மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி! - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி!

கீழாநெல்லி
பிரீமியம் ஸ்டோரி
News
கீழாநெல்லி

மருத்துவம் - 10 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

கீழாநெல்லி. தண்ணீர் செழிப்புள்ள அனைத்து இடங்களிலும் தன்னிச்சையாக வளரும் சிறு செடி. இதில், ஏழு இனங்கள் உள்ளன. அவற்றில் நன்கு பச்சை நிறமுள்ள, குட்டையான இனம்தான் அதிக மருத்துவப் பண்புகளைக்கொண்டது. இந்த இனம், வயல்வெளிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. மலைப் பிரதேசங்களில் சிவப்பு நிறத் தண்டுகளோடு, மூன்று முதல் ஆறடி உயரம் வரை வளரக்கூடிய ஓர் இனம் உள்ளது. இது ‘சிவப்புக் கீழாநெல்லி’ அல்லது ‘செங்கீழாநெல்லி’ என அழைக்கப்படுகிறது. கீழாநெல்லி என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது மஞ்சள்காமாலைநோய். இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு கல்லீரலும் பித்தப்பையும் பாதிக்கப்படுவதால் உப்பு, புளிப்பு, கொழுப்பு ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

கீழாநெல்லியின் இலைகள், காய்கள், இளந்தண்டு ஆகியவற்றைத் துவையல் பதத்தில் அரைத்து, ஒரு சிறு எலுமிச்சை அளவுக்கு உருட்டி, காலையில் மட்டும் வெறும் வயிற்றில் நீராகாரத்தில் கலந்து உண்டுவர ஐந்து முதல் ஏழு நாள்களில் மஞ்சள்காமாலை குணமாகிவிடும். ஆனாலும், 21 நாள்கள் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

நெல்லி
நெல்லி

கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, நெருஞ்சில் கொடி, நீர்முள்ளி, சிகைக்காய் ஆகியவற்றை ஒரு கைப்பிடியளவு எடுத்து, ஒன்றிரண்டாக இடித்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி, அரை லிட்டராக வற்றவைத்து வடிகட்டி, ஒரு ஃப்ளாஸ்க்கில் வைத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு வேளைக்கு 50 மி.லி என்ற அளவில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை குடித்துவர அனைத்துவிதமான மஞ்சள்காமாலை நோய்களும் குணமாகும்.

ரத்தம் பெருகும்... உடல் பலமாகும்!

கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை இலை ஆகியவற்றைச் சம அளவிலெடுத்து மைப்பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதைப் பெரியவர்கள் ஐந்து கிராம், இளைஞர்கள் மூன்று கிராம், குழந்தைகள் இரண்டு கிராம் எனக் காலை, மாலை உணவுக்குப் பிறகு உண்டு வருவது மஞ்சள் காமாலைக்குத் தீர்வு தரும். டைபாய்டு, மலேரியா முதலிய நாள்பட்ட நோய்களுக்கு ஆளானவர்கள், மிகப்பெரிய அறுவை சிகிச்சையில் ரத்தக்குறைவு காரணமாக மிகவும் பலமிழந்து இருப்பவர்கள் கீழாநெல்லியையும், கரிசலாங் கண்ணியையும் சம எடை எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து, அதில் நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் மட்டும் சாப்பிட்டுவர ரத்தம் பெருகும்; உடலும் பலமாகும்.

மைக்கேல் செயராசு
மைக்கேல் செயராசு

கீழாநெல்லியைக் குடிநீர் செய்து, தைலமாகக் காய்ச்சி தலைக்கும் வயிற்றுக்கும் பூசிக் குளித்துவந்தால் தலைச்சுற்றல், வாந்தி, வயிற்றுப்புண், உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல், பைத்தியம் ஆகிய அனைத்து பித்த நோய்களும் குணமாகும். கீழாநெல்லி வேர் 10 கிராம், மிளகு 20 கிராம், கடுக்காய்த்தோல் 30 கிராம் ஆகியவற்றை நன்கு அரைத்துப் பொடி செய்து, அரைத் தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டிப் பொடியைத் தயிர் அல்லது மோரில் கலந்து உட்கொண்டுவர மண், சாம்பல் தின்னும் பழக்கம் மாறி ரத்தவிருத்தி உண்டாகும். கீழாநெல்லி, சர்க்கரைநோயைக் குணப்படுத்தும் மதுமேக சூரணத்திலும் சேர்க்கப்படுகிறது.

கீழாநெல்லி, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, அதில் நெல்லிக்காயளவு எடுத்துப் பசுமோரில் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டுவர, பார்வை மந்தம், மாலைக்கண், வெள்ளெழுத்து ஆகியவை குணமாகும். கீழாநெல்லிச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துத் தைலமாகக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்து வர உடல் குளிர்ந்து பார்வைத்திறன் கூடும். கீழாநெல்லியுடன் சமஅளவு ‘ரத்ன புருஷ்’ எனப்படும் ஓரிதழ் தாமரை சமூலம் சேர்த்து அரைக்க வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்துப் பசும்பாலில் கலக்கி காலையில் மட்டும் சாப்பிட்டுவர ஆண்மைக்குறைவு நீங்கி, புணர்ச்சியில் இன்பம் பெருகும்.

