
சிதம்பரத்துக்கு சிறப்புச் சேர்க்கும் உழவர்கள் கூட்டமைப்பு!
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் மற்றும் புவனகிரி பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் ஒன்றிணைந்து... ‘சிதம்பரம் வண்டல்மண் பகுதி உழவர்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி, ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலம் பல விதங்களிலும் பயன் அடைந்து வருகிறார்கள். விதைநெல் பரிமாற்றம், பாரம்பர்ய நெல் ரகங்கள் மற்றும் பயறு வகைகள் இயற்கை முறையில் சாகுபடி செய்வதற்கான பயிற்சி, அவற்றை மதிப்புக்கூட்டுதலுக்கான தொழில்நுட்ப பயிற்சிகள், தகவல் பரிமாற்றம், விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று ஆலோசனைகள் வழங்குதல், வேளாண் கருவிகள் பரிமாற்றம் உள்ளிட்ட இன்னும் பலவிதமான செயல்பாடுகள் இந்தக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்று வருகிறது. தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை, தொய்வின்றியும் லாபகரமாகவும் விற்பனை செய்ய, இவர்கள் நடத்தி வரும் கூட்டுறவு விற்பனையகம், கூடுதல் சிறப்பு...

இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாரம்பர்ய நெல் ரகங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள் மற்றும் சிறுதானியங்கள் இங்கு விற்பனை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல்... மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப்பொருள்களும் தயார் செய்யப் பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து விரிவாக அறிந்துகொள்ள, சிதம்பரம் நகரத்தில் அமைந்துள்ள தில்லை, காளியம்மன் கோயிலுக்கு எதிரில் இயங்கும் சிதம்பரம் வண்டல் மண் பகுதி விவசாயிகள் கூட்டுறவு விற்பனையகத்துக்கு ஒரு பகல்பொழுதில் நேரில் சென்றோம்.
மிகுந்த மகிழ்ச்சியோடு, நம்மை வரவேற்ற இந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், ‘‘அடிப்படையில நான் ஒரு பொறியாளர். என்கிட்ட சொந்த நிலம்கூட கிடையாது. நம்மாழ்வார் ஏற்படுத்திய தாக்கத்தாலதான், என்னோட வாழ்க்கையில மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டுச்சு. மக்கள் ஆரோக்கியமா வாழ... இயற்கை விவசாயமும் பாரம்பர்ய உணவுப் பொருள்களும் ரொம்ப அவசியம்ங்கறதை உணர்ந்த துனால, 2014-ம் வருஷம், குத்தகைக்கு 13 ஏக்கர் நிலம் பிடிச்சு, இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்.

உளுந்தூர்பேட்டை உள்ள சாரதா ஆசிரமத்துல இருந்து 5 விதமான பாரம்பர்ய நெல் ரக விதைகளை வாங்கிகிட்டு வந்து பயிரிட்டேன். 270 மூட்டை நெல் மகசூல் கிடைச்சது. அதை அரிசியா மதிப்புக்கூட்டி, என்னோட நண்பர்கள், உறவினர்கள் உட்பட 35 குடும்பங்களுக்குப் பகிர்ந்து கொடுத்தேன். அவங்களுக்கு ரொம்பவே புடிச்சுப் போயிடுச்சு. தொடர்ச்சியா கொடுங்கனு கேட்டாங்க. அவங்க மூலமா, இன்னும் நிறைய பேர், என்கிட்ட பாரம்பர்ய அரிசி கேட்க ஆரம்பிச்சாங்க. இயற்கை விவசாயத்துல விளைவிக்கப்படுற பயறு வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்களுக்கும் அதிக தேவை இருக்குனு தெரிய வந்துச்சு. இயற்கை விவசாயத்தை அதிகப்படுத்துறதுக்கும், ஏற்கெனவே இயற்கை விவசாயத்துல ஈடுபட்டுக்கிட்டு இருக்கக்கூடியவங்க உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருள்களை பரவலா, மக்கள்கிட்ட கொண்டு போயி சேர்க்குறதுக்கும், ஓர் அமைப்பு இருந்தா வசதியா இருக்கும்னு தோணுச்சு.

