
மகசூல்
‘‘என்னோட நிலத்துல என்னென்ன உரங்கள் போடணும், எவ்வளவு போடணும்... எப்பெல்லாம் பூச்சிக்கொல்லி தெளிக்கணும்னு பெரும் பாலும் உரக்கடைக்காரர்தான் முடிவு பண்ணுவாரு. அவர் கொடுக்குற ரசாயன இடுபொருள்களை எந்த ஒரு கேள்வியும் கேட்காம, அப்படியே வாங்கிக்கிட்டு வந்து என்னோட நிலத்துல போட்டுக்கிட்டு இருந்தேன். அதனால நிறைய பின்னடைவு களைச் சந்திச்சேன். ஆனா, இப்ப அப்படி யில்ல... இயற்கை விவசாயிகள் சொல்லக்கூடிய ஆலோசனைகளைப் பரிசீலனை செஞ்சு, சுயமா முடிவெடுக்குறேன். இதுக்கு பசுமை விகடன்தான் காரணம்... என் கண்களைத் திறந்து வச்சதோடு மட்டுமல்லாம, என் கூடவே இருந்து வழிகாட்டிகிட்டு இருக்கு’’ உணர்வுபூர்வமாகப் பேசும் ராஜமாணிக்கம், ஒரு ஏக்கரில் இயற்கை முறையில் மஞ்சள் பூசணி(பரங்கிக்காய்) பயிர் செய்து நிறைவான வருமானம் பார்த்து வருகிறார்.
தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது கள்ளம் புளி. இங்குதான் விவசாயி ராஜமாணிக்கத்தின் பூசணித் தோட்டம் அமைந்துள்ளது. ஒரு காலை வேளையில் இவரை சந்திக்கச் சென்றோம். நிலம் முழுவதும் படர்ந்திருந்த பூசணிக் கொடிகளில் ஆங்காங்கே பரவலாகக் காய்கள்... அறுவடைக்குத் தயாராக இருந்தன. பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர், புன்னகையோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

‘‘விதைப்பு செஞ்சதுல இருந்து, இப்ப 110 நாள்கள் ஆகுது. இதுவரைக்கும் 4,500 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு. இது வரைக்கும் இரண்டு தடவை அறுவடை செஞ்சுருக்கேன். மறுபடியும் நிறைய காய்கள் உருவாகி, அறுவடைக்குத் தயாராகி இருக்கு. இன்னும் 4,500 - 5,000 கிலோ மகசூல் கிடைக்க வாய்ப்பிருக்கு. பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், தேமோர் கரைசல் உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் கொடுக்குறதுனால, கொடிகள் நல்லா ஊக்கமா வளர்ந்து, செழிப்பா இருக்கு. அதிக பராமரிப்பு இல்லாமலே குறுகிய காலத்துல நிறைவான லாபம் பார்க்கலாம்’’ என்று சொன்னவர் தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.
“நாங்க பல தலைமுறையா விவசாயக் குடும்பம். 12-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு விவசாயத்துல இறங்கிட்டேன். என்னோட தாத்தா விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தப்ப, மாட்டு எருவையும், இலைதழைகளையும் உரமா பயன்படுத்தினார். பூச்சி, நோய்த் தாக்குதல்கள் தென்பட்டா, அடுப்புச் சாம்பல் தூவுவாரு... வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பாரு, அவ்வளவுதான். வேற எந்த இடுபொருளும் கொடுக்க மாட்டாரு. அதனால செலவு ரொம்ப குறைவா இருக்கு. சில வருஷங்கள்ல இயற்கை இடர்ப்பாடுகளால மகசூல் குறைஞ்சாலும் ஓரளவுக்கு லாபம் கிடைச்சுடும். ஆனா, என்னோட அப்பா ரசாயன விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகு, படிப்படியா செலவுகள் அதிகரிக்க ஆரம் பிச்சது. நான் முழுமையா பொறுப் பெடுத்துக் கிட்டு விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகு, ரசாயன இடுபொருள் களோட அளவு இன்னும் அதிகமாச்சு. எந்தளவுக்கு உரங்கள் அதிகமா போடுறமோ, அந்த அளவுக்குக் கூடுதலா மகசூல் கிடைக் கும்’னு உரக்கடைக்காரர்கள் சொன்னத அப்படியே நம்பினேன். ஆரம்பத்துல அதிக மகசூல் கிடைச்சது. ஆனா, அடுத்தடுத்த வருஷங்கள்ல விளைச்சல் குறைய ஆரம்பிச்சது. பூச்சி, நோய்த்தாக்கு தல்களும் அதிகரிக்க ஆரம்பிச்சது. அதைக் கட்டுப்படுத்த உரக்கடைக்காரங்க கொடுத்த மருந்தை யெல்லாம் தெளிச்சேன். அதனால செலவுக்கும் வரவுக்கும் சரியா இருந்துச்சு. சில வருஷங்கள் கடுமையான நஷ்டத்தையும் சந்திச்சேன்.

