மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஜி 9 வாழை... இயற்கையிலும் விளைச்சல் தருகிறது! தவறுகளும் தீர்வுகளும்-6

வாணி முறையில் வாழை நடவு
பிரீமியம் ஸ்டோரி
News
வாணி முறையில் வாழை நடவு

தீர்வு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஜெகதீசன். வாழை விவசாயத்தில் தான் செய்த தவறுகள், அதன் பிறகு அதனைச் சரிசெய்த விதம்குறித்து நமக்குக் கடிதம் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதம் இங்கே இடம்பெறுகிறது.

வாழைக்கு வாணி முறை

‘‘வழக்கமாக வாழைக்கு இரண்டு சால் உழவு ஓட்டி, ரோட்டோவேட்டர் கொண்டு உழுது, எரு கொட்டி, பார்கள் அமைத்து, குழி எடுத்து வாழைக்கன்றை நடுவார்கள். நானும் அப்படித்தான் செய்து வந்தேன். இந்த முறை அதிக செலவு கொடுக்கக்கூடியதாகவும், நடவுக்கு நீண்ட நாள் எடுத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தது. அதற்குப் பிறகு இந்த வாணி முறையை(வாய்க்கால் எடுக்கும் முறை) அறிந்துகொண்டேன். வழக்கமாக தென்னை விவசாயத்தில்தான் இந்த முறையைப் பயன்படுத்துவார்கள். வாழையில் ஒருமுறை பரீட்சார்த்தமாக முயற்சி செய்து பார்ப்போமே என்று இரும்புச் சக்கரங்கள் கொண்ட ‘பொக்லிங்’ மூலம் வாய்க்கால் (டிரென்ச்) எடுத்தேன். 7 அடி இடைவெளியில் இரண்டரை அடியிலிருந்து 3 அடி ஆழத்தில் நீண்ட வாய்க்கால்கள் எடுத்துவிட்டேன். அதிலேயே வாழைக்கன்றுகளை நட்டுவிட்டேன். பிறகு ஏக்கருக்கு 10 கிலோ சணப்பை விதைகளை விதைத்துத் தண்ணீர் பாய்ச்சினேன். அது வளர்ந்து பூ விடும் சமயத்தில் அறுவடை செய்து மூடாக்காகப் போட்டுவிட்டேன். வழக்கத்தைவிடக் கூடுதல் நாள்களுக்கு மண் ஈரப்பதத்தோடு இருந்தது. அதனால் தண்ணீர் செலவு மிச்சமானது. வாழையின் வளர்ச்சியும் வேகமாக இருந்தது. என் அனுபவத்தில் பொக்லிங்கைக் கொண்டு நிலத்தில் வாய்க்கால் எடுக்கும்போது மேல்மண் இடம்மாறாமல் இருக்கவும், மண் பொலபொலப்பாகவும் இருக்க உதவி வருகிறது. இதைத்தவிரச் சுபாஷ் பாலேக்கர் முறையில் ஜீவாமிர்தமும் கொடுத்து வந்தேன். வாழையைப் பொறுத்தவரை அதன் வளர்ச்சி நிலையிலேயே அதற்குத் தேவையானதைச் செய்துவிட்டால் போதும். மகசூல் நன்றாக இருக்கும்.

வாணி முறையில் வாழை நடவு
வாணி முறையில் வாழை நடவு

அறுவடை நேரத்தில் உரம் இட வேண்டாம்

முன்பு நான் ரசாயன விவசாய முறையில் வாழைச் சாகுபடி செய்து வந்தேன். அப்போது இலைப்புள்ளி நோய், வேர் அழுகல் நோய், தண்டுத் துளைப்பான் பாதிப்புகள் வரும். ஒவ்வொன்றுக்கும் ஒரு ரசாயன மருந்தைக் கொடுப்பேன். அதேசமயம் வேளாண்துறையினரைக் கேட்டால், ‘செடியில் நோய் பாதித்த பகுதிகளைப் பறித்து எரித்துவிடுங்கள்’ என்று சொல்வார்கள். அதுவொரு உடனடி தீர்வாக இருந்தாலும், நீண்ட காலத்துக்குச் சரியான தீர்வாக இருக்காது. இந்த விஷயங்களெல்லாம் சங்கடத்தையே கொடுத்துக் கொண்டிருந்தன. சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய முறைக்கு மாறியபிறகு லாபகரமாக விவசாயம் செய்து வருகிறேன்.

ஜெகதீசன்
ஜெகதீசன்

வாழை விவசாயிகளின் முதன்மை தேர்வாக இருக்கும் ஜி.9 ரக வாழையைச் சாகுபடி செய்தேன். அந்த வகையில் வாழை இயற்கையாக வளர ஏதுவான சூழலை ஏற்படுத்தினேன். மூடாக்கு, ஜீவாமிர்தம், தேவைப்பட்டால் உயிர் உரங்கள் கொடுத்து வந்தேன். பிறகு நோய்கள் வந்தாலும் தாங்கிக்கொண்டு குலைகளைத் தள்ளியது. குறிப்பாக நன்றாகக் குலை தள்ளியபிறகும் சிலர் இடுபொருள்களைக் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக அறுவடைக் காலங்களிலும் செய்து வருகிறார்கள். அது தேவையில்லாத வேலை. வாழை அறுவடை நேரத்தில் இலைகள் மஞ்சளாக, காய்ந்த நிலையில்தான் இருக்கும். அந்த நேரத்தில் எந்த இடுபொருளும் கொடுக்கத் தேவையில்லை.

வாணி முறையில் வாழை நடவு
வாணி முறையில் வாழை நடவு

குறிப்பாக ரசாயன விவசாயிகள் அந்த நேரத்திலும் ஏதோ நோய் பாதித்துள்ளது என்று பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கொடுக்கிறார்கள். ஜி.9 வாழை ரகத்தை இயற்கை முறையில் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறேன். ஜி.9 வாழையில் சுவை குறைவாக இருக்கும். மகசூல் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், என்னுடைய தோட்டத்தில் விளைந்த வாழையில் சுவை நன்றாக இருக்கிறது. விளைச்சலும் ரசாயன விவசாயத்தில் விளையும் அளவுக்குக் கிடைக்கிறது.’’



தொடர்புக்கு,

ஜெகதீசன்,

இயற்கை விவசாயி,

டேனிஷ்பேட்டை,

சேலம் மாவட்டம்.

செல்போன் : 94432 58573

ஜி 9 வாழை... இயற்கையிலும் விளைச்சல் தருகிறது!
தவறுகளும் தீர்வுகளும்-6