எங்க பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயிகளான ராஜசேகர், நாராயணசாமி, தில்லை கோவிந்தராஜன், உத்திராபதி, சங்கரா, நடராஜன், ராஜா உட்பட இன்னும் நிறைய பேர் ஒருங்கிணைஞ்சு, ஒரு குழுவாகச் செயல்பட ஆரம்பிச்சோம். சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், புவனகிரி... இந்த மூணு தாலுகாவுல உள்ள கிராமங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் ஒன்றுகூடி, 2020-ம் வருஷம், சிதம்பரம் வண்டல்மண் பகுதி உழவர்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். இந்தக் கூட்டமைப்புல இப்ப 80 விவசாயிகள் அங்கம் வகிக்கிறாங்க. ஒரு நபருக்கு வருஷத் துக்கு 600 ரூபாய் சந்தா வசூல் பண்றோம்.
ரசாயன விவசாயம் செஞ்சுகிட்டு இருக்குற விவசாயிகளைச் சந்திச்சு, இயற்கை விவசாயத் தோட அவசியம் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறது, விவசாயிகளுக்குத் தேவையான பசுந்தாள் உர விதைகள், பாரம்பர்ய நெல் விதைகள் விநியோகம் செய்றது, தங்களுக்குத் தேவையான இயற்கை இடுபொருள்களை விவசாயிகளே தயாரிச்சுப் பயன்படுத்த, நேரடி பயிற்சி அளிக்குறது, பயிர்கள்ல ஏதாவது பூச்சி, நோய்த்தாக்குதல்கள் ஏற்பட்டா, அதை நேரடியா பார்வையிட்டு தீர்வு சொல்றது, மற்ற ஊர்கள்ல நடக்கக்கூடிய மரபுவழி வேளாண் திருவிழாக்கள், பயிற்சிகளுக்கு ஆர்வமுள்ள விவசாயிகளை அழைச்சுக்கிட்டுப் போறது... இதுமாதிரி இன்னும் பலவிதமான செயல்பாடுகள் மூலம் எங்க கூட்டமைப்பு இந்தப் பகுதியில பிரபலமாகிகிட்டு இருக்கு. பாரம்பர்ய நெல் ரகங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள் சாகுபடி செய்றதுக்கும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்யவும் முறையான பயிற்சிகள் அளிக் குறோம். எங்க கூட்டமைப்புல அங்கம் வகிக்ககூடிய விவசாயிகள் உற்பத்திச் செய்யக்கூடிய பொருள்களை, நாங்க நடத்தக்கூடிய கூட்டுறவு விற்பனையகம் மூலம் லாபகரமான விலைக்கு விற்பனை செஞ்சு தர்றோம். தங்களோட விளை பொருள்களை எளிதா விற்பனை செய்ய முடியுறதுனால, இயற்கை விவசாயத்துக்கு மாறக்கூடிய விவசாயிகளோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருக்கு. இந்தக் கூட்டமைப்போட முன்முயற்சியால, இதுவரைக்கும் 470 ஏக்கர் நிலங்கள் இயற்கை விவசாயத்துக்கு மாற்றப்பட்டுருக்கு. இதை நாங்க மிகப்பெரிய வெற்றியா பார்க்குறோம்’’ என்று சொன்னவர், மற்ற செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.

