நல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு! - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்!

மருத்துவம் - 9 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
“ஆல் போல் தழைத்து
அறுகுபோல் வேரோடி...” - இந்த வாழ்த்துச் சொல்லை நாம் அடிக்கடிக் கேட்கிறோம். எத்தனையோ தாவரங்கள் இருக்கும்போது, வேரோடுவதற்கு அறுகம்புல் ஏன் குறிப்பிடப்படுகிறது. காரணம், எத்தனை முறை செதுக்கினாலும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் தன்மை அறுகம்புல்லுக்கு மட்டுமே உண்டு. இருக்கும் இடம் முழுவதும் அதன் வேர்களைப் பரப்பிவிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அறுகம்புல்லை ரசாயன களைக்கொல்லியைத் தெளித்து முற்றிலுமாக அழித்துவிடுகிறோம். நிலத்தின் மேல்மண்ணைப் பாதுகாக்கும் அறுகம்புல்லை முற்றிலும் அகற்றிவிட்டால், மண் அரிப்பு ஏற்பட்டு மண்வளம் குறையத் தொடங்கும்.

அறுகம்புல்லைச் சாப்பிட்டால் அனைத்து நோய்களும் குணமாகிவிடும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், சித்த மருத்துவ மூல நூல்களில் அறுகம்புல்லைப் பொடியாக உட்கொள்ளும் பழக்கம் குறித்து எங்குமே குறிப்பிடப்படவில்லை. நார்ச்சத்து மிகுந்த இயற்கை உணவுப் பொருள்களை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் மட்டுமே அறுகம்புல்லால் கிடைக்கும். அதைவிட மிகப்பெரிய நன்மை ஏதுமில்லை என்பதே உண்மை. அறுகம்புல்லைச் சேகரித்து, தண்ணீர்விட்டு நன்கு கழுவி, இடித்துச் சாறு எடுக்க வேண்டும். சாறு ஒரு லிட்டர் எடுத்துக்கொண்டால், அதனுடன் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய், 100 கிராம் அதிமதுரப்பொடி சேர்த்து அடுப்பிலேற்றி சூடாக்க வேண்டும். அடியில் படியும் வண்டல், மெழுகு பதத்துக்கு வந்தவுடன் அடுப்பைவிட்டு இறக்கி, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதற்கு ‘அறுகம்புல் தைலம்’ என்று பெயர். இதை மேலுக்குப் பூசிவர, எல்லாவிதமான அரிப்பு, தோல் நோய்கள், புண்கள் குணமாகும். சித்த மருந்துக் கடைகளில் ‘தூர்வாதித் தைலம்’ என்ற பெயரில் இந்தத் தைலம் கிடைக்கிறது.

பௌர்ணமி அல்லது அமாவாசை நாள்களில் உடம்பில் ஊறல், தடிப்பு தோன்றுதல் போன்றவற்றுக்கு அறுகம்புல்லை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அதனுடன் இரண்டு மிளகு, இரண்டு வெற்றிலை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து, 400 மி.லி தண்ணீர் சேர்த்து, சுண்டக் காய்ச்சி 100 மி.லியாக வற்றவைக்க வேண்டும். இதை வடிகட்டி, வெறும் வயிற்றில் காலையில் மட்டும் ஒரு மண்டலம் (48 நாள்கள்) குடித்துவந்தால், மேற்குறிப்பிட்ட விஷக்கடி தொடர்புடைய அனைத்து தோல் நோய்களும் குணமாகும். அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசிவர, எல்லாவிதமான சொறி, சிரங்கு, ஊறல் குணமாகும். அறுகம்புல் சாற்றை நன்கு வடிகட்டிக் கண்களில் விட்டுவர, கண் புகைதல் நீங்கி கண்பார்வை தெளிவாகும். மூக்கில் விட்டுவர, மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் நிற்கும். வெட்டுக் காயங்கள்மீது விட்டால், ரத்தம் வடிதல் நிற்கும்.

