மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

உயிர் மூடாக்கு, உழவில்லா வேளாண்மை, பண்ணைக் குட்டை...

 தென்னந்தோட்டத்தில் ராமலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தென்னந்தோட்டத்தில் ராமலிங்கம்

நம்மாழ்வார் வழியில் வெற்றிநடைபோடும் தென்னை விவசாயி!

“ ‘வீடுதான் சுத்தமா இருக்கணும்... காடு குப்பையாத்தான் இருக்கணும். மண்ணுல ஈரப்பதத்தைத் தக்க வைக்குறதுக்கும், களை களைக் கட்டுப்படுத்துறக்கும் மூடாக்கு ரொம்ப அவசியம்’னு நம்மாழ்வார் ஐயா சொல்வாரு. அவர் சொன்னதை நான் தீவிரமா கடைப் பிடிச்சிக்கிட்டு இருக்கேன். என்னோட தென்னந் தோப்புல நான் உழவு ஓட்டுறதே இல்லை. இதுக்கான பலன்களை நான் கண்கூடா பார்த்துக்கிட்டு இருக்கேன். இது மட்டுமல்ல... நம்மாழ்வார் சொன்ன இன்னும் பல வழி முறைகள், தென்னை விவசாயத்துல எனக்கு ரொம்பவே கைகொடுத்துக்கிட்டு இருக்கு.’’

மிகுந்த நெகிழ்ச்சியோடு பேசும் ராமலிங் கத்தின் தென்னந்தோப்பு, விருதுநகர் மாவட்டம், நத்தம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒரு பகல்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். தென்னை மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த ராமலிங்கம் புன்னகை படர்ந்த முகத்துடன் நம்மை வரவேற்றார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்தவர், தென்னந்தோப்புக் குள் நடைபோட்டவாறே உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “என்னோட தோப்பு முழுக்க எப்பவும் களைச்செடிகளும் புற்களும் மண்டிக் கிடக்கும். சூரிய வெப்பம் நேரடியா மண்ணுல படாமல் தடுக்க, இந்த உயிர் மூடாக்கு உறுதுணையா இருக்கு. இயற்கை விவசாயத்துக்கு மாறின முதல் வருஷம் மட்டும்தான் அதுவும் பல தானிய விதைப்புக் காக உழவு ஓட்டினேன். கடந்த நாலு வருஷமா உழவு ஓட்டவே இல்லை. வருஷத்துக்கு ஒரு தடவை களைச்செடிகளைக் கைகளால புடுங்கி, என்னோட தோப்புக்குள்ளயே போட்டுடுவேன். அது மட்கி மண்ணுக்கு உரமாயிடும்” என்று சொன்னவர், தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

 தென்னந்தோட்டத்தில் ராமலிங்கம்
தென்னந்தோட்டத்தில் ராமலிங்கம்

‘‘என்னோட அம்மா-அப்பா ரெண்டு பேருமே ஆசிரியர்கள். அதோடு எங்க பூர்வீக தொழிலான விவசாயத்தையும் தொடர்ந்து செஞ்சுகிட்டு இருந்தாங்க. நான் பி.ஏ, பி.எட் படிச்சிட்டு, டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் 2009-ம் வருஷம் கருவூலக் கணக்குத்துறையில பணிக்குச் சேர்ந்தேன். என்னோட அப்பா ஆசிரியர் பணியில இருந்து ஓய்வுபெற்ற பிறகு விவசாயத்துல தீவிரமாகிட்டாரு. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன் படுத்திதான் நெல், தென்னை சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தார். இந்த ரெண்டுலயே நாளடைவுல படிப்படியா மகசூல் குறைய தொடங்குச்சு. எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஈடுபாடு அதிகம்ங்கற துனால, ரொம்ப கவலையா போயிடுச்சு. அப்பதான் இயற்கை விவசாயத்துக்கு மாறணும்ங்கற எண்ணம் ஏற்பட்டுச்சு. அதுக்கான தேடல்கள்ல இறங்கினேன். பசுமை விகடன் மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் நம்மாழ்வார் ஐயாவோட கருத்துகளையும் வழிகாட்டுதல் களையும் உள்வாங்கினேன்.

