
மருத்துவம் - 6 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்
கத்திரி
‘எக்கால மும்பழகி யில்லாத மானிடர்க்கு
முக்கால முண்டாலும் மோசமிரா – பக்குவமா
யங்கத் தணிய வமாபத்தி யக்கறியாம்
வங்கக்கா யுண்டறிகு வாய்’
– தேரன் வெண்பா

இந்தப் பாடலில் ‘வங்கக்காய்’ என்பது கத்திரிக்காயைக் குறிக்கும். பிஞ்சு, காய், பழம் ஆகிய மூன்றில் பிஞ்சு மட்டுமே உணவில் சேர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதை முதிராத கத்திரிப் பிஞ்சு மூன்று வேளை உணவில் சேர்த்து உண்டாலும் கேடு இல்லை எனக் குறிப்பிடுகிறது மேலே உள்ள பாடல். ‘வழுதுணை, வழுதுணங்காய்’ எனப் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது கத்திரி. இது சிறுபஞ்சமூல சரக்குகளில் ஒன்று. அன்றாட உணவில் சேர்க்கப்படுகிறது. தோல் நோய்கள் குறிப்பாகக் கரப்பான் ஏற்பட் டால் கத்திரிக்காய், கத்திரிப்பழம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கத்திரியில் நிறைய வகைகள் இருந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே, குப்பக்குறிச்சி என்ற சிற்றூர் உண்டு. அந்த ஊரின் பெயரில் ‘குப்பக்குறிச்சிக் கத்திரிக்காய்’ என்ற ஒருவகை கத்திரி திருநெல்வேலி சந்தைக்கு வரும். சுத்தமான வெள்ளை நிறத்தில், பார்ப்பதற்கு முட்டையைப் போலவே காட்சி தரும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட இந்த இனம், இன்று காணாமல் போய்விட்டது. இதுபோல நிறைய உள்ளூர் வகை காய்கறிகள் காணாமல் போய்விட்டன.

கால்நடை மருத்துவத்தில் கத்திரிப் பழங்களைச் சுட்டு, மாடுகளின் வயிற்றுவலி நீக்குவதற்கும், வயிற்றுப்புழுக்களை வெளியேற்றுவதற்கும் கொடுப்பது வழக்கம். மனிதர்களுக்கான அனைத்து நாட்டுமருந்து களும் அப்படியே கால்நடைகளுக்கும் பொருந்தும். ஆனால், அளவை அதிகமாகக் கொடுக்க வேண்டும். ‘மாட்டு வாகடம்’ என்னும் நூல் இதை விரிவாக விளக்குகிறது.

கத்திரியின் வேர், ஆஸ்துமா முதலான கப நோய்களுக்கான குடிநீர், சூரணம் மற்றும் லேகியங்களில் சேர்க்கப்படுகிறது. கத்திரிப்பழத்தில் ஊசியினால் பல இடங்களில் குத்தி, நல்லெண்ணெயில் வறுத்து உண்டு வந்தால் பல்வலி தீரும். கத்திரிப்பிஞ்சு, எள், வெல்லம் ஆகியவற்றைச் சம எடையளவு எடுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும். அதை 3 நாள்களுக்கு உப்பில்லாப்பத்தியம் மேற்கொண்டு, எலுமிச்சம்பழம் அளவு காலை, மாலை என உண்டு வந்தால், வெறி நாய்க்கடி தீரும் என்கிறது கண்ணுசாமிப் பிள்ளை எழுதிய பதார்த்த குணசிந்தாமணி.
முள்ளுக்கத்திரி
எல்லா இடங்களிலும் குறிப்பாகக் குப்பைமேட்டில் அதிகமாகக் காணப்படும் ஒரு தாவர இனம் இது. செடி, இலை, பூ, காய் அனைத்தும் கத்திரிக்காய் போலவே இருக்கும். ஆனால், இலைகளில் அதிகமாக முட்கள் காணப்படும். வேர்களுக்காக இவை சேகரிக்கப்படுகின்றன. இது ‘பப்ர முள்ளி’, ‘பாப்பார முள்ளி’ என்றும் அழைக்கப்படுகிறது. சமையலுக்கு ஆகாது. இதைச் சிலர் கண்டங்கத்திரி என்று தவறுதலாகச் சொல்கிறார்கள். இதை வேரோடுப் பறித்து வந்து, சிறிய துண்டுகளாக வெட்டி, நிழலில் காயவைத்துப் பொடி செய்துகொள்ள வேண்டும். பொடியில் குடிநீர் தயாரித்து உண்டு வந்தால், நாள்பட்ட ஆஸ்துமா நோய் குணமாகும். பொடியாக எடுத்துக்கொண்டால் 2 முதல் 3 கிராம் அளவும், குடிநீர் என்றால் 50 கிராம் பொடியுடன் 600 மில்லி தண்ணீர் சேர்த்து 150 மில்லியாக வற்றவைத்துப் பயன்படுத்தவும். இதன் விதைகளை காய்ந்த இலைக்குள் போட்டு பீடிபோல் செய்து புகைபிடிக்க, பற்களுக்கிடையே உள்ள புழுக்கள் வெளிப்பட்டுப் பல்வலி நீங்கும்.

