
மருத்துவம் - 7 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்
உன்மத்தம் தருவதால் உன்மத்தஞ்செடி என்பது மருவி ஊமத்தை ஆகிவிட்டது. ஊதாவூமத்தை, சீமையூமத்தை, பொன்னூமத்தை, கருவூமத்தை, பேயூமத்தை, மருளூமத்தை, அடுக்கூமத்தை, மதூமத்தையெனப் பல்வேறு வகைகள் இருக்கின்றன. இத்தனை வகைகள் இருந்தாலும் வெள்ளை, மஞ்சள், கறுப்பு அல்லது ஊதா நிறத்தில் பூப்பூக்கும் ஊமத்தஞ் செடிகளே இன்று பரவலாகக் காணக்கிடைக்கிறது. அவற்றின் மருத்துவக் குணங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இவற்றில் கருவூமத்தை மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இன்று நடைமுறையில் கிடைக்கும் கருவூமத்தஞ்செடிகளில் தண்டு கறுப்பு நிறத்தில் உள்ளது. பூ கருநீல நிறத்தில் காணப்படுகிறது. காய் கறுப்பு நிறத்தில் இருப்பதில்லை. ஆனால், கருவூமத்தை என்று மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் இந்த வகையே பயன்படுத்தப்படுகிறது. பொன்னூமத்தை என்ற இனம் மிக மிக அரியது. இந்த இதழில் வெளியாகியுள்ள புகைப்படம் கோவில்பட்டி அடுத்துள்ள காளாம்பட்டியைச் சேர்ந்த வேளாண் அறிஞர் சீனிவாசன் கொடுத்தது. அவர் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு விதைவங்கியில் விதை வாங்கி வந்து, அதை முளைக்கச் செய்து பூப்பூத்த பின்னர்ப் புகைப்படம் எடுத்ததாகச் சொன்னார். வெள்ளை நிறத்தில் பூப்பூக்கும் ஊமத்தைச் செடியில் இலைகளும் பூக்களும் அடுக்கு அடுக்குகளாக இருக்கும்.

இலை, பூ எப்படி இருந்தாலும், ஊமத்தை யென மருத்துவத்தில் குறிப்பிடப்படும் இடங்களிலெல்லாம் வெள்ளை, மஞ்சள், கறுப்பு என மூன்று இலைகளையும் பயன்படுத்தலாம். ஊமத்தை இலைச்சாறு கொண்டு நூற்றுக்கணக்கான மருந்துகள் செய்யப் படுகின்றன. குறிப்பாகக் காய்ச்சலையும், கிராணிக் கழிச்சலையும் குணமாக்கும் மாத்திரைகள் செய்யப்படுகின்றன. ஊமத்தை இலைச்சாறு மூலம் தயாரிக்கப்படும் மத்தன் தைலம் அல்லது பச்சை எண்ணெய் எல்லா விதமான புண்களையும், குறிப்பாக நீரிழிவுப் புண்களையும் குணமாக்கும். இது எல்லாச் சித்த மருத்துவமனைகள் மற்றும் மருந்துக்கடை களிலும் கிடைக்கும். இதைத் தயாரிப்பது மிகவும் எளிது.

ஊமத்தை இலைச்சாறு ஒரு லிட்டர், தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், மயில்துத்தம் 100 கிராம் ஆகியவற்றைக் கலந்து அடுப்பிலேற்றி, மெழுகுபதம் வந்ததும், இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் மத்தன் தைலம். புண்களை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு, இந்தத் தைலத்தைப் பஞ்சில் தேய்த்துப் பூசிவர எல்லாப் புண்களும் விரைவில் குணமாகும். எனது அனுபவத்தில் ஊமத்தை இலைச்சாற்றுடன் குப்பைமேனிச்சாறு, வெட்டுக்காயப் பூண்டுச்சாறு, ஆடுதீண்டப் பாளைச்சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி புண்களுக்கு வழங்கி நல்ல குணம் கண்டு வருகிறேன். இவற்றில் ஆடுதீண்டாப்பாளை மிகவும் அற்புதமான ஒரு மூலிகையாகும். 20 ஆண்டுகளுக்கு முன்னர்க் கரிசல் காடுகளில் பருத்தித் தோட்டத்தில், இந்தச் செடிகள் மிக அதிகமாகக் காணப்படும். அதிகமான ரசாயன உரங்கள் மற்றும் ரசாயனப் பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டால், இந்தத் தாவரம் அதிகமாக அழிந்து வருகிறது.

மத்தன் தைலத்தை மயில்துத்தம் சேர்க்காமல் காய்ச்சி வைத்து, காதுகளில் விட்டு வந்தால் காதுவலி உடனே நிற்கும். மேலும் காதுகளி லிருந்து சீழ் வடிதல் போன்றவை குணமாகும்.
ஊமத்தையின் காய்ந்த இலையைச் சுருட்டிப் புகைப்பிடிக்க ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சுத்திணறல் உடனே நிற்கும். எந்தக் காரணம் கொண்டும் ஊமத்தையை உள்ளுக்குள் சாப்பிடக்கூடிய மருந்தாகப் பயன்படுத்த வேண்டாம்.
ஊமத்தை இலை, பூ, விதை ஆகியவற்றை நிழலில் நன்கு உலர்த்திப் பொடி செய்து, பசும்பாலில் பிட்டவியல் (பிட்டு அவியல்) செய்து மீண்டும் உலர்த்தி, பீடிபோல ஊமத்தை காய்ந்த இலையிலே சுருட்டிப் புகைபிடிக்க ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சுத்திணறல் உடனே நிற்கும். அளவு மிகவும் முக்கியம். லேசான மயக்கம் வருவதுபோல் இருந்தால் புகைபிடிப்பதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த மயக்கம் வருவதையே ‘உன்மத்தம்’ என்கிறோம். ஊமத்தை இலை, பூ, விதையைப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் அரை முதல் ஒரு கிராம் அளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதில் எழும் ஆவியைப் பிடிக்க, ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத்திணறல் நிற்கும். இதன் இலைகளை விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி வாதவலி, உளைச்சல், வாதவீக்கம், விதைவீக்கம், கட்டிகள் ஆகியவற்றின் மீது ஒற்றடம் கொடுத்துவிட்டுக் கட்டிவர வலியும் வீக்கமும் விரைவில் குறையும். இதே பக்குவத்தைப் பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால்கட்டிக் கொள்வதால் உண்டாகும் வலி மற்றும் வீக்கங்களுக்கும் செய்து வந்தால் நல்ல குணம் உண்டாகும்.

ஊமத்தை இலைச்சாறு 6 பங்கு சேர்த்துத் தயாரிக்கப்படும் வாதகஜகேசரி தைலம், சரவாங்கிவாதம் என்று அழைக்கப்படும் ரொமாட்டாய்டு மாதிரியான வாத வலிகளுக்குச் சிறந்த மருந்தாகக் கையாளப்படுகிறது. மற்ற மூலிகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு ஊமத்தை இலைக்கு இருக்கிறது. இது நாய்க்கடிப் புண் மற்றும் வெறிநாய்க்கடி நஞ்சு ஆகியவற்றைக் குணமாக்கும். ஒவ்வொரு மூலிகையின் குணநலன்களை விவரிக்கும் அகத்தியர் குணவாகடம்,
‘நாய்க்கடியால் வந்து நலிசெய் விரணமும் போம்
வாய்க்குழிப்புண் கட்டிகளு மாலுங்காண் – தீக்குணச்
சேமத்தில் வைத்திவிடந் தீருமுத்தோ டங்களாலும்
ஊமத்தையின் குணத்தை யுன்னுது’
என ஊமத்தையின் சிறப்பைக் குறிப்பிடுகிறது.இந்தப் பாடலில் முதல் வார்த்தையே நாய்க்கடிப் புண் எனத் துவங்குவதுதான் குறிப்பிடத்தக்கது. மூலிகைகள் குறித்துப் பாடநூல் எழுதிய முருகேச முதலியார், கரும்பு வெல்லத்தில் ஊமத்தை இலைச்சாறு 1 முதல் 3 துளி விட்டு, பாலன்னம், மோர்சாதம் கொடுக்கப் பேய் நாய்க்கடியின் நஞ்சு தீரும். 3 நாளுக்கு மேல் கொடுக்க வேண்டியதில்லை. உப்பு, புளி முற்றிலும் நீக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

