நல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை!

மருத்துவம் 19 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
‘பாலை’ என்னும் அடைமொழியுடன் முடியும் பலவகைத் தாவரங்கள், பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் மிக்கவையாக இருக்கின்றன.
நஞ்சறுப்பான்
எல்லாவிதமான நஞ்சுகளையும் முறிக்கும் தன்மை இருப்பதால் இந்தக் கொடிக்கு `நஞ்சறுப்பான்’ என்று பெயர். நாய்ப்பாலை, கீரிப்பாலை என்ற பெயர்களும் இதற்கு உண்டு. நஞ்சுண்டவர்களுக்கும், விஷக்கடிகளால் நஞ்சேறியவர்களுக்கும் இந்தக் கொடியை அப்படியே அரைத்து ஓர் எலுமிச்சை அளவு கொடுத்தால் நன்கு வாந்தியாகி, அனைத்து நஞ்சுகளும் வெளியேறிவிடும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்து. இதன் பழைய தாவரவியல் பெயரே ‘Tylaphora Asthmatica’ என்பதுதான். நஞ்சறுப்பான் இலைகளை மட்டும் பறித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் காயப்போட வேண்டும். பிறகு, அவற்றைப் பொடி செய்து, ஒரு மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். நாள்பட்ட ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த மருந்துப் பொடியை 250 மி.கி முதல் 500 மி.கி வரை கொடுக்கலாம். இதை வெந்நீரில் கலந்து உண்டு வந்தால், அதிகப்படியான வியர்வை ஏற்பட்டு, ஆஸ்துமா நோயின் தீவிரம் படிப்படியாகக் குறையும்.

இதே பொடியைக் குழந்தைகளுக்கு 130 மி.கி அளவு தேனில் கலந்து கொடுத்துவந்தால் நாள்பட்ட சளித் தொல்லைகள், இருமல் ஆகியவை குணமாகும். இப்போதும் ‘இடு மருந்து’ என்று ஒரு பழக்கம் சேலம், தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களின் உட்பகுதியில் வழக்கத்தில் இருக்கிறது.
‘வசிய மருந்து’ எனச் சொல்லப்படுவதும் இந்த மருந்தைத்தான். எதிராளியின் உணவுடன் சில பாடாண நஞ்சுகளைக் (Arsenic Poisons) கலந்து கொடுப்பார்கள்.
இதன் அறிகுறிகள் உடனே தெரியாது. நாள்பட்ட இருமல், வயிற்றுவலி, நாளுக்கு நாள் உடல் மெலிந்துகொண்டே போதல் முதலிய குறி குணங்களைக் காட்டி, இறுதியில் இறப்புகூட நேரிடும். இது போன்ற வசிய மருந்துக்கு ஆட்பட்டவர்களுக்கு இந்தக் கொடியின் உலர்த்திய பொடியுடன், சம எடையளவு மிளகுப்பொடியும் கலந்து காலை, மாலை 5 கிராம் அளவு மோருடன் கலந்து கொடுக்க வேண்டும். அத்துடன் உப்பில்லாப் பத்தியம் வைத்து உணவு உட்கொண்டு வந்தால், இந்தப் பாடாண நஞ்சு விரைவில் முறியும். விஷக்கடிகளால் ஏற்பட்ட நாள்பட்ட ஊறல் முதலிய நோய்களுக்கும் இந்தக் கொடியின் பொடியை 500 மி.கி (அரை கிராம்) அளவு தேனில் கலந்து உண்டு வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.
கடற்பாலையில் ஒரே இலையின் இரு பக்கங்களுக்கும் இரண்டு விதமான குணங்கள் உண்டு.

ஆஸ்துமாவை குணமாக்கும் எல்லா சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளிலும் நஞ்சறுப்பான் சேர்க்கப்படுகிறது. வட இந்தியாவில், குறிப்பாக ஆக்ரா பகுதியில் நஞ்சறுப்பான் இலைகளை நமது ஊர்களில் வெற்றிலைக் கட்டுகளை விற்பதுபோல விற்கிறார்கள். ஆஸ்துமா நோயாளிகள் இவற்றை வாங்கிச் சென்று இரண்டு இலைகளுடன் இரண்டு மிளகும் சேர்த்து உண்கிறார்கள். நஞ்சறுப்பான் கொடியின் ஆஸ்துமாவை குணமாக்கும் மருத்துவப் பயன்கள், நவீன மருந்தறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. பல்வேறு விஷக்கடிகளால் ஏற்படும் தோல்நோய்களைக் குணமாக்கும் ‘விஷாமிர்த சூரணம்’ என்னும் மருந்து பற்றி கண்ணுசாமி பிள்ளை பரம்பரை வைத்திய நூலில் கூறப்பட்டுள்ளது. இதிலும், உலர்ந்த நஞ்சறுப்பான் கொடி சூரணம் சேர்கிறது. இதனால், நாய், பூனை, எலி, பெருச்சாளி, பூரான், வண்டு, பாம்பு முதலியவற்றின் கடி அல்லது கொட்டு முதலியவற்றால் ரத்தத்தில் விஷமேறி உண்டாகும் அரிப்பு, தடிப்பு, வீக்கம், வரி, மூர்க்கை முதலியவை குணமாகின்றன.

