
மகசூல்
நிறைவான பராமரிப்பில், நிறைவான வருமானம் கிடைப்பதால் பந்தல் வகை காய்கறிகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம்காட்டி வருகிறார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், தென்காசியைச் சேர்ந்த விவசாயி கணேசன். இவர், இயற்கை விவசாயத்தில் குட்டை ரக புடலையும், நீள ரக பீர்க்கனும் சாகுபடி செய்து வெற்றிகரமாக விளைச்சல் எடுத்து வருகிறார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது, கணேசனின் காய்கறித் தோட்டம். ஒரு காலை வேளையில் இந்தத் தோட்டத்துக்குச் சென்றோம். பந்தலுக்குக் கீழ் புடலை மற்றும் பீர்க்கன் காய்கள் காற்றில் மெதுவாக அசைந் தாடிக்கொண்டிருந்தன. காய்களைப் பறித்து சாக்கில் அடுக்கிக்கொண்டிருந்த விவசாயி கணேசன் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றார். இளநீர் கொடுத்து உபசரித்தவர், தோட்டத்தை சுற்றிக்காண்பித்தபடியே பேசத் தொடங்கினார்.

இது, அம்மா காட்டிய பாதை
‘‘சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகள்ல காய் கறிகள், பூக்கள் சாகுபடி அதிகம். குறிப்பா, சங்கரன் கோவில் பகுதியில விளையுற பூக்களுக்குத் தனி மவுசு உண்டு. என்னோட அப்பாவும் மற்ற விவசாயிகள் மாதிரி காய்கறிகள், பூக்கள் சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தார். அப்பாவோட மறைவுக்குப் பிறகு என்னோட அம்மா விவசாயத்தைக் கவனிக்க ஆரம்பிச்சாங்க. நான் பி.ஏ பட்டப்படிப்பு முடிச்சதும், மேற்கொண்டு என்ன செய்யலாம்ங்கற தீவிர யோசனையில இருந்தேன். அந்த சமயத்துலதான் அம்மா சொன்னாங்க... ‘விவசாயம்தான் நமக்கு சோறு போட்டுக்கிட்டு இருக்கு. அதுல முழுமையா கவனம் செலுத்தினாலே வாழ்க்கை யில நீ முன்னுக்கு வந்துடலாம். வெளியில எங்கேயும் வேலைக்குப் போயி, கஷ்டப்பட வேண்டியதில்லை’னு சொல்லி எனக்கு தெளிவான ஒரு பாதையை காட்டி னாங்க. முழு மனசோடு விவசாயத்துல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.
கத்திரி, தக்காளி, வெண்டை உட்பட பல வகையான காய்கறிகளை ரசாயன முறையிலதான் சாகுபடி செஞ்சேன். பூச்சி, நோய்த் தாக்குதல்கள் அதிகமா இருந்துச்சு, அதைக் கட்டுப்படுத்த முடியாம ரொம்ப சிரமப்பட்டேன். குறைவான மகசூல் கிடைச்சதுனாலயும், ரசாயன இடுபொருள் களுக்கு அதிகமா செலவு செஞ்சதுனாலயும் குறைவான லாபம்தான் கிடைச்சது. பல நேரங்கள்ல மனசு ரொம்ப விரக்தி அடைஞ்சுப் போயிருக்கேன். ஆனாலும்கூட விவசாயத் தைக் கைவிட்டுடக் கூடாதுங்கறதுல உறுதியா இருந்தேன். கிடைச்ச வரைக்கும் லாபம்னு நினைச்சு அப்பப்ப மனசை தேத்திக்கிட்டு விவசாயத்தைத் தொடர்ந்தேன்.
இயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டிய நபர்...
இந்த நிலையிலதான் 10 வருஷத்துக்கு முன்னாடி, தோட்டக்கலைத்துறை மூலம் மானிய திட்டத்துல சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் முயற்சியில இறங்கினேன். அதுதான் என்னோட விவசாயத்துல திருப்பு முனை ஏற்பட ஒரு முக்கியம் காரணமா இருந்துச்சு.

சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு தரக்கூடிய ஒரு தனியார் நிறுவனத்தோட ஊழியர் என்னோட தோட்டத்துக்கு வந்திருந்தார். காய்கறிச் செடிகள்ல ஏற்படக் கூடிய பூச்சி, நோய் பாதிப்புகள் பத்தியும், ரசாயன இடு பொருள்களுக்கு நிறைய செலவு செய்றதுனால, உழைப்புக்கேத்த லாபம் கிடைக்குறது இல்லைங்கற என்னோட ஆதங்கத்தையும் அவர்கிட்ட யதார்த்தமா சொன்னேன். அவர்தான் இயற்கை விவசாயத்தோட மகத்துவங்களைப் பத்தி எனக்கு எடுத்துச் சொன்னார்.
நம்பிக்கை கொடுத்த பசுமை விகடன்
அவர் சொன்ன தகவல்கள் என்னை ரொம்பவே யோசிக்க வச்சது. உடனடியா, இணையதளங்கள் மூலம் இயற்கை விவசாயம் பத்தின தேடல்ல இறங்கினேன். அந்த சமயத்துலதான் பசுமை விகடன்ல வெளியான வெற்றி விவசாயிகளோட இயற்கை விவசாய அனுபவங்கள், என் மனசுல பெரிய தாக்கத் தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துனுச்சு. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகள்ல இயற்கை விவசாயம் செஞ்சுட்டு வர்ற சில விவசாயிங்களோட தோட்டங்களை நேர்ல போயி பார்த்தேன். அப்பதான், அழகனேரி கிராமத்துல இயற்கை முறையில பிச்சிப்பூ, கனகாம்பரம் சாகுபடி செஞ்சுகிட்டு வர்ற மாடசாமி எனக்கு அறிமுகமானார்.
அவரோட தோட்டத்தைப் பார்த்ததுமே உடனடியா இயற்கை விவசாயம் செய்ய ணும்னு முடிவுக்கு வந்தேன். அந்தளவுக்கு அங்கவுள்ள பயிர்கள் ரொம்ப செழிப்பா இருந்துச்சு. அவர் தயார் பண்ணி வச்சிருந்த இடுபொருள்களை ரொம்ப வியப்பா பார்த்தேன். அவர்தான் இயற்கை விவசாய தொழில்நுட்பங்களை எனக்கு துல்லியமா சொல்லிக் கொடுத்தார்.
இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு முடிவெடுத்ததுமே, மண்ணை வளப்படுத் துறதுக்காக... ஆட்டுக்கிடை கட்டினதோட மட்டுமல்லாம, ஏக்கருக்கு 7 டன் வீதம் எரு போட்டு, பலதானிய விதைப்பும் செஞ்சேன். மண்ணை வளப்படுத்தினேன்.
கொடி வகை காய்கறிகளுக்கு மக்கள்கிட்ட அதிக வரவேற்பு இருக்குறதுனால... கடந்த அஞ்சு வருஷமா, புடலை, பீர்க்கன், பாகல் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். வெண்டி, கத்திரி உள்ளிட்ட மற்ற காய்கறிகளையும் இயற்கை முறையிலதான் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 3 ஏக்கர்.

இப்ப 50 சென்ட்ல புடலையும், 25 சென்ட் பரப்புல பீர்க்கனும் பறிப்புல இருக்கு. 25 சென்ட்ல பாகல் விதை ஊன்றியிருக்கேன். ஒரு ஏக்கