மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஒரு ஏக்கர் 84,000 ரூபாய் சத்தான வருமானம் தரும் சாத்தூர் வெள்ளரி !

சாத்தூர் வெள்ளரியுடன்
செந்தில்வேல் குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
சாத்தூர் வெள்ளரியுடன் செந்தில்வேல் குமார்

மகசூல்

சமைக்காமல் அப்படியே பச்சையாகச் சாப்பிடக்கூடிய காய்களில் முக்கியமானது வெள்ளரி. உடலின் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சியைத் தருகிறது, கோடைக்கு எதிரான கேடயங்களில் ஒன்றாக இருக்கும் வெள்ளரி. குறைவான தண்ணீர், குறைவான பராமரிப்பு, சந்தை தேவை போன்ற காரணங்களால் வெள்ளரியை விவசாயிகள் பரவலாகச் சாகுபடி செய்து வருகிறார்கள். அதிலும் தென் மாவட்டங்களில் ‘சாத்தூர் வெள்ளரி’ மிகவும் சிறப்பு வாய்ந்தது. இயற்கை முறையில் சாத்தூர் வெள்ளரியைச் சாகுபடி செய்து வருகிறார், விருதுநகரைச் சேர்ந்த விவசாயி செந்தில்வேல் குமார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது வன்னிமடை. இந்தக் கிராமத்துக்குச் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் பச்சைப் போர்வை போர்த் தியதுபோல படர்ந்திருந்தன வெள்ளரிக் கொடிகள். அதில் மூக்குத்திப்போல மஞ்சள் நிறப்பூக்கள் மின்னிக்கொண்டிருந்தன. ஊரின் கடைக்கோடியிலிருந்தது செந்தில் வேல் குமாரின் தோட்டம். வெள்ளரி அறுவடையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம். இரண்டு வெள்ளரிப் பிஞ்சுகளை நம்மிடம் சாப்பிடக் கொடுத்தபடியே பேச ஆரம்பித்தார்.

வெள்ளரி
வெள்ளரி



‘‘அடிப்படையில் விவசாயக் குடும்பம். பருத்தி, மிளகாய், வெள்ளரிதான் இந்தப் பகுதியோட முக்கிய சாகுபடிப் பயிர்கள். எட்டாம் வகுப்பு வரை படிச்சேன். அதுக்குப் பிறகு அப்பாவுடன் சேர்த்து விவசாயத்தைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ‘உரம் போடாம, மருந்தடிக்காம விவசாயம் செஞ்சா, அதுல ஒண்ணுமே கிடைக்காதுடா’ன்னு அப்பா சொன்னார். அதனாலேயே நானும் ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிச்சு விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்.

ஒரு கட்டத்துல பருத்தி, தக்காளி, கத்திரி, வெள்ளரியைத் தாக்குற பூச்சி, நோய்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளை மாத்தி மாத்தி தெளிச்சும் பலனில்ல. நிலமும் பொலபொலப்பு இல்லாம சிமென்ட் தரை மாதிரி ஆயிடுச்சு. வருஷத்துக்கு வருஷம் விளைச்சல் குறைய ஆரம்பிச்சுச்சு. ‘விளைச்சல் குறைய ஆரம்பிக்கு துன்னா உரம் இன்னும் அதிகமாப் போடணும்’னு உள்ளூர் விவசாயிங்க சொன்னாங்க. அதே மாதிரி செஞ்சும் எந்த முன்னேற்றமும் இல்ல. இருந்தாலும், விவசாயத்தைக் கைவிடக் கூடாதுன்னு தொடர்ந்து செஞ்சுட்டு வந்தோம்.

வெள்ளரிப் பழம்
வெள்ளரிப் பழம்



நாலு வருஷத்துக்கு முன்ன சாத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துல நடந்த இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக் கொல்லியோட தீமைகளைப் பற்றித் தெளிவா எடுத்துச் சொன்னாங்க. வருஷக் கணக்குல ரசாயன உரம் போட்டு விவசாயம் செஞ்சிருந்தாலும் பலதானிய விதைப்பு மூலமா மண்ணை வளப்படுத்திடலாம்னு சொன்னாங்க. சாதாரணத் தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களை விதைச்சு பூப்பூத்த நிலையில மடக்கி உழுதா மண்ணுல வளம் ஏறிடும்னு கேட்டதும் ஆச்சர்யமா இருந்துச்சு.