மஞ்சள்காமாலை

சித்த மருத்துவம், மஞ்சள்காமாலையில் 13 வகைகளைக் கூறி, அவற்றில் எட்டு வகைகள் தீரும் எனவும் ஐந்து வகைகள் தீராது எனவும் பதிவு செய்து வைத்திருக்கிறது. நவீன அறிவியல் மருத்துவம் மஞ்சள்காமாலையை ஹீமோலைட்டிக் (Hemolytic), அப்ஸ்ட்ரக்டிவ் (Obstructive), ஹெப்பாடிக் (Hepatic) என மூன்று வகைகளாகப் பிரித்திருக்கிறது.

கீழாநெல்லி
கீழாநெல்லி

சாதாரணமாக நாம் உண்ணும் உணவுடன் கல்லீரல், பித்தப்பையிலிருந்து சுரக்கும் பித்தநீர் கலந்து செரிமானம் நடைபெறுகிறது. மஞ்சள்காமாலை நோயில் ஈரல் சற்றே வீங்குவதால், பித்தநீர் உணவு மண்டலத்துக்குச் செல்லாமல் அப்படியே ரத்தத்தில் நேரடியாகக் கலந்துவிடுகிறது. இப்படிக் கலந்துவிட்ட பித்தநீர் ரத்தத்திலும் இருப்பதால், சிறுநீரகத்தால் வடிகட்டப்படும்போது, சிறுநீருடன் சேர்ந்து மஞ்சளாக வெளியாகிறது. மேலும் ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் பித்தநீர் வியர்வையுடன் கலந்து வெளியேறுவதாலும் வியர்வை மஞ்சளாகிறது. உணவு மண்டலத்துக்குப் பித்தநீர் வராததால், மலம் வெண்மையாகக் கழிகிறது.

தொற்றுகளால் ஏற்படும் `ஹெப்பாடிக்’ எனப்படும் மஞ்சள்காமாலை வகைதான் 99 சதவிகிதம் காணப்படுகிறது. எனவே, மஞ்சள்காமாலை என்றவுடன் பயப்பட வேண்டாம். கீழாநெல்லிப் பயன்பாடு தவிர, தமிழகம் முழுவதும் 16 வகையான மருத்துவ முறைகள் புழக்கத்திலுள்ளன. அந்தந்த வட்டார வைத்தியர்களால் இந்த மருத்துவ முறை, சடங்கு ஆசாரத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. அப்படி குணமாகவில்லையென்றால், உடனே மருத்துவப் பரிசோதனை முறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

நல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி! - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி!

நெல்லி

“மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள

மாப்பிளைபோ லேயழகு வாய்க்குமே சேப்பு வருங்

கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா

யாமலக முண்ணமுறை யால்”

- தேரன் வெண்பா

‘அருநெல்லி’ எனப்படும் மிகவும் புளிப்பான சிறிய நெல்லிக்காயை உண்ணாமலிருப்பதே நல்லது. கிணற்று நீரின் உப்புச்சுவை மாறி, நல்ல சுவையுள்ள தண்ணீர் கிடைக்கும்.

`நெல்லிக்கனியைப் பாகஞ் செய்து உண்டு வந்தால், வயதானவரும் இள வயது மாப்பிள்ளைபோல அழகும் இளமையும் பெறலாம்’ என்பது இந்தப் பாடலின் பொருள். சயவனர் என்ற முனிவர் நெல்லிக்கனியை மட்டுமே உண்டு வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ்ந்தார். அதனால் நெல்லிக்காய் `இளகம்’, வடமொழியில் ‘சயவன் பிராஷ்’ என்று அழைக்கப்படுகிறது. கிடைத்தற்கரிய கருநெல்லியை ஒளவையார் அதியமானுக்குக் கொடுத்தார். அதியமான் அதையே மீண்டும் ஒளவையாருக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுவதுண்டு. அந்த நெல்லிக்கனியை உண்டு நீடூழி வாழ அவன் வாழ்த்தியதாக நம் தமிழ் மரபு கூறுகிறது. எது எப்படியாயினும் வடமொழி மற்றும் தென்மொழி மரபு இரண்டுமே, ‘நெல்லிக்காயை உண்டுவர ஆயுள் நீடிக்கும்’ என்ற கருத்தையே உணர்த்துகின்றன. ‘அருநெல்லி’ எனப்படும் மிகவும் புளிப்பான சிறிய நெல்லிக்காயை உண்ணாமலிருப்பதே நல்லது. அது, காய்ச்சல், தொண்டைக் கட்டு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

