மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து 2.0 - குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்! மணமூட்டும் கஸ்தூரி மஞ்சள்!

நல்மருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
நல்மருந்து

மருத்துவம் 29 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

ஞ்சளின் மகத்துவம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இது, இந்தியர்களின் உணவு மற்றும் கலாசாரத்துடன் இணைந்த பொருளாகும். ஐரோப்பிய, அமெரிக்க நாட்டு மக்களுக்குக் குடல் புற்றுநோய் அதிகம் காணப்பட்டபோது, இந்தியர்களிடம் குடல் புற்றுநோய் விகிதம் மிகவும் குறைவாகக் காணப்படுவதைப் பற்றி ஆராய்ந்தனர். இந்திய உணவுகளில் மஞ்சள் அதிகம் சேர்க்கப்படுவதே காரணம் எனக் கண்டறியப்பட்டது. மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ (Curcumin) எனும் உயிர்வேதிப் பொருளுக்குப் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி (Anticancer Property) இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மஞ்சள் என்பது உணவின் மணம் மற்றும் நிறத்துக்கானது மட்டும்தான் என நினைக்க வேண்டாம்.

மிகக்கொடிய குடல் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் சிறந்த மருத்துவக் குணம் உடையது. தற்போது, இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ‘துரித உணவு’ (Junk Food) களில் துளியும் மஞ்சள் சேர்ப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். மஞ்சளில் கப்பு மஞ்சள், முட்டா மஞ்சள், விரலி மஞ்சள், கறி மஞ்சள் எனப் பல வகைகள் உண்டு. மஞ்சள் கிழங்கின் பெரும் பாகங்களை எடுத்துவந்து நல்லெண்ணெயில் பக்குவம் செய்யப்படுவது ‘கப்பு மஞ்சள்’ எனப்படும். அதுவே முட்டை வடிவில் உள்ள மஞ்சள் கிழங்குகளைப் பயன்படுத்தி எடுப்பது ‘முட்டா மஞ்சளா’கும். இவை மேல்பூச்சாகப் பயன்படுகின்றன. கிழங்கின் பாகங்களில் கிளைக்கும் விரல்போல உள்ளவற்றை வேறுபடுத்திப் பசுமாட்டுச் சாணப்பாலில் வேகவைத்துப் பக்குவப்படுத்துவது ‘விரலி மஞ்சள்’ அல்லது ‘கறி மஞ்சள்’ ஆகும். இதுவே உணவில் பயன்படுத்தப்படுகிறது.

நல்மருந்து 2.0 -  குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்! மணமூட்டும் கஸ்தூரி மஞ்சள்!

வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்துப் பற்று போட அம்மைக் கொப்புளங்கள் விரைவில் ஆறும். மஞ்சளுடன் சுடுசோறு (லேசான சூட்டுடன்) அரைத்துப் பூச, கொப்புளங்கள் பழுத்து உடையும். பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால் வியர்வை நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்குவதோடு, முகத்தில், தேவையற்ற இடங்களில் முடிகள் முளைப்பதையும் தடுக்கிறது. ஹார்மோன் பிரச்னைகள் காரணமாகப் பெண்களுக்கு முகத்தில் தாடி, மீசை முளைத்தால் மஞ்சள் பொடியைத் தண்ணீரில் குழைத்துப் பூசி வர அவை விரைவில் மறையும். பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் ஆண்களின் மனதைக் கவரும் ‘புருசாவசியம்’ உண்டாகும் என்பதைப் பின்வரும் பாடல் கூறுகிறது.

‘பொன்னிறமாம் மேனி புலானாற்ற மும்போகும்

மன்னு புருட வசியமாம் - பின்னியெழும்

வாந்திபித்த தோடமையம், வாதம்போந்தீபனமாங்

கூர்த்தமஞ்ச ளின்கிழங்குக்கு’

- அகத்தியர் குணவாகடம்

மஞ்சளைத் தீயில் சுட்டு முகர்ந்தால் ஜலதோஷம், மூக்கு நீரேற்றம் முதலியவை நீங்கும். ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண்வலி, கண் சிவப்பு ஏற்பட்டுள்ள சமயத்தில், மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைப் பருத்தித்துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண்களை அடிக்கடி துடைத்து வர விரைவில் குணமாகும். பச்சை மஞ்சள் சாற்றைப் பூச, அட்டைக்கடி, புதிய காயப்புண்கள், புண், வீக்கம் ஆகியவை குணமாகும். மஞ்சளுடன் சுண்ணாம்பு சேர்த்துக் குழைத்து சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் பூசிவரச் சுளுக்கு, அடிபட்ட புண் ஆகியவை குணமாகும். மஞ்சளுடன் ஆடாதோடை இலை சேர்த்து அரைத்துப் பசுமாட்டுச் சிறுநீர் விட்டுச் சொறி, சிரங்கு, படைகள்மீது பூசி வர அவை குணமாகும்.

