் இருக்கிறது.
‘இனிப்புள்ள கற்கோவை சோபையையும்
வரிக்கோவை விஷத்தையும்
அப்பக்கோவை நீரடைப்பையும்
செங்கோவை மதுநீரையும்
கருங்கோவை மேகவிரணத்தையும்
குணமாக்கும்’
என்ற வரிகள் கோவைக்காய்களின் மருத்துவ குணங்களை விளக்குகின்றன.
அப்பக்கோவைக் கிழங்கைச் சமைத்து உண்ணும் பழக்கம் இன்றைக்கும் ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களில் இருக்கிறது. இதனால் தடைப்பட்ட மலம், சிறுநீர், வாயு ஆகியவை நன்றாகப் பிரியும். (ஐவிரலிக் கோவையின் இலைகள் மனிதனின் ஐந்து விரல்கள்போலவே காணப்படும். அதனால்தான் அந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.

பச்சை நிறத்திலிருக்கும் இந்தக் காய்கள் பழுத்து சிவப்பு நிறமாக மாறி, நாமம் போட்டதுபோலக் காணப்படும். அதனால் ‘நாமக்கோவை’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்தப் பழத்தைப் பிதுக்கினால் விதைகள் லிங்க வடிவத்தில் காணப்படுவதால், ‘லிங்கக் கோவை’ என்ற பெயரும் உண்டு.

இதன் இலை, கொடியைப் பொடி செய்து உண்டுவர மலம் இளகிக் கழியும். `கொல்லங்கோவை’ என்பது பாகல் இலைபோலக் காணப்படும். மஞ்சள் நிறத்தில் பூப்பூத்து, பாகல்போலக் காய்த்து, பழுத்து, சிவப்பு நிற விதை சதைப்பற்றுடன் காணப்படும். இதன் கொடி அதிகமாகப் பயன்படுவதில்லை. இதன் கிழங்கு மட்டுமே அதிகம் பயன்படுகிறது. இந்தக் கிழங்கு கருடன் வடிவத்தில் காணப்படுவதாலும், பாம்பு, பூச்சி கடிகளுக்கு மருந்தாக வழங்கப்படுவதாலும் ‘ஆகாச கருடன்’ என்ற பெயர் பெற்றது.இந்தக் கிழங்கை மண்ணிலிருந்து தோண்டி எடுத்துத் தொங்கவிட்டாலும், மீண்டும் நன்கு கொடி வீசி வளரும் தன்மையுடையது. மிகவும் சிறியதாக உருளைக்கிழங்கு முதல் பெரிய அளவில் மூன்று முதல் ஐந்து கிலோ எடையுள்ள கிழங்குகள் காணப்படுகின்றன. இந்தக் கிழங்குகளை வட்ட வடிவமாக நறுக்கி, நன்கு காயப்போட்டால் வெண்மை நிறத்துடன் காணப்படும்.
இது எல்லா நாட்டுமருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இந்தக் கிழங்கு வற்றல் எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒன்று. வண்டு, தேள், நட்டுவாக்காலி, பாம்புகள் (நல்ல பாம்பு தவிர) ஆகியவை கடித்தால் இந்தக் கிழங்கைப் பொடி செய்து, கொட்டைப் பாக்கு அளவு தண்ணீரில் கலந்து பருகக் கொடுக்க வேண்டும். இத்துடன் தண்ணீர்விட்டு அரைத்து, கடித்த இடத்தில் பூசினால் வலி குறையும்.

இதன் கிழங்குடன் சிறிது சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெயில் வதக்கி, முழங்கால் மூட்டு வீக்கங்களுக்குப் பற்றுபோட்டு வந்தால் வலியும் வீக்கமும் குறையும். விஷக்கடி என நம்பப்படும் நாள்பட்ட அனைத்து தோல்நோய்களுக்காகத் தயாரிக்கப்படும் சித்த மருந்துகளான சிவன் வேம்புச் சூரணம், சிவன் வேம்புக் குழித் தைலம், கருடன் கிழங்கெண்ணெய் ஆகிய பெரு மருந்துகளில் இது அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இதன் கிழங்குப்பொடியை ஒன்று முதல் இரண்டு கிராம் எடுத்து உண்டு வந்தால், நாள்பட்ட வெண்புள்ளி மாறும்.
பேய்க்கோவை
மிகப்பெரிய வடிவிலான இலைகளையும், ஆப்பிள் நிறத்திலான பெரிய கனிகளையும் உடைய கொடியினம். இதன் பழத்தை நெடுக்குவாக்கில் அரிந்து பார்த்தால் மனிதர்களின் நாசிபோலவே காணப்படும். மூக்கு, காது நோய்களுக்கு இது மிகவும் சிறந்த மருந்து. இந்தப் பழங்களை இடித்து, சாறு பிழிந்து ,அத்துடன் பிழிந்த தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாகக் காய்ச்ச வேண்டும். அதைக் காதுகளில் விட்டுவந்தால் காதுகளில் ஏற்பட்டுள்ள உள் புண்கள் குணமாகும். ஒவ்வாமையால் ஏற்படும் மூக்கடைப்புக்கு இது சிறந்த தீர்வு தரும்.
இதன் பழச்சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, துளியாக நாசிகளில் காலை, மாலை விட்டுவர மூக்கு தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். இதே தைலத்தை வாரம் இரு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவருவது இன்னும் நல்லது. தூக்கத்தின்போது அதிகமாகக் குறட்டை விடுபவர்கள் தொடர்ந்து நாசியில் விட்டுவந்தால் குறட்டையொலி குறையும். மொத்தத்தில் ‘மூக்கின் காவலன்’ என்றே இந்தக் கோவையைச் சொல்லலாம். இதன் பழங்கள் பார்ப்பதற்கு அழகாகச் சிவப்பாக இருக்கிறதே என உண்டுவிடக் கூடாது. அப்படி உண்டால் மிகக்கொடிய வாந்தி ஏற்படும்.
- அடுத்த இதழில்...
முள்வேலியாகும் இண்டு, ஈங்கை, இசங்கு, கழற்சி குறித்துப் பார்ப்போம்.
மூலிகைப் பெயர் தாவரவியல் பெயர்
கோவை - Coccinia grandis
ஐவிரலிக்கோவை, லிங்கக்கோவை, நாமக்கோவை - Diplocyclos palmatus
கொல்லங்கோவை, ஆகாசகருடன் - Corallocarpus epigaeus
அப்பக்கோவை, பனங்கோவை - Kedrostis rostrata
பேய்க்கோவை, பீநிசக்குறட்டை, செளரிப்பழம் - Trichosanthes tricuspidata