‘காட்டுக்குள்ள இருக்குற மரங்கள்... ஆத்தோரம் இருக்குற மரங்கள்... புறம்போக்கு நிலங்கள்ல உள்ள மரங்களைப் பாருங்க... அதுக்கெல்லாம் யாருய்யா உரம் போட்டா, களை எடுத்தா? அதெல்லாம் தானாதானே வளருது. அதுக்குத் தேவையானதை இயற்கை கொடுத்துடும். மனுஷங்க தொந்தரவு பண்ணாம இருந்தா போதும். விவசாய நிலங்களைப் பொறுத்தவரைக்கும் ‘மூடாக்கு’ங்கிற பச்சைப் போர்வைதான் முக்கியம். பூமித்தாயிக்கு அந்தப் பச்சைப் போர்வையைப் போர்த்தாம உரம், பூச்சிக் கொல்லி கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா சாகடிச்சுகிட்டிருக்கோம்’னு அவர் சொன்ன விஷயம் என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினுச்சு.

நெல் சாகுபடி
நெல் சாகுபடி

2017-ம் வருஷம் என்னோட அப்பா காலமானதும் விவசாயத்தை நானே முழுசா கவனிச்சுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. அந்த வருஷம்தான் இயற்கை விவசாயத்துல இறங்கினேன். தென்னந் தோப்புல பலதானிய விதைப்பு செஞ்சு, பூ பூத்த தருணத்துல மடக்கி உழுதேன். மட்கின தொழுவுரத்தோடு மண்புழுவுரமும் கலந்து அடியுரம் கொடுத்தேன். 15 நாள்களுக்கு ஒரு தடவை சுழற்சி முறையில அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலத்தைப் பாசன நீருடன் கலந்துவிட்டேன். இயற்கை விவசாயத்துக்கு மாறின முதல் வருஷம் தொடர்ச்சியா மூன்று முறை பல தானிய விதைப்பு செஞ்சு மடக்கி உழுததால மண்ணு ரொம்ப விரைவா வளமாக ஆரம்பிச்சது. ‘எருக்கிலைக் கரைசலுக்கு எப்பேற்பட்ட நோயும் கட்டுப்படும்’னு ஐயா சொல்லுவார். 20 நாளுக்கு ஒருமுறை எருக்கிலைக் கரைசல் கொடுத்தேன். இயற்கை விவசாயத்துக்கு மாறின அடுத்த ரெண்டு வருஷத்துலயே நல்ல முன்னேற்றம் தெரிஞ்சது. கொஞ்சம் கூடப் பூச்சி, நோய்த்தாக்குதல்களே ஏற்படலை. மகசூலும் அதிகரிச்சது. நம்மாழ் வார் ஐயோவோட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிச்சதுனால ஏற்பட்ட பலன்களையும், இயற்கை விவசாயத்தோட மகத்துவத்தையும் பார்த்து நான் வியந்து போனேன். இயற்கை விவசாயத்துல பாரம்பர்ய நெல் சாகுபடியும் செஞ்சுகிட்டு இருக்கேன். இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 7 ஏக்கர். இதுல 4 ஏக்கர்ல தென்னை இருக்கு. 1 ஏக்கர்ல ஆத்தூர் கிச்சிலிச் சம்பா நெல் சாகுபடி செஞ்சிருக்கேன். மீதமுள்ள நிலத்துல இயற்கை முறையில வாழை சாகுபடி செய்றதுக்காக நிலத்தைத் தயார்படுத்திக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னவர், தென்னை சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துப் பேசினார்.

தென்னந்தோட்டம்
தென்னந்தோட்டம்


‘‘4 ஏக்கர்ல மொத்தம் 375 தென்னை மரங்கள் இருக்கு. மரத்துக்கு மரம் 20 அடி இடைவெளி இருக்கு. 50 நாள்களுக்கு ஒருமுறை காய்கள் வெட்டுறோம். வருஷத் துக்கு 7 வெட்டுகள் மூலம், மொத்தம் 42,000 காய்கள் கிடைக்குது. ஒரு காய்க்குக் குறைந்தபட்சம் 8 ரூபாய் வீதம், 3,36,000 ரூபாய் வருமானமாக் கிடைக்குது. பராமரிப்புச் செலவுகள், அறுவடைக்கூலி 80,000 ரூபாய் போக, மீதி 2,56,000 ரூபாய் நிகரலாபமா கிடைக்குது. இது எனக்கு நிறைவான லாபம். ஒரு விவசாயி தன்னோட விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சாதான், தன்னோட உழைப்புக்கான முழுப் பலனையும் அடைய முடியும்னு நம்மாழ்வார் வலியுறுத்துவார். என்னோட தோப்புல விளையுற தேங்காய் களை, எண்ணெய்யா மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாங்கிற திட்டத்துல இருக்கேன்” என உற்சாகமாகச் சொல்லி முடித்தார் ராமலிங்கம்.


தொடர்புக்கு, ராமலிங்கம்,

செல்போன்: 97897 14403

எருக்கு கரைசல்

200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மில் 20 கிலோ எருக்கு இலை, பூ மற்றும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட எருக்கு கிளைகளையும் போட வேண்டும். இதனுடன் 1 கிலோ கடலைப் பிண்ணாக்கு போட்டு 180 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி விட வேண்டும். அடுத்த 5 நாள்களில் எருக்கு கரைசல் தயாராகிவிடும்.

ஊட்டமேற்றப்பட்ட எரு

நிழலில் பிளாஸ்டிக் தாளை விரித்து 1,000 கிலோ மட்கின தொழுவுரத்துடன் கடலைப்பிண்ணாக்கு 2 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 2 கிலோ, அசோஸ்பைரில்லம் 2 லிட்டர், பாஸ்போபாக்டீரியா 2 லிட்டர், சூடோமோனஸ் 1 லிட்டர், டிரைக்கோடெர்மா விரிடி 1 லிட்டர், மீன் அமிலம் 2 லிட்டர் ஆகியவற்றைத் தெளித்துக் கலவையாக்கி ஒரு வாரம் வரை வைத்திருந்தால் ஊட்டமேற்றப்பட்ட எரு தயார்.

நிலம் ஆறு மாதத்தில் வளமாகிவிடும்!

ஆண்டுக் கணக்கில் ரசாயன உரம் பயன்படுத்திய நிலம் என்றாலும், அதை ஆறே மாதத்தில் வளமேற்றிவிடலாம். பயறு, சிறுதானியம், நறுமணப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகிய அனைத்தும் கலந்த விதைகள் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் விதைப்புச் செய்ய வேண்டும். 20-ம் நாளில் அப்படியே மடக்கி உழ வேண்டும். இரண்டாவது முறை மீண்டும் விதைத்து 45-வது நாளில் மடக்கி உழ வேண்டும். மூன்றாவது முறை மீண்டும் விதைத்து 90 நாள்கள் வரை அவற்றை வரை வளரவிட்டு, மடக்கி உழ வேண்டும்.

இப்படி மூன்று முறை விதைத்து, மடக்கி உழுவதால் நிலம் வளமேறிவிடும். ஒருமுறை விதைத்தால் மட்டும் போதாது. பல விவசாயிகள் ஒரு முறை மட்டுமே விதைக்கிறார்கள். நம்மாழ்வார் சொன்னதுபோல மூன்று முறை விதைத்து உழ வேண்டும்.