‘‘கஸ்தூரி மஞ்சளைத் தனியாகவோ, பிற மணப்பொருள்களுடன் சேர்த்தோ ஆண், பெண் இருபாலரும் பூசிக் குளிக்கலாம்.’’

காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு உள்ளவர்கள் மஞ்சள் பொடியுடன் நொச்சி இலை சேர்த்து ஆவி பிடித்தால் குணமாகும். தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறையும் மேற்சொன்ன முறையில் ஆவி பிடிக்க வேண்டும். மருதாணி இலை 10, சிறிது பூங்கற்பூரம், ஒரு துண்டு வசம்பு, ஒரு மஞ்சள்துண்டு ஆகியவற்றை அரைத்துக் கால் ஆணிகள்மீது இரவு படுக்கப்போகும் முன் தொடர்ந்து கட்டி வர அவை பழுத்து வெளியில் வரும்.

மஞ்சள்
மஞ்சள்

காய்ச்சின பசும்பாலில் மஞ்சள் பொடி, மிளகுப் பொடி, பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பதால் தொண்டைக்கட்டு, தொண்டைவலி, நெஞ்சில் கட்டிய சளி வெளியாகி நன்கு குறையும். இதுவும் தற்போதைய நிலையில் தேவைப்படுகின்ற ஒன்றாகும். நெல்லிக்காய் குடிநீரில் மஞ்சள் பொடி சேர்த்துச் சாப்பிட்டுவர சர்க்கரை நோய் விரைவில் குணப்படும். இதுவே, ஆயுர்வேத மருந்துக்கடைகளில் ‘நிஷா ஆம்லகி’ என்ற பெயரில் சூரணமாகவும் கிடைக்கும். ஏதேனும் நாள்பட்ட தோல் நோயால் வருந்துபவர்கள் 500 மி.கி மஞ்சள் பொடியைச் சிறிது பசுமாட்டுச் சிறுநீரில் கலந்து குடித்து வந்தால் நோயின் வலிமை படிப்படியாகக் குறையும்.

முட்டா மஞ்சள்
முட்டா மஞ்சள்

மஞ்சள் பொடியை வேப்ப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் கலந்து பூசி வரக் கால்களில் ஏற்படும் சேற்றுப்புண்கள் ஆறும். மஞ்சளை அரைத்துத் தண்ணீரில் கலக்கி, அதை வெள்ளைநிறப் பருத்தித் துணிமீது ஊற்றிச் சாயமேற்றி, அந்தத் துணியை ஆடையாக உடுத்தி வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள், மலச்சிக்கல், நச்சு சுரம், இருமல் முதலான பல நோய்கள் குணமாகும்.

விரலி மஞ்சள்
விரலி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள்

மஞ்சளைப் போலவே வளரும் இயல்புடையது. ஆனால், இதன் இலையின் நடுவே கறுப்பு நிற வரி ஓடி இருக்கும். கேரளாவில் மலைக்காடுகளில் இயல்பாக வளர்ந்து காணப்படுகிறது. இதனுடைய தேவை அதிகரித்துள்ளதால், இதை மஞ்சளைப் போலவே வளர்க்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. பூசிக்குளிக்கும் மணப்பொடிகளிலும் தைலங்களுக்கு மணமூட்டுவதிலும் இது சேர்க்கப்படுகிறது. மஞ்சளைப் பெண்கள் மட்டுமே பூசிக் குளித்து வருகின்றனர். கஸ்தூரி மஞ்சளைத் தனியாகவோ, பிற மணப்பொருள்களுடன் சேர்த்தோ ஆண், பெண் இருபாலரும் பூசிக் குளிக்கலாம்.

கஸ்தூரி மஞ்சள் செடி
கஸ்தூரி மஞ்சள் செடி

சந்தையில் பலவித மணப்பொடிகள் காணப்பட்டாலும், அவை அனைத்திலும் கஸ்தூரி மஞ்சள் நிச்சயம் இடம்பெறும். மஞ்சளுக்குக் கூறப்பட்ட அனைத்து மருத்துவக் குணங்களும் கஸ்தூரி மஞ்சளுக்குப் பொருந்தும். கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, சந்தனக்கட்டை, கோரைக்கிழங்கு, கசகசா முதலியவற்றுடன் சம எடையாகச் சேர்த்து அரைத்துத் தேய்த்துக் குளித்து வர அனைத்துவிதமான சொறி, சிரங்கு, கரப்பான் ஆகியவை குணமாவதுடன், உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றமும் நீங்கும்.