அதுமட்டுமல்லாம, பயிர் வளர்ச்சி ஊக்கியா பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், மீன் அமிலத்தையும், பூச்சி, நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, மிளகாய்க்கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, அக்னி அஸ்திரம், வேப்பங் கொட்டைக்கரைசல்னு பல கரைசல்களைப் பத்தியும் சொன்னாங்க. எல்லாத்தையும் கணக்குப் போட்டுப் பார்த்தேன். ரசாயன வளர்ச்சியூக்கி, பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கித் தெளிக்கிறதுக்கான விலையில, கால்வாசிதான் செலவாகுதுன்னு தெரிஞ்சு கிட்டேன். ரசாயன உரத்தால மண்ணும், பூச்சிக்கொல்லியால பயிரும் பாழாகுறதைத் தாங்கிக்க முடியாம இருந்த எனக்கு, அந்தப் பயிற்சி வகுப்பு இயற்கை பாதையைக் காட்டுனுச்சு.

அறுவடைப் பணி
அறுவடைப் பணி



அந்தப் பயிற்சியில பேச வந்திருந்த ஒரு விவசாயிதான் பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார். உடனே நிலத்தை மூணு முறை பலதானிய விதைப்பு விதைச்சு பூத்த நிலையில மடக்கி உழுதேன். மட்கின தொழுவுரத்துடன், வேப்பம்புண்ணாக்கு, மண்புழுவுரத்தையும் பரவலாத் தூவி மண்ணை வளப்படுத்துனேன். முதல் தடவை சுமாரான மகசூல்தான் கிடைச்சுது. ஆனா, ரெண்டாவது வருஷம் எதிர்பார்த்ததைவிடக் கூடுதல் மகசூல் கிடைச்சுது. இது மொத்தம் ஒரு ஏக்கர் மானாவாரி நிலம். இதுல சாத்தூர் வெள்ளரி பறிப்புல இருக்கு. இது தவிர இறவையில ஒரு ஏக்கர்ல லக்னோ-49 ரகக் கொய்யா, பூப்பூத்த நிலையில இருக்கு” என்றார்.

இறுதியாக அறுவடை, சந்தை வாய்ப்பு மற்றும் வருமானம்குறித்துப் பேசியவர், “சாத்தூர் வெள்ளரிக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கு. அதே நேரத்துல இயற்கை விவசாயத்துல விளைஞ்ச காய்னு கூடுதல் விலை ஏதும் கிடைச்சுடல. நம்ம வெள்ளரியோட தரம் நல்லா இருக்குங்கிற பேரு மட்டும்தான். காலையில 6 மணிக்கெல்லாம் காய் பறிக்க ஆரம்பிச்சுடுவோம். பறிச்சு 8 மணிக்கெல்லாம் காய்களைக் குவிச்சிடுவோம். 45-வது நாள்ல இருந்து அதிகபட்சமா 70 நாள் வரைக்கும் தினமும் காய் பறிக்கலாம். குறைஞ்சபட்சம் 800-ல இருந்து அதிகபட்சமா 2,000 காய்கள் வரைக்கும் கிடைக்கும்.

செலவு- வரவு பட்டியல்
செலவு- வரவு பட்டியல்



ஒரு காய் 1 ரூபாய்னு எண்ணிக்கை அடிப்படையிலதான் விற்பனை செய்றேன். திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில்ல இருந்து வியாபாரிங்க தோட்டத்துக்கே வந்து காய்களை எண்ணி சாக்குல மூட்டையாக் கட்டிடுறாங்க. பணமும் உடனே கிடைச்சுடுது. போன வருஷம் ஒரு ஏக்கர்ல சொத்தைக்காய்கள், சேதமான காய்கள் கழிச்சு 75,000 காய்களை, 75,000 ரூபாய்க்கு வித்தேன். நுனி வளைஞ்ச காய்களுக்கு எண்ணிக்கையில விலை கிடையாது. குவியலா வச்சுடுவோம். அதுக்குத் தகுந்தபடி விலை கிடைக்கும். அந்த வகையில வளைஞ்ச காய்கள் விற்பனை மூலமா 9,000 ரூபாய்னு மொத்தம் 84,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சுது. இதுல உழவுல இருந்து அறுவடை வரைக்குமான செலவு 31,900 ரூபாய் போக 52,100 ரூபாய் லாபமாக் கிடைச்சுது. கரிசல் மண்ணோட வளம்தான் இந்த மகசூலுக்கு முக்கியக் காரணம்” என்றார் மகிழ்ச்சி பொங்க.


