நாட்டு நடப்பு
Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ.90,500 குறைந்த நாள்களில் நிறைந்த லாபம்; இயற்கையில் இனிக்கும் தர்பூசணி!

தர்பூசணி வயலில்  ஶ்ரீதர்
பிரீமியம் ஸ்டோரி
News
தர்பூசணி வயலில் ஶ்ரீதர்

6 வருஷத்துக்கு முன்ன அதிக அளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்திதான் காய்கறிகள், நிலக்கடலை எல்லாம் சாகுபடி செஞ்சுட்டு வந்தேன். அதனால் நிறைய பின்னடைவுகளைச் சந்திச்சேன்

மகசூல்

'பருவத்தே பயிர் செய்’ என்பது பழமொழி. அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற பயிரை, கொஞ்சமும் தாமதிக்காமல் அப்போதே சாகுபடி செய்தால்தான் வெற்றி கரமான விளைச்சல் எடுக்க முடியும் என்ற அர்த்தத்தில் நம் முன்னோர்கள் சொன்ன இந்தத் தாரக மந்திரம், விற்பனை வியூகத்துக்கும் பொருத்தமானது. உடல் உஷ்ணத்தைப் போக்கி, நீர்ச்சத்தை அதிகரிக்கும் தர்பூசணிக்கு ஏப்ரல், மே மாதங் களில் விற்பனை வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு லாபகர மான விலை கிடைக்கிறது. கோடைக் காலத்தில் அறுவடை செய்வதற்கு ஏற்றாற் போல், முன்கூட்டியே திட்டமிட்டு, தர்பூசணி சாகுபடி செய்யும் விவசாயிகள் நிறைவான லாபம் பார்க்கிறார்கள்.

இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஶ்ரீதர். இயற்கை விவசாயத்தில் ஒரு ஏக்கரில் இவர் சாகுபடி செய்த தர்பூசணி பழங்கள் தற்போது அறுவடைக்கு வரத் தொடங்கி யுள்ளன. ஒரு பகல்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம்.

விருதுநகர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள சின்னையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, இவருடைய தோட்டம். தர்பூசணிப் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்த ஶ்ரீதர், மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார். “வெயிலு மண்டையப் பிளக்குது. முதல்ல களைப்பு தீர நம்ம தோட்டத்துப் பழத்தைச் சாப்பிடுங்க. நீங்க கடைகள்ல வாங்கிச் சாப்பிடுற தர்பூசணிக்கும், இங்க விளைவிச்ச தர்பூசணிக்கும் உள்ள வேறுபாட்டை நீங்க நல்லாவே உணர முடியும். இது அதிக சுவையோடு இருக்கும். சீக்கிரத்துல வீணாப்போகாது. வியாபாரிகள் மத்தியில என்னோட பழங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கு’’ எனச் சொன்னவர், ஒரு தர்பூசணிப் பழத்தை எடுத்து, அதைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுத்தார்.

தர்பூசணி வயலில்  ஶ்ரீதர்
தர்பூசணி வயலில் ஶ்ரீதர்

தன்னுடைய விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கிய ஶ்ரீதர், ‘‘நாங்க அடிப்படையில விவசாயக் குடும்பம்தான். இந்தப் பகுதியைப் பொறுத்தவரைக்கும் வாழை, காய்கறிகள், கொய்யா, நிலக்கடலை தான் முதன்மையான பயிர்கள். என்னோட தாத்தா காலத்துல, மாட்டு எருவை மட்டும்தான் உரமா பயன்படுத்தினாங்க. பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த, அடுப்புச் சாம்பலைத் தூவினாங்க.

தாத்தாவுக்குப் பிறகு என்னோட அப்பா, விவசாயத்தைக் கவனிச்சுக்கிட்டே, ஒரு மளிகைக் கடையும் நடத்திக்கிட்டு இருந்தார். நான் பத்தாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்குப் பிறகு, அப்பாவுக்கு ஒத்தாசையா விவசாயத்துல இறங்கிட்டேன்.

அப்பாவோட மறைவுக்குப் பிறகு, முழு நேரமா விவசாயத்தைக் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். 6 வருஷத்துக்கு முன்ன அதிக அளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்திதான் காய்கறிகள், நிலக்கடலை எல்லாம் சாகுபடி செஞ்சுட்டு வந்தேன். அதனால் நிறைய பின்னடைவுகளைச் சந்திச்சேன். இயற்கை விவசாயத்துக்கு மாறிப் பார்க்கலாம்னு எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. ஆனாலும்கூட, ஏதோ ஒரு தயக்கத்துனால, ரசாயன விவசாயத்தைத் தொடர்ந்துகிட்டு இருந்தேன்.

