நல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி! - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி!

மருத்துவம் 20 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
தமிழகத்தில் பல வகையான கள்ளி வகைகள் காணப்பட்டாலும் இலைக்கள்ளி, மான்செவிக் கள்ளி கொம்புக்கள்ளி, கொடிக்கள்ளி, திருகுக்கள்ளி, சதுரக்கள்ளி ஆகியவை மட்டுமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இனங்கள்.
தமிழகமெங்கும் காணக் கிடைக்கும் சப்பாத்திக்கள்ளி, வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் நமது நாட்டில் பரவிய இனம். சப்பாத்திபோல முக்கோணம், முக்கோணமாகக் காணப்படுவதால் நமது மக்கள் இதற்கு, `சப்பாத்திக்கள்ளி’ என ரசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் பூக்கள் அதிகமாகக் காணப்படும். இதன் பழங்களை உண்ணலாம். வெள்ளையர்கள் வாழ்ந்த மாளிகைகளில் தூண் தூணாக ஒரு கள்ளி இனம் காணப்படும். இது சிறந்த வேலிப் பயிர். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில், தாமரைப் பூப்போலப் பூக்கும். இதுவும் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட தாவரம். இதற்கு இதுவரை எந்த மருத்துவப் பயனும் அறியப்படவில்லை. `சப்பாத்திக்கள்ளியை அப்படியே அரைத்து, முள் தைத்த இடங்களில் வைத்துக் கட்டிவந்தால் தோலுக்குள் புகுந்த முள் வெளியே வந்துவிடும்’ என்று பாமர மக்கள் நம்புகிறார்கள்.

சதுரக்கள்ளி
திருகுக்கள்ளியில் எங்காவது நான்கு பட்டை வந்திருந்தால் அதையே சதுரக்கள்ளி என்று சித்த மருத்துவர்கள் நம்பி வந்தனர். ஆனால், சதுரக்கள்ளி என்பது பாபநாசம் இருக்கும் பொதிகைமலையிலுள்ள சொரிமுத்தையனார் கோயிலின் அருகே இருக்கிறது. அங்கு ஓடும் தாமிரபரணி ஆற்றங்கரையில், பாறைகளின் மேற்பரப்பிலுள்ள சிறிதளவு மண்ணில் நான்கு பாகங்களை உடைய சதுரக்கள்ளி வளர்ந்து காணப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாகக் கோயில் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இந்தப் பாறையிலுள்ள இந்தக் கள்ளிச் செடிகளை, தேவையில்லாமல் வெட்டிப் போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். கடந்த 20 ஆண்டுகளாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் இயங்கிவரும், ‘பொதிகைமலை மக்கள் சார் இயற்கைவழி பாதுகாப்பு மையம்’ எடுத்த பெரு முயற்சியால், இந்தத் தாவர இனத்தை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். `இந்தத் தாவரம் உலகிலேயே இங்கு மட்டும்தான் தற்போது காணப்படுகிறது’ என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
பாறைச் சரிவில் ஐந்து முதல் 10 செ.மீ உயரம்கூட மண் இல்லாத இடத்தில் இந்தத் தாவரம் ஆறு முதல் எட்டடி உயரம்வரை வளர்வது இயற்கையின் பேரதிசயம். இதுபோல பொதிகை மலையில் மட்டுமே 140-க்கும் மேற்பட்ட தாவரங்கள் இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தனை சிறப்புமிக்க சதுரக்கள்ளியின் பால் சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. சித்தமருத்துவ அடிப்படை மெய்ம கோட்பாட்டின்படி, வாந்தி, பேதி கொடுத்துவிட்டு உடலில் இயங்கும் உயிரின் குற்றங்களான வளி (வாதம்), அழல் (பித்தம்), ஐயம் (கபம்) ஆகியவற்றைச் சரி செய்வதற்கு வழங்கப்படும் சித்தாதி எண்ணெயில் சதுரக்கள்ளிப்பால் சேர்கிறது. சித்தர் பாடல்களில் இப்பால், ‘காட்டெருமைப்பால்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகுக்கள்ளி
இது அனைத்து இடங்களிலும் காணப்படும் கள்ளி இனம். திருகித் திருகிக் காணப்படுவதால் ‘திருகுக்கள்ளி’ எனப்படுகிறது. சிறந்த வேலித்தாவரமாக முற்காலங்களில் தோட்டங்களில் வளர்க்கப்பட்டது. ஏற்கெனவே சொல்லப்பட்டதுபோல, இந்தக் கள்ளியின் சில தண்டுகள் நான்கு பட்டைகளுடன் காணப்பட்டால் அதையே ‘சதுரக்கள்ளி’ என்று சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வந்தனர். திருகுக்கள்ளிப்பால், சாறு ஆகியவற்றைக் கொண்டு சித்த மருத்துவர்கள் பலவிதமான பேதி மருந்துகளை தயாரித்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை கருதி அவற்றைப் பற்றி முழுமையாக இங்கு நான் விளக்கவில்லை. இதன் பால், சாறு சேர்த்து வாத கேசரி தைலம், நவநாத சித்தர் தைலம் முதலிய தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை வாத நோயாளிகளுக்குக் குளியல் தைலமாகவும், தொக்கணம் (மசாஜ்) செய்யப் பயன்படும் பிடி தைலமாகவும், பூச்சு தைலமாகவும் பயன்படுகின்றன.
திருகுக்கள்ளியை இடித்துப் பிழிந்த சாற்றில் உப்பைக் கரைத்து, அடுப்பிலேற்றி குழம்புப் பக்குவத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதை வாதவலி, சுளுக்கு, வீக்கம், பிடி உள்ள இடங்களில் இளஞ்சூட்டில் பூசிவந்தால் வலி விரைவில் மாறும். இந்தக் கள்ளியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, உலர்த்தி எரித்துச் சாம்பலாக்கி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும்போது தேங்காய் எண்ணெயில் குழப்பி அழுகிய புண்கள், நாள்பட்ட புண்கள்மீது போட்டுவர அவை மூடி விரைவில் ஆறும். முதல் ஐந்து நாள்களுக்குக் கொஞ்சமாகப் போட வேண்டும். உடல் ஒத்துக்கொள்வதைப் பொறுத்து, தொடர்ந்து போட்டு வரலாம். இதன் பாலை, பாலுண்ணி மற்றும் மருக்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாகப் பூசிவர அவை புண்ணாக மாறி ஆறும். அந்தப் புண்கள் விரைவில் ஆறுவதற்குத் தேங்காய் எண்ணெயும் போட்டு வரவும்.

