
சந்தை
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான அரவான் சிலை மைதானம், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டத்தால் களைகட்டுகிறது. ‘நம்மாழ்வார் ஞாயிறு அங்காடி’ என்ற பெயரில் கடந்த 15 வாரங்களாக இங்கு விஷேச சந்தை நடைபெற்று வருகிறது. பாரம்பர்யம் தொடர்பான அம்சங்கள் இதில் நிறைந்திருப்பதால், இவற்றால் ஈர்க்கப்பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் குடும்பத்தோடு இங்கு வருகை புரிகிறார்கள்.

100 ரூபாய் நன்கொடை
இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதுதான் நம்மாழ்வார் ஞாயிறு அங்காடியின் நோக்கம். கோயிலுக்குச் சொந்தமான இடம் என்பதால், இங்கு கடைகள் அமைக்கும் இயற்கை விவசாயிகளிடம், கோயிலின் வளர்ச்சி நிதியாக 100 ரூபாய் மட்டுமே நன்கொடை பெறப்படுகிறது. அந்தச் சிறு தொகையும்கூட கட்டாயமில்லை. வாரந்தோறும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இச்சந்தை செயல்படுகிறது. ‘ஆரோக்கியமான சமுதாயமே... நமது லட்சியம்’ என்பது இந்தச் சந்தையின் தாரக மந்திரம்.

கல்செக்கு எண்ணெய், மலைத்தேன்
இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், பழங்கள், பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள், விதைகள், மூலிகைச் செடிகள், சோற்றுக் கற்றாழையில் தயாரிக்கப்பட்ட சருமத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருள்கள், மரச்செக்கு எண்ணெய், கல் செக்கால் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள், சுத்தமான மலைத்தேன், பாரம்பர்ய உணவு வகைகள், இயற்கை வேளாண் இடுபொருள்கள் உட்பட இயற்கை சார்ந்த அனைத்துப் பொருள்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. இங்கு இயற்கை விவசாயிகளே நேரடியாகக் கடைகள் அமைத்து தங்களுடைய உற்பத்திப் பொருள்களை மக்களிடம் விற்பனை செய்வதால், நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த உழவன் கே.எம்.பாலு, ஜெ.எல் என அழைக்கப் படும் லட்சுமணன் மற்றும் திரௌபதி அம்மன் கோயில் தர்மகர்த்தா பாலாஜி லோகநாதன் ஆகியோர் சந்தையை நடத்தி வருகிறார்கள். இவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் உதயசங்கரும் சந்தைக்கான பணிகளை கவனித்து வருகிறார். தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்புச் சார்பில் ஆண்டுதோறும் ‘ஆற்காடு அரிசித் திருவிழா’ நடைபெறுவது வழக்கம். அதனால் ஏற்பட்ட ஆர்வத்தின் காரண மாகவும் அதன் நீட்சியாகவும்தான் நம்மாழ்வார் ஞாயிறு சந்தை நடத்தப்படுகிறது.

சுடச்சுட காளான் பிரியாணி
ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் வந்துசெல்லும் சுற்றுலா தளம் போலவே இச்சந்தை மாறி வருகிறது. தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கிய பிறகு, இச்சந்தையில் விற்பனை செய்யப்படும் பாரம்பர்ய உணவு வகைகளை வாங்கி இங்கேயே ருசித்துப் பசியாறுகிறார்கள். பாரம்பர்ய உணவு வகைகள் விற்பனை செய்யும் கடையில் காலை 10 மணிக்குமேல் காளான் பிரியாணி சுடச்சுட விற்பனை செய்யப்படுகிறது. வீட்டுக்குப்போய் அவசர அவசரமாகச் சமைக்க வேண்டுமே, பிள்ளைகள் பசியோடு இருப்பார்களே? என்று யாரும் பதறுவதில்லை. பாரம்பர்யம் தொடர்பான அனைத்துப் பொருள்களும் கிடைப்பதால், மக்கள் நம்பிக்கையோடு இங்கு வந்து, தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு மனநிறைவோடு வீடு திரும்புகிறார்கள்.

இந்த ஞாயிறு அங்காடியில் கடை அமைக்க விரும்பும் இயற்கை விவசாயிகளுக்கும், பொருள்களை வாங்க வரக்கூடிய நுகர் வோருக்கும் வழிகாட்டுவதற்கு ரேகா சிவகுமார், பேரரசு ஆகிய இருவர் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பொருள்கள் குறித்தும், அது தயாரிக்கப்பட்ட விதம், அதில் அடங்கியிருக்கும் பயன்கள் குறித்த பட்டியல் ஒவ்வொரு கடையிலும் தொங்கவிடப்பட்டுள்ளது. இதனால், நுகர்வோர் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் செல்கிறார்கள். அங்காடி அமைப்பாளர்களின் விளக்கத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை.

