நல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா! தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்!

மருத்துவம் 28 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
சித்த மருத்துவத்தில் நீண்ட நாள்களாக உடலை வளமாக்கு வதற்கும் வலிமையாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகைதான் அமுக்கராக்கிழங்கு.
இக்கிழங்கில் குதிரையின் சிறுநீர் மணம் இருப்பதால், சம்ஸ்கிருதத்தில் ‘அசுவகந்தா’ என்று அழைக்கப்படுகிறது. (அசுவம் – குதிரை, கந்தம்- மணம்) மேலை நாட்டினர் வயாகராவைக் கண்டறியும் முன்னரே நமது நாட்டினர் அமுக்கராக்கிழங்கைக் கையாண்டு வந்துள்ளனர். பேச்சுவழக்கில் இதை, மக்கள் ‘அமுக்குனாங்கிழங்கு’ என்றே கூறி வருகிறார்கள். பரபரப்பாகப் பேசப்பட்ட வயாகரா (Viagra), அதிக பக்கவிளைவுகளால் வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டது. ஆனால், எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் மனித உடலில் ஏழு தாதுக்களையும் படிப்படியாக வலிமைப்படுத்தி, ஆண்மையைப் பெருக்குவதால் அமுக்கராவுக்கு, இதுவரை எந்தப் பக்கவிளைவுகளும் கண்டறியப்படவில்லை.

இது அமுக்கராவுக்கு மட்டுமல்ல, சித்த மருந்துகள் அனைத்துக்கும் பொருந்தும். அமுக்கராவுக்கு இணையாக இன்னொரு மூலிகையைக் கூற வேண்டுமென்றால், சீனர்களின் மருத்துவத்தில் பயன்படும் ‘சின்சென்ங்’கை மட்டுமே கூற முடியும். நாட்டு அமுக்கரா, சீமை அமுக்கரா என இதில் இரண்டு வகையுண்டு. இவற்றில் நாட்டு அமுக்கரா என்பது, தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் குளக்கரைகள், தரிசு நிலங்களில் இயல்பாக வளரும் புதர்த்தாவரமாகும். இது, பெரும்பாலும் சுண்டைச்செடியை ஒத்திருக்கும். சீமை அமுக்கரா, வட இந்தியாவில் பயிராகும் தாவரம். பொதுவாக, அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்கள் சீமை அமுக்கராவை உள்மருந்தாகவும், நாட்டு அமுக்கராவைப் புற மருந்தாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.
அமுக்கராக் கிழங்குடன் சுக்கு சேர்த்து வெந்நீர்விட்டு அரைத்து, வீக்கங்களுக்குப் பற்றுப்போட்டு வர வலியும் வீக்கமும் நன்கு குறையும். இதையே முன்கழுத்துக்கழலை வீக்கத்துக்கும் இடுப்புவலிக்கும் போட்டுவர விரைவில் குணமாகும். நாட்டு அமுக்கராக்கிழங்குகளைப் பச்சையாக எடுத்து வந்து, சிறு சிறு வில்லைகளாக நறுக்கிப் பாலில் வேகவைத்து நன்கு உலர்த்திப் பொடி செய்துகொள்ளவும். இப்பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் காலை, மாலை இரு வேளையும் காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட்டுவர ஆண்டுக் கணக்கில் துன்பம் தந்து கொண்டிருக்கும் இடுப்புவலி குணமாகும்.
சர்க்கரை நோய்ப் பாதிப்பு இல்லை என்றால் அமுக்கராப் பொடியுடன் சீனி சேர்த்துக் கொள்ளலாம். நாட்டு அமுக்கரா பச்சையாகக் கிடைக்கவில்லை என்றால், நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் நாட்டு அமுக்கராவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சீமை அமுக்கராக் கிழங்கைப் பின்வருமாறு பாலாவியலாக வேகவைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான பசும்பால் ஊற்றி, அதனுடன் 4 பங்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அப்பாத்திரத்தின் அகன்ற மேல்வாயில் ஒரு வெள்ளைப் பருத்தித்துணியால் வேடுகட்டிக் கொள்ள வேண்டும். அந்தத்துணியில், அமுக்கராக் கிழங்குகளைப் பரப்பி வைத்து அடுப்பிலேற்றி, பால் வற்றும்வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இதைப் ‘பிட்டவியல்’ என்றும் சொல்வோம்.
இவ்வாறு பாலாவியலாக வேகவைத்து எடுக்கப்பட்ட சீமை அமுக்கராக் கிழங்குகளை நன்கு அலம்பி, உலர்த்தி இடித்துப் பொடி செய்துகொள்ளவும். இப்பொடியில் 2 முதல் 4 கிராம் (அரை முதல் ஒரு தேக்கரண்டி) எடுத்துத் தேனில் கலந்து உண்டுவர இளைத்த உடல் பருக்கும். அதிக மூச்சுவாங்குதல், சோர்வு, களைப்பு, படபடப்பு, மனபயம் முதலியவை நீங்கும். முகமும் பொலிவு பெறும். மனநோயாளிகளுக்கு இம்முறை மிகவும் சிறந்தது.

