நாட்டு நடப்பு
Published:Updated:

33 சென்ட்... ரூ.2,20,000... மிளகாய் சாகுபடியில் வளமான வருமானம்!

மிளகாய்த் தோட்டத்தில் ரவிச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
மிளகாய்த் தோட்டத்தில் ரவிச்சந்திரன்

மகசூல்

தஞ்சையைச் சேர்ந்த கட்டடப் பொறியாளர் ரவிச்சந்திரன், 33 சென்ட் பரப்பில், இயற்கை விவசாயத்தில் மிளகாய் சாகுபடி செய்து நிறைவான விளைச்சல் எடுத்து வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

தஞ்சாவூர் மருத்துக்கல்லூரி சாலையில் உள்ள பாரதி நகரில் வசித்து வரும் இவர், அங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வல்லம் வடக்குசேத்தியில் விவசாயம் செய்து வருகிறார். 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவருடைய நிலத்தில், மிளகாய், செடிமுருங்கை, சம்பங்கி உள்ளிட்ட பலவிதமான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது மிளகாய் செழிப்பாக விளைந்து, நிறைவான மகசூல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

மிளகாய்த் தோட்டத்தில் ரவிச்சந்திரன்
மிளகாய்த் தோட்டத்தில் ரவிச்சந்திரன்

ஒரு பகல்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். நன்கு பழுத்த மிளகாய் பழங்களை அறுவடை செய்து கொண்டிருந்த ரவிச்சந்திரன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘சமீபகாலமாக இந்தப் பகுதியில நிறைவ விவசாயிகள் மிளகாய் சாகுபடியில ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி அதிகமா பயன்படுத்தினால்தான் இதுல வெற்றிகரமா விளைச்சல் எடுக்க முடியுங்கற ஒரு தவறான கருத்து, இந்தப் பகுதி விவசாயிகள் மத்தியில பரவலா இருக்கு. ஆனா, நான் இயற்கை முறையில இவ்வளவு செழிப்பா விளைச்சல் எடுக்குறதைப் பார்த்து பலரும் ஆச்சர்யப் படுறாங்க. மண்புழுவுரம், எண்ணெய் எடுக்கப்படாத வேப்பங்கொட்டைத்தூள், பஞ்சகவ்யா, மீன் அமிலம், வேப்ப எண்ணெய் கரைசல்... இதெல்லாம்தான் பயன்படுத்திக் கிட்டு இருக்கேன். இதனால் இங்கவுள்ள மிளகாய் செடிகள், பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாம செழிப்பா விளைஞ்சு, நிறைவான மகசூல் கொடுத்துக்கிட்டு இருக்கு. களைகள் கட்டுப்படுறதுக்காகவும் மண்ணோட ஈரத் தன்மையைத் தக்க வைக்குறதுக்காகவும், பாலித்தின் விரிப்பு போட்டு மூடாக்கு அமைச்சிருக்கேன். மிளகாய் செடிகளுக்கு ஒரே சீராகத் தண்ணீர் கிடைக்குறதுக்காகவும், தண்ணியை சிக்கனப் படுத்துறதுக்காகவும் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சிருக்கேன்’’ எனத் தெரிவித்தவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

மல்ச்சீங் ஷீட்டை பயன்படுத்தி மிளகாய் சாகுபடி
மல்ச்சீங் ஷீட்டை பயன்படுத்தி மிளகாய் சாகுபடி

‘‘என்னோட பூர்வீகம், தஞ்சாவூர் மாவட்டத்துல உள்ள சாலியமங்கலம். நாங்க விவசாயக் குடும்பம். என்னோட அப்பா பஞ்சாயத்து போர்டு கிளார்க்கா வேலை பார்த்ததுனால, அம்மாதான் விவசாயத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் முதுகலை கட்டடப் பொறியியல் பட்டப்படிப்பு படிச்சுட்டு, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துல கட்டடக்கலை வல்லு நராகவும், திட்ட மேலாளராகவும் 26 வருஷம் வேலைபார்த்தேன். ஆனாலும், அந்தக் காலகட்டத்துல விவசாயத்தோடு எனக்கு நேரடி தொடர்பு இருந்துகிட்டே இருந்துச்சு. நான் வேலைபார்த்த பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான விவசாயப் பண்ணையோட மேம்பாட்டுலயும் பங்களிப்பு செலுத்திக்கிட்டு இருந்தேன். குறிப்பா, மண்புழுவுரம் தயாரிப்புல கவனம் செலுத்தினேன். விடுமுறை நாள்கள்ல என்னோட சொந்த ஊரான சாலியமங்கலத் துக்குப் போயி, அம்மாவுக்கு உதவியா விவசாய வேலைகள் செய்வேன். இதுக்கிடையிலதான், நான் பார்த்துக்கிட்டு இருந்த வேலையை விட்டுட்டு, 2018-ம் வருஷம், உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத்ல உள்ள சந்தோஷ் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகத்துல முன்னோடி திட்ட மேலாளரா வேலைக்குச் சேர்ந்தேன்.

காய்கறிகள் சாகுபடி
காய்கறிகள் சாகுபடி

சொந்த ஊருல வசிக்கணுங்கற எண்ணம் ஏற்பட்டதுனாலயும், பசுமை விகடன் ஏற்படுத்திய தாக்கத்துனாலயும், இயற்கை விவசாயம் செய்யணுங்கற ஆசை அதிகமானதுனாலயும், கடந்த வருஷம் தஞ்சாவூருக்கு நிரந்தமா திரும்பி வந்துட்டேன். இப்ப 4 ஏக்கர் குத்தகை நிலத்துல இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். இதுமட்டு மல்லாம, கூடுதல் வருமானத்துக்காக வீடுகள் கட்டிக்கொடுக்கும் தொழிலும் செஞ்சுகிட்டு இருக்கேன். தினமும் காலையில 7 மணியில இருந்து 11 மணி வரைக்கும் பண்ணையில இருப்பேன். மதியம் 2 மணிக்கு மறுபடியும் பண்ணைக்கு வந்துட்டு, சாயந்தரம் வரைக்கும் இங்கதான் இருப்பேன்.

இந்த நிலத்தை நான் குத்தகைக்கு வாங்குறதுக்கு முன்னாடி, இங்க ரசாயன விவசாயம் நடந்துகிட்டு இருந்துச்சு. அதனால, மண்ணோட தன்மையை மாத்துறதுக்காக, அடியுரமா ஏக்கருக்கு 17 டன் வீதம் எரு போட்டு உழவு ஓட்டினேன். தலா 1 ஏக்கர்ல செடி அவரை, சம்பங்கி, செடி முருங்கை, 33 சென்ட்ல மிளகாய் பயிர் பண்ணினேன். மீதி பரப்புல மண்புழு உர உற்பத்தி நிலையத்தை ஆரம்பிச்சேன்.

மண்புழு உரம்
மண்புழு உரம்

செடி அவரையில் செழிப்பான விளைச்சல்

செடி அவரையில காய்ப்பு முடிஞ்சுடுச்சு. ஏக்கருக்கு 7 டன் காய்கள் மகசூல் கிடைச்சது. எல்லாச் செலவுகளும் போக 2,50,000 ரூபாய் லாபம் கிடைச்சது. சம்பங்கியும், செடி முருங்கையும் இனிமே காய்ப்புக்கு வரும்’’ என்று சொன்னவர், மிளகாய் சாகுபடி குறித்த அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

‘‘சாகுபடி செஞ்சுருக்குற மிளகாய் ரகம், பங்காரம் சில்லிங்கற வீரிய ரகம். இதோட தனித்துவம் என்னென்னா, இந்த மிளாகாய் ரொம்ப நீளமா இருக்கும். பொதுவா மற்ற மிளகாய் ரகங்கள் அதிகபட்சம் 10 செ.மீ தான் நீளம் இருக்கும். ஆனா, இந்த ரகம், 15 செ.மீ நீளத்துல இருக்கு. இதுல விதைகளோட எண்ணிக்கை, காரத்தன்மை, சதைத்தன்மை எல்லாமே அதிகமா இருக்கும்.

செடி முருங்கை
செடி முருங்கை

இதோட மொத்த பயிர்காலம், ஒன்றரை வருஷம். விதைப்பு செஞ்சதுல இருந்து இப்ப 150 நாள்கள் ஆகுது. கடந்த இரண்டரை மாசமா மகசூல் கிடைச்சுக்கிட்டு இருக்கு. வாரம் ஒரு முறை 75 கிலோ மிளகாய் பழம் பறிக்குறேன். அதை நாலஞ்சு நாள்கள் நல்லா வெயில்ல காய வெச்சோம்னா, 20 கிலோ வரமிளகாய் கிடைக்குது. இதுவரைக்கும் 10 முறை அறுவடை செஞ்ச 750 கிலோ மிளகாய் பழங்களை வெயில்ல காய வச்சது மூலம் 200 கிலோ வரமிளகாய் கிடைச்சுருக்கு.

