நாட்டு நடப்பு
Published:Updated:

இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள்

இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள்

நுட்பம்

அமுதக்கரைசல்

அமுதக்கரைசல்... இதை ‘நிலவள ஊக்கி’ என்றும் சொல்கிறார்கள். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். நோய்த் தாக்குதல் இல்லாமல் பயிர்கள் வளர உதவும். பொதுவாக 15 நாள்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாகக் காணப்பட்டால், வாரம் ஒருமுறைகூட கொடுக்கலாம். வசதியிருந்தால், தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.

தயாரிப்பு முறை...

ஒரு தடவை போட்ட மாட்டின் சாணம் (எந்த வகை மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்), சிறுநீர் ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீரைச் சேர்க்கவேண்டும். இதை 24 மணிநேரம் நிழல்பாங்கான இடத்தில் வைத்தால் அமுதக்கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். ஓர் ஏக்கருக்கு பத்து டேங்க் (1 டேங்க்-10 லிட்டர்) அளவுக்குத் தெளிக்கவேண்டியிருக்கும். பாசன நீரிலும் கலந்துவிடலாம்.

இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள்

மூலிகைப் பூச்சிவிரட்டி

பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் புழு, பூச்சிகளை விரட்டக்கூடியது பூச்சிவிரட்டி. நெய்வேலி காட்டாமணக்கு, நொச்சி, ஆடாதொடை, வேம்பு போன்ற இலை தழைகளை ஐந்து கிலோ அளவுக்கு எடுத்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர் கலந்து ஏழு நாள்களுக்கு ஊற வைக்கவேண்டும். அதன்பிறகு, வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். மாட்டுச்சிறுநீர் என்பது அருமையான கிருமிநாசினி. அதைக் கலப்பதால் புழு, பூச்சிகள் விரைவாகக் கட்டுப்படும். மாட்டுச்சிறுநீர் கிடைக்காவிட்டால், தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம். 10 லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் பூச்சிவிரட்டியைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

ஏழு நாள்களுக்கு மேல் ஊறவைத்தால், இது பயிர் வளர்ச்சி ஊக்கியாக மாறிவிடும். இதையும் வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம்.