கண்டங்கத்திரி
மிகவும் வறட்சியான தரிசு நிலங்களில், குறிப்பாக மணற்பாங்கான நிலங்களில் தானே வளர்கிறது. கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. தரையோடு தரையாகப் படர்ந்து, தண்டு, இலை, காய் என அனைத்திலும் முட்கள் நிறைந்து காணப்படும். இது கப நோய்களைக் குணமாக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. இதன் இலை, தண்டு, பூ, காய், வேர் என அனைத்தும் மருந்தாக உட்கொள்ளப்படுகிறது. இவற்றைப் பொடியாகச் செய்தும் பயன்படுத்தலாம். கண்டங்கத்திரி அனைத்துச் சளிநோய்களையும் குணமாக்கும் என்கிறது அகத்தியர் குணவாகடப் பாடல்.
‘வேரிலைபூ காய்பழமவ் வித்துமதன் பட்டையுமிவ்
வூரிலிருக்க உடற்கனப்பும் – நீராய்
வரும்பீந சங்கயஞ்சு வாசமுந்தங் காதே
அருங்கண்டங் கத்திரியு ளார்’
– அகத்தியர் குணவாகடம்
கண்டங்கத்திரி வேர், இலை, பூ, காய், பழம், விதை, பட்டை இருக்கும் ஊரில் காய்ச்சல், நீராய் வடியும் பீநசம் (மூக்கடைப்பு சைனசட்டிஸ்), சுவாசம் (ஆஸ்துமா) முதலிய நோய்கள் இருக்காது என்பது இதன் பொருள்.
கண்டங்கத்திரி வேர்க் குடிநீர்
உலர்ந்த கண்டங்கத்திரி வேர், கத்திரி வேர், சிறுதேக்கு, கோரைக்கிழங்கு, சுக்கு முதலிய ஐந்து பொருள்களிலும் வகைக்கு 35 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றிரண்டாக இடித்துப் பொடி செய்து 4 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி, அரை லிட்டராக வற்ற வைத்து வடிகட்டி, ஒரு ஃப்ளாஸ்க்கில் வைத்துக்கொள்ள வேண்டும். வேளைக்கு 100 மில்லி என்று, 5 வேளைக் குடித்துவர எல்லாவிதமான வலிக் காய்ச்சல்களும் குணமாகும். இவ்வாறு மூன்று நாள்கள் குடிப்பது நல்லது. கண்டங்கத்திரிப் பழத்தைக் குழைய வேகவைத்துக் கடைந்து வடிகட்டிய சாற்றுடன், கால்பங்கு ஆலிவ் எண்ணெய் (Olive Oil) சேர்த்துக் காய்ச்சி, கடுகு திரளும் பக்குவத்தில் வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைப் பூசினால் வெண்படை தேமல், உதட்டு வெள்ளை மறையும்.