தென்னந்தோட்டத்தில்
தென்னந்தோட்டத்தில்

இப்படித்தான் சாகுபடி

தென்னை நடவு செய்யும் முறை மற்றும் பராமரிப்பு குறித்து ராமலிங்கம் தெரிவித்த தகவல்கள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு, தென்னை நடவு செய்யலாம். கோடைக்காலத்தில் நடவு செய்யக்கூடாது. வண்டல் மண், செம்மண் மற்றும் மணல் கலந்த மண் வகைகளில் தென்னை சிறப்பாக வளரும். தேர்வு செய்த நிலத்தில், கன்றுக்கு கன்று மற்றும் வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில் 3 அடி ஆழம், 3 அடி சுற்றளவில் குழி எடுக்க வேண்டும். குழியில் சுமார் முக்கால் அடி உயரத்துக்குப் பொலபொலப்பான மண்ணை நிரப்பி, 10 கிலோ மாட்டு எருவுடன், 200 கிராம் சூடோமோனஸ் கலந்து இட வேண்டும். அதற்குப் பிறகு கன்று நடவு செய்து, குழியை மண்ணைப் போட்டு மூட வேண்டும்.

மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, அவ்வப்போது காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். கன்றுகள் நடவு செய்த ஓராண்டு வரை இடுபொருள்கள் கொடுக்க வேண்டியதில்லை. அதற்குப் பிறகு, 20 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் அமுதக்கரைசலை (ஒரு ஏக்கருக்கான அளவு) பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 15 நாள்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா (200 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து) மற்றும் மீன் அமிலத்தைச் சுழற்சி முறையில் (200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் மீன் அமிலம்) பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 30 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் எருக்கு கரைசலை பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

6 மாதத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு மரத்தின் தூரைச் சுற்றி அரை அடி ஆழத்தில், அரை வட்ட அளவில் குழி எடுத்து ஒரு மரத்துக்குத் தலா 10 கிலோ ஊட்டமேற்றப்பட்ட எரு போட்டு மண் அணைக்க வேண்டும்.

மட்டைகளைக் கழிச்சா, காய்ப்பு குறையும்

‘‘ ‘மழைக்காலம் முடிஞ்சதும் காய்ந்த மட்டையை விவசாயிகள் கழிப்பாங்க. அதுக்குப் பிறகு மரம் பார்க்குறதுக்கு வழுவழுப்பா அழகாத்தான் தெரியும். ஆனா, கொஞ்ச நாள்ல பச்சை மட்டைகளும் காய்ந்து கீழே விழுந்துடும். மட்டை எண்ணிக்கை குறைஞ்சுட்டா காய்ப்பு குறைஞ்சுடும்’னு நம்மாழ்வார் சொல்லியிருக்கார். அதனால நான் என்னோட தென்னை மரங்கள் உள்ள மட்டைகளைக் கழிக்குறதே இல்லை. அதுவே தானா விழுந்தாதான்’’ என்கிறார் ராமலிங்கம்.

பண்ணைக்குட்டை
பண்ணைக்குட்டை

நீர்மட்டத்தை உயர்த்தும் பண்ணைக்குட்டை!

‘‘ ‘நிலத்துல விழுகுற மழைத் தண்ணி நம்ம தோட்டத்தைவிட்டு வெளியே போகக் கூடாது. பண்ணைக்குட்டை அமைக்குறது ரொம்ப அவசியம்’னு நம்மாழ்வார் ஐயா சொல்வார். மழைநீரைச் சேமிச்சி வச்சுக்கிட்டா வறட்சிக் காலங்கள்ல பயன்படுத்திக்கலாம். நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும்னு அவர் வலிறுத்துறார். இதையும் என் தோட்டத்துல கடைப்புடிச்சிட்டு வர்றேன். 75 அடி நீளம், 30 அடி அகலம், 10 அடி ஆழத்துக்குக் குட்டை அமைச்சிருக்கேன்’’ என்கிறார் ராமலிங்கம்.