நாய், பூனை, எலி, பெருச்சாளி போன்றவை கடித்த இடத்தில் கள்ளிப்பாலைத் தடவிவரப் புண்ணாகும். சிறிது காலம் புண்ணை ஆறவிடாமல் வைத்திருந்து பிறகு, புண்களை ஆற்றும் மருந்துகளைப் போட்டு ஆற வைக்கவும். இப்படிச் செய்வதால், இந்தச் சிறு விலங்குகளின் விஷம் உடலில் தங்காது. இந்தக் கள்ளியின் பச்சைத் தண்டுகளை இடித்து, சாறு பிழிந்துவிட்டு சக்கையை மட்டும் அனலில் வாட்டி, இளஞ்சூட்டுடன் நகச்சுற்றுகளின் மேல் வைத்துக் கட்டினால் அப்படியே அமுங்கிவிடும். சீழ்ப் பிடித்திருந்தாலும் உடைந்து புண்ணாகிவிடும். பிறகு, புண்களைத் தைலங்கள் பூசி ஆறவைக்க வேண்டும். முற்காலங்களில் யானைக்கால் வீக்க நோயாளிகளுக்கும், மிகக்கொடிய குஷ்ட நோயாளிகளுக்கும், கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டு வயிறு வீங்கிக் காணப்படும் பெரு வயிறு நோயாளிகளுக்கும் இதன் பால் சேர்த்து மருந்துகள் தயாரித்து, தொடர்ந்து கொடுத்து வீக்கங்களைக் குறைக்கச் செய்திருக்கிறார்கள்.