தொடர்புக்கு, செந்தில்வேல் குமார்,

செல்போன்: 99436 31412

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கரில் மானாவாரியாக, சாத்தூர் வெள்ளரிச் சாகுபடி செய்வது குறித்து செந்தில்வேல் குமார் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

மானாவாரி நிலத்தில் வெள்ளரிச் சாகுபடி செய்யத் தைப்பட்டம் ஏற்றது (இறவைப் பாசனமாக இருந்தால் அனைத்துப் பட்டத்திலும் நடலாம்). கார்த்திகை மாத இறுதியில் நிலத்தை ஒரு முறை உழவு செய்துவிட்டு 10 நாள்கள் காய விட வேண்டும். இரண்டாவது உழவின்போது, ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டர் மட்கின தொழுவுரத்துடன் 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கைக் கலந்து பரவலாக்கி உழவு செய்ய வேண்டும். விதைக்கும் நாளில் மாலை நேரத்தில் விதையைத் தூவ வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதை தேவை. ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி, அதில் 50 மி.லி சூடோமோனஸ் கலந்து அதில், விதையை 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு, நிழலில் 10 நிமிடங்கள் உலர்த்திவிட்டு, சிறிது மணல் கலந்து பரவலாகத் தூவ வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதால், வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காது. பனிக்காலத்திலேயே வெள்ளரிக் கொடி நன்கு வளர்ந்துவிடும்.

தோட்டத்தில்
தோட்டத்தில்

3 முதல் 5 நாள்களில் முளைப்பு தெரியும். 8 முதல் 10 நாள்களில் மூன்று இலைகள் தென்படும். 15-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 20 முதல் 25-ம் நாளில் கொடி வீசத் தொடங்கும். அந்த நேரத்தில் சிவப்பு நிற வண்டுத் தாக்குதல் இருக்கும். இலைகள் பார்ப்பதற்கு சல்லடை போல காணப்படுவதே இத்தாக்குதலுக்கான அறிகுறி. இதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையாக, 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி வேப்பங்கொட்டைக் கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

15 மற்றும் 25-ம் நாள்களில் களை எடுத்தாலே போதும். 30 முதல் 35-ம் நாள்களில் கொடிகளில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பரவலாகத் தென்படும். 38 முதல் 40-ம் நாளில் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். இந்த நேரத்தில் பழ ஈக்களின் தாக்குதல் இருக்கும். இந்த ஈக்கள், காய்களில் துளை போட்டு உள்ளே சென்று கொறித்துத் தாக்குதலை ஏற்படுத்தும். இதனால், காயின் நுனிப்பகுதி வளைய ஆரம்பிக்கும். இப்படி நுனிப்பகுதி வளைந்த காய்கள் விலை போகாது. எனவே, இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி இஞ்சி-பூண்டு-பச்சைமிளகாய்க் கரைசலைக் கலந்து கைத்தெளிப் பானால் தெளிக்க வேண்டும். 45-ம் நாளிலிருந்து காய் பறிக்கத் தொடங்கலாம்.

மாதம் ஒருமுறை இயற்கை விவசாயப் பயிற்சி!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் பரமசிவத்திடம் பேசினோம். “சாத்தூர் அருகிலுள்ள கொல்லம்பட்டி ‘கத்திரி’ சாகுபடிக்கு பெயர் பெற்றது. அடுத்து சாத்தூர் என்றால், ‘வெள்ளரி’யைத்தான் சிறப்பாகச் சொல்கிறார்கள். சாத்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் மானாவாரியாகச் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெள்ளரிச் சாகுபடி செய்யப் படுகிறது. இதுதவிர, கண்மாய் ஓரங்களிலும் சாகுபடி செய்கிறார்கள். கைவிரலைவிட சற்றுப் பெரிய அளவில் இருப்பதுதான் இந்த ரகத்தின் சிறப்பு. கரிசல் மண்ணின் வளமும், பனிக்காலமும்தான் இதன் சுவைக்குக் காரணம். இந்த வெள்ளரியில் தண்ணீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.