நல்மருந்து 2.0 -  குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்! மணமூட்டும் கஸ்தூரி மஞ்சள்!

மர மஞ்சள்

இது அதிக மழை பெய்யும் வெப்பமண்டலக் காடுகளில் வளர்கின்ற ஒரு கொடி இனமாகும். இதன் முதிர்ந்த தண்டுகளை வெட்டினால் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதால் மரமஞ்சள் என அழைக்கப்படுகிறது. மஞ்சளுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பு மில்லை. இதேபோல இன்னொரு மர வகையும் உண்டு. நமது தமிழ் சித்த மருத்து வத்தில் பயன்படுத்தப்படுவது கொடி இனம்தான். காடுகள் அழிக்கப்படுவதால், இந்த மரமஞ்சள் இனம் வேகமாக அழிந்து வருகிறது. சித்த மருத்துவ நூல்களில் இது, ‘மஞ்சக்கொடி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கஸ்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள்

இதனுடன் சிறிது தண்ணீர்விட்டு அரைத்துத் தலைக்குப் பற்றாகப் போட, உடலின் வெப்பம் மாறும். ரத்தக்கட்டு, அடிபட்ட சிராய்ப்பு ஆகியவை மீதும் பற்றுப் போடலாம். 100 கிராம் மரமஞ்சளுடன் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து, 500 மி.லி-யாக வற்ற வைத்து வடிகட்டி, அக்குடிநீரை 3 மணி நேரத்துக்கு ஒருமுறை 100 மி.லி-யாகக் குடித்து வர, துருப்பிடித்த ஆணி மற்றும் இரும்பால் ஏற்பட்ட காயங்களால் ஏற்படும் ‘டெட்டனஸ் ஜன்னி’ வருவது தடுக்கப்படுகிறது. இது ஈழத் தமிழர் களிடையே பயன்பாட்டில் உள்ளது.

மர மஞ்சள் கொடி
மர மஞ்சள் கொடி
மர மஞ்சள்
மர மஞ்சள்

பூலாங்கிழங்கு

தரையோடு தரையாக வளரும் தாவரம். தரைக்குக் கீழ் வெண்மை நிறத்தில் சிறுசிறு முட்டை வடிவக் கிழங்குகள் காணப்படும். இக்கிழங்குகளைச் சேகரித்து வட்ட வடிவ வில்லைகளாக அரிந்து, நிழலில் உலர்த்தப்பட்டு நாட்டுமருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது மிகவும் நறுமணமுடையது. குளியல் பொடிகளிலும் தைலங்களிலும் நறுமணத்துக்காகச் சேர்க்கப் படுகிறது. எத்தனையோ குளியல் பொடிகள் இன்று கடைகளில் கிடைக்கின்றன. அவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது ‘நலுங்குமா’ என்பதுதான்.

பூலாங்கிழங்குச் செடி
பூலாங்கிழங்குச் செடி
பூலாங்கிழங்கு
பூலாங்கிழங்கு

பூலாங்கிழங்கு, விலாமிச்சு வேர், வெட்டிவேர், சந்தனச்சிறாய், கார்போகரிசி, கோரைக்கிழங்கு, பாசிப்பயறு மாவு ஆகிய ஏழு மருந்துகளையும் சம எடையாக எடுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்வதே ‘நலுங்குமா’ ஆகும். இதனுடன் அவரவர் தேவைக்கேற்ப காய்ந்த ரோஜா இதழ்கள், ஆவாரம்பூப்பொடி இப்படியாகப் பல்வேறு மூலிகைப் பொருள்கள் கலந்த பொருள் தற்போது கடைகளில் கிடைக்கிறது. பூலாங்கிழங்கை உள்மருந்தாக அதிகம் பயன்படுத்துவதில்லை. பூலாங்கிழங்குக்குக் கிச்சிலிக்கிழங்கு, கச்சோலம் என்று வேறுபெயர்களும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பூலாங்கிழங்கு என்ற ஒரு அரிய இனமும் காணப்படுகிறது. இதன் கிழங்குகள் சற்றே பெரியதாக இருக்கும்.

அடுத்த இதழில்...

இஞ்சி, அரத்தை, சிற்றரத்தை, பேரரத்தை குறித்துப் பார்ப்போம்.