
மாத்தியோசி
‘‘நம்மாழ்வார் ஐயாவை, இயற்கை வேளாண் விஞ்ஞானினு சொல்றாங்க. அவர் என்ன கண்டுபிடித்தார்?’’
இப்படி ஒரு கேள்வியைச் சில ஆண்டு களுக்கு முன்பு செங்கல்பட்டு அருகில் உள்ள கல்லூரிக்கு பேசச் சென்றபோது, என்னை நோக்கி ஒரு மாணவர் ஆர்வத்துடன் கேட்டார்.
நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானிகளை நம்மாழ்வார் உருவாக்கி யுள்ளார்; அதனால்தான் அவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி என அழைக்கப்படு கிறார். அவரால் உருவாக்கப்பட்டவர்களின் பட்டியலை முகவரியோடு என்னால் பகிர முடியும். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிரபலம் இல்லாதவர்கள்; அதை விரும் பாதவர்கள் என்றுகூட கூறலாம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மாநிலம் கடந்து, நாடு கடந்தும் நேரடியாக அவர் கைப்பிடித்து இயற்கை வேளாண்மை என்னும் பேருண்மையைக் கண்டு தெளிவு பெற்றவர்கள் நிறையவே உள்ளனர். வயல்வெளிதான் பல்கலைக் கழகம்... விவசாயிகள்தான் பேராசிரியர் என்ற அவரின் கொள்கைபடி பல ஏகலை வர்கள் இன்னும் உருவாகி வருகிறார்கள் என்று சுருக்கமாகப் பதில் சொன்னேன்.
‘‘உங்களைக் கடன் சுமையில இருந்து மீட்டு எடுக்க, ஒரு தொழில்நுட்பம் கிடைச்சுடுச்சு. இதுக்கு முன்னாடி, இது மாதிரி எளிமையான இயற்கை வளர்ச்சி ஊக்கி நம்ம கையில இல்ல. இதை எல்லாருக்கும் புரியுற மாதிரி ‘அமுதக்கரைசல்’னு பேர் வைப்போம்.’’
நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை ஏந்திப் பிடித்துத் தேசாந்திரியாகத் திரிந்த நாள்களில் நானும் அவருடன் இணைந்து பயணித்துள்ளேன்; அது ஒரு பொற்காலம். அப்போது திருவள்ளுவர் போக்குவரத்துக்குக் கழகம் என்ற பெயரில் தொலைதூரங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இருந்தன.
ஒரு முறை ஈரோட்டிலிருந்து செங்கல் பட்டுக்கு அந்தப் பேருந்தில் பயணம் செய்தோம். இரவு முழுக்கப் பேசினார், பேசினார்... பேசிக்கொண்டே இருந்தார்... டார்வின் தத்துவத்தில் மண்புழுக்கள், காந்தியின் காலம் தவறாமை, காமராஜரின் முக்கால் கை சட்டை, ஜி.டி.நாயுடு கண்டு பிடிப்புகள், தான் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் தோல்வி அடைந்து, பின் வெற்றி பெற்ற கதை... என இரவு 10 மணிக்கு அந்தப் பேருந்து கிளம்பும்போது ஆரம்பித்து, அதிகாலை 5 மணிக்குச் செங்கல்பட்டுக்கு வந்து சேரும் வரை பேசினார்; பேருந்தை விட்டு இறங்கிய பின்பும், கொசுக்கடிகளுக்கு மத்தியிலும் பேசினார். இப்படி மணிக்கணக்காகப் பேசுவதற்கெல்லாம் தனித்திறமை வேண்டும். இதையும்கூட பேச்சின் ஊடே பகிர்ந்துகொள்ள மறக்க வில்லை. மடை திறந்த வெள்ளம்போல் தனக்கு பேசக் கற்றுக்கொடுத்தது, சகோதரர் களான பாலகிருஷ்ணன் (பொறியாளர்) மற்றும் இளங்கோவன் (திருவையாறு தொகுதியின் தி.மு.க முன்னாள் எ.எல்.ஏ) ஆகியோர்தான் என்றும் குறிப்பிடத் தவற வில்லை. அது, மார்கழி மாதம். தூரத்தில் ஒலிபெருக்கியில் திருப்பாவை ஒலித்தது.