பரமசிவம்
பரமசிவம்

கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கத் தைச் சமாளிக்க விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிலாளர்களுக்குத் தினம்தோறும் சாத்தூர் வெள்ளரியை ஆலை நிர்வாகத்தினர் கொடுக்கிறார்கள். அவர்களாகவே விதைகளையும் சேகரித்து வைத்துக்கொண்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் சாகுபடி செய்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள், காய்களைத் தங்களுடைய தோட்டங்களைத் தேடி வரும் வெளியூர் வியாபாரிகளிடமே, ஒரு காயை 1 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். ஆனால், வியாபாரிகள் 5 காய்களை 20 ரூபாய் எனக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவு. விவசாயிகள், நேரடியாக விற்பனை செய்தால் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை விலை கிடைக்கும். விவசாயிகள் வியாபாரியாக மாற வேண்டும். சாத்தூர் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மாதம் ஒருமுறை இயற்கை விவசாயம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 300 விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியிருக்கிறோம்” என்றார்.
தொடர்புக்கு, பரமசிவம், 99523-53724.

விதைகளைச் சேகரிப்பது எப்படி?

காய் பறிக்கத் தொடங்கியதிலிருந்து10-வது நாளுக்கு மேல், கொடிகளில் நீளமான திரட்சியான காய்களை விதைக்காக விட்டுவிட வேண்டும். இந்தக் காய்கள் கொடியில் பழுத்துத் தானாகவே வெடிக்கும் வரை விட வேண்டும். பழம் தானாக வெடிப்பதற்கு முன் எடுத்தால், விதைகள் முதிர்ந்தும் முதிராமலும் இருக்கும். விதைக்காக விடப்பட்டுள்ள காய், பழமாகிப் பழுத்துவிட்டதா எனத் தினமும் காய்கள் பறிக்கும்போது ஒரு முறை கவனித்து வர வேண்டும்.

பழத்தின் உள் சதைப்பகுதியை கையால் வழித்து எடுத்து, வெயிலில் சணல் சாக்கு ஒன்றை விரித்து, அதில் சிறிது அடுப்புச்சாம்பலைப் பரப்பிப் பிசைந்தால் சாம்பலில் விதைகள் ஒட்டிக்கொள்ளும். விதைகளைச் சேகரித்து எடுத்து ஓலைப்பெட்டி, துணிப்பை, மண் கலசம் ஆகிய ஏதாவது ஒன்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிளாஸ்டிக் பைகளில் சேமித்தால் காற்றோட்டம் கிடைக்காமல், விதையின் முளைப்புத்திறன் குறையும். சேகரிக்கப்பட்ட விதைகளை 40 முதல் 45 நாள்கள் வரை வைத்த பிறகே விதைப்புக்காகப் பயன்படுத்த வேண்டும்.

வெள்ளரி விதைகள்
வெள்ளரி விதைகள்

வெள்ளரிக்காயைப் போலவே வெள்ளரிப் பழத்தையும் கிராமங்களில் விரும்பிச் சாப்பிடுவார்கள். வெடிப்பு ஏற்படாமல் மஞ்சள் நிறத்திற்கு மாறிய நிலையில் உள்ள பழத்தை வாங்கி வந்து வீட்டில் ஓரிடத்தில் வைத்துவிட வேண்டும். பழத்தில் தானாக வெடிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். வெடிப்பு ஏற்பட்ட பிறகு பழத்தைப் பிளந்து அதில் விதைகளை எடுத்துவிட்டு, நாட்டுச்சர்க்கரைப் பொடியைத் தூவி 10 நிமிடங்கள் வைத்தால் பழம் முழுவதிலும் இனிப்புச்சுவை பரவிச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.