இப்படிப்பட்ட ஒரு சூழல்லதான், விருது நகர் வட்டாரத் தோட்டக்கலைத்துறை அலுவலகத்துல நடந்த இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துக்கக்கூடிய ஒரு வாய்ப்பு அமைஞ்சது. இயற்கை விவசாயம் செஞ்சு, வெற்றிகரமா வருமானம் பார்த்துக்கிட்டு இருக்கக்கூடிய சில விவசாயிகளும் அந்தப் பயிற்சிக்கு வந்திருந்தாங்க. அவங்களோட அனுபவங்களைக் கேட்டதும், இயற்கை விவசாயத்துல எனக்கு முழு நம்பிக்கை வந்துச்சு.

எங்க ஊரு பக்கத்துலயே இயற்கை முறையில காய்கறி சாகுபடி செய்யுற மூணு விவசாயிகளோட தோட்டங் களையும் பார்த்தேன். என் தோட்டத்துல ரசாயன முறையில சாகுபடி செஞ்ச காய்கறிச் செடிகளைவிடவும், இயற்கை விவசாயிகளோட தோட்டத்துல இருந்த செடிகள் ரொம்ப ஊக்கமா இருந்துச்சு. இதுக்கு மேலயும் தாமதிக்கக் கூடாது, உடனடியா இயற்கை விவசாயத் துக்கு மாறணும்னு முடிவெடுத்தேன். இயற்கை இடுபொருள்களை எப்படித் தயார் செய்யணும்னு அந்த விவசாயிகள் நல்ல விளக்கமா சொல்லிக்கொடுத்தாங்க.

தர்பூசணி அறுவடையில்
தர்பூசணி அறுவடையில்

மண்ணை வளப்படுத்த முதல்கட்டமா பல தானிய விதைப்பு செஞ்சு, அடியுரமா மண்புழு உரம் போட்டேன். அந்த வருஷம், முதல்முறையா இயற்கை முறை யில சாகுபடி நிலக்கடலையில பூச்சி, நோய்த்தாக்குதல் ரொம்பக் குறைவு. கடலை நல்லா திரட்சியாவும் இருந்துச்சு. அதைத் தொடர்ந்து காய்கறிகளையும் இயற்கை முறையிலயே சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். என்கிட்ட 5 மாடுகள் இருக்கு. அதனால இயற்கை விவசாயத் துக்குத் தேவையான மாட்டுச் சாணம், சிறுநீர் தேவையான அளவுக்குக் கிடைச்சிடுது. இயற்கை இடுபொருள்களை நானே என்னோட தோட்டத்துல தயார் செஞ்சுக்குறேன். அதனால பெருமளவு செலவு குறையுது. கடந்த 6 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு வர்றேன். இதனால நிறைய பலன் அடைஞ்சுக்கிட்டு இருக்கேன். என்கிட்ட மொத்தம் 4 ஏக்கர் நிலம் இருக்கு. இப்ப தலா ஒரு ஏக்கர்ல தர்பூசணி, நிலக்கடலை, காய்கறிகள், கொய்யா பயிர் பண்ணியிருக்கேன்’’ என்று சொன்னவர், தர்பூசணி சாகுபடி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“கோடையில தர்பூசணிக்கு அதிக விற்பனை வாய்ப்பு இருக்குறதுனால, கடந்த ரெண்டு வருஷமா இதைச் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன். உத்தரவாதமான லாபம் கிடைச்சிடுது. வெயில் வாட்டி எடுக்கக்கூடிய ஏப்ரல் - மே மாதங்கள்ல அறுவடைக்கு வர்ற மாதிரி, இதைப் பயிர் பண்ணுவேன். இதனால் நல்ல விலை கிடைக்குது. இந்த வருஷம் பயிர் பண்ணின தர்பூசணி, இப்பதான் அறுவடைக்கு வர ஆரம்பிச்சிருக்கு’’ என்று சொன்னவர், தர்பூசணி சாகுபடியில் கடந்த ஆண்டு கிடைத்த மகசூல் மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அட்டவணை
அட்டவணை

“போன வருஷம் ஒரு ஏக்கர்ல சாகுபடி செஞ்ச தர்பூசணியில 11,000 கிலோ பழங்கள் கிடைச்சது. ஒரு பழம் குறைந்தபட்சம் 2 கிலோவுல இருந்து அதிகபட்சமா 10 கிலோ வரைக்கு எடை இருந்துச்சு. ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 8 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 15 ரூபாய் வரைக்கும் விலை கிடைச்சது. போன வருஷம் உற்பத்தி செஞ்ச தர்பூசணி பழங்களை மொத்த வியாபாரி கள்கிட்டதான் விற்பனை செஞ்சேன். ஒரு கிலோவுக்கு சரசாரியா 10 ரூபாய் வீதம் 11,000 கிலோ பழங்கள் விற்பனை மூலம் 1,10,000 வருமானம் கிடைச்சது. உழவு முதல் அறுவடை வரை 19,500 ரூபாய் செலவாச்சு. ஆக, ஒரு ஏக்கர் தர்பூசணி மூலம் செலவு போக, மீதி 90,500 ரூபாய் லாபம் கிடைச்சது. இந்த வருஷம் நானே கடை போட்டு மக்கள்கிட்ட நேரடியா விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அதனால, போன வருஷத்தைவிட இந்த வருஷம் எனக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.