‘அமுக்கராச்சூரண மாத்திரை’ என்ற பெயரில் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கிறது. இருப்பினும், அவை எல்லாவற்றையும்விட, நாமே மேற்கண்ட முறையில் தயாரித்துச் சாப்பிடுவதே மிகுந்த நன்மை தரும். முன்னர்் சொல்லியுள்ளபடி பக்குவப்படுத்தப்பட்ட அமுக்கரா வேர், தூதுவேளை சமுலம், இரண்டையும் சம எடை எடுத்துப் பொடி செய்து அரை முதல் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது காய்ச்சின பசும்பாலில் கலந்து சாப்பிட்டுவர, நாட்பட்ட சளிக்கட்டு நீங்கி, உடல் வலிமை அடையும். அமுக்கராவைத் தனியாகச் சாப்பிட்டால் உடல் பருத்துவிடும் என்ற ஒரு தவறான கருத்து மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. அமுக்கராக்கிழங்குப் பொடியைச் சாப்பிட்டு வந்தால் ‘மெலிந்த உடல் பருக்கும், பருத்த உடல் இளைக்கும்’ என்பதே உண்மை.

படிக்க வேடிக்கையாக இருந்தாலும், இதுவே சித்த மருத்துவத்தின் மகிமை. முறையாகச் செய்து முடிக்கப்பட்ட சித்த மருந்துகள், நவீன மருந்துகளைப் போல ஒரு குறிப்பிட்ட விளைவை மட்டுமே ஏற்படுத்துவதில்லை. பாதிக்கப்பட்ட வளி (வாதம்), அழல் (பித்தம்), ஐயம் (கபம்) ஆகிய குற்றங்களைச் சமன்படுத்தி உடலை நல்ல நிலையில் இருத்தி வைப்பதே சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாகும். இது அறிவியல் ஆய்வுகளுக்கு அடங்காதது. ஆனால், அனுபவத்தில் கண்டறியப்பட்டதாகும்.

அமுக்கராக்கிழங்குப் பொடியைத் தனியாக உபயோகித்துக் கொள்வதைவிட உடலில் உள்ள குற்றங்கள், தாதுக்களை நிலைப்படுத்தும் விதமாகப் பயன்படுத்தலாம். இதற்குச் சித்த மருத்துவ அடிப்படை மெய்யியல் மூலம் வடிவமைக்கப்பட்ட பின்வரும் சூரணம், மிகுந்த நன்மை தருவதாகும். கிராம்பு 10 கிராம், சிறுநாகப்பூ 20 கிராம், ஏலக்காய் 30 கிராம், இலவங்கப்பட்டை 40 கிராம், இலவங்கப்பத்திரி 50 கிராம், சீரகம் 60 கிராம், கொத்தமல்லி 70 கிராம், மிளகு 80 கிராம், திப்பிலி 160 கிராம், சுக்கு 320 கிராம், பாலாவியலாக வேகவைத்துப் பக்குவப்படுத்தப்பட்ட சீமை அமுக்கராக்கிழங்கு 640 கிராம் இவை அனைத்தையும் நன்கு இடித்துப் பொடி செய்து ஒரு மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவும். இதுவே அமுக்கராச்சூரணம் ஆகும்.
அமுக்கராக்கிழங்குப் பொடியைச் சாப்பிட்டு வந்தால், ‘மெலிந்த உடல் பெருக்கும், பருத்த உடல் இளைக்கும்’ என்பதே உண்மை. கேரளாவில் நிறைய வீடுகளில் சதாவேரியை வளர்த்து, அதன் கிழங்குகளை ஊறுகாய் செய்து சாப்பிடும் பழக்கம் இன்றும் உள்ளது.
இதைக் காலை, மாலை இருவேளை 1 முதல் 2 கிராம் தேன் அல்லது காய்ச்சின பசும்பாலில் கலந்து உண்டுவர உடல் உரமாகும். வெள்ளைப்படுதல், மேகச்சூடு, மேக ஊறல், உடல் மெலிதல் ஆகியவை நீங்கும். அமுக்கராக்கிழங்கு சேர்த்துச் செய்யக்கூடிய ‘அமுக்கரா லேகியம்’ அல்லது ‘அசுவகந்தி இளகம்’, எல்லாச் சித்த மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். இதை உட்கொண்டால் மேற்கண்ட எல்லா நன்மைகளும் கிடைக்கும். கடைகளில் கிடைக்கும் அசுவகந்தா பலாத்தைலம் தேய்த்துக் குளித்துவர தலை மற்றும் கபம், சுரம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி உடல் வலிமை அடையும்.
நிலப்பனைக் கிழங்கு
இது மழைக்காலத்தைத் தொடர்ந்து, மலையடிவாரங்களில் உள்ள ஓடைக்கரைகள், மணல் சார்ந்த இடங்களில் முளைக்கின்ற ஒரு சிறுசெடியாகும். பனை முளைக்கும்போது தோன்றுகின்ற குருத்துகளைப் போலவே இச்செடியும் காணப்படும். இதன் கிழங்கு பூமிக்கடியில் (10 முதல் 20 செ.மீ வரை) அப்படியே பனைமரத்தை ஒரு சிறுநகல் எடுத்தால் எவ்வாறு காணப்படுமோ, அப்படியே இருக்கும். அதனால், இதற்கு ‘நிலப்பனை’ என்று பெயர். மஞ்சள் நிறத்தில் சிறிய பூக்கள் காணப்படும் இதன் கிழங்கை அப்படியே தோண்டி எடுத்து, அதன்மேல் இருக்கும் கறுப்பு நிறத் தோலை, கருங்கல்லால் சுரண்டி நீக்க வேண்டும். பிறகு, நடுநரம்பையும் நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பாலில் அல்லது பாலாவியலாக வேகவைத்து, அலம்பி, நன்கு காயவைத்துப் பத்திரப்படுத்தவும்.