பூனைக்காலி காய்கள், வெப்பாலை எண்ணெய்
கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த ‘தமிழர் மரபுகளின் சங்கமம் மற்றும் விதையுடன் உணர்வுகள்’ குழுவினர் அமைத்திருந்த அரங்கில், பூனைக்காலி காய்கள் கொத்துக் கொத்தாக வைக்கப்பட்டிருந்தன. ‘அவரைக்காய் வழி மரபுடைய கொடி வகைக் காயான பூனைக்காலியை சமைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். ஆண்மை குறைவு, குழந்தையின்மை போன்றவற்றைச் சரிசெய்து நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டும்’ என்கிறார் இச்சந்தையில் வழிகாட்டியாகப் பணியாற்றும் ரேகா சிவகுமார். உடல் எரிச்சல் மற்றும் சரும பிரச்னைகளைச் சரிசெய்யக்கூடிய வெப்பாலை மூலிகை எண்ணெயும் இங்கு விற்பனைச் செய்யப்படுகிறது. முடவாட்டுக்கால் கிழங்கும் இங்கு இடம்பெற்றுள்ளது.

‘இந்தக் கிழங்கில் மிகவும் அபூர்வமான மருத்துவக் குணம் அடங்கியிருக்கிறது. கீழ்வாதம், முடக்குவாதம், மூட்டுவாதம் போன்றவற்றைத் தணிக்கும் தன்மை கொண்டது. அதோடு, மனச்சோர்வு, சிறுநீர் எரிச்சல், நீர்க்கோவை உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்னைகளையும் சரிசெய்கிறது. முடவாட்டுக்கால் ரசத்தை 10 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, தசைப் பிறழ்வு ஆகியவை குணமாகும்’ என்கிறார்கள் விதையுடன் உணர்வுகள் குழுவினர்.

நாட்டுப் பசுஞ்சாணத்தில்
மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்
பி.டெக், எம்.பி.ஏ பட்டதாரியான விக்னேஷ் மற்றும் இவருடைய நண்பர் நித்தின் பிரபு இருவரும் சேர்ந்து நாட்டுப்பசுஞ்சாணத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்து இங்கு விற்பனை செய்கிறார்கள். நம்மிடம் பேசிய இருவரும், ‘‘நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படணும், பரவலாக்கப்பட்டணும். இதோட சாணம் பல வகைகள்லயும் பயன்படுத்தப்பட்டால்தான் இதுக்கான தேவை அதிகரிக்கும். நாட்டு மாடுகள் வளர்க்கணுங்கற எண்ணம் அதிகரிக்கும். வழக்கமா கடைகள்ல கிடைக்குற சாம்பிராணி, ஊதுபத்திகளை விட, நாட்டு மாட்டுச் சாணத்துல தயார் செய்யப்பட்ட சாம்பிராணி, ஊதுபத்திகள்ல வாசனை அதிகமா இருக்கும். புத்துணர்வு கொடுக்கும். மக்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தணுங்கற நோக்கத்துனாலதான் நிவி’ங்கற பேர்ல நாட்டுமாட்டுச் சாணத்துல இந்தப் பொருள்களைத் தயார் செஞ்சி விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கோம். மக்கள் ரொம்ப ஆர்வமா இதை வாங்கிக்கிட்டு போறாங்க’’ என மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்தார் விக்னேஷ்.


கேரட் மால்ட், பீட்ரூட் மால்ட்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கிரிதரன்-வனஜா தம்பதி இங்கு கடை அமைத்து, ‘வகி நேச்சுரல்ஸ்’ என்ற பெயரில் ஊட்டச்சத்துப் பொருள்கள் விற்பனை செய்கிறார்கள். பலதானியங்களில் தயார் செய்யப்பட்ட சத்து மாவு, பீட்ரூட் மால்ட், கேரட் மால்ட் உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய வனஜா, “கேரட் மால்ட், பீட்ரூட் மால்ட்கள்ல நாட்டுச் சர்க்கரை மட்டும்தான் சேர்க்குறோம், வேற எந்த ஒரு ரசாயன கலப்பும் இதுல கிடையாது. சூடான பால் அல்லது தண்ணி, தேங்காய்ப் பால், பருத்திப்பால்.. இதுல எது வேணும்னாலும் கேரட் மால்ட், பீட்ரூட் மால்ட்களைக் கலந்து குடிக்கலாம். ரொம்பச் சுவையா, வாசனையா இருக்கும். இந்த ரெண்டுமே உடம்புக்கு நல்ல சத்தான பானம்’’ எனத் தெரிவித்தார்.


