ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

பசுமை பரப்பிய மரம் வளர்ப்புப் பயிற்சிகள்..!

பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
News
பயிற்சி

பயிற்சி

ன்றைக்கு விவசாயத்தில் உள்ள முக்கியப் பிரச்னை வேலையாள் கள் தட்டுப்பாடுதான். அதைச் சமாளிப்பதற்காக மரச்சாகுபடியை நோக்கித் திரும்பியுள்ளது பெரும் பாலான விவசாயிகளின் கவனம். மரச்சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில் மரச்சாகுபடி நுட்பங்கள் தொடர்பான நேரலை பயிற்சியை வழங்கியது பசுமை விகடன்.

மே மாதம் 9-ம் தேதி ‘மரப்பயிர்களில் துரித வளர்ச்சி தரும் துல்லிய சாகுபடி’, மே 17-ம் தேதி சந்தனம், செம்மரம்... உயர்ந்த மதிப்பு மரங்களும் உன்னதச் சாகுபடி முறைகளும்’, மே 23-ம் தேதி புளி... அடர்நடவு, மதிப்புக்கூட்டல், பயன்பாடு’, மே 30-ம் தேதி ‘மாடியிலும் காடு வளர்க்கலாம்’, ஜுன் 6-ம் தேதி ‘மாடியிலும் காடு வளர்க்கலாம்-2’ ஆகிய 5 நிகழ்ச்சிகள் நேரலை மூலம் நடைபெற்றன.

பசுமை விகடன், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் சோலைவனம் நாற்றங்கால் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. கோயம்புத்தூர் வேளாண்மைக் கல்லூரியின் கீழ் செயல்படும் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மரச்சாகுபடி துறையின் தலைவரும் பேராசிரியருமான முனைவர் பாலசுப்பிரமணியன் நேரலை மூலமாகப் பயிற்சி யளித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களி லிருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடு களிலிருந்தும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.

முனைவர் பாலசுப்பிரமணியன்
முனைவர் பாலசுப்பிரமணியன்நிகழ்ச்சியில் முனைவர் பாலசுப்பிரமணியன் பகிர்ந்துகொண்ட தகவல்களின் தொகுப்பு இங்கே இடம்பெறுகிறது.

‘‘மரங்கள் வளர்ச்சிக்கு உகந்த இடங்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கின்றன. ஒவ்வொரு விவசாயிக்கும் மூன்றில் ஒரு பங்கு வருமானம் மரச்சாகுபடி மூலம் வர வேண்டும்.

தேக்கு மரச் சாகுபடி செய்யும் விவசாயிகள் மரத்தில் பக்க சிம்புகள் இல்லாமல் வளர்க்க வேண்டும். 20 முதல் 25 அடிவரை கிளைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மரம் நல்ல விலை போகும். கவாத்து செய்யும் இலைகளை வெளியே போடாமல் மூடாக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புளியை விட அதன் கொட்டைக்குச் சர்வதேசச் சந்தையில் அதிக மதிப்பு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 90 சதவிகித கொட்டைகள் வீணாகப் போகின்றன. புளியங்கொட்டையைப் பொடியாக்கி அதிலிருந்து ஒரு பசை போன்ற பொருளை எடுக்கிறார்கள். அந்தப் பசை உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தொழில்நுட்பம் வனக் கல்லூரியில் இருக்கிறது. தேவைப்படுபவர்கள் கல்லூரியை அணுகலாம். வழக்கமாகப் புளி நடவு செய்பவர்கள் ஐந்தாண்டுகளுக்கு மேல் மகசூலுக்காகக் காத்திருக்க வேண்டும். ஆனால், இப்போது நவீன ஒட்டுரகக் கன்றுகள் மூலமாக அடர் நடவு செய்யும்போது மூன்று ஆண்டுகளில் மகசூல் கிடைக்கிறது. அடர் நடவு செய்ய 12 அடிக்கு 12 அடி இடைவெளியில் புளியங் கன்றுகளை நடலாம்.

சந்தன மரம் சாகுபடி செய்பவர்கள் தனியாக நடவு செய்யக் கூடாது. அதற்குத் தேவையான துணை தாவரங் களைச் சேர்த்தே வளர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்காக அடர் கவின் காடுகளை உருவாக்கலாம். அதற்கான தொழில்நுட்பங்கள், மாதிரிக் காடுகள் வனக்கல்லூரியில் இருக்கிறது. மாடியில் காடு வளர்க்க சில தொழில்நுட்பங்கள் இருக்கின்றன’’ என்றெல்லாம் விரிவாகப் பேசினார்.

வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராம், மரம் வளர்ப்பில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதும், வாசகர்களின் சில கேள்விகளுக்கும் பதிலளித் தார். தொடர்ந்து 5 வார நிகழ்விலும் கலந்துகொண்ட சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன், ‘‘கோயம் புத்தூரில் ஒரு ஏக்கர் நிலத்தில் அடர் கவின் காடுகளை உருவாக்க இருக்கிறோம். சிறுதுளி அலுவலக மாடியில் காடு உருவாக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் சார்பாக ஒரு ஏக்கரில் அடர் கவின் காடு, மாடியில் காடு உருவாக்கி விவசாயிகளுக்கு மாதிரியாகக் காட்ட இசைவு தெரிவித்துள்ளார்கள். வரும் காலங்களில் அடர் கவின் காடு தமிழகத்தில் பேசுபொருளாக மாற இருக்கிறது. அதற்கு இந்தப் பயிற்சிகள் அடித்தளமிட்டுள்ளன.

5 நிகழ்வுகளையும் பசுமை விகடன் முகநூல் பக்கத்தில் பார்க்கலாம். அதற்கான லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

https://www.facebook.com/189745421100410/videos/384664556200590

https://www.facebook.com/189745421100410/videos/496568468319496

https://www.facebook.com/189745421100410/videos/1377422165991388

https://www.facebook.com/189745421100410/videos/1239909226427475

https://www.facebook.com/189745421100410/videos/153721330036454