தென்னையைப் பட்டுப் போக வைக்கும் உழவு!

``தென்னை மரத்தோட வேர்கள் நீளமாகப் போகும். தொலைவுல உள்ள தண்ணியையும் சத்தையும் உறிஞ்சும். தென்னந்தோப்புல அடிக்கடி உழவு செஞ்சுகிட்டே இருந்தா, வேர்கள் வெட்டுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெட்டுப்பட்ட வேர்கள் வழியா வைரஸ்கள் மரத்துக்குள்ளார ஊடுருவி நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால தேங்காய் சொறி சொறியா மாறிடும். அடிக்கடி உழவு செஞ்சா நிலத்துக்கு அடியில உள்ள கீழ்மண் வெளியில வரும். அதுல உள்ள சத்துகள் சூரிய வெப்பத்தால பாதிக்கப்படும். உழவு செய்யும்போது வேர்கள் அறுபட்டால், வெட்டுப்பட்ட பகுதியின் வழியா கண்டாமிருக வண்டு மரத்துக்குள் ஊடுருவி பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனாலதான் தென்னந்தோப்புல உழவு செய்றதை தவிர்க்கணும்னு நம்மாழ்வார் சொல்றாரு’’ என்கிறார் ராமலிங்கம்.

100 கிலோ கழிவுகள்

“ஒரு தென்னை மரத்துல இருந்து மட்டை, பாளை என வருஷத்துக்கு 100 கிலோ கழிவுகள் வரை கீழே விழும். இதெல்லாமே மண்ணுக்கு அருமையான உரம்தான். ஆனா, நம்ம விவசாயிங்க இதையெல்லாம் பண்ணையை விட்டு வெளியேத்திட்டு, நிறைய செலவு பண்ணி ரசாயன உரங்கள் போடுறாங்க. இதனால நம்ம விவசாயிங்களுக்குச் செலவு அதிகமாகி, லாபம் கிடைக்காம போயிடுது.

‘தென்னையோட கழிவுகளைத் தோட்டத்தை விட்டு வெளியேத்துறதும் தவறு.... நிறைய காசு செலவு பண்ணி ரசாயன உரங்களை விலைக்கு வாங்கிக் கிட்டு வந்து தோட்டத்துக்குள்ள போடுறதும் தவறு. இந்த ரெண்டு தவறுகளையும் செய்யாம இருந்தாலே போதும். தென்னை விவசாயிங்களுக்கு நிறைவான லாபம் கிடைச்சுடும்’னு நம்மாழ்வார் சொன்னதை நான் முழுமையா கடைப்புடிச்சிக்கிட்டு இருக்கேன்’’ எனத் தெரிவித்தார் ராமலிங்கம்.

உப்புத்தன்மையை உறிஞ்சும் கோரைப் புல்

நிலத்தில் களைகளாக உருவாகக்கூடிய கோரை, கொழிஞ்சி, அவுரி, துத்தி, புற்கள் என அனைத்துமே நிலத்தை வளமாக்கக் கூடியதுதான். கோரைப்புல் காற்றிலுள்ள நீரை உள்வாங்கிச் சேமிக்கிறது. நிலத் திலுள்ள உப்புத்தன்மையை உறிஞ்சிவிட்டு நல்ல தண்ணீரை மட்டும் நிலத்தில் இறக்குகிறது. மண் வளமும் அதிகரிக்கிறது. செடிகள், மரங்கள் வளர தண்ணீர் அதிகம் தேவையில்லை. குறைந்தபட்சம் ஈரப்பதம் இருந்தாலே போதுமானது.

மூடாக்கு போடுவதால், தண்ணீரின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கும். தோட்டத்தில் வளரும் எந்த ஒரு தாவரமும் வெளியே போகக்கூடாது, தென்னை மட்டைகள், தேங்காய் உரிமட்டைகள் உள்ளிட்டவற்றை மூடாக்காகப் போடலாம்.