
மருத்துவம் - 12 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்பது நமது சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை. ஆனால், உணவே நஞ்சாகிவிட்ட இன்றைய சூழலில் இந்தக் கொள்கை எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. 40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அளவில் ஒரேயொரு நகரத்தில் மட்டுமே இருந்தது டயாலிசிஸ் மையம். இன்று சிறிய நகரங்களில்கூட இரண்டு, மூன்று டயாலிசிஸ் மையங்கள் இயங்கிவருகின்றன. இது உணவு நஞ்சால் நமக்குக் கிடைத்த பரிசு.
உணவு நஞ்சானது ஒருபுறம் இருக்கட்டும். காய்கறிகள் என்றாலே கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் என மேலைநாட்டுக் காய்கறிகள்தான் ஆண்டு முழுவதும், அனைத்து ஊர்களிலும் கிடைக்கின்றன. உள்ளூர்க் காய்கறிகளான கத்திரி, பீர்க்கன், புடல், பூசணி, தடியங்காய், கோவைக்காய், அதலக்காய் ஆகிய காய்கறிகளை அதிகம் உண்பதைத் தவிர்த்ததும் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு மிக முக்கியக் காரணம்.

நம் உள்ளூர்க் காய்கறிகள் மற்றும் கீரைகள் அனைத்தும் உடலுக்கு ஊட்டம் கொடுப்பதோடு, உடலைக் குளிர்வித்து மலச்சிக்கலை நீக்கி, உடலில் வாய்வு பரவாமல் செய்பவை. கீரைகளில் முக்கிய இடம் வகிப்பது ‘சாரணைக்கீரை.’ இது சாரணை, சாரணத்தி, வட்டச் சாரணத்தி, வெள்ளைச் சாரணை, மூக்கிரட்டை, மூக்கிர சாரணை, சத்திச் சாரணை எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதனால் சாரணையில் ஏகப்பட்ட பெயர் குழப்பங்களும் உள்ளன.
தவறுதலாக மூக்கிரட்டையின் வேரைச் சாரணை வேராகச் சில கடைகளில் விற்கிகிறார்கள். மூலிகைப் பொருளின் அளவை நாளுக்கு அதிகரித்து 40 நாள்கள்வரை உண்டுவிட்டு, அதன் பிறகு படிப்படியாகக் குறைத்துக்கொண்டு கற்பத்தை முடிக்க வேண்டும்.

சாறுவேளை
தரிசு நிலங்களிலும், வயல்வெளிகளிலும், தோட்டங்களிலும் மழைக்குப் பிறகு வேகமாக முளைத்து, தரையில் படரும் ஒரு சிறு செடியினம். சதைப்பற்றுள்ள இலைகளை உடையது. வெண்பச்சை நிற இலையுடனும் தண்டுடனும் வெண்மை நிறப் பூக்கள் பூக்கும் ஓர் இனமும், செந்நிற இலையுடனும் தண்டுடனும் செந்நிறப் பூக்கள் பூக்கும் இன்னோர் இனமும் உண்டு. இவை இரண்டுமே வடிவமைப்பில் ஒரே மாதிரியாகக் காணப்படும். இவற்றில் வெண்பச்சை நிறமுடையதுதான் மிகுந்த மருத்துவ குணமுடையது. இதுதான் ‘சாரணத்தி’ எனச் சொல்லப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்தக் கீரையை வயல்களில் பார்க்கலாம். இதைப் பறித்து மற்ற கீரைகளைச் சமைப்பதுபோலத் துவையலாகச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் நீங்கும். மேலும், சிறுநீரகம், மண்ணீரல், இதயம் முதலிய முக்கிய உள்ளுறுப்புகளின் பணித்திறனை அதிகரிக்கச்செய்யும். சிறுநீரகச் செயல்பாட்டுக் குறைவால் இரு கால்களிலும் ஏற்படும் வீக்கங்களுக்கும் பெருவயிறு நோயாளிகளுக்கும் இது சிறந்த மருந்துணவு.