இந்த நிலையிலதான் அஞ்சு வருஷத்துக்கு முன்னால, கடையநல்லூர் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்துல ‘இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்பு’ நடத்துனாங்க. அப்படி என்னதான் சொல்லித் தர்றாங்கன்னு பார்ப்போம்னு நானும் அங்க போனேன். ரசாயன விவசாயத்தோட தீமைகளைப் பத்தியும், இயற்கை விவசாயத்தோட அவசியத்தையும் பலர் எடுத்து சொன்னாங்க. இயற்கை விவசாயத்து மேல முழுமையான நம்பிக்கை ஏற்படாதவங்க, சோதனை முயற்சியா குறைவான பரப்புல இதைச் செஞ்சுப் பாருங்க. அதுக்கு பிறகு நீங்களே அனுபவபூர்வமா இதோட மகத்துவத்தை உணர்வீங்கனு ஒரு விவசாயி பேசினாரு. அவரோட தோட்டத்தைப் போயி பார்த்தேன். மண்ணு நல்லா பொலபொலப்பாவும் கருமை நிறத்துலயும் இருந்துச்சு. அப்ப அவர் பூசணி சாகுபடி செஞ்சிருந்தார். காய்கள் நல்லா திரட்சியா இருந்துச்சு. வாழை உள்ளிட்ட மற்ற பயிர்களும் நல்லா விளைஞ்சிருந்துச்சு.
அவர்தான் பசுமை விகடனை எனக்கு அறிமுகம் செஞ்சு வச்சார். இயற்கை விவசாயம் சம்பந்தமான எந்த ஒரு சந்தேகம்னாலும், இதைப் படிச்சுத் தெரிஞ்சுக்கலாம். விவசாயிகளோட போன் நம்பர்களும் இதுல இருக்கு. அந்தந்த விவசாயிகள்கிட்டயே நேரடியா பேசி தொழில்நுட்பங்களைக் கத்துக்கலாம்னு அந்த விவசாயி சொன்னாரு.

அவர் சொன்னது மாதிரியே பசுமை விகடன் எனக்கு பல வகைகள்லயும் கை கொடுத்துக்கிட்டு இருக்கு. நாலு வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். இதுக்காகவே நாலு மாடுகள் வளர்த்துக்கிட்டு இருக்கேன். என்கிட்ட மொத்தம் 4 ஏக்கர் நிலம் இருக்கு. இப்ப ஒரு ஏக்கர்ல மஞ்சள் பூசணி சாகுபடி செஞ்சுருக்கேன். ரெண்டு ஏக்கர்ல தென்னையும், ஒரு ஏக்கர்ல வாழையும் இருக்கு” என்றவர் மஞ்சள் நிற பூசணி சாகுபடி குறித்த தன்னுடைய அனுபவங் களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.
‘‘கடந்த மூணு வருஷமா இயற்கை முறையில மஞ்சள் பூசணி சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். குறிப்பிட்ட பட்டத் துலதான் இதைப் பயிர் பண்ணணும்னு அவசியம் கிடையாது. வருஷம் முழுக்க எப்ப வேணும்னாலும் இதைச் சாகுபடி செய்யலாம். செழிப்பா விளையும். இதுக்கு எப்பவுமே விற்பனை வாய்ப்பு பிரகாசமா இருக்கும். ஹோட்டல்கள்ல இதை அதிகமா பயன்படுத்துறாங்க. விரத நாள்கல்ல சமைக்க மக்கள் இதை அதிகம் விரும்புவாங்க.
குறிப்பா சொல்லணும்னா, சைவ விருந்துகள்ல இதுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறாங்க. சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்லதான் என்னோட பூசணிகாய்களை விற்பனை செய்றேன்’’ என்று சொன்னவர், மகசூல் மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘விதைப்பு செஞ்ச 75 - 80 நாள்கள்ல மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். 10 நாள்கள் இடைவெளியில நான்கு முறை அறுவடை செய்யலாம். போன வருஷம் ஒரு ஏக்கர்ல மஞ்சள் நிற பூசணி சாகுபடி செஞ்சது மூலமா 9,500 கிலோ காய்கள் மகசூல் கிடைச்சது. அதுல 9,000 கிலோ காய்கள் நல்ல தரமானதா விற்பனைக்குத் தேறுச்சு. ஒரு கிலோவுக்குக் குறைஞ்சபட்சம் 8 ரூபாய்ல இருந்து அதிகபட்சமா 30 ரூபாய் வரைக்கும் விலை கிடைச்சது. சராசரி விலையா ஒரு கிலோவுக்கு 12 ரூபாய் வீதம் 9,000 கிலோவுக்கு 1,08,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது.
உழவுல இருந்து அறுவடை வரைக்கும் மொத்தம் 25,400 ரூபாய் செலவாச்சு. மீதமுள்ள 82,600 ரூபாய் லாபமா கிடைச்சது. கடந்த வருஷத்தைவிட இந்த வருஷம் காய்ப்பு அதிகம். விலையும் கொஞ்சம் கூடுதலா கிடைச்சுகிட்டு இருக்கு. அதனால இந்த வருஷம் அதிக லாபம் கிடைக்கும்னு நம்புறேன்” எனத் தெரிவித்தார்.
தொடர்புக்கு, ராஜமாணிக்கம்,
செல்போன்: 97873 57969.
இப்படித்தான் சாகுபடி!
ஒரு ஏக்கர் பரப்பில் மஞ்சள் பூசணி சாகுபடி செய்ய ராஜமாணிக்கம் சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்த நிலத்தில் ஒரு வார இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவின்போது 4 டன் மாட்டு எருவை அடியுரமாக இட்டு உழவு செய்ய வேண்டும். தலா 6 அடி இடைவெளியில் 2 அடி அகலம், முக்கால் அடி உயரம் கொண்ட மேட்டுப் பாத்தி அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்தியின் நடுவில்... விதைக்கு விதை 2 அடி இடைவெளி விட்டு, 1 அங்குலம் ஆழத்தில் பூசணி விதையை ஊன்ற வேண்டும். ஒரு ஏக்கருக்கு 750 கிராம் விதை தேவைப்படும். விதையை ஊன்றுவதற்கு முன்பு பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்வது அவசியம். 5 - 7 நாள்களில் முளைப்பு தெரியும். 20-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 25 - 30 நாள்களில் களை எடுக்க வேண்டும். 40-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி தேமோர் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