‘‘பசுந்தாள் விதைப்பு செய்றதுக்காக, இந்த வருஷம், 42 விவசாயிகளுக்கு, 240 ஏக்கர் நிலத்துக்குத் தேவையான அவுரி விதைகள விநியோகம் செஞ்சுருக்கோம். இந்தக் கூட்டமைப்புல அங்கம் வகிக்கக்கூடிய விவசாயிகள், ஒருவருக்கு ஒருவர் தங்களுக் குள்ள பாரம்பர்ய நெல் ரக விதைகளைப் பகிர்ந்துக்குறாங்க. அதனால நம்பத்தன்மை யோடு இருக்கு.
விவசாயகளோட தேவைக்கு ஏற்ப, பாரம்பர்ய நெல் ரக விதைகளை வெளியில இருந்தும் வாங்கிக் கொடுக்குறோம். இந்த வருஷம், 50 விவசாயிகளுக்கு, நான்கு விதமான பாரம்பர்ய நெல் விதைகள் 2,000 கிலோ வாங்கிக் கொடுத்திருக்கோம். இயற்கை விவசாயத்துக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய நாட்டு மாடுகளை வெளியில இருந்து விலைக்கு வாங்கி, விவசாயிகளோட பொருளாதார நிலைக்கு ஏற்ப, மூன்று விதமாகக் கொடுக்குறோம். ஏழை விவசாயியா இருந்தா இலவசமா கொடுப்போம். குறிப் பிட்ட காலத்துக்கு அவங்க வளர்த்துக்கலாம். நடுத்தர விவசாயிகளா இருந்தா, பாதி விலையில கொடுப்போம். வசதிப்படைச்ச விவசாயிகளா இருந்தா, முழு விலைக்குக் கொடுப்போம்.
இதுவரைக்கும் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நாட்டு மாடுகள் கொடுத் திருக்கோம். 4 லட்சம் ரூபாய்க்குப் பரிவர்த் தனை நடந்திருக்கு. கடலூர் மற்றும் பிற மாவட்டங்கள்ல நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட மரபுவழி வேளாண் நிகழ்ச்சிகளுக்கு இந்தப் பகுதி விவசாயிகளை அழைத்துக்கொண்டு போயிருக்கோம்’’ எனத் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 18,00,000 ரூபாய்...
கூட்டுறவு விற்பனையகத்தின் செயல் பாடுகள் குறித்துப் பேசிய இக்கூட்டமைப்பின் பொருளாளர் தில்லை கோவிந்தராஜன், ‘‘எங்க கூட்டமைப்புல உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களை எளிதா விற்பனை செய்றதுக்காகவும், நிறைவான லாபம் கிடைக்குறதுக்காகவும்... கூட்டுறவு விற்பனையகம் நடத்திக்கிட்டு இருக்கோம். ‘கேப்’ (Chidambaram Allivial Area Agro Products - CAAAP) என்ற பிராண்ட் பெயர்ல பொருள்கள் விற்பனை செய்றோம். வருஷத்துக்குக் குறைந்தபட்சம் 18,00,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடக்குது. பாரம்பர்ய நெல், அரிசி, அவல், உளுந்து, பச்சைப்பயறு, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வகைகள், பிண்ணாக்கு, அப்பளம் உட்பட பல வகையான பொருள்கள் விற்பனை செய்றோம். எங்களோட கூட்டுறவு விற்பனையகத்துல தொடர்ச்சியா பொருள் கள் வாங்கக்கூடிய நிரந்தர வாடிக்கையாளர்கள் 300 பேர் இருக்காங்க. பல பகுதிகள்லயும் நடக்கக்கூடிய வேளாண்மை, பாரம்பர்ய உணவுகள் தொடர்பான நிகழ்ச்சிகள்ல ஸ்டால் அமைச்சும், பொருள்களை விற்பனை செய்றோம். வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகவும் விற்பனை செய்றோம்.

