மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை!

Chaste tree
பிரீமியம் ஸ்டோரி
News
Chaste tree

மருத்துவம் - 4 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

று, ஓடை, வாய்க்கால், குளம் என அனைத்து நீர்நிலைகளின் கரைகளில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் ஒரு புதர்த்தாவரம் நொச்சி. இதில் வெண்ணொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி என மூன்று வகைகள் உள்ளன. நொச்சி மூன்று அல்லது ஐந்து கூட்டிலைகள் உடையதாகக் காணப்படும். இவற்றில் வெண்ணொச்சி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் காணப்படும். கருநொச்சி, நடவுசெய்து வளர்க்கும் இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.

நல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை!

நீர்நொச்சி நான்கு அல்லது ஐந்து இலைகள் கொண்டிருக்கும். மரவகையைச் சேர்ந்த இது தாமிரபரணி ஆற்றங்கரையில் அதிகமாகக் காணப்படுகிறது. பூப்பூத்து வேப்பங்காய் வடிவில் காய் காய்க்கும். மேலும், அந்தமான் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு வளர்க்கப்படுகிற நொச்சி வகை ஒன்றும் இருக்கிறது. இதன் இலையில் வழக்கமான நொச்சி வாசனையோடு சற்று யூகலிப்டஸ் தைல வாசனையும் சேர்ந்திருக்கும். இது ஊதா நிறத்தில் பூப்பூத்துக் காய் காய்க்கும். ‘கருநொச்சியின் குச்சியைக் கொண்டு சுடுசோற்றைக் கிளறும்போது, சோறு முழுவதுமே கறுப்பானால்தான் அது உண்மையான கருநொச்சி’ என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சித்தர்கள் நூல்களின்படி, சேராங்கொட்டையை மண்ணில் போட்டு ஏழுமுறை மட்க வைத்து மண்ணில் நட்டுவைத்துதான் கருநொச்சியை உருவாக்க முடியும். இதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

கருநொச்சியின் குச்சியைக் கொண்டு சுடுசோற்றைக் கிளறும்போது, சோறு முழுவதுமே கறுப்பானால்தான் அது உண்மையான கருநொச்சி. இந்தத் தாவரம், கபிலருடைய குறிஞ்சிப்பாட்டில் ‘சிந்துவாரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே பெயரில், தேரன் வெண்பாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் நொச்சியைத் தவிர மற்ற அனைத்து நொச்சி இனங்களும் ஒரே வகையான மருத்துவக்குணத்தைதான் கொண்டிருக் கின்றன. நொச்சிக்கு வலிகளைக் குறைக்கும் தன்மை இருப்பதால், வாத வலியைக் குணமாக்கும் தைலங்களில் நொச்சியிலைச் சாறு சேர்க்கப்படுகிறது.

நொச்சியை வீட்டின் முன் நட்டு வளர்த்தால், வீட்டுக்குள் காற்று மூலம் நொச்சி மணம் வீசும். அந்தக் காற்றைச் சுவாசித்தால் தலைவலி, மூக்கடைப்பு, அடுக்குத்தும்மல் போன்றவை வராது. நொச்சியிலையைப் பறித்து நிழலில் உலர்த்தி மாலை நேரங்களில் நெருப்பிலிட்டுப் புகைத்தால் கொசுக்கள் ஓடிவிடும். வீட்டுக்குள் நறுமணம் கமழும். பொதுவாக பக்கவாதம் மற்றும் வாதநோயினால் துன்பப்படுபவர்கள், நொச்சியிலையை வேகவைத்த தண்ணீரில் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Chinese chastetree
Chinese chastetree

நொச்சியிலையுடன் மஞ்சள்தூள், எலுமிச்சை இலை ஆகியவற்றைத் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து எழும் ஆவியை உடல் முழுவதும் படுமாறு செய்து, நன்கு வியர்க்கச் செய்தால் அலுப்புக் காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தலைப்பாரம் ஆகியவை குணமாகும். முதல்முறை ஆவி பிடிக்கும்போது நன்கு வியர்க்கவில்லை என்றால், ஒரு மணிநேர இடைவெளியில் மீண்டும் 2 அல்லது 3 முறை ஆவிபிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

‘‘வாத நோய்க்குக் காரணமான வெப்பத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் வாதநோய்களை முற்றிலுமாகக் குணப்படுத்த இயலும். அதற்கு நொச்சிக் குடிநீரைக் குடிப்பது நல்லது.’’

நொச்சியிலைகளை ஒரு துணியில் முடிந்து, இளஞ்சூட்டிலுள்ள நீரில் முக்கி எடுத்து ஒற்றடம் கொடுக்க வாதவலி, உளைச்சல், வாத வீக்கம் போன்றவை குணமாகும். பீனிச நோயுள்ளவர்கள், நொச்சியிலையைத் தலையணை உறைக்குள் நிரப்பி, அதில் தலை வைத்து உறங்கி வந்தால் தலைவலி, தலைப்பாரம், கழுத்துவலி முதலியன நீங்கும்.