இலைக்கள்ளி & மான்செவிக் கள்ளி
இவை இரண்டும் வெவ்வேறு தாவரங்களாக இருந்தாலும், மருத்துவப் பயன்கள் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. மானின் செவியைப்போல இதன் இலைகள் காணப்படுவதால், இந்தக் கள்ளி ‘மான்செவிக்கள்ளி’ எனப்படுகிறது. பொதிகை மலையில் வாழும் காணிக் குடியிருப்புகளில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. காணி மக்கள் இதை ‘மாந்தக்கள்ளி’, ‘மாஞ்சக்கள்ளி’ என அழைக்கின்றனர். இந்தக் கள்ளிச் செடியை வளரவிட்டால், சாதாரண மரங்களைப்போல 20 முதல் 30 அடி உயரம்கூட வளரும் தன்மையுடையவை. இதன் இலைகளை ஒடித்தவுடன் மிக வேகமாகப் பால் சொட்டும். இலைகளைத் தீ அனலில் லேசாக வதக்கிப் பிழிந்து 7-8 துளி சாறெடுத்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், உடலில் தேங்கிய மலம் வெளியேறும். குழந்தை பிறந்தது முதல் இதன் பால் தேவைப்படுவதால்தான் ஒவ்வொரு காணிக் குடியிருப்பிலும் இந்த மரங்கள் காணப்படுவதாக அந்த மக்கள் சொல்கிறார்கள்.

மரு, பாலுண்ணி மறைய, நகச்சுற்று மாற, விஷக்கடிகளுக்கு மேலே போட என திருகுக்கள்ளிக்கு உரிய மருத்துவப் பயன்கள் அனைத்தும் இந்த இலைக்கள்ளிக்கும் பொருந்தும். இதன் இலைச்சாற்றுடன் வெண்ணெய் கலந்து பூசிவர சொறி, சிரங்கு மறையும். இலைக்கள்ளிச் சாற்றுடன் சம அளவு சர்க்கரைப்பாகு அல்லது தேன் கலந்து நன்றாகக் குலுக்கி வைத்துக்கொள்ளவும். இதில் மூன்று முதல் ஐந்து மி.லி எடுத்து 15 மி.லி தண்ணீருடன் கலந்து கொடுத்துவந்தால் ஆஸ்துமா முதலான சுவாசப்பாதை நோய்கள் மறையும். சித்த மருத்துவத்தின் சிறப்பே மூலிகைச்சாறு கலந்து செய்யப்படும் தாதுப்பொருள் மருந்துகள்தான். முற்காலங்களில் தீர்க்க முடியாத நோய்களை சித்தர்கள், சித்த மருத்துவர்கள் குணமாக்கியது தாதுப்பொருள் மருந்துகளைப் பயன்படுத்தித்தான் என்பதை உணரவேண்டிய நேரம் இது.

கறுப்பு நிறத்திலிருக்கும் இரும்புப் பொடியை வெள்ளை நிறமாக்குவது அதாவது, பற்பம் செய்வதும், வெள்ளை நிறத்தில் மின்னும் வெள்ளியைச் சிவப்பாக்குவது அதாவது, செந்தூரமாக்குவதும் சித்த மருத்துவத்தின் உச்சக்கட்ட மருந்தியல் உத்திகள். அந்த வகையில், இரும்பைப் பற்பமாக்குவதற்கு இந்த மான்செவிக் கள்ளிப்பால் தேவைப்படுகிறது. இந்தக் கள்ளிப்பாலில் இரும்பை ஊறவைத்து அரைத்துப் புடம்போட்டால் கிடைப்பது இரும்பு பற்பம். இதுவே அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாகும். சென்ற நூற்றாண்டின் கடைசியில் மதுரையில் வாழ்ந்த கணபதி வைத்தியர் என்பவர், இந்த இரும்பு பற்பத்தை மட்டுமே வெவ்வேறு மூலிகைச்சாறுகள், குடிநீர்களில் கொடுத்து அனைத்து நோய்களையும் குணமாக்கியதை என் அனுபவபூர்வமாகவே கண்டிருக்கிறேன்.
இப்போதும்கூட மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக தமிழக அரசு பரிந்துரைத்திருக்கும் கபசுரக்குடிநீர், சித்த மருத்துவ அறிவியலின்படி தாதுப்பொருள் மருந்தான சந்திரோதய மாத்திரைக்குத் துணை மருந்தே அன்றி முதன்மை மருந்து அல்ல.
நமது தலைமுறை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கும் நிலையில், தாதுப்பொருள் மருந்துத் தயாரிப்பு நுட்பங்களை மீட்டெடுப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை.