உலகிலேயே மிகவும் கொடிய நோயான வெறிநாய்க்கடி எனும் ரேபிஸுக்கு ஊமத்தை இலைச்சாறு மருந்தாகுமா என்று களஆய்வு மேற்கொண்டபோது, என் நெருங்கிய நண்பரும், வர்ம மருத்துவருமான கண்ணன் ராஜாராமின் தாத்தா, இம்மருத்துவத்தை நீண்ட காலம் மேற்கொண்டதாகவும், கன்னியாகுமரிப் பகுதி யில் நாய்க்கடிக்கு அவரிடம் வரும் நோயாளிக்கு ஒரு டம்ளர் கரும்புச்சாற்றில் 2 அல்லது 3 துளி ஊமத்தை இலைச்சாற்றை விட்டு 3 நாள் களுக்குக் கொடுத்து, 3 நாள்களும் உப்பில்லா பத்தியம் வைத்துவிடுவாராம். 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மருத்துவத்தை மேற்கொண்ட தாகவும், அதில் ஒருவர்கூட நாய்க்கடியால் இறக்கவில்லையெனப் பதிவுசெய்துள்ளார்.
‘‘ஊமத்தை விதைகளைத் தேன்விட்டு அரைத்து, அதிக வலியுடன் உள்ள பழுக்காத கட்டிகள்மீது தடவி ஊமத்தை இலைகளை வைத்துக் கட்டிவர, அவை அமுங்கிவிடும் அல்லது பழுத்து உடையும்.’’
ரேபிஸ் நோயை இந்த மருந்து குணமாக்கியது என்பது மிகவும் போற்றுதலுக்குரியது. அதேநேரத்தில் உள்மருந்தாகச் சாப்பிட்டால் ஊமத்தங்காயும், அதன் விதையும் மிகக்கொடிய நஞ்சாகும். ஆனால், மேற்பூச்சு மருந்துகளில் இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஊமத்தங்காயுடன் கந்தகம் சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெயில் குழப்பிப் பூசிவரச் சொரி, சிரங்கு, கரப்பான் ஆகியவை தீரும். 50 ஆண்டு களுக்கு முன்னர் சித்த மருத்துவர்கள் அபின் பயன்படுத்த அரசால் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. பேதியை நிறுத்தும் மருந்துகளில் அபின் முக்கியமாகச் சேர்க்கப்படும். அதன் பிறகு, இந்த அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. எனவே, அபின் சேர்த்துச் செய்யக்கூடிய பேதி மற்றும் கிரானிக் கழிச்சலை நிறுத்தக்கூடிய பல்வேறு மருந்துகள் இன்று வழக்கில் இல்லை.
சித்த மருத்துவத்தின் மருந்தறிவியலில் வைப்பு முறை என்று ஒரு துறை உள்ளது. அரிதான ஏதாவது ஒரு மருந்துப் பொருள் கிடைக்கவில்லை என்றால், அதைச் செயற்கையாகத் தயாரிக்கும் முறைதான் ‘வைப்பு முறை’. அந்த முறைப்படி, அபினுக்கு ஈடாகக் கூறப்பட்டுள்ள வைப்பு முறையில் ஊமத்தை இலைச்சாறு அதிகமாகச் சேர்கிறது. ஊமத்தை இலைச்சாற்றுடன் எட்டிக்கொட்டைத்தூள், வெள்ளெருக்கம் பூ, பனைவெல்லம், நல்லெண்ணெய் முதலான பொருள்கள் சேர்த்துச் செய்யப்படும் செயற்கை அபினில் போதை இருப்பதில்லை. ஆனால், பேதியை நிறுத்துவதில் சிறப்பாகச் செயல்படுகிறது.
நன்கு முதிர்ந்த ஊமத்தை விதைகளைப் பசுநெய் விட்டு மைபோல அரைத்து மூலமுளைக் கட்டிகள் (ஆரம்ப நிலையில் உள்ள கட்டிகள்) மீது தொடர்ந்து பூசிவந்தால், மூலமுளை அற்றுப்போய்விடும். ஊமத்தை விதைகளைத் தேன்விட்டு அரைத்து, அதிக வலியுடன் உள்ள பழுக்காத கட்டிகள்மீது தடவி ஊமத்தை இலைகளை வைத்துக் கட்டிவர, அவை அமுங்கிவிடும் அல்லது பழுத்து உடையும்.
இதில் கவனத்திற்கொள்ள வேண்டியது இலை, தண்டு, பூ, காய், விதையென ஊமத்தையின் அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவைதான். அதற்காக எந்தக் காரணம் கொண்டும் ஊமத்தையை உள்ளுக்குள் சாப்பிடக்கூடிய மருந்தாகப் பயன்படுத்த வேண்டாம்.
எருக்கு, வெள்ளெருக்கு, வெள்ளறுகு குறித்து அடுத்த இதழில்...