Vitex trifolia
Vitex trifolia

சொத்தைப் பல்லினால் ஏற்படும் பல்வலிக்கு இரண்டு நொச்சியிலையுடன், மிகச்சிறிய அளவில் சுண்ணாம்பு சேர்த்து பல்வலி உள்ள இடங்களில் அழுத்தி வைக்க, பல்வலி உடனே குறையும். நொச்சியிலைச் சாற்றை அடுப்பிலேற்றி குறைந்த தீயில் கொதிக்க வைத்து, சாறு சுண்டி குழம்புபோல் ஆனவுடன் இறக்கி, கொஞ்சம் ஆறவைத்துப் பொறுத்துக் கொள்ளும் சூட்டில் பூசினால், சுளுக்கு வலி உடனே நீங்கும். கட்டிகள்மீது பூசினால் அவை பழுத்து உடையும்.

நொச்சியிலை-2, மிளகு-4, கிராம்பு-1, பூண்டுப்பல்-4 இவற்றை அப்படியே வாயில் போட்டு வெற்றிலை மெல்லுவதுபோல் மென்று, அப்படியே வாயிலே ஒதுக்கி வைத்துக்கொண்டு, சாற்றை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வர, ஆஸ்துமா நோயில் ஏற்படும் இரைப்பின் வேகம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறையும். இவ்வாறு தினமும் ஒருமுறையோ இருமுறையோ செய்துவர ஆஸ்துமா நோயின் தீவிரம் நன்கு குறையும்.

Chaste tree
Chaste tree

நொச்சியிலையுடன் சிறிதளவு மிளகு சேர்த்து நன்கு அரைத்து, சுண்டைக்காயளவு உருண்டைகளாக உருட்டி நிழலில் காயவைத்துக் கொள்ளவும். அடிக்கடி இடுப்புவலி, முதுகுவலியினால் வருந்துபவர்கள், இந்த மாத்திரையைக் காலை, மதியம், இரவு உணவுக்குப் பின் உண்டுவர வலிகள் நிற்கும். குறிப்பாக, இந்த மாத்திரை பெண்களுக்கு நல்ல பலனைத் தருகிறது. பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களிலும், திணையியலிலும் நொச்சி என்றே குறிப்பிடப் பட்ட இந்தத் தாவரம், கபிலருடைய குறிஞ்சிப் பாட்டில் ‘சிந்துவாரம்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதே பெயரில், தேரன் வெண்பாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோயா கலியை நொடிக்கு ளருந்த வெம்மை

யோயா மணாளு முயர்த்துதலுக் - காய

வந்தமுதல் நண்பாகி வாதத்தை யேயுறவாற

சிந்துவா ரங்கனலுந் தீ

- தேரன் வெண்பா

பொருள்: வெல்லம் சேர்த்துக் காய்ச்சிய நொச்சிக் குடிநீரைக் குடித்துவர உடலின் சூட்டைப் போக்கி, நாளுக்குநாள் உடல் வலிமையைப் பெருக்கி, வாதத்தைத் தன்னிலையில் நிற்கச் செய்யும்.

சிந்து வார்த்துணருஞ் சீதக் கழிச்சலறச்

சிந்து வார்த்துணருஞ் சீனிநெயுண் - தேரன் வெண்பா

பொருள்: நொச்சிக் கொழுந்து, சுக்குத்தூள் இரண்டையும் நன்கு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து பசுநெய் விட்டுக் கிளறி, 48 நாள்கள் உண்டுவர சீதக்கழிச்சல், கடுப்பு நீங்கும். அந்த நோய் வராமலும் தடுக்கலாம். உடல் வலிமை அடையும்.

மேற்குறிப்பிட்ட தேரன் பாடல்களில், சிந்துவாரம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது நொச்சியைத்தான். இந்தப் பாடல்களில் சித்த மருத்துவத்திலுள்ள நோய் தீர்க்கும் மருந்தறிவியல் மிக எளிதாக விளக்கப்பட்டுள்ளது. உடலில் வெப்பம் அதிகமானால் வாயு எனப்படும் வாதம் பெருகி, உடல் முழுவதும் பரவி வாத நோய்களை உண்டாக்கும். வாத வலிக்கு வலி நிவாரண மருந்துகளை உண்டால் மட்டும் போதாது, வாதநோய்க்குக் காரணமான வெப்பத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் வாதநோய்களை முற்றிலுமாகக் குணப்படுத்த இயலும். அதற்கு நொச்சிக் குடிநீரைக் குடிப்பது நல்லது. அதேபோல, உடலின் வெப்பத்தைக் குறைக்கும் எண்ணெய்க் குளியலும் மிக முக்கியமானது. அடிக்கடி எண்ணெய் தேய்த்துக் குளித்து உடலின் வெப்பத்தைக் குறைத்து, நம்முடைய மூதாதையர் வாதம் மட்டுமல்லாமல் பிற நோய்களும் வராமல் இருந்தனர்.

