நல்மருந்து 2.0 - அனைத்து நோய்களையும் விஞ்சும் இஞ்சி! - தொண்டைச் சதையைக் கரைக்கும் அரத்தை!

மருத்துவம் 30 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
இந்திய மருத்துவம் மற்றும் சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் இஞ்சி. இது தண்ணீர் செழிப்பான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்து வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு படுக்கப்போகும் முன், இஞ்சிச் சாறெடுத்து, சுரசம் செய்து 15 மி.லி முதல் 30 மி.லி வரை குடிக்கும் பழக்கம் இருந்தது. இஞ்சிச் சாறெடுத்து தெளிய வைத்து, அடியில் படியும் வெள்ளை நிற மாவுப்பொருளை நீக்க வேண்டும். பிறகு, அடுப்பிலேற்றி ‘சுர்’ரென்ற சத்தம் வந்தவுடன் அடுப்பைவிட்டு இறக்கிப் பயன்படுத்துவதுதான் ‘சுரசம்’ ஆகும்.

வாரந்தோறும் இஞ்சிச் சுரசம் குடித்து வருவதால், வயிற்றில் உள்ள வாய்வு, மலச்சிக்கல், வயிற்றில் தங்கிய பழைய மலம் முதலான அனைத்தும் மறுநாள் காலையில் வெளியேறிவிடும். உடலும் புத்துணர்ச்சி பெறும். வயிற்றுப்போக்கு, இதயநோய்கள், வாதநோய்கள், தோல் நோய்கள் முதலான பெரு நோய்கள் வராது.
சித்த மருத்துவ அடிப்படைக் கருத்தியலின்படி உடலை இயக்குவது வளி (வாதம்), அழல் (பித்தம்), ஐயம் (கபம்) ஆகியவையே ஆகும். இவற்றையே நாடி மூலம் கணித்து நாம் அறிந்து வருகிறோம். இந்த மூன்று கூறுகளும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குகிறது. உதாரணமாக, அழல் என்னும் சூடு (பித்தம்) அதிகமானால், வளி (காற்று) என்னும் வாதம் விரிவடைகிறது. அழல் என்னும் சூடு குறைந்தால், கபம் அதிகமாகும். இதை ஒட்டியே ஐயம் என்னும் உணவுப்பொருள் சமைக்கும் கோட்பாடும், மருந்தியல் கோட்பாடும் இயங்குகிறது. இந்தக் கோட்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு இஞ்சி மிகவும் ஏற்றதாக உள்ளது. இஞ்சிச் சாறெடுத்துக் குடிப்பதால் உடலில் சூடு ஏறி, வாய்வு விரிவடைந்து தேவையற்றப் பொருள்களை வெளியேற்றிவிடும். எனவே, வாரத்துக்கு ஒருநாள் எண்ணெய்க் குளியல் செய்து, இஞ்சிச் சுரசம் குடித்து வர வேண்டும்.
இந்த மிக நுட்பமான அறிவார்ந்த நோயணுகா விதிப்பழக்கத்தை, ‘இஞ்சி சாப்பிட்டால் இரைப்பை மற்றும் குடலில் புண் ஏற்பட்டுவிடும்’ என்ற தவறான கருத்தைப் பரப்பி, அழித்துவிட்டார்கள். உண்மையிலேயே இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்ஜிபெரின்’ என்னும் மருந்தியல் பொருள், இரைப்பை மற்றும் குடலில் உள்ள புண்களைக் குணமாக்கும் என நிரூபணம் ஆகியுள்ளது.
‘‘இதயத்தைப் பாதுகாப்பதாகக்கூறி, கடந்த 5 ஆண்டுகளாக ஒரு பானம் இயற்கை உணவுக்கடைகளில் புழக்கத்தில் உள்ளது.’’
இஞ்சித் தேனூறல்
இஞ்சியின் மேல்தோலைச் சீவி, வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கி வெயிலில் சிறிதுநேரம் உலர்த்தி, சம எடை தேனில் போட்டு 40 நாள்கள் காற்றுப்புகாமல் மூடி வைக்க வேண்டும். பிறகு திறந்து, தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு துண்டு உண்டு வர, உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். இது ஒரு சிறந்த காயகல்ப முறையாகும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நரை, திரை மாறும். மூப்புப் பிணிகள் வராது.
‘காலமே இஞ்சியுண்ணக் காட்டினாற் சூத்திரத்தில்
மாலையதிலே கடுக்காய் மத்தியானஞ் சுக்கருந்த
சூலமே தேகமடா சுக்கிலத்தைக் கட்டிவிடும்

ஞாலமே உனதுவிந்து நற்றேங்காய் போலாமே’ என்ற சித்தர் பாடல்வரிகள் இஞ்சியைக் காலையில் உண்பதன் அவசியத்தைக் கூறுகின்றன. இந்த இடத்தில் ஒரு நடைமுறை முரணைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் என்று சித்தர் படல்கள் கூறினாலும் இன்று நடைமுறையில் ‘சுக்கு வெந்நீர்’ குடிக்கும் பழக்கம் இரவுதான் உள்ளது. அடிக்கடி தலைவலியால் வருந்தும் நோயாளிகள், அதிக வேலைப்பளுவால் வருந்துவோரை நண்பகலில் சுக்கு வெந்நீர் குடிக்கச் சொல்லிப் பழக்கியதில் தலைவலிப் பிரச்னை முற்றிலும் குணமானதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

இதயத்தைப் பாதுகாப்பதாகக் கூறி, கடந்த 5 ஆண்டுகளாக ஒரு பானம் இயற்கை உணவுக்கடைகளில் புழக்கத்தில் உள்ளது. இது இஞ்சிச்சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து, அதனுடன் சிறிது ஆப்பிள் வினிகர் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான அனைத்து நோய்களையும் குணமாக்குவதாகக் கூறிக்கொண்டு இயற்கை ஆர்வலர்களிடையே இப்பானம் விளம்பரப்படுத்தப்படுகிறது. இதயத் தசைகள் மற்றும் வால்வுகளில் ஏற்படும் நோய்களுக்கு இது பெரிய குணம் அளிக்கா விட்டாலும், வாய்வு ஏற்படுவதைத் தடுப்பதால், மாரடைப்பு எனப்படும் இதய அடைப்பு ஏற்படுவதை இது தடுக்கலாம். இதய அடைப்பு ஏற்படத் தொடங்கிவிட்டால், நோயாளியை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நல்லது.
இதையொத்த இன்னொரு தயாரிப்பு முறைதான் ‘சிக்கஞ்சர் சர்பத்து’ எனும் பெயரில் கண்ணுசாமிப்பிள்ளை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஞ்சிச்சாறு ஒரு லிட்டர், எலுமிச்சைச்சாறு ஒரு லிட்டர், புதினாயிலைச்சாறு ஒரு லிட்டர், கடலைக்காடி ஒரு லிட்டர் இவற்றை நன்கு கலந்து, அவற்றுடன் கரும்புச்சர்க்கரை 4 கிலோ கலந்து வடிகட்டி அடுப்பிலேற்றி தேன்பதம் வரும்படி காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். இதில், 3 மி.லி அளவுக் காலை, மதியம், இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வர வாந்தி, குமட்டல், மலச்சிக்கல், மயக்கம், நெஞ்செரிச்சல் குணமாகும். ‘கடலைக்காடி’ சென்ற நூற்றாண்டில் பழக்கத்தில் இருந்துள்ளது. தற்போது வழக்கத்தில் இல்லை. அதற்குப் பதிலாக வினிகர் கரைசலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பஸ், கார், ரயில் போன்ற பயணங்களின்போது வாந்தி, குமட்டல் ஏற்படாமலிருக்க ‘இஞ்சி முரப்பா’ எனப்படும் மிட்டாய் பேருதவியாய் இருக்கிறது. நல்லெண்ணெயுடன் இஞ்சிச்சாறு சம அளவு கலந்து தைலமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துக் குளித்து வர தலைப்பாரம், அடுக்குத்தும்மல், கழுத்துவலி ஆகியவை குணமாகும். நீண்டகாலமாக இரைப்பு (ஆஸ்துமா) நோயால் வருந்துவோர் இஞ்சிச்சாறு, மாதுளைப்பூச்சாறு, தேன் ஆகியவற்றில் வகைக்கு 5 மி.லி கலந்து மொத்தம் 15 மி.லி அளவு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர இரைப்பு நோயின் வேகம் தணியும்.