கணினி துறையில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவர், தன்னுடைய மாமியாருடன் சேர்ந்து இங்கு கடை அமைத்திருந்தது கூடுதல் சுவாரஸ்யம். ஆற்காடு அருகேயுள்ள காவனூர் பகுதியைச் சேர்ந்த கவிதா, சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துவிடுவது வழக்கமாம். தங்களுடைய வீட்டுத் தோட்டத்தில் விளைவிக்கப்படுகிற காய்கறிகளை இச்சந்தைக்குக் கொண்டுவந்து விற்பனைச் செய்கிறார். அவருக்கு உதவியாகச் சிரித்த முகத்துடன் நுகர்வோரை வரவேற்கிறார் கவிதாவின் மாமியார் சுமதி.



இப்படியாக இன்னும் பல தரப்பட்ட கடைகள்... ஆரோக்கிய வாழ்வுக்குக் கைகொடுக்கக்கூடிய அனைத்துப் பொருள்களும் ஆற்காடு நம்மாழ்வார் ஞாயிறு அங்காடி சந்தையில் கிடைக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இச்சந்தையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உழவன் கே.எம்.பாலு, ‘‘இயற்கை விவசாயிகளையும், தங்களோட வீடுகள்லயே பாரம்பர்ய உணவுப்பொருள்களை ரொம்ப எளிமையான முறையில தயார் செய்யக்கூடியவங்களை ஊக்கப்படுத்துறதுக்காகத்தான் இந்தச் சந்தையை நாங்க ஆரம்பிச்சோம். அதேசமயம் ஆரோக்கியமான உணவுப்பொருள்களைச் சாப்பிடணுங்கற விழிப்புணர்வை மக்கள் மத்தியில பரவலாக்குறதோடு எல்லாப் பொருள்களும் ஒரே இடத்துல கிடைக்குற மாதிரி ஏற்பாடு பண்ணணும்னு ஆசைப்பட்டோம். எங்களோட எதிர்பாப்பு வெற்றிகரமா நிறைவேறிடுச்சி. நம்மாழ்வார் ஞாயிறு அங்காடி, ரொம்பக் குறுகிய காலத்துலயே ஆற்காடு மக்களோட கவனத்தை ஈர்த்திடுச்சி. திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள்ல இருந்தும் கூட நிறைய மக்கள் இங்க வர்றாங்க. ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்க வந்து ரொம்ப ஈடுபாட்டோட பொருள்களை வாங்கிக்கிட்டுப் போறாங்க. ஒவ்வொரு வாரமும் கூட்டம் அதிகமாகிக்கிட்டே தான் இருக்கு. கடைப் போடுற விவசாயிகளுடைய எண்ணிக்கையும் கூடிக்கிட்டே போகுது. பொதுவா விவசாயிகள் என்னதான் கடுமையா உழைச்சாலும், அந்த உழைப்புக்கேத்த லாபம் கிடைக்காத நிலைமை இருந்துக்கிட்டு இருக்கு. வியாபாரிங்களும் இடைத்தரகர்களும்தான் அதிக ஆதாயம் அடையுறாங்க.



இப்ப நாங்க அமைச்சிருக்குற சந்தையில விவசாயிகள் தங்களோட விளைபொருள்களை மதிப்புக்கூட்டி இங்க கொண்டு வந்து நேரடியா விற்பனைச் செஞ்சி லாபம் பார்க்கிறாங்க. ஆனா இதுமட்டும் போதாது. எங்களோட அடுத்தக்கட்ட இலக்கு... கிராமத்துக்குக் கிராமம் விவசாயக் குழுக்களை உருவாக்கி, இயற்கை விவசாயத்தை அதிகப்படுத்துறதோட, அவங்களுக்கான சந்தையை விரிவுப்படுத்தணும். தொண்டை மண்டல இயற்கை விவசாயிகளோட முகவரியாக இந்த ஞாயிறு அங்காடி வளர்ச்சி பெறணும்ங்கறதுதான் எங்களோட எதிர்காலத் திட்டம்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்புக்கு,
உதயசங்கர், ஒருங்கிணைப்பாளர்,
ஞாயிறு அங்காடி, ஆற்காடு.
செல்போன்: 86676 66574