‘‘ஆஹா, ஆஹா நம்ம பொண்ணு என்னம்மா பாடியிருக்காய்யா...’’ என்று சொல்லிவிட்டு, குரலெடுத்து பாடத் தொடங்கினார்.
‘‘கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்’’ என்று அவர் பாடி முடித்தார்.
அதென்னங்ய்யா ‘ஆனைச்சாத்தன்’ என்று கேட்டேன். ‘‘கரிச்சான் (BLACK DRONGO) குருவிய்யா. அதிகாலையிலேயே கண் விழிச்சு, அந்த ரெட்டை வால் குருவி கூவும்ய்யா. அதைத்தான் நம்ம ஆண்டாள் நுட்பமா பாடி வைச்சிருக்காய்யா. திருப்பாவை முழுக்க இயற்கை பத்தின தகவல் நிறைய, நிறைய இருக்குய்யா’’ என்றார்.
அதற்குள் திருப்போரூர் செல்லும் முதல் பேருந்து, இருட்டை கிழித்துக்கொண்டு வந்து நிற்க, அதில் அவரை ஏற்றிவிட்டு, சென்னை வந்து சேர்ந்தேன். நம்மாழ்வாரின் வாழ்க்கையில் கிருஷ்ணகிரி மலைக்கிராமங்கள், புதுக் கோட்டை கொழிஞ்சி பண்ணை, ஈரோடு மாவட்ட இயற்கை விவசாயிகள் பண்ணைகள் போலவே செங்கல்பட்டு சுற்று வட்டாரப் பகுதிகளிலும் அவர் சுற்றி, சுழன்று வந்துள்ளார். நம்மாழ்வார் இன்னும் சில காலம் வாழ்த்திருந்தால், கொழிஞ்சி, வானகம் போல செங்கல்பட்டிலும்கூட ஒரு வாழ்வியல் பண்ணையை உருவாக்கியிருக்க வாய்ப்புகள் இருந்தன.

புதுக்கோட்டையில் மாப்பிள்ளைச் சம்பா நெல்லை மீட்டெடுத்தது போல, தொண்டை மண்டலப் பகுதியில் ஏறத்தாழ மறையும் நிலையிலிருந்த ‘செங்கல்பட்டு சிறுமணி’ ரகத்தின் சிறப்புகளை அந்தப் பகுதியில் பல முறை பேசி, அதை மீண்டும் பரவலாக்கினார். தொண்டு நிறுவன பெண் ஊழியர் ராணி என்பவர் செங்கல்பட்டு சிறுமணி பற்றி இனிய குரலில் பாடுவார். அவரையும் இன்னும் சில இயற்கை விவசாயிகளையும் அழைத்துக்கொண்டு, மாலை நேரங்களில் மக்கள் கூடும் கடைவீதி, கோயில் பகுதிகளில் சிறுமணி ரகத்தைப் பற்றிப் பாடச் சொல்வார்.
இந்தச் சிறுமணி நெல்லின் சிறப்பு என்ன வென்றால், அந்தக் காலத்தில் காஞ்சிபுரம் இட்லி இதில்தான் செய்திருக்கிறார்கள்.
ஆறு மாதம் வயது கொண்ட இந்த ரகத்தின் அருமை, பெருமைகளை நம்மாழ் வார் சொல்லிக்கொண்டே இருப்பார். நம் பகுதி நெல் ரகம் பற்றி நமக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று பேசிக்கொள்வார்கள்.
‘‘சின்ன புள்ளையா இருக்கும்போது, சிறுமணியை எங்க வயல்ல பயிர் வைச்சுருக் கோம். அதுல காஞ்சிபுரம் இட்லி செய்தா வீடே மணக்கும்’’ என யாராவது வயதான பெரியவர் சொல்வார். அதை மையமாக வைத்துக்கொண்டு,
அடுத்த சில மணி நேரங்களுக்கு நம்மாழ்வார் இயற்கை விவசாயம் குறித்து முழங்குவார். தேநீர் கடையில் அரசியல் பேச வந்தவர்களுக்குப் பாரம்பர்ய அரிசியின் அருமை, பெருமைகளைத் தலைநிறைய ஏற்றி அனுப்புவார்.