கணு நீக்கிய அறுகம்புல் 30 கிராமை எடுத்து அரைத்து, காய்ச்சிய பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, ரத்த மூலம் குணமாகும். கணு நீக்கிய அறுகம்புல் சமூலத்தை (சமூலம் என்பது ஒரு செடியின் இலை, தண்டு, மலர், வேர் எல்லாவற்றையும் உள்ளடக்கியது) அரைத்து அதனுடன் சம அளவு வெண்ணெய் கலந்து 48 நாள்கள் காலையில் மட்டும் உட்கொண்டுவர, உடல் தளர்ச்சி நீங்கி முகப்பொலிவு உண்டாகும். கணு நீக்கிய அறுகம்புல் சமூலம் 30 கிராம், கீழாநெல்லிச் சமூலம் 15 கிராம் எடுத்து நன்றாக அரைத்து, தயிரில் கலக்கிக் காலையில் குடித்துவர நாள்பட்ட வெள்ளைப்படுதல், மேகச் சூடு, உடல் வறட்சி, சிறுநீருடன் ரத்தம் போதல், சிறுநீர்த்தாரைப் புண், நீர்க்கடுப்பு முதலியவை குணமாகும். அறுகம்புல்லைவிட அவற்றின் வேருக்குத்தான் அதிகமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.சாக்கடை நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் செயற்கை உரங்கள், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து அறுகம்புல்லைச் சேகரிப்பதைத் தவிர்த்துவிட்டு, தூய்மையான இடங்களில் சேகரித்துப் பயன்படுத்துவதே நல்லது. முடிந்த அளவு நம் வீட்டிலேயே வளர்த்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. கட்டுக்கடங்காத தாகம் ஏற்படும் சர்க்கரை நோயாளிகளுக்குப் பின்வரும் குடிநீர் நல்ல பயன் தரும். அறுகம்புல் வேர், நன்னாரி வேர், ஆவாரை வேர்ப்பட்டை, கற்றாழை வேர் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு பெரிய மண் பாத்திரத்தில் போட்டு இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி, அரை லிட்டராக வற்றவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். பின்னர், அதே மண் பாத்திரத்தில் வற்றவைத்த குடிநீரை ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி காய்ச்சி, கால் லிட்டராக வற்ற வைத்து ஒரு ஃப்ளாஸ்க்கில் சூடாக ஊற்றிவைக்கவும். அவ்வப்போது இந்தக் குடிநீரில் 50 மி.லியுடன் சிறிது வெந்நீர் கலந்து குடித்து வரவும். இவ்வாறு, ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை நான்கு அல்லது ஐந்து வேளை குடித்துவர, சர்க்கரைநோயால் ஏற்படும் அதிக தாகம் குணமாகும். அத்துடன், உடற்சூடு குறைந்து நல்ல உறக்கம் உண்டாகும்.
‘‘கணு நீக்கிய அறுகம்புல் 30 கிராமை எடுத்து அரைத்து, காய்ச்சிய பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, ரத்த மூலம் குணமாகும்.’’

புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு
கோரைக்கிழங்கு வயல் வரப்புகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு புல் இனம். தோண்டி எடுத்தால், முட்டை வடிவிலான கிழங்குகள் கிடைக்கும். இதில் சிறுகோரை, பெருங்கோரை, அம்மக் கோரை, வாட் கோரை எனப் பல வகைகள் உண்டு. மருத்துவத்தில் சிறுகோரைக்கிழங்குதான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கோரைக்கிழங்கைத் தனியாக அதிகம் பயன்படுத்துவதில்லை. தனியாகப் பயன்படுத்த விரும்பினால், பின்வருமாறு பக்குவம் செய்து சாப்பிடலாம். இதன் மேல்தோலைச் சீவி சுத்தம் செய்து இடித்து, ஒரு மெல்லிய சீலைத் துணியில் சலித்து ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து உண்டுவரலாம். இப்படி உண்டு வந்தால் புத்திக்கூர்மை, தாது விருத்தி, முக அழகு, காசநோயாளிகளுக்கு உடல் எடை அதிகரிப்பது ஆகியவை உண்டாகும். பித்த சுரக்குடிநீர், நிலவேம்புக் குடிநீர், ஆவாரைக் குடிநீர் ஆகிய குடிநீர் சூரணங்களில் கோரைக்கிழங்கும் சேர்க்கப்படுகிறது. இந்தக் கிழங்கிலுள்ள மாவு மற்றும் பிற சத்துப் பொருள்கள் உடலுக்கு உடனே ஊட்டத்தையும் தெம்பையும் தருவதால் குடிநீர் சூரணங்களில் சேர்க்கப்படுகிறது. குதிகால் வலி உள்ளவர்கள் கோரைக்கிழங்கு சூரணத்தை ஒன்று முதல் மூன்று மாதங்கள் சாப்பிட்டுவர நல்ல பலன் கிடைக்கும். கோரைக்கிழங்கைப் பச்சையாக அரைத்து மார்பில் பற்றுப் போட்டால், பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகப்படுத்தும். `கோரைப்பாயில் படுத்து உறங்கினால் உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும், காய்ச்சலின் வேகம் தணியும், நன்கு தூக்கம் வரும்’ என்று அகத்தியர் குணவாகடம் கூறுகிறது. ‘சடாமாஞ்சில் கோரை’ என்பது இமயமலைச் சாரலில் விளையும் ஒரு வகைக் கோரை இனம். இதன் சல்லிவேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். வாதவலியை குணமாக்கும் தைலங்களில் இது அதிகம் சேர்க்கப்படுகிறது.

குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்
‘வெட்டிவேர்’, ‘விளாமிச்சு வேர்’ ஆகிய இரண்டும் தைலங்களில் மணமூட்டுவதற்காகச் சேர்க்கப்படுகின்றன. நிலவேம்புக் குடிநீர் மற்றும் குளியல் பொடிகளிலும் மணத்துக்காக மட்டுமல்லாமல், உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தவும் சேர்க்கப்படுகிறது. இவை இரண்டிலும் ஒரு நடைமுறைக் குழப்பம் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் வெட்டிவேரை ‘விளாமிச்சு வேர்’ என்றும், நாம் `விளாமிச்சு வேர்’ எனச் சொல்லும் ஓமவள்ளிச் செடியைப்போல இருக்கும் ஒரு செடியின் வேரை அங்கு ‘வெட்டிவேர்’ எனவும் அழைக்கிறார்கள். ‘விளாமிச்சு பூண்டு வகையைச் சேர்ந்தது. இதன் இலை, ஓமவள்ளி இலையைப்போல் இருக்கும். கருமை நிறத்துடன் இருக்கும். இதன் வேருக்கு நல்ல மணம் உண்டு. இதனைக் ‘குரு வேர்’ என்று கூறுவார்கள். குறுகி இருப்பதால், இந்தப் பெயர் வந்தது போலும். இதன் வேரையும் மேல் தண்டையும் விட்டுவிட்டு நடுப்பகுதியை மட்டும் வெட்டி வெட்டி தழைக்க வைப்பதால் இதற்கு வெட்டிவேர் என்று பெயர் வந்தது.

இனி சொல்லும் பயன்கள் வெட்டிவேருக்கு மட்டுமே பொருந்தும். வெட்டிவேரை ஒரு கைப்பிடியளவு எடுத்து, ஒரு சுத்தமான துணியில் பொதிந்து, மண்பானைத் தண்ணீரில் போட்டு ஊறவைத்துக் கோடைக் காலங்களில் குடித்துவர, நீரெரிச்சல், நீர்க்கடுப்பு, அதிகமான உடற்சூடு ஆகியன நீங்கும். வெட்டிவேரைத் தனி மருந்தாக உட்கொள்வதில்லை. வெட்டிவேரைச் சூரணமாகச் செய்து அரை முதல் ஒரு கிராம் அளவு எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து உண்டுவர அதிகமான பித்தம், சுரம், தாகம் குணமாகும். இதையே தேநீருக்கு பதிலாகப் பருகி வர உடற்சூடு குறையும். வெட்டிவேர் விசிறி, வெட்டிவேர் கட்டில் முதலியவை இன்னும் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லி, கீழாநெல்லி குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.