தொடர்புக்கு, ஶ்ரீதர்,

செல்போன்: 99433 33729

இப்படித்தான் சாகுபடி!

ஒரு ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்ய விவசாயி ஶ்ரீதர் சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை பட்டத்தில் இருந்தே தர்பூசணி சாகுபடியைத் தொடங்கலாம். ஆனால், சந்தை வாய்ப்பும், அதிக தேவையும் பங்குனி முதல் ஆனி மாதங்கள் வரை இருக்கும். அதனால் இந்த மாதங்களில் அறுவடைக்கு வருவது போல சாகுபடியைத் தொடங்கினால் நல்ல விலை இருக்கும். எந்தப் பட்டத்தில் சாகுபடியைத் தொடங்குகிறோமோ அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் 2 முறை உழவு செய்துவிட்டு நிலத்தைக் காயவிட வேண்டும். பின்னர், குழிக்கு குழி 6 அடி, வரிசைக்கு வரிசை 6 அடி என்ற இடைவெளி விட்டு, 1 அடி ஆழம், 1 அடி சுற்றளவுக்குக் குழி எடுக்க வேண்டும். குழியில் 2 கிலோ மாட்டு எருவைப் போட்டு, 5 நாள்கள் வரை ஆற விட வேண்டும்.

குழி எடுத்ததுமே சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வேண்டும். விதை ஊன்றுவதற்கு முந்தைய நாள் குழியை ஈரப்படுத்த வேண்டும். மறுநாள் ஒரு குழிக்கு 3 விதை வீதம் ஊன்றி தண்ணீர் விட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை தேவைப்படும். 1 லிட்டர் ஜீவாமிர்தத்தில் 50 கிராம் சூடோமோனஸை கலந்து கரைசல் தயார் செய்ய வேண்டும். அக்கரைசலில் தர்பூசணி விதைகளைப் போட்டு பிசைந்து நிழலில் ஒருமணி நேரம் காயவைத்து, அதன் பிறகு சாகுபடி நிலத்தில் விதைகளை ஊன்ற வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதால் வேர் அழுகல் மற்றும் வேர் பூச்சித்தாக்குதல் தடுக்கப்படும்.

தர்பூசணி அறுவடையில்
தர்பூசணி அறுவடையில்

விதை ஊன்றிய 5 முதல் 7-வது நாளில் முளைப்பு தெரியும். 15-வது நாளில் முதல் களை எடுக்க வேண்டும். 20-ம் நாளில் இருந்து 10 நாள்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் அமுதக் கரைசலை பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 40-ம் நாள் மீண்டும் களை எடுக்க வேண்டும். விதைப்பு செய்த 25 நாள்களுக்குப் பிறகு, கொடி வீசத் தொடங்கும். அந்த நேரத்தில் இலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இலைகளில் சிறு சிறு துளைகள் காணப்படுவதே அதன் அறிகுறியாகும். இதைக் கவனிக்காவிட்டால் இலை முழுவதையும் தின்று இதன் தாக்குதல் அதிகமாகி செடியையே பட்டுப்போக வைத்துவிடும். இதைத் தவிர்க்க 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வீதம் மூலிகைக் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

30-வது நாளில் பூ பூக்கும். 40 நாள்களுக்குப் பிறகு பிஞ்சு பிடிக்கும். 35 மற்றும் 45-ம் நாள்... 10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி மீன் அமிலம் கலந்து கைத்தெளிப்பனால் தெளிக்க வேண்டும். இதனால் காய்கள் நன்கு பருமனாவதுடன் இனிப்புச்சுவையும் கூடும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் 60-ம் நாள் அறுவடை செய்யத் தொடங்கலாம். வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தால், 65 நாள்களுக்குப் பிறகு அறுவடையைத் தொடங்கலாம். தலா 5 நாள்கள் இடைவெளி விட்டு மூன்று முறை அறுவடை செய்யலாம். பழத்தை தட்டிப்பார்க்கும்போது டொப்... டொப் என கனமான ஓசை கேட்டால் முதிர்ச்சியடைந்துவிட்டது எனத் தெரிந்துகொள்ளலாம். அறுவடை செய்த பழங்களை அதிகபட்சமாக 15 நாள்கள் வரை இருப்பு வைக்கலாம்.