கூடவே, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கணித பேராசிரியர் தபோல்கர் மூலம் அமுதக் கரைசல் என்ற வளர்ச்சி ஊக்கி எப்படிப் பயன்பாட்டுக்கு வந்தது, கொடுமுடி டாக்டர் நடராஜன் பயிர்களுக்குத் தக்கப்படி உருவாக்கிய பஞ்சகவ்யாவை பற்றியும் அதைப் பயன்படுத்தி வெற்றிக் கண்ட விவசாயிகள் பெயர்களையும் உதாரணம் காட்டி சலிப்பு ஏற்படாமல் பாடம் எடுப்பார். வாய்ப்புக் கிடைத்தால், அதைச் செயல்விளக்கமாகவும் செய்து காட்டுவார். யார் மூலம் ஒரு தகவலை தெரிந்து கொள்கிறாரோ, அவருடைய பெயரை கட்டாயம் குறிப்பிடுவார். தான் சொல்வதால் அதை நம்ப வேண்டாம். சிறிய பகுதியில் செய்து வெற்றிப் பெற்ற பிறகு, விரிவாகச் செய்யலாம் என்றும் சொல்வார். அவர் பேசுவதைக் கேட்டால், அவரின் ஆர்வமும் வேகமும் அடுத்தவர்களுக்குப் பட்டென்று தொற்றிக்கொள்ளும். செங்கல் பட்டு நிகழ்வுகள் இன்னும் நிறையவே உள்ளன. அதில் ஒன்றை சுருக்கமாக பார்ப்போம்.
இன்று பட்டிதொட்டியெல்லாம் பரவியுள்ள அமுதக்கரைசல் தொழில்நுட்பம், தமிழ்நாட்டுக்குள் வந்து சேர்ந்தது 1998-ம் ஆண்டு, டிசம்பர் 30-ம் தேதி அன்றுதான் (இதே தேதியில்தான் நம்மாழ்வார் இயற்கையுடன் கலந்தார் என்பது கவனிக்கத்தக்கது.) செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயிகளும் நம்மாழ்வாரும் அதை வரவேற்றுக் கொண்டாடினார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கணித பேராசிரியரும் வேளாண் வல்லுநருமான பாத தபோல்கர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அவரை அழைத்து வந்து செங்கல்பட்டு, ஏழுமலையான் கல்யாண மண்டபத்தில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். ‘‘இதற்கு ‘அமிர்தபானி’னு பெயர் வைத்துள்ளோம். வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி கண்டுபிடித்த தொழில்நுட்பம் இது. இதைப் பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் கிடைக்கும்’’ என்று விளக்கமாகச் சொன்னார் தபோல்கர். ‘‘இன்னிக்கு, தமிழ்நாட்டு இயற்கை விவசாயத்துல முக்கியமான நாள். உங்களைக் கடன் சுமையில இருந்து மீட்டு எடுக்க, ஒரு தொழில்நுட்பம் கிடைச்சுடுச்சு. இதுக்கு முன்னாடி, இது மாதிரி எளிமையான இயற்கை வளர்ச்சி ஊக்கி நம்ம கையில இல்ல. இதை எல்லாருக்கும் புரியுற மாதிரி ‘அமுதக்கரைசல்’னு பேர் வைப்போம்’’ என்று அதே மேடையிலயே பெயர் சூட்டினார் நம்மாழ்வார்.கூட்டம் முடிந்த கையோடு அமுதக்கரைசல் தயாரிப்பில் இறங்கி, அதைப் பரிசோதனை செய்து பார்த்து, அதன் பலனை கண்கூடாகக் கண்டார்.
இதற்குப் பிறகு, ‘‘அமுதக்கரைசல் அற்புதம்யா... சாணம், மாட்டுச் சிறுநீர், வெல்லம் இதைத் தண்ணியில கலந்து 24 மணி நேரம் வெச்சிருந்து பயிருக்குத் தெளிக்கலாம். தண்ணியில கலந்துவிடலாம். இதனால செடிங்க நிறைய நிறைய பூக்குது, நிறைய நிறையக் காய்க்குது’’ என்று தன் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தார். இதனால்தான், அவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி.