
மருத்துவம் 27 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
அத்தியில் 26 வகைகள் நூல்களில் கூறப்பட்டாலும், நாட்டு அத்தி எனப்படும் நீர் அத்தி, சுணையத்தி, பேயத்தி ஆகிய மூன்று வகையான மரங்கள் மட்டுமே தமிழகம் முழுவதும் காணப்படுகின்றன. இவற்றில் நாட்டு அத்திதான் மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நாட்டு இனங்கள் தவிர, வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்து வளர்க்கப்படும் டிம்லா அத்தி, செடியத்தி, இஸ்ரேல் அத்தி ஆகியவற்றைச் சீமையத்தியென நமது மருத்துவ நூல்கள் கூறுகின்றன. நவீன தாவரவியலில் இவை அனைத்தும் பைக்கஸ் (Ficus) எனும் பேரினத்தைச் சார்ந்தவை. அத்தி, பூப்பூக்காமலே காய்க்கும் ஓர் இனமாகும். ஆனால், தாவரவியல் வகைப்பாட்டின்படி, அதன் காய்களே பூவாகக் கொள்ளப்படுகிறது. இம்மரத்தின் பிஞ்சு, காய், பழம், பட்டை, பால், கள் முதலிய அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை. அத்திப்பிஞ்சு, உருண்டையாகவும் வழுவழுப்பாகவும், மேல்பாகம் மினுமினுப்புடன் பட்டு போன்ற மெல்லிய சுணைகளுடன் காணப்படும். இதன் காய் முதிர்ந்து, பழுக்கத் தொடங்கியவுடன், சிவப்பு நிறமாக மாறும்.

‘ஆனைக்கன்றி லொருபிடியு அசுரன்விரோதி இளம்பிஞ்சும்
கானக்குதிரைப் புறத்தோலுங் காலில்பொடியை மாற்றினதும்
தானைத்தாய் கொல்சலத்துடனே தகவாஎட்டான் றாக்கொள்நீ
மானைப்பொருவும் விழியாளே வடுகுந் தமிழும் குணமாமே’
- தேரன் காப்பியம்
இப்பாடலை மேம்போக்காகப் படித்தால் எதுவும் புரியாது. சித்தமருத்துவ பரிபாஷை அகராதியின் துணையுடன் படித்தால் மட்டுமே புரியும். ஆனைக்கன்று – அத்திப்பிஞ்சு, அசுரன்விரோதி இளம்பிஞ்சு- வேலம்பிஞ்சு, கானக்குதிரைப் புறத்தோல்- மாமரத்துப்பட்டை, காலில்பொடியை மாற்றினது- சிறுசெருப்படை, தாய்கொல் சலம்- வாழைப்பூச்சாறு. இப்போது மீண்டும் அப்பாடலைப் படித்துப்பாருங்கள். அத்திப்பிஞ்சு, வேலம்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை இவற்றை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து, 4 லிட்டர் வாழைப்பூச்சாறு சேர்த்து அடுப்பிலேற்றி 500 மி.லியாக வற்றவைத்து வடிகட்டி ஒருநாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துவர, வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, ரத்தபேதி முதலான பல்வேறு பேதி (கிரானிநோய்கள்) குணமாகும்.
பால்சத்து நிறைந்த அத்திப்பிஞ்சுடன் துவரம்பருப்பு அல்லது பச்சைப்பயறு சேர்த்துக் கூட்டுக்கறியாகச் சமைத்து உண்டுவரக் குடலுக்கு வலிமை கொடுத்து, பல்வேறு விதமான பேதி நோய்களைக் குணமாக்கும். 500 கிராம் அத்திப்பழங்களை நன்றாகக் கழுவி இடித்துக்கொள்ள வேண்டும். அதில் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அதில் 500 மி.லி எடுத்து, தேவையெனில் சிறிது சர்க்கரை சேர்த்து, காலை வெறும் வயிற்றில் குடிக்க, வயிற்றில் தங்கியுள்ள பழைய மலம் வெளியேறும். உடற்சூடு தணியும், அதிக தாகம் குறையும். வயிற்று மந்தம் நீங்குவதால் உள்ளமும் உடலும் சுறுசுறுப்பு அடையும்.
‘அதவுதன் காயினை யியன்முறை யாயுண
விதமுறு மெய்யினில் வினையெலா மகலுமே’
- தேரன் காப்பியம்

அதவு- அத்தி, அத்திக்காயை முறைப்படி சமைத்துச் சாப்பிட்டு வர, உடலில் உள்ள எல்லாப் பிணிகளும் அகலும். இங்கு முறைப்படி என்பது, ‘காயகல்பமுறை’ என்பதாகும். அதாவது, உப்பு, புளி நீக்கி எண்ணெய்க்குப் பதிலாகப் பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்பதாகும். அத்திப்பழங்களைச் சேகரித்து இரண்டாகப் பிளந்து, உள்ளிருக்கும் பூச்சி, புழுக்களைக் கவனமாக நீக்க வேண்டும். அதை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி அளவு (5 கிராம்) காய்ச்சின பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்குறைவு நீங்கி இதயம் வலுவாகும். சிறுநீர்ச் சர்க்கரையும் நீங்கும். சிவந்த அத்திப்பழங்களை இடித்துச் சாறெடுத்து சம அளவு வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் ஊறும். கடைகளில் விற்கப்படும் சீமை அத்திப்பழங்களில் இரவில் ஒன்றிரண்டு சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. பிரசவத்தைத் தொடர்ந்து மூலநோய் ஏற்படுவதையும் இவை தடுக்கும். அத்திப்பழங்களைத் தேனில் ஊறவைத்து, ‘அத்தித்தேன்’ தயார் செய்து சாப்பிட்டு வர, பித்தம் நீங்கும். நீண்டநாள் வயிற்றுப்புண்ணை (அல்சர்) குணமாக்கும்.

அரைக்கிலோ அத்திப்பட்டையை நன்கு பஞ்சுபோல் இடித்து, 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி 250 மி.லியாக வற்றவைத்துப் பிழிந்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு அகலமான வாளியில் ஊற்றிச் சிறிது வெந்நீர் ஊற்ற வேண்டும். பிறகு, அதற்குள் அமர்ந்து இடுப்புக்குளியல் செய்தால், மூலக்கடுப்பு உடனே நிற்கும். ரத்த மூலம், மூலமுளைக் கட்டிகள் குணமாகும். இதே குடிநீரைக் கொண்டு நாள்பட்ட, ஆறாத குழிப்புண்களைத் துடைத்துக் கழுவிவந்தால், அவை ஆறும். அத்தி, அசோகம், மா ஆகியவற்றின் பட்டைகளை வகைக்கு 10 கிராம் எடுத்து நன்கு இடித்து 400 மி.லி தண்ணீர் சேர்த்து 100 மி.லியாக வற்ற வைத்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் நாள்பட்ட பெரும்பாடு (பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு) குணமாகும்.

அத்திமரத்தின் சிறப்பு அதன் பால்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நான் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதிகளில் களப்பணி மேற்கொண்டபோது, ‘அத்திப்பால்’ என்று குடங்களில் விற்பனைக்காகக் கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். ரப்பர் மரத்தில் பால் சேகரிப்பது போலவே, கீறிவிட்டு ஒரு சிரட்டையை வைத்துப் பால் சேகரிப்பதாகக் கூறினார்கள். கூர்மையான ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்களின் மேல் அத்திப்பாலைப் பூசி ஆற்றியதாக, நமது பழைய இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. அத்திப்பாலை மூட்டுவலிக்குப் பூசி வர வலி குறையும். முருங்கைவிதை, நிலப்பனைக்கிழங்கு, பூமிச்சர்க்கரைக்கிழங்கு, பூனைக்காலி விதை ஆகியவற்றைச் சம எடை எடுத்துப் பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். இவற்றில் 3 முதல் 5 கிராம் எடுத்து ஒரு தேக்கரண்டி அத்திப்பாலில் கலந்து காலை, மாலை உணவுக்குப் பிறகு உண்டுவந்தால் போகசக்தி நன்கு பெருகு வதுடன், விந்தணுக்களின் எண்ணிக்கையும் பெருகும்.

பசு வெண்ணெயில் அத்திப்பால் ஒரு தேக்கரண்டி கலந்து காலை, மாலை இருவேளை எடுத்துவர நீரிழிவு, மூலக்கடுப்பு, ரத்தபேதி, சீதபேதி முதலியவை குணமாகும். சர்க்கரை நோயில் ஏற்படும் பிளவைப் புண்ணின் மேல் அத்திப்பாலைப் பூசிவர விரைவில் ஆறும். அத்திப்பாலே கிடைப்பது அரிதாக இருக்கும்போது, அத்திக்கள்ளு பற்றியும் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. நல்ல தண்ணீர் கரை ஓரமாய் நிற்கும் அத்தி மரத்தின் வேரைக்கீறி வைக்க அதிலிருந்து அத்திக்கள்ளு இறங்குவதாகக் குறிப்புகள் உள்ளன. இதனுடன் நாட்டு வாழைப்பழம் சேர்த்துச் சாப்பிட்டுவர, உடற்சூடு குறைந்து தேறாத உடலும் தேறும். சுற்றுச்சூழல் சங்கிலியிலும், நிலத்தடி நீரைச் சேமிப்பதிலும் அத்திமரம் மிகமுக்கியப் பங்காற்றுகிறது.

அதனால்தான் நமது முன்னோர்கள் நிலம் வாங்கும்போது அத்திமரம் வளர்ந்துள்ள இடங்களை விரும்பி வாங்கினார்கள். அந்த இடங்களில் அளவுக்கதிகமான நிலத்தடி நீர் இருக்கும் என்பதாகும். ஆல், அரசு, அத்தி, இத்தி ஆகியவற்றின் விதைகளைப் பொடி செய்து, பாலில் கலந்து தொடர்ந்து உண்டு வந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை பெருகும். இவற்றில் ஆல், இத்தி ஆகியவற்றுக்கு விழுதுகள் உண்டு. இவற்றின் விதைகளை நாம் முளைக்கப் போட்டால், அவை முளைப்பதே இல்லை. பறவைகள் இவற்றின் பழங்களை உண்டுவிட்டு, அவற்றின் எச்சங்களால் வெளியேறும் விதைகள் மட்டுமே முளைக்கின்றன. இவற்றின் நடுத்தரமான கம்புகளைப் பதியன்போட்டு முளைக்கச் செய்யலாம்.
இத்தி
ஆல மரத்தின் வடிவில், அதைவிடச் சற்றுச் சிறியதாக வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும். ஆலமரம் போலவே விழுதுகள் காணப்படும். இதிலும், பால்சத்து உண்டு. இதை ‘இச்சி’ எனவும் அழைக்கிறார்கள். அத்திக்குக் கூறப்பட்ட அனைத்து மருத்துவப் பயன்கள் இத்திக்கும் பொருந்தும்.
அடுத்த இதழில்...
மூலிகைக் கிழங்குகள் குறித்துப் பார்ப்போம்.