எங்க கூட்டமைப்புல அங்கம் வகிக்கக் கூடிய விவசாயிகள், தங்களோட விளை பொருள்களை இருப்பு வைக்குறதுக்கான குடோன் வசதிகளையும் செஞ்சு கொடுத் திருக்கோம். இயற்கை விவசாய விளை பொருள்களை விற்பனை செய்யும் அமைப்புகள், நிறுவனங்களோட ஒப்பந்தம் போட்டு முன்கூட்டியே விலையைத் தீர்மானிச்சு, நெல், உளுந்து, எள், பயறு உள்ளிட்ட அனைத்து பொருள்களையுமே விற்பனை செஞ்சு கொடுக்குறோம். வருஷத் துக்குக் குறைந்தபட்சம் 100 எக்கர் நிலத்தை யாவது இயற்கை விவசாயத்துக்கு மாத்தணும் ணுங்கற இலக்கோடு, எங்க கூட்டமைப்பு செயல்பட்டுக்கிட்டு இருக்கு’’ எனச் சொல்லி முடித்தார்.
தொடர்புக்கு: சுரேஷ்குமார்,
செல்போன்: 94431 19111
போராட்டங்களும் நடத்துவோம்...
‘‘இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கம் செய்றதுதான் எங்க கூட்டமைப்போட முதன்மையான நோக்கம். அதேசமயம், விவசாயம், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்காகக் களத்துல இறங்கி போராட்டங்களும் நடத்துவோம். பாசனத்துக்கு உரிய காலத்துல தண்ணீர் திறக்காததையும், வாய்க்கால்கள் தூர்வாராததையும் சுட்டிக் காட்டி போராட்டங்கள் நடத்தி சரி செஞ்சிருக்கோம். செறிவூட்டப்பட்ட அரிசி, மரபணு மாற்றுக் கடுகு விதைகளுக்குத் தடை விதிக்கவும் குரல் எழுப்பிக்கிட்டு இருக்கோம். தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்களைத் தோண்ட எடுத்த முயற்சிகளுக்கு எதிராக விழிப்புணர்வு போராட்டங்கள் நடத்தியிருக்கோம்’’ என்கிறார் சுரேஷ்குமார்.

கைகொடுக்கும் அரசு நிறுவனங்கள்
‘‘எங்க கூட்டமைப்பின் செயல்பாடு களுக்கும் வளர்ச்சிக்கும் அரசு நிறுவனங் கள் உறுதுணையா இருக்கு. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் விருத்தாசலத்தில் இயங்கும் மண்டல ஆராய்ச்சி நிலையம், கடலுர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், பாலூர் காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் மைத்துறை மூலமாகவும் நிறைய பலன் அடைஞ்சுகிட்டு இருக்கோம்’’ என்கிறார் தில்லை கோவிந்தராஜன்.சிதம்பரம் உளுந்துக்கு
தனிச்சிறப்பு...
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகியவை காவிரி டெல்டா பாசனப்பகுதிகளாகும். இப்பகுதிகளில் களிப்பு மற்றும் வண்டல் மண் நிறைந்திருக்கும். வீராணம் ஏரி மூலம் பாசன வசதிபெறும் இப்பகுதிகளில் ஆண்டுக்கு ஒரேயொரு தடவை மட்டுமே நெல் விளைவிக்கப்படுகிறது. நெல் அறுவடைக்குப் பின் மானாவாரி பயிராக உளுந்து மற்றும் பாசிப்பயறு விதைக்கப்படுகின்றன. இயற்கை ஒத்துழைத்தால் அவற்றின் விளைச்சல் அமோகமாக இருக்கும். உளுந்து அதிக தரத்துடனும், மாவு காணும் திறனுடனும் இருக்கும். சேலம் மற்றும் விழுப்புரம் உளுந்து மார்க்கெட்டில் சிதம்பரம் பகுதியில் விளைந்த உளுந்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதை மனதில் கொண்டே அருகில் உள்ள மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வசிக்கும் மக்கள், சிதம்பரம் பகுதி உளுந்தை வாங்கிச் செல்கின்றனர்.

சிதம்பரம் உளுந்தின் மற்றொரு சிறப்பாக இன்னொரு விஷயத்தையும் கூறலாம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள்... சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உளுந்து மற்றும் பயறு அறுவடைக்காலத்தில் கும்பல் கும்பலாகப் புறப்பட்டு இப்பகுதிக்கு வந்து அறுவடை பணியில் ஈடுபடுவது வழக்கம். அதற்கு ஊதியமாகப் பங்கு உளுந்து மற்றும் பாசிப்பயறுகளை வாங்கிச் செல்வார்கள்.
நிலத்தை வளப்படுத்தும் அவுரி...
“சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களுடைய நிலத்தை வளப்படுத்த, பசுந்தாள் உரமாக, ஆண்டுதோறும் அவுரி விதைப்பது, ஒருகாலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. அவுரி விதைத்து, அது செழிப்பாக வளர்ந்த பிறகு மடக்கி உழுவதன் மூலம் மண் வளம் மேம்படும். நீர் பிடிப்பு திறன் அதிகரிக்கும். மண் அரிப்பு குறையும். களைகள் கட்டுப்படுத்தப்படும். காரத் தன்மையுள்ள மண்ணைச் சீர்திருத்தம் செய்யும். நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும்.
இது புதர் வகைச் செடியாகும். சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. சூழலைப் பொறுத்து ஓராண்டு அல்லது ஈராண்டு தாவரமாக நிலைத்து வளரும். பூக்கும் பருவத்துக்கு முன்பாக இதை மடக்கி உழ வேண்டும். இதன்மூலம் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்கும். 15 - 20 சதவிகிதம் பயிர் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்கிறார்கள் இக்கூட்டமைப்பின் நிர்வாகிகள்.

வாட்ஸ் அப் குழுக்கள்...
அரிசி ஆலைகள்....
‘‘வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி... மரபுவழி விவசாயம் சார்ந்த அனைத்து தகவல்களையும் பகிர்ந்துகிட்டு இருக்கோம். பாரம்பர்ய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யக் கூடிய விவசாயிகள், அதோட சத்துகள் குறையாமல், தரமா அரைக்க ரொம்பச் சிரமப்படுறாங்க. அதுக்கான ஆலைகள் அவ்வளவு எளிதா கிடைக்குறதில்லை. அதுக்கும் நாங்க வழிகாட்றோம். விவசாயிகள், அவ்வப்போது தாங்கள் சந்திக்குற பிரச்னை களுக்கு சில சமயம் அவங்களே சொந்த முயற்சியில தீர்வு கண்டுடுவாங்க. அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட தீர்வுகளை, வீடியோக்களா பதிவு பண்ணி, வாட்ஸ் அப், யூடியூப் சேனல்கள் மூலம் பகிர்ந்துகிட்டு இருக்கோம்’’ என்கிறார் சுரேஷ்குமார்.

கூட்டமைப்பு மூலமாதான்
விற்பனை செய்றேன்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா, ஐப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அறிவொளி, “நான் கடந்த 5 வருஷங்களா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக் கேன். நெல், உளுந்து, காய்கறிகள், மூலிகை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்றேன். என்னோட விளைபொருள்களைச் சந்தைப்படுத்துறது முன்னாடி பெரும் சவாலா இருந்துச்சு. வண்டல் மண் கூட்டமைப்போட தொடர்பு கிடைச்ச பிறகு, என்னோட பொருள்களை ரொம்ப எளிதா விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவும் இங்க உதவிகள் கிடைக்குது’’ என்றார்.
காட்டுமன்னார்கோவில் தாலுகா, குமாராட்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி நவீன், “கடந்த மூன்றரை வருஷங்களா, நாலு ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக் கவுனி, இலுப்பைபூ சம்பா உட்பட இன்னும் சில பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். வண்டல் மண் பகுதி உழவர்கள் கூட்டமைப்புல இணைஞ்சு நான் செயல்படுறதுனால, பாரம்பர்ய நெல்ல அரிசியாவும் அவலாகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்றது எளிதா இருக்கு’’ எனத் தெரிவித்தார்.