இஞ்சியை வாயில்போட்டு மென்று உமிழ்நீரைத் துப்ப தொண்டைப்புண், குரல் கம்மல் குணமாகும். சிலருக்குக் காலையில் எழுந்தவுடன் பித்த மயக்கமாகக் காணப்பட்டு வாந்தி வருதல் போன்ற உணர்வு ஏற்படும். இஞ்சிச்சாறு 100 மி.லி, பசும்பால் 70 மி.லி இதனுடன் பனங்கற்கண்டு 100 கிராம் சேர்த்து அடுப்பிலேற்றி மணப்பாகு செய்து, இரவு படுக்கப்போகும்முன் அரைத் தேக்கரண்டி (2.5 மி.லி) சாப்பிட்டு வரப் பித்தமயக்கம் நீங்கும். இஞ்சிச்சாறு, சின்ன வெங்காயச்சாறு, எலுமிச்சைச்சாறு இம்மூன்றும் கலந்து வைத்துக்கொண்டு 20 முதல் 30 மி.லி காலை, மாலை உணவுக்குப் பின் 3 நாள்கள் உட்கொண்டு வர ஆஸ்துமா இருமல் குறையும். இப்படித் தனித்தனியாகச் செய்ய இயலாதவர்கள் இஞ்சி அதிகமாகச் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘கண்டாத்திரி’ லேகியத்தை வாங்கிப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
‘‘தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு துண்டு உண்டு வர உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். இது ஒரு சிறந்த காயகல்ப முறையாகும்.’’
சிற்றரத்தை, பேரரத்தை
இரண்டு தாவரங்களின் உலர வைத்த கிழங்குகளை மருந்துக்குப் பயன்படுத்துகிறோம். சிற்றரத்தை, தமிழகத்தின் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. பேரரத்தை சிறிது குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் இயல்பாக வளரக்கூடியது. இவை இரண்டையுமே வீடுகளில் வளர்த்துப் பயன்படுத்தலாம். எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் சிற்றரத்தை கிடைக்கும். அரத்தை என்றால் அது சிற்றரத்தையை மட்டுமே குறிக்கும். சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டைவலி, தலைவலி முதலான கப நோய்களைக் குணமாக்கும் அனைத்துச் சூரணங்கள் மற்றும் லேகியங்களில் அரத்தை கண்டிப்பாக இடம்பெறும். அரத்தையை நன்றாகப் பொடி செய்து, 2 முதல் 4 கிராம் அளவு எடுத்துத் தேனில் கலந்து கொடுக்கலாம். 10 கிராம் அரத்தையை ஒன்றிரண்டாகப் பொடித்து அரை லிட்டர் வெந்நீரில் போட்டு 3 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, 50 முதல் 100 மி.லி-யாகக் குடித்து வர கபநோய்கள் அனைத்தும் தணியும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்சுச்சளி கட்டுக்குச் சிற்றரத்தைப் பொடியை 1 முதல் 2 கிராம் அளவு எடுத்துத் தேனில் குழப்பிக் கொடுத்து வரவும். சிற்றரத்தை 15 கிராம், நிலவேம்பு 15 கிராம் இவற்றை ஒன்றிரண்டாக இடித்துப் பொடி செய்து 600 மி.லி தண்ணீர் விட்டு 150 மி.லியாக வற்ற வைத்து வடிகட்டி 50 மி.லி-யாக மூன்று வேளை குடித்து வர நாள்பட்ட சுரம் குணமாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலமடைந்தவர்கள் இதைக் கையாள்வது நல்லது. தொண்டைச்சதை வளர்ச்சி உடையோர், ஒரு துண்டு சிற்றரத்தையை எடுத்து வாயிலிட்டுச் சுவைத்துக்கொண்டே இருந்தால், மிகுந்த நன்மை பயக்கும். மேலும், சிற்றரத்தை 10 கிராம், சதகுப்பை, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வகைக்கு இரண்டரை கிராம் எடுத்து ஒன்றிண்டாக இடித்து 600 மி.லி தண்ணீர் விட்டு, 90 மி.லி-யாக வற்ற வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அதை 30 மி.லி வீதம் 3 வேளை, 3 நாள்கள் குடித்து வர, தொண்டைச்சதை வளர்ச்சி, அதனால் ஏற்படும் காய்ச்சல், தலைவலி ஆகியன குணமாகும்.

சிற்றரத்தை 50 கிராம், ஓமம், கடுக்காய்த்தோல், மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம் எடுத்துக் கொள்ளவும். இவற்றை நன்கு பொடி செய்து மெல்லிய சீலைத்துணியில் சலித்து வைத்துக் கொள்ளவும். 1 முதல் 2 கிராம் அளவுப் பொடியை 3 வேளை, 3 நாள்களுக்கு உணவுக்குப் பிறகு தேனிலோ, பாலிலோ கலந்து கொடுத்து வரத் தொண்டைவலி, இருமல், தொண்டைப்புண், தொண்டைச்சதை வளர்ச்சி, மூக்கடைப்பு முதலான கபநோய்கள் விரைவில் குணமாகும். வீடுகளில் தரையிலோ, தொட்டியிலோ வைத்துச் சிற்றரத்தையை வளர்த்துப் பயன்பெறலாம்.
பசுமை விகடன் மூலமாகக் கடந்த 30 இதழ்களாக உங்களைச் சந்தித்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இத்துடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது. மீண்டும் மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம். நன்றி!
முற்றும்.