நல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை!

மாந்தநோய்க் குடிநீரிலும் நொச்சி இடம்பெற்றுள்ளது. மாந்தம் என்பது 1 முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் சுரம், பேதி முதலான நோய்கள். நொச்சி, மஞ்சணத்தி (நுணா), பொடுதலை, வேலிப்பருத்தி ஆகிய நான்கு மூலிகைகளும் பச்சிளங் குழந்தைகளின் மாந்தம் நீக்கும் முக்கிய மூலிகைகள். இந்த நான்கு மூலிகை இலைகளையும் ஒரு கைப்பிடியளவு எடுத்துச் சாறு பிழிந்து குழந்தைகளுக்கு 3 மில்லி முதல் 5 மில்லி வரை குடிக்கக் கொடுத்து வந்தால் அனைத்து மாந்த நோய்களும் குணமாகும். குடிநீர் தயாரித்தும் கொடுக்கலாம்.

பொடுதலை

யல்வெளிகளிலும், தண்ணீர் பாயும் தோட்டங்களிலும் தன்னிச்சையாகப் படர்ந்து வளரக்கூடிய தாவரம், பொடுதலை. இதன் இலை தடித்துக் காணப்படும். இதன் காய், திப்பிலி போன்று இருக்கும். இந்தச் செடி முழுவதும் மருத்துவப்பயன் உடையது. அப்படியே சமூலமாகப் பயன்படுத்தலாம். பெயருக்கு ஏற்றாற்போல, பொடுகுள்ள தலைக்குப் பொடுதலை சிறந்த மருந்து. பொடுதலைச் சாற்றுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிய தைலத்தைத் தலைக்குப் பூசிவர பொடுகு, மண்டைக்கரப்பான் முதலியன குணமாகும்.

Turkey tangle frogfruit
Turkey tangle frogfruit

பொடுதலை சமூலத்துடன் சிறிது உளுத்தம்பருப்பு சேர்த்து நெய்யில் வதக்கித் துவையலாக அரைத்து உணவுடன் சேர்த்து உண்டுவர உள்மூலம், மூலக்கடுப்பு ஆகியவை குணமாகும். பொடுதலை இலையைக் கீரை சமைப்பதுபோல சமைத்து உண்டுவர வாய்ப்புண், உதட்டுப்புண், உணவுக்குழாய் புண் மற்றும் இரைப்பைப் புண் முதலியவை குணமாகும். உணவு மண்டலத்தில் அனைத்து உறுப்புகளிலும் ஏற்படும் புண்களும் குண மாகும். பொடுதலைச் சாற்றுடன் சமஅளவு நெய் சேர்த்துக் காய்ச்சி, ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் கற்கண்டு சேர்த்து உண்டு வந்தாலும் மேற்கண்ட நோய்கள் குணமாகும். இதற்கு ‘மாணிக்க க்ருதம்’ என்று பெயர். வடமொழிச் சொல்லான ‘க்ருதம்’ என்பதற்கு நெய் என்று பொருள்.

பொடுதலை இலையுடன் சீரகம் சேர்த்துத் துவையல்போல அரைத்து நெல்லிக்காய் அளவு (3-5 கிராம்) காலை, மாலை இருவேளை உணவுக்குப் பின் உண்டுவர வெள்ளை வெட்டை குணமாகும்.

ஆற்றை அடைக்குமாம் அதிவிடயம்

போக்கை நிறுத்துமாம் பொடுதலை

என்ற வரிகளில் ‘அதிவிடயம்’ என்பது ஒரு கடைச்சரக்கு. 100 கிராம் பொடுதலையை லேசாக வதக்கி, 10 கிராம் வறுத்த ஓமத்துடன் சேர்த்து இடித்து அதனுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை 250 மில்லியாக வற்றவைத்து குழந்தைகளுக்குக் கொடுத்துவர பேதி நிற்கும். பொடுதலைக் காய்களைச் சேகரித்து அரிசியுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து முதல் கொதி வந்தவுடன் வெந்த அரிசியை உலர்த்தி நொய்யரிசியாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த நொய்யரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி மாந்தக் கழிச்சலினால் உடல் மெலிவடைந்த குழந்தைகளுக்குக் கொடுத்துவர மாந்தம் குணமாகி குழந்தைகள் வலுவடைவர்.

வேலிப்பருத்தி, செம்பருத்தி, செம்பரத்தை ஆகியவைக் குறித்து அடுத்த இதழில்…