20-25 நாள்களில் கொடி வீசத் தொடங்கும். 45 - 50 நாள்களில் பூப்பூக்கும். 50 நாள்களுக்குப் பிறகு, பிஞ்சு பிடித்துக் காய்கள் உருவாகத் தொடங்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மி.லி வீதம் மீன் அமிலம் கலந்து கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பூசணியைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் பூச்சி, நோய்த்தாக்குதல் ஏற்படுவதில்லை. சில சமயங்களில் மிகவும் அரிதாக, கருவண்டுகளின் தாக்குதலால் இலைகள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இலைகளில் சிறுசிறு துளைகள் காணப்படுவதே அதன் அறிகுறியாகும். கருவண்டுகளின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விதைப்பு செய்த 30-ம் நாளில் இருந்தே 10 நாள் களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வீதம் இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய்க் கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கலாம்.
80-ம் நாளில் இருந்து அறுவடையைத் தொடங்கலாம். பூசணிக்காய் ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் இருக்கும்... வெளிர் மஞ்சள் நிறமாக மாறிய பிறகு, அறுவடை செய்ய வேண்டும். பூசணியை அறுவடை செய்யும்போது சிறிய காய்களை விட்டுவிட்டுக் காம்புகள் முற்றிய பெரிய காய்களை முதலில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பூசணிக் காய்களை 25 முதல் 30 நாள்கள் வரை இருப்பு வைக்கலாம். தனித்தனியாக வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். ஒன்றன் மீது ஒன்றாகவோ குவியலாகவோ போட்டுவிடக் கூடாது. அப்படிப் போட்டால் காய்கள் சேதாரமாகும்.
ரூ.10,000 மானியம்...
இயற்கை விவசாயத்துக்கு 60 பேர் மாறியுள்ளனர்!
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் வைகுண்டசாமியிடம் பேசினோம், “கடையநல்லூர் வட்டாரத்தில் 1,000 ஏக்கரில் கத்திரி, வெண்டை, தக்காளி, அவரை, சின்ன வெங்காயம், மிளகாய், புடலை, பூசணி உள்ளிட்ட 15 வகையான காய்கறி சாகுபடி நடந்து வருகிறது. 40 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் 60 விவசாயிகளில் 30 பேர் அங்ககச் சான்று பெற்றுள்ளனர். இது தவிர, இன்னும் 30 பேர் அங்ககச் சான்று பெற விண்ணப்பித்துள்ளனர். ரசாயன இடுபொருள்களை முற்றிலும் தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்திட இப்பகுதி விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம்.

தமிழகத் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இதற்கான பயிற்சி அளிக்கிறோம். இதுதவிர, அந்தந்தப் பகுதிகளில் உள்ள முன்னோடி இயற்கை விவசாயிகளின் தோட்டங்களுக்கும் விவசாயிகளை அழைத்துச் சென்று களப்பயிற்சியும் அளிக்கிறோம். தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ்... இயற்கை விவசாயத்தில் காய்கறி சாகுபடி செய்யும் (அங்ககச் சான்று பெற்ற) விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,000 மானியமாக வழங்கப்படுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழும் இயற்கை விவசாயத்தில் காய்கறி சாகுபடி செய்யும் அங்ககச் சான்று பெற்ற விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,000 மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத் திட்டத்தில் பயன்பெற... பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்துப் பயன் பெறலாம். இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு மண் வளப்படுத்துதல், இயற்கை இடுபொருள் தயாரித்தல், களை மேலாண்மை, விற்பனை வாய்ப்பு ஆகியவற்றுக்கு வழி காட்டுகிறோம்” என்றார்.
தொடர்புக்கு, வைகுண்டசாமி, செல்போன்: 90478 43529