பிறகு, இவற்றை மர உலக்கையால் (இரும்புப் பூண் அல்லது வளையம் இல்லாத உலக்கை) இடித்துத் துணியில் சலித்துக் காலை, மாலை ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டுவர இடுப்புவலி, மேகம், வெள்ளைத் தழும்புகள், மேகவூறல் முதலியவை குணமாகும். போகத்தில் அதிக நாட்டம் ஏற்படுவதுடன் விந்து நீரின் அளவு பெருகும். முன்னர் சொன்னபடி தயாரிக்கப்பட்ட நிலப்பனைக் கிழங்குப்பொடியை 5 கிராம் அளவு இருவேளை காய்ச்சின பசும்பாலில் கலந்து பெண்கள் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சிக்கல்கள் தீரும். வெள்ளைப்படுதல் நீங்கி உடல் வலுப்பெறும். நிலப்பனைக்கிழங்குச்சாறு, தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு மற்றும் பசுநெய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்து காய்ச்சின பதத்தில் வடித்துக் காலை, மாலை 5 மி.லி வீதம் சாப்பிட்டுவர, எலும்புருக்கி எனப்படும் காசநோயால் ஏற்படும் உடல்மெலிவு குணமாகும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு
கோடைக்காலத்தில் தோண்டி எடுத்து இதன் கிழங்கைச் சீவிவிட்டால் தண்ணீர் விடும். அதனால், இதைத் ‘தண்ணீர்விட்டான் கிழங்கு’ என்று அழைக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தில் ‘சதாவேரி’ என அழைக்கப்படுகிறது. முட்களை உடைய புல் போன்ற இலை அமைப்பையுடைய ஒரு கொடியாகும். இக்கொடியின் வேரில் நீண்ட கிழங்குகள் கொத்தாகக் காணப்படும். இதில், நீண்ட கிழங்குகளை உடைய சீமை தண்ணீர்விட்டான் கிழங்கு என்ற வகையும் உண்டு. இதன் பச்சைக்கிழங்குகளைச் சாறெடுத்து, பால் சேர்த்துப் பாலூட்டும் தாய்மார்களுக்குக் கொடுக்க, தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதுடன் வயிற்றுப் புண்களையும் ஆற்றும். உடல் வெப்பம் தணிந்து வெள்ளைப்படுதல் குணமாகும். உட்காய்ச்சல், உடம்பெரிச்சல், கரப்பான், எலும்புருக்கி முதலான நோய்கள் நீங்கி உடல் நன்கு தேறும். உலர்ந்த கிழங்குகளைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துத் தேனில் கலந்து உண்டுவந்தால், முதுமையில் ஏற்படும் சோர்வு, மன உளைச்சல், அலுப்பு ஆகியவை நீங்கும். இளைஞர்களும் இதை உண்டு வரலாம். நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கின்ற சதாவேரிக் கிருதம், சதாவேரி லேகியம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கிப் பயன்படுத்தி வந்தால் மேற்கண்ட நான்கு பலன்களையும் பெறலாம். கேரளாவில் நிறைய வீடுகளில் சதாவேரியை வளர்த்து, அதன் கிழங்குகளை ஊறுகாய் செய்து சாப்பிடும் பழக்கம் இன்றும் உள்ளது.
அடுத்த இதழில்...
பூலாங்கிழங்கு, மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் குறித்துப் பார்ப்போம்.