நல்மருந்து 2.0 - குதிகால் வலி நீக்கும் எருக்கு! தோல் நோயைக் குணமாக்கும் வெள்ளறுகு!

மருத்துவம் - 8 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்
நம் மண்ணில் அனைத்து இடங்களிலும் தன்னிச்சையாக முளைத்து, அடர்ந்து காணப்படும் தாவரம் எருக்கு. மலர்களில் நீல நிற வரி காணப்படும் இனம் சாதாரண `எருக்கு’ என்றும், மலர்கள் முழுக்க வெண்மையாக இருந்தால், `வெள்ளெருக்கு’ என்றும் அழைக்கப்படும்.
இதன் வேரைத் தோண்டியெடுத்து, பிள்ளையார் சிலை செய்து வீடுகளில்வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஒருவித நம்பிக்கை. எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு இட்டு வழிபடுகிறார்கள்.

‘மூவருக்கங் கட்டை முதலொடுநன் மாத்திரமன்
மூவருக்கங் கட்டையது முன்’
என்கிறது தேரன் வெண்பா பாடல்.
`எருக்கம் வேர்ப்பட்டை சூரணத்தை ஒரு நெல்லளவு தண்ணீரில் உண்டால் வளிநோயும் (வாதம்), திப்பிலித்தூளுடன் உட்கொண்டால் அழல்நோயும் (பித்தம்), மிளகுப் பொடியுடன் உட்கொண்டால் ஐயநோயும் (கபம்) ஒழியும்’ என்பது இதன் பொருள்.

‘குடலை அரிக்கும் தன்மையுடைய மோசமான நஞ்சு’ (Corrosive Poison) என்று ஆங்கில மருத்துவம் எருக்கைப் புறந்தள்ளி விடுகிறது. ஆனால், தமிழ் மருத்துவம் எருக்கிலை, வேர்ப்பட்டை, பூ, பால் என எருக்கின் பல்வேறு உறுப்புகளைச் சிறந்த மருந்துப் பொருள்களாகப் பயன்படுத்துகிறது. ‘கேல்கனியல் ஸ்பர்’ (Calcaneal Spur) என்று ஆங்கில மருத்துவத்தில் கூறப்படும் குதிகால் வாதத்துக்கு எருக்கிலை சிறந்த நிவாரணி. செங்கல்லை அடுப்பில் போட்டு, நன்றாகச் சூடேறியவுடன் அதை எடுத்து, அதன்மீது ஐந்து எருக்கிலைகளை வைக்க வேண்டும்.
குதிகால் வலியுள்ளவர்களை, வலியுள்ள பாகத்தைச் செங்கல்லின் மீது தாங்கக்கூடிய வரையில் வைத்து அழுத்தும்படிச் செய்ய வேண்டும். அந்தச் செங்கல் சூடு ஆறினாலும், மற்றொரு செங்கல்லை முன்புபோல் சூடேற்றி எருக்கிலையை வைத்து முன்பு போலவே செய்ய வேண்டும். இப்படி தினமும் காலை, மாலை மூன்று நாள்கள் செய்து வந்தால் வலி நீங்கிவிடும். குதிகால் (குதிங்கால்) வாதத்துக்கு இது நல்ல குணத்தைக் கொடுக்கும்.

எருக்கிலைகளை நிறைய சேகரித்து வெற்றிலைக் கட்டுபோலக் கட்டிக்கொண்டு, கத்தியால் நடுப்பகுதியில் அறுத்துக்கொள்ள வேண்டும். அறுபட்ட பாகத்தைச் சூடாக்கிய வேப்பெண்ணெயில் தோய்த்து, பொறுக்கும் சூட்டில் ஒற்றடம் கொடுக்க வாதவலி, வீக்கங்கள் குணமாகும். மேலும், வலிப்பு வந்தவர்களுக்கு உள்ளங்கைகளில் பூசிவந்தால் உடலில் சூடு உண்டாகி, உடல்வலி, சோர்வு, அசதி நீங்கும். எருக்கிலைகளை நன்றாக உலரவைத்து, பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பிப் போட்டுவர புழுவைத்த புண்கள் ஆறும். ஒற்றைத் தலைவலியைக் குணமாக்கும் ‘அர்க்காதிக் தைலம்’, அனைத்து வாதநோய்களையும் குணமாக்கும். உரோக சஞ்சீவித் தைலம், வாதநோய்களுக்கு ஒற்றடம் கொடுக்கப் பயன்படும் வாதகேசரி தைலம், விடமுட்டித் தைலம் முதலான பல தைலங்கள் தயாரிப்பில் எருக்கிலைச்சாறு அதிகளவில் சேர்க்கப்படுகிறது.
உலோக பாடாணங்களைக்கொண்டு மருந்து செய்யும் முறைகள் சித்த மருத்துவத்தில் ஏராளம் உண்டு. உலோக பாடாணங்களின் தன்மைகளை முற்றிலும் மாற்றுவதற்கு ‘செயநீர்’ என்ற ஒன்று தயாரிக்கப்படும். அவற்றில் முக்கியமானது ‘அண்ட எருக்கஞ் செயநீர்’. இதன் தயாரிப்பில் எருக்கம்பால் மிகவும் இன்றியமையாத ஒரு பொருள். மிகவும் கொடிய நஞ்சான எருக்கம்பால் மூலம் உயிர்காக்கும் மருந்துகளான ‘விஷ மை’ தயாரிக்கப்படுகிறது. நல்ல பாம்பு தவிர மற்ற அனைத்துப் பாம்புக்கடிகளுக்கும் இது சிறந்த மருந்து.

இது பாம்பு கடித்தவருக்கு உள்ளுக்குள் (வாய்வழி) வழங்கும் மருந்து. பாம்பு கடித்து மயக்கமானவருக்கு, உச்சந் தலையைக் கீறி, இந்த மையைக் கீறிய இடத்தில் பூசி, ரத்தத்தில் கலக்கச் செய்து, மயக்கம் தெளிவித்த வரலாறு இன்றும் பழங்கதைகளாகப் பேசப்பட்டுவருகிறது. இந்த மருத்துவ முறைக்கு ‘குடோரி மருத்துவம்’ என்று பெயர். இன்று பழக்கத்திலுள்ள ஊசிபோடும் மருத்துவ முறைகளுக்கு முன்னோடியாக இதைக் கருதலாம்.
கோயில்களில் கால பைரவருக்கு என்று தனியாக ஒரு திருமுற்றம் இருக்கும். அந்த தெய்வத்தின் பெயரில் பைரவ மாத்திரைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. அதாவது, மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போரடிக்கொண்டிருக்கும் நோயரைப் பிழைக்க வைத்தவை இந்த மருந்துகள். ஜன்னி அல்லது வலிப்பு நோயை 13 வகையாக வகைப்படுத்தி, ஒவ்வொரு ஜன்னிக்கும், பைரவ மாத்திரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இது சித்த மருத்துவத்தின் அவசரகால மருத்துவ முறை. இந்த பைரவ மாத்திரைகள் தயாரிப்பில் எருக்கம்பால் அதிகமாகச் சேர்க்கப்படுகிறது.
`மிகவும் கொடிய நஞ்சு’ என்று நவீன அறிவியல் கருதும் எருக்கம்பால், சித்த மருத்துவத்தில் மருந்து தயாரிப்பில் அதிகம் சேர்க்கப்படுகிறது. இதேபோல மிகவும் கொடிய நஞ்சாகக் கருதப்படும் எருக்கஞ்செடியில் பூக்கும் மலர்கள் நஞ்சு இல்லாமல் உள்ளுக்குள் வழங்கப்படும் மருந்தாகக் கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது. `ஆஸ்துமா’ எனப்படும் இரைப்பு நோயின் அதிதீவிர நிலைகளில் சுவாச குடோரி மாத்திரை மிகுந்த பயனளிக்கிறது.
சுவாச குடோரி மாத்திரை செய்முறை
வெள்ளெருக்கம்பூ, மிளகு இரண்டையும் சம அளவு எடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் நன்கு அரைத்து, மெழுகுபோல உருட்டும் பதத்தில் எடுத்து, குன்றிமணி அளவு மாத்திரையாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும். இருமல், இரைப்பு அதிகமாகும்போது, ஒன்றிரண்டு மாத்திரைகளை வாயில் போட்டுச் சுவைத்துக்கொண்டே இருந்தால் இரைப்பு தணியும். இந்த மாத்திரை எல்லா சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

வெள்ளறுகு
இது உவர் நிலங்களில் தன்னிச்சையாக வளரும் ஒரு சிறுசெடி. ஓரடி வரை வளரும் இயல்புடையது. தண்டின் அறுகுகளில், அதாவது ஓரங்களில் வெள்ளை நிறப் பூக்கள் காணப்படுவதாலும், வெள்ளைநோயை முற்றிலுமாக அறுப்பதாலும் ‘வெள்ளறுகு’ அல்லது ‘வெள்ளருகு’ என அழைக்கப்படுகிறது. மிகவும் கசப்புச் சுவையுடையது. முழுச் செடியையும் பறித்து அப்படியே அரைத்துப் பூசிவர சொறி, சிரங்கு, கரப்பான் புண்கள் குணமாகும். தேவையென்றால் சிறிதளவு மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம். முழுச் செடியை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனுடன் சிறிது மிளகும், ஒரு திரி வெள்ளைப்பூண்டும் சேர்த்து அரைத்துப் பாலில் கலக்கிக் கொடுத்துவந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். இந்த மருந்தை உட்கொள்ளும்போது உடலில் சூடு கண்டால் சிறிது வெண்ணெய் உண்டு வரவும்.
எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குத் தொடக்கக் காலங்களில் இந்த மூலிகையை வழங்கி ஆய்வு மேற்கொண்டபோது மிக நல்ல முடிவுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறவில்லை. மிகவும் மோசமான சருமநோய்களைத் தீர்ப்பதில் வெள்ளறுகு முதன்மையானது. வெள்ளறுகுச் சாறு சேர்த்து ‘குஷ்டாமிர்தம்’ எனும் சருமநோய் மருந்து தயாரிக்கப்பட்டு, நாள்பட்ட எல்லாச் சருமநோய்களுக்கும், கடும் பத்தியத்துடன் உண்டவர்கள் நல்ல குணம் கண்டதாகக் கண்ணுசாமிப்பிள்ளை, தமது ‘பரம்பரை வைத்தியம்’ நூலில் பதிவுசெய்திருக்கிறார்.
அறுகு, கோரை, வெட்டிவேர் ஆகிய புல்லினங்கள் குறித்து அடுத்த இதழில்...