ஊசிப் பாலை
முள்வேலிகளில் குறிப்பாக, எருக்குழிகளைச் சுற்றியுள்ள இடங்களில் முள் தாவரங்களைப் பற்றிப் படர்ந்துகிடக்கும் மிக மெல்லிய கொடியினம் ஊசிப்பாலை. இதன் இலைகள் அகலத்தில் குறுகி, நீண்டு காணப்படும். இதன் செந்நிறப் பூக்கள் நன்கு அகன்று விரிந்து காணப்படும். இந்தக் கொடியை ஒடித்தால் நிறைய பால் வடியும். இந்தக் கொடி முழுவதுமே மருத்துவப் பயனுடையது. இந்தக் கொடியைக் கைப்பிடியளவு பறித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பிறகு வெந்நீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்கச் செய்து, ஆறவிட்டு வாய் கொப்புளித்துவந்தால், தொண்டை, வாய்ப் புண்கள் குணமாகும். இதன் பச்சை வேர் 20 கிராம் எடுத்து நீர்விட்டு நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். இதை நன்கு பஞ்சுபோல் இடித்து, பழகிய மண் பாத்திரத்தில் (தொடர்ந்து சமையலுக்குப் பயன்படுத்தி வந்த மண் பாத்திரம்) போட்டு அதனுடன் 650 மி.லி தண்ணீர் சேர்க்க வேண்டும். பிறகு, அடுப்பிலேற்றி 100 மி.லியாக வற்றவைத்து, அப்படியே தணலில் போட வேண்டும். இதை 30 மி.லி அளவில் தினமும் மூன்று வேளை புளி, உப்பில்லாத பத்தியமாகக் குடித்துவர வேண்டும். மூன்று முதல் ஐந்து நாள்கள் குடித்து வந்தால் எல்லாவிதமான காமாலையும் தீரும்.

கடற்பாலை

மலையோர விவசாய நிலங்களில் தன்னிச்சையாக வளரும் கொடி இது. சமுத்திரசோகி, சமுத்திரசோவி, சமுத்திரப்பச்சை என இதற்குப் பல பெயர்கள் உண்டு. சிறிய கொடியாக இருக்கும்போது இலைகள் நீள்வட்ட வடிவிலும், பெரிதானவுடன் இதய வடிவில் பெரிய வட்டமாகவும் காணப்படும். இதன் இலைகளின் மேற்பகுதி பச்சை நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை, நீல நிறங்களில் காணப்படும். இலைகளின் கீழ்ப்பாகத்துக்கு வெப்ப குணம் உள்ளது. எனவே, முதிராத கட்டிகள்மீது இந்த இலைகளின் அடிப்பாகத்தை வைத்துக் கட்டி வைத்தால், அவை பழுத்து உடையும். இலைகளின் மேல்பாகத்துக்குக் குளிர்ச்சியான குணமும், புண்களை ஆற்றும் குணமும் உண்டு. உடைந்த கட்டிகள்மீது இலைகளின் மேல்பாகத்தை வைத்துக் கட்டினால் புண்கள் விரைவில் ஆறிவிடும். ஒரே இலையின் இரு பக்கங்களுக்கும் இரண்டு விதமான குணங்கள் இருப்பதைக் கண்டு, அதைப் பயன்படுத்தத் தெரிந்த நம் முன்னோர்களின் அறிவுகூர்மையும் பட்டறிவும் வியக்க வைக்கின்றன.

கடற்பாலை வேர்ப்பாவனைச் சூரணம்
கடற்பாலையின் வேர்களைச் சேகரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டான் கிழங்குச்சாறு ஊற்றி வெயிலில் வைக்க வேண்டும். சாறு வற்ற வற்ற தண்ணீர்விட்டான் கிழங்குச்சற்றை ஊற்றிவர வேண்டும். எட்டு நாள்களுக்குப் பிறகு சாறு ஊற்றுவதை நிறுத்திவிட்டு, நன்கு காய்ந்த பிறகு இடித்துச் சூரணம் செய்து, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு முதல் மூன்று கிராம் வரை தினந்தோறும் காலை, இரவு உணவுக்குப் பிறகு பசு வெண்ணெயில் கலந்து கொடுத்துவந்தால், நீண்ட நாள்களாக ஆறாத புண்கள் குணமாகும். நரம்புகளுக்கு பலத்தையும், மூளைக்குச் சுறுசுறுப்பையும் கொடுக்கும்.

அடுத்த இதழில் கள்ளி வகைகள் குறித்துப் பார்ப்போம்.