கண்டங்கத்திரிப் பழ விதைகளை நெருப்பில் இட வேண்டும். அப்போது வரும் புகையைப் பற்களில் படுமாறு பிடிக்கப் பல்வலி, பல்சொத்தை மாறும். பல்புழு சாகும். இன்றளவும் ‘புழுதட்டும் வைத்தியம்’ என்று ஒருமுறை பழக்கத்தில் உள்ளது. அரிவாளைத் தட்டையாகப் பிடித்துக்கொண்டு, நெருப்பின்மேல் வைத்து, சிறிதளவு வேப்ப எண்ணெய் விட்டு, கண்டங்கத்திரிப் பழ விதை களை அதன்மேல் போட்டு, ஒரு கொட்டாங்குச்சி யால் மூடுவார்கள். அதில் வெளிவரும் புகையைப் பற்களில் படுமாறு செய்வர். மேலும், கண்டங்கத்திரி விதையை அப்படியே அரைத்து, பல்வலி உள்ள கன்னத்தின்மீது வைத்துப் பூசிவிடுவர். இதனால் பல்சொத்தை, பல்வலி, பல் ஆட்டம் முதலியன நீங்கி, பற்கள் இறுகும். இந்த அளவுக்குப் பக்குவம் செய்ய இயலவில்லை என்றால், கண்டங்கத்திரிப் பழத்தை உமிக் காந்தலில் சுட்டு, குழி அம்மியில் வைத்துப் பாகல் இலைச்சாறு விட்டு நெகிழ அரைக்க வேண்டும். வெண்ணெய் பதம் வந்தவுடன் வழித்தெடுத்து, உருண்டையாகச் செய்து கொள்ளவும். வாயகன்றப் பாத்திரத்தில் இதைப் போட்டு மூழ்குமளவிற்கு நல்லெண்ணெய் விட்டு, தினந்தோறும் வெயிலில் வைக்கவும். அதில் நீர்த்துவம் முற்றிலும் மாறியவுடன், அதை அப்படியே வடித்து வைத்துக்கொண்டு பற்களில் பூசிவர பல் பூச்சி, பல்சொத்தை குணமாகும்.
‘‘முள்ளுக்கத்திரி விதைகளை காய்ந்த இலைக்குள் போட்டு பீடிபோல் சுருட்டி புகைபிடிக்க, பற்களுக்கிடையே உள்ள புழுக்கள் வெளிப்பட்டுப் பல்வலி நீங்கும்.’’
கண்டங்கத்திரி இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சிப் பூசிவர தலைவலி, மூட்டுவலி, அக்குள் நாற்றம் முதலியவை நீங்கும். இந்த இலைச்சாற்றுடன் ஆளிவிதை நெய் சேர்த்துக் காய்ச்சி வெடிப்பு களில் பூசி வந்தால் வெடிப்பு மறையும். சித்த மருந்துகளில் கிடைக்கும் கண்டங்கத்திரி ரசாயனம் அல்லது கண்டங்கத்திரி லேகியத்தைச் சிறுகுழந்தைகளுக்குக் கொடுத்துவர அனைத்துவிதமான சளி, இருமல், மிகக்கொடிய கக்குவான் இருமல்கூட (Whooping Cough) குணமாகும் என்று கண்ணுசாமிப் பிள்ளை, தமது ‘பதார்த்த குணவிளக்கம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.
ஊமத்தை, கருவூமத்தை மற்றும் பொன்னூமத்தை குறித்து அடுத்த இதழில்...
ஒருங்கிணைப்பு: இ.கார்த்திகேயன்.
மூலிகைப் பெயர் தாவரவியல் பெயர்
கத்திரி Solanum Melongena
முள்ளுக்கத்திரி Solanum Anguivi (Solanum Surrattense)
கண்டங்கத்திரி Solanum Virgina (Solanum Xanthooarpum)