வாழை
வாழை

இயற்கை முறையில உற்பத்தி செஞ்ச துனால, மக்கள் இதை விரும்பி வாங்கு றாங்க. ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் வீதம் மொத்தம் 60,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. இடுபொருள்கள், பறிப்புக் கூலி உள்ளிட்ட செலவுகள் போக 55,000 ரூபாய் லாபம் கிடைச்சுருக்கு. இன்னும் 12 - 13 மாசங்களுக்கு மகசூல் கிடைக்கும். இது மாதிரி இன்னும் குறைந்தபட்சம் 3 தடவை லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்.

அட்டவணை
அட்டவணை

ஆக, 33 சென்ட் மிளகாய் சாகுபடி மூலம் மொத்தம் 2,20,000 ரூபாய் லாபம் கிடைக்கும். உழவு, பார், மூடாக்கு விரிப்பு, சொட்டுநீர்ப் பாசனம், நாற்றுகள், நடவுக்கூலி உட்பட எல்லாம் சேர்த்து ஆரம்பகட்ட செலவுகளா 40,000 ரூபாய் செலவு செஞ்சுருக்கேன். பார், மூடாக்கு விரிப்பு, சொட்டுநீர்ப் பாசன குழாய்களுக்கு ஒரு முறை முதலீடு செஞ்சா, இரண்டு முறை மிளகாய் சாகுபடி செய்யலாம்’’ எனத் தெரிவித்தார்.


தொடர்புக்கு: ரவிச்சந்திரன்

செல்போன்: 95978 96873

இப்படித்தான் சாகுபடி

33 சென்ட் பரப்பில் பங்காரம் வீரிய ரக மிளகாய் சாகுபடி செய்ய, ரவிச்சந்திரன் சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

மண்புழு உரம்
மண்புழு உரம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் உழவு ஓட்டி, 3.5 அடி அகலம், முக்கால் அடி உயரம் கொண்ட பார் அமைக்க வேண்டும். பாருக்கு பார் 1.5 அடி இடைவெளி இருக்க வேண்டும். இதுபோல் அதிக இடைவெளி இருந்தால், இதில் நடந்து சென்று, மிளகாய் செடிகளுக்கு இடுபொருள்கள் கொடுப்பதற்கும், மிளகாய் பழங்களை எளிதாகப் பறிப்பதற்கு வசதியாகவும் இருக்கும். சொட்டுநீர்ப் பாசனத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கு வசதியாக இருக்கும். பார் அமைத்த பிறகு அதன் இரு ஓரங்களிலும் சொட்டுநீர்க் குழாயை அமைக்க வேண்டும். அதன் பிறகு பாரின் மீது பாலித்தின் விரிப்பை போட்டு மூடாக்கு அமைக்க வேண்டும்.

வரிசைக்கு வரிசை 2 அடி, செடிக்கு செடி 2 அடி இடைவெளியில்... 6 அங்குலம் சுற்றளவு, 6 அங்குலம் ஆழத்துக்குக் குழி எடுத்து, 500 கிராம் மண்புழு உரம், 250 கிராம் வேப்பங்கொட்டைத்தூள் (எண்ணெய் எடுக்கப்படாதது) கலந்து இட வேண்டும். அதன் பிறகு மிளகாய் நாற்று நடவு செய்ய வேண்டும். 3,600 நாற்றுகள் தேவைப்படும். 15-ம் நாள் 18 லிட்டர் தண்ணீருக்கு 100 மி.லி வீதம் வேப்ப எண்ணெய், 10 கிராம் காதி சோப்பு கலந்து தெளிக்க வேண்டும்.

மிளகாய்
மிளகாய்


30-ம் நாள் 18 லிட்டர் தண்ணீருக்கு 100 மி.லி வீதம் புங்கணெண்ணெய், 10 கிராம் காதி சோப்பு கலந்து தெளிக்க வேண்டும். 45-ம் நாள் 18 லிட்டர் தண்ணீருக்கு 500 மி.லி வீதம் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 55-ம் நாள் 18 லிட்டர் தண்ணீருக்கு 100 மி.லி வீதம் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். விதைப்பு செய்ததிலிருந்து 25, 45, 65 ஆகிய நாள்களில் மண் வளத்தை அதிகப்படுத்துவதற்காகவும், எறும்பு மற்றும் வேர்ப்பூச்சித்தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் செடியின் வேர்பகுதியில் 500 கிராம் மண்புழு உரம், 250 கிராம் வேப்பம்பிண்ணாக்கு கலந்து இட வேண்டும். மகசூல் கிடைக்கத் தொடங்கிய பிறகு, 15 நாள்கள் இடைவெளியில், சுழற்சி முறையில் வேப்ப எண்ணெய் கரைசல், புங்கணெண்ணெய் கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலம், மண்புழு உரம்-வேப்பங்கொட்டைத்தூள் கலவை கொடுக்க வேண்டும். மண்ணில் எப்போதும் ஈரத்தன்மை இருக்கும் அளவுக்கு சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

வரமிளகாய் கொடுக்கும் வாய்ப்பு

‘‘மிளகாயை அறுவடை செஞ்ச உடனேயே விற்பனை செஞ்சாகணுங்கற கட்டாயம் இல்லை. செடியிலேயே மிளகாயை நல்லா பழுக்கவிட்டு, பறிச்சு, வெயில்ல காயவெச்சு, வரமிளகாயாக மாத்திட்டோம்னா, இரண்டு வருஷம் வரைக்கும் தாங்கும். அதிக விலை கிடைக்கிற வரைக்கும் காத்திருந்து, அதுக்குப் பிறகு விற்பனை செஞ்சுக்கலாம்’’ என்கிறார் ரவிச்சந்திரன்.

மிளகாய்த் தோட்டத்தில் ரவிச்சந்திரன்
மிளகாய்த் தோட்டத்தில் ரவிச்சந்திரன்

வேப்பங்கொட்டைத்தூள்

“எங்க பகுதியில எறும்புகளோட தொந்தரவு அதிகம். பயிர்களோட வேர்களைக் கடிச்சுப் போட்டுடும். இதைக் கட்டுப்படுத்துறக்காகத்தான் எண்ணெய் எடுக்கப்படாத வேப்பங்கொட்டைத்தூளை மண்புழு உரத்துல கலந்து அடியுரமா கொடுக்குறேன். இதுக்கு அருமையான பலன் கிடைக்குது. வேர்ப்பூச்சிகள், பூஞ்சண பாதிப்புகளும் தடுக்கப்படுது.

பொதுவா விவசாயிகள் பூச்சி, நோய்த்தாக்குதல்களைக் கட்டுப்படுத்த வேப்பம்புண்ணாக்கு பயன்படுத்துறாங்க. எண்ணெய் எடுக்கப்பட்டதுனால, அதுல கசப்புத்தன்மை பெருமளவு குறைஞ்சுடும். இயல்பான வாடையும் அதுல இருக்காது. அதனால அதுக்கு உரிய பலன் கிடைக்காது. என்னோட அனுபவத்துல எண்ணெய் எடுக்கப்படாத வேப்பங்கொட்டைத்தூள்தான் சிறப்பானது’’ என்கிறார் ரவிச்சந்திரன்.

காய்கறிகள்
காய்கறிகள்

தோட்டக்கலைத்துறை மானியம்

‘‘மண்புழு உரம் உற்பத்தி நிலையம் தொடங்க, தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத் துறையில இருந்து 50,000 ரூபாய் மானியம் கிடைச்சது. 20 அடி நீளம், 4 அடி அகலம், 2.5 அடி உயரம் கொண்ட 3 சிமென்ட் தொட்டிகள் அமைச்சு, அதுக்கான மேற்கூரைகள் அமைக்க 1,21,000 எனக்கு செலவாச்சு. இதுக்கு 50,000 ரூபாய் மானியம் கிடைச்சது. அரை ஹெக்டேர்ல சம்பங்கி சாகுபடி செய்ய 30,000 ரூபாய் மானியம் கிடைச்சது. ஒரு ஹெக்டேர்ல செடி முருங்கை சாகுபடி செய்ய கன்றுகள் மற்றும் இடுபொருள்கள் மானியமா 20,000 ரூபாய் கிடைச்சது. தோட்டக்கலைத்துறையில என்னென்ன மானிய திட்டங்கள் இருக்குனு தெரிஞ்சுகிட்டு மற்ற விவசாயிகளும் இதை எல்லாம் பயன்படுத்திக்கணும்ங்கற நோக்கத்துலதான் இதைச் சொல்றேன்’’ என்கிறார் ரவிச்சந்திரன்.