நெல்லிக்கனியை, ‘அமிர்தம்’ என்றே மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. நவீன அறிவியல் ஆய்வு, ஒரு தேக்கரண்டி நெல்லிக்கனிச் சாற்றில் 102.5 கிலோ ஆப்பிளில் உள்ள உயிர்ச்சத்து ‘சி’ உள்ளதாகத் தெரிவிக்கிறது. நன்கு முதிர்ந்த பழுத்த நெல்லிக்கனிகளை மேற்பரப்பில் ஈரம் இல்லாமல் துடைத்து ஒரு மணி நேரம் வரை வெயிலில் உலர்த்தவும். வீடுகளிலுள்ள ஊறுகாய் ஜாடிக்குள் ஒரு அடுக்கு நிரப்பவும். அதற்குமேல் சுமார் ஒரு இன்ச் உயரத்துக்குக் கருப்பட்டிப் பொடியைப் பரப்பவும். மீண்டும் அதன்மேல் நெல்லிக்கனிகளை அடுக்கவும். இவ்வாறாக ஜாடியின் வாய் மூடி வரை அடுக்கி, மேல் மட்டத்தில் கருப்பட்டிப்பொடி தூவி, அதனுடன் சிறிது ஏலக்காய்ப் பொடியைத் தூவி, ஜாடியை மூடியால் மூடி மண் பூசி காற்றுப்புகாதவாறு வைக்க வேண்டும். 45 நாள்கள் கழித்துத் திறந்துபார்த்தால், நன்கு நொதித்து டானிக் போன்ற திரவம் உருவாகியிருக்கும். அதை வடிகட்டிப் பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு உணவுக்குப் பிறகு காலை, மாலை 15 மி.லி அளவு எடுத்து, 100 மி.லியாகக் காய்ச்சி, ஆறிய வெந்நீரில் கலந்து உட்கொண்டு வர, சோர்வு நீங்கி உடலுக்கு உற்சாகமும் புதுத்தெம்பும் கிடைக்கும்.

நல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி! - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி!

நெல்லிக்காய்ப் பச்சடி

25 கிராம் எடையுள்ள நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லிக் கீரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துப் புளிப்புத் தயிரில் கலக்கித் தாளித்துப் பச்சடியாக உணவுடன் உண்டுவர அதிகரித்த பித்தம் குறையும். கண் எரிச்சல், உடற்சூடு நீங்கி உடல் குளிர்ச்சி பெறும்.

நெல்லி பானம்

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 500 மி.லி தண்ணீரில் போட்டு 125 மி.லியாகக் காய்ச்சி வற்றவைத்து, அதில் 20 மி.லியும், அத்துடன் தேன் 20 மி.லியும் கலந்து மூன்று வேளை நான்கு நாள்கள் சாப்பிட்டுவர அதிகமான பித்தம் தணியும். நெல்லிச்சாற்றில் பசும் மஞ்சளை ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து அதில் தயாரிக்கப்பட்ட ‘நிசாம் ஆம்லகி’ என்ற மாத்திரை கடைகளில் கிடைக்கிறது. தொடக்கநிலை சர்க்கரைநோயை இந்த மருந்து கட்டுக்குள்வைத்திருக்கும். இது ஆயுர்வேத மருந்து.

‘‘நெல்லி மர வேரை கிணற்றுக்குள் ஊற்றுக் கிளம்பும் இடத்தில் செருகிவைக்க, கிணற்று நீரின் உப்புச்சுவை மாறி நல்ல சுவையுள்ள தண்ணீர் கிடைக்கும்.’’

நெல்லிக்காயை லேசாக ஆவியில் அவித்து அதன் கொட்டைகளை நீக்கிவிட்டு நல்ல வெயிலில் உலர்த்தினால் ‘நெல்லி வற்றல்’ கிடைக்கும். இது அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். பழைய சித்த மருத்துவ நூல்களில் `நெல்லி வற்றல்’, `நெல்லி முள்ளி’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நெல்லிக்காய்ச் சாற்றில் வெல்லத்தைக் கரைத்து, பிற மருந்துப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்படும் நெல்லிக்காய் லேகியம் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இந்த லேகியத்தை ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து உணவுக்குப் பின்னர் மூன்று வேளை உண்டுவர வாய்வு, வயிற்றுப்புண் குணமாகும்; உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

நெல்லி வற்றலும் பச்சைப்பயறும் வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி, காலை, மாலை 100 மி.லி சாப்பிட்டவர கிறுகிறுப்புடன்கூடிய உயர் ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், பித்த வாந்தி ஆகியவை குணமாகும். 20 கிராம் நெல்லி வற்றலை எடுத்து 200 மி.லி தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டுவர ஆண்குறிப்புண் ஆறும். நெல்லி மரத்தின் இலைகளைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வாய்க்கொப்பளித்துவர வாய்ப்புண் குணமாகும். 20 கிராம் நெல்லிக் கொழுந்தை மென்மையாக அரைத்து, மோரில் கலக்கி இருவேளை சாப்பிட்டுவர, சீதபேதி தீரும். நெல்லி மர வேரை கிணற்றுக்குள் ஊற்றுக் கிளம்பும் இடத்தில் செருகி வைக்க, கிணற்று நீரின் உப்புச்சுவை மாறி நல்ல சுவையுள்ள தண்ணீர் கிடைக்கும்.

மழைக்கால மூலிகைகள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.