கொம்புக்கள்ளி
கொம்பு, கொம்பாகக் காணப்படுவதால் `கொம்புக்கள்ளி’ எனப்பட்டது. வேலித் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது. இதன் இளம்பட்டையை அரைத்து, எலும்பு முறிவுகளுக்கு வைத்துக்கட்டினால் முறிந்த எலும்புகள் விரைவில் கூடும். மற்ற கள்ளிகளுக்குச் சொல்லப்பட்ட அனைத்து மருத்துவப் பயன்களும் இதற்கும் பொருந்தும். இந்தக் கள்ளி மரத்தின் இளங்கொம்புகளை கரி நெருப்பு அனலில் வாட்டிப் பிழிந்த சாற்றுடன் (5 முதல் 10 துளி) கோரோசனை மாத்திரை அல்லது கஸ்தூரி மாத்திரை சேர்த்து பச்சிளங் குழந்தைகளுக்குக் கொடுத்தால் செங்கிரந்தி, கருங்கிரந்தி, கக்குவான் இருமல், கோழைக்கட்டு, வயிற்று உப்புசம் முதலியவை குணமாகும். இதன் கொம்புகள் மாசி, பங்குனி மாதங்களில் பழுத்து, மஞ்சள் நிறமாகி கீழே விழுந்துவிடும். அவற்றைக் கொண்டு ‘கருவங்கம்’ எனும் உலோகத்தைக் சுண்ணமாக்கி வழங்கிவர நீரிழிவு என்னும் மதுமேகம் முற்றிலும் குணமாகும்.

கொடிக்கள்ளி
இது கொடி வீசிப் படர்ந்து வளரும் கள்ளி இனம். ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள அனைத்து மருத்துவப் பயன்களும் இதற்குப் பொருந்தும். இதன் இளங்கொடிகளை அனலில் வதக்கிப் பிழிந்து, சாற்றில் மூன்று முதல் ஐந்து மி.லி குழந்தைகளுக்குக் கொடுத்துவர, பால கரப்பான் தீரும். கொடிக்கள்ளி எண்ணெய், கொடிக்கள்ளிப்பால் எண்ணெய் ஆகிய தயாரிப்பு முறை மருந்துகளைக் கொடுத்து தீர்க்க முடியாத தோல் நோய்கள், கல்லீரல், மண்ணீரல் வீக்க நோய்கள், இடுப்புவலி, வாதநோய்கள் ஆகியவற்றை குணமாக்க முடியும். ‘இலிங்கம்’ எனப்படும் ரச பாடாணத்துக்கு, கொடிக்கள்ளிப்பால் அல்லது சாறு சேர்க்கப்பட்டு `சர்வ நோய் லிங்கச் செந்தூரம்’ தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து எல்லாக் காய்ச்சல்களையும் குணமாக்கும் மாமருந்து.

சோமலதா (அ) ஆட்டாங்கள்ளி
கொடிக்கள்ளியைப்போலவே காணப்படும். ஆனால், அவ்வளவு தடிமனாக இருக்காது. ஒடித்தால் பால் வராது. புளிப்புச் சுவையுள்ள தண்ணீர்தான் வரும்.
`வேத காலங்களில் கூறப்படும் சோமபானம் தயாரிக்கப் பயன்படுத்திய கொடி’ என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு இந்தியா முழுவதும் 27 தாவரங்கள் கூறப்படுகின்றன.
காலையில் சுவைத்தால் புளிப்புச் சுவையாகவும், மாலையில் சுவைத்தால் இனிப்பாகவும் இருக்கும். இதை, `புளிப்பிரண்டை’ அல்லது `புளிச்சாங்கொடி’ என்றும் சொல்கிறார்கள். இதை வதக்கி, துவையல் அரைத்து இரவு உணவுடன் உண்டுவந்தால் உள்புண்கள் ஆறும். காலையில் மலம் நன்றாகக் கழியும்.

கள்ளி முனையான்
இந்தத் தாவரத்தின் சிறிய தண்டுகளை உடையது `சிறு கள்ளி முனையான்’ என்றும், பெரிய தண்டுகளை உடையது `பெருங்கள்ளி முனையான்’ அல்லது `எருமைக்கள்ளி முனையான்’ என்றும் அழைக்கப்படுகிறது. நல்ல புளிப்புச்சுவை உடைய இந்தத் தாவரத்தை துவையலாக அரைத்துச் சாப்பிட்டு வர சுவையின்மை, பசியின்மை முதலியவை குணமாகும். குறிப்பாக, மஞ்சள்காமாலை நோயாளிகள் இந்தத் துவையலை பத்திய உணவுடன் சாப்பிட்டுவர நாவின் சுவையின்மை மாறி நன்கு பசியெடுக்கும்.
அடுத்த இதழில், `அமிர்தக்கொடி’ எனப்படும் சீந்தில் வகைகள் குறித்துப் பார்ப்போம்.