இதை வேருடன் பறித்து, நிழலில் காயவைத்துப் பொடி செய்து, ஒரு பங்குப் பொடியுடன் ஒரு பங்கு சுக்குத்தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர, மலக்கட்டு நீங்கும். சிறுநீர் நன்றாகப் பிரியும். இதைத் தொடர்ந்தும் சாப்பிட்டுவரலாம். இதன் வேர்ப்பொடி 100 கிராமுடன் இரண்டு லிட்டர் வெந்நீர் சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் அடுப்பிலேற்றி எட்டில் ஒன்றாகக் காய்ச்சி 250 மி.லி ஆக வற்றவைத்து, வடிகட்டி வைத்துக்கொண்டு 50 மி.லியாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை குடித்துவர, கட்டுப்பட்ட சிறுநீர் இறங்கும். உடல் வீக்கமும் குறையும். இதை மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை செய்துவரலாம். இதன் இலைகளை அப்படியே அரைத்து, சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, முழங்கால் மூட்டுகளில் உண்டாகும் வீக்கங்களுக்கு வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும்.
சத்திச் சாரணை (அ) வெள்ளைச் சாரணை
இது மணற்பாங்கான இடங்களில் தரையோடு படர்ந்து வளரக்கூடிய சிறு செடியினம். இதன் இலைகள் சிறிது சதைப்பற்றுடன் காணப்படும். கோடைக்காலத்தில் இலைகள் மறைந்து வெறும் கொடியாக மட்டும் காணப்படும். மழைக்காலம் தொடங்கியவுடன் கொடி நன்றாக வளர்ந்துவிடும். இதில் வெள்ளை நிறப்பூக்கள் பூக்கும். முற்றிய கொடியைத் தோண்டிப் பார்த்தால் ஓரடி நீளமுள்ள கேரட் போன்ற பருமனுடைய வேர்கள் காணப்படும். இதுதான், ‘புனர்நெவா’ என வட மொழியிலும், ‘சாரணை வேர்’ எனத் தமிழிலும் வழங்கப்படுகிறது.

‘சாரணை வேர்முதற் சமூலச் சூரணம்
பாரணர் செய்மல பந்தம தேகுமே’ – தேரன் காப்பியம்
சாரணை வேர்ப்பொடியைத் தொடர்ந்து உண்டுவர, மலச்சிக்கல் நீங்கும் என்பது இதன் பொருள்.
இதன் இலைகளை வேகவைத்து, நெய்யில் வறுத்து, கீரையாகச் சமைத்துச் சாப்பிட்டுவர நஞ்சுகள் நீங்கி ரத்தம் சுத்தியாகும். பசியும் அதிகரிக்கும். இலைச்சாற்றை மூக்கில் பிழிய ஒற்றைத்தலைவலி, நீர்க்கோவை நீங்கும். இது ‘நசியச் சிகிச்சை’ என்றும் சொல்லப்படுகிறது. 150 மி.லி காய்ச்சாத பசும்பாலில் 200 மி.லி இலைச்சாற்றைக் கலந்து கொடுத்தால் தடைப்பட்ட சிறுநீர் உடனே வெளியேறும். 10 கிராம் வேரைப் பால்விட்டு அரைத்துக் காலையில் மட்டும் உண்டுவர, விதை வீக்கம் நீங்கும். குடலிறக்கத்தால் உண்டான வீக்கத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை. சுக்கு வெந்நீர் (சுக்கு காபி) போடும்போது, சுக்கு அளவுக்குச் சம எடை சாரணை வேர் சேர்த்துப் போட்டுக் குடித்துவர வயிற்று உப்புசம், மந்தம் நீங்கி மலம் நன்கு வெளியேறும். வயிற்று வீக்கமும் குறையும்.
“சாறுவேளை கீரையை வயல்களில் பார்க்கலாம். இதைப் பறித்து மற்ற கீரைகளைச் சமைப்பதுபோலத் துவையலாகச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் நீங்கும்.’’
`சாரணை வேர்’ என்று நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுவது இந்தச் சத்திச் சாரணை வேர்தான். ஆனால், தவறுதலாக மூக்கிரட்டை வேர், சாரணை வேராகச் சில கடைகளில் விற்கப்படுகிறது. இந்தப் பெயர் குழப்பம் வெகுநாள்களாகவே நீடித்து வருகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், மூலிகைகளைப் பற்றிய மிகப் பழைமையான ஆங்கில நூல்களில் மூக்கிரட்டையை ‘புனர்நவம்’ எனத் தவறுதலாகப் பதிவு செய்திருப்பதுதான்.

சித்த மருத்துவத்தில், `காயகற்ப முறை’ என்ற ஒன்று உண்டு. அதன்படி ஒரு குறிப்பிட்ட மூலிகைப் பொருளின் அளவை நாளுக்கு நாள் அதிகரித்து 40 நாள்கள்வரை உண்டுவிட்டு, அதன் பிறகு படிப்படியாகக் குறைத்துக் கொண்டு கற்பத்தை முடிக்க வேண்டும்.
இதன்படி, சத்திச் சாரணை வேர்ப்பொடியை முதல்நாள் ஒரு குன்றி (130 மி.கி)-ல் தொடங்கி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குன்றியாகக் கூட்டிக்கொண்டு 40-ம் நாளில் 40 குன்றி (40 x 130 =5.200 கிராம்) வரை உண்டுவிட்டு, மீண்டும் ஒவ்வொரு குன்றியாகக் குறைத்து 80-ம் நாளில் ஒரு குன்றி அளவாக உட்கொண்டு கற்பத்தை முடிக்க வேண்டும்.
இவ்வாறு உட்கொண்டு வர எல்லாவித வாதநோய்களும் சுரங்களும் முக்கியமாக நெறிகட்டிச் சுரமும், விதைகளிலும் கால்களிலும் நீர் இறங்கி ஏற்படும் வீக்கம், பெரு வயிறு வீக்கம், மலநீர்க்கட்டு, வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும். எனது மருத்துவ அனுபவத்தில் சக்திச் சாரணை வேரை மட்டும் 30 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் விட்டு 250 மி.லியாக வற்றவைத்து நாள் முழுவதும் 40 நாள்கள் குடித்துவர, ரத்தத்தில் அதிகரித்த யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவு வேகமாகக் குறைந்துவருவதை அறிந்திருக்கிறேன்.
மூக்கிரட்டை
இதுவே நாட்டு மருந்துக் கடைகளில் ‘மூக்கிரச் சாரணை’ என்று அழைக்கப்படுகிறது.
‘மூக்கிரட்டை யினிலை முறையுண வாதநோ
யாக்கிறையிற் பெட்டி யரவென வடங்குமே’ - தேரன் வெண்பா
மூக்கிரட்டையின் இலைகளைக் கறியாகச் சமைத்து உண்டுவர, உடம்பில் தோன்றியுள்ள வாதநோய்களெல்லாம் பெட்டியில் பாம்பு அடங்குவதுபோல அடங்கிவிடும். தீராத மூக்கடைப்பு மற்றும் மூக்கு தொடர்பான நோய் உள்ளவர்கள் மூக்கிரட்டைக் கீரையை சமையல் செய்து மண்டலக் கணக்கில் சாப்பிட்டுவந்தால், பிரச்னை மட்டுப்படும்.
இது தரிசு நிலங்களிலெல்லாம் படர்ந்து வளரும் சிறுசெடி. இது சற்று மேல்நோக்கி வளரும். மற்ற சாரணை இனங்களெல்லாம் தரையோடு தரையாகப் படர்ந்து வளர்ந்திருக்கையில், இது மட்டும் இரண்டடி உயரம் வரை வளர்ந்து செந்நிறப்பூக்கள் பூக்கும். இதன் வேர்க்கிழங்கு கேரட்போலக் காணப்படும். இதன் முற்றின வேரை, மருந்துக்குப் பயன்படும் சத்திச் சாரணை வேர் கிடைக்காத சமயங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதன் வேர்ப்பொடி ஐந்து கிராமை இரவு படுக்கப்போகும் முன்னர் வெந்நீரில் கலந்து உட்கொள்ள மலச்சிக்கல் நீங்கும். இதை தினந்தோறும் செய்யக் கூடாது. மாதம் ஒரு முறை மட்டும் செய்தால் போதும்.
இதனால், உடம்பிலுள்ள கெட்ட வாத நீர்கள் நீங்கி, உடல் புத்துணர்ச்சி அடையும். மூக்கிரட்டை வேரை ஒரு கைப்பிடியளவு எடுத்துச் சிதைத்து, விளக்கெண்ணெயில் போட்டு வாசனை வரும்படிக் காய்ச்சி, இரவு படுக்கப்போகும் முன்னர் சாப்பிட (சிறியவர்கள் 5 மி.லி., பெரியவர்கள் 10 மி.லி) உடம்பிலுள்ள சொறி, நமைச்சல், பொடிக்கிருமிகள் நீங்கும்.
நீரிழிவு நோய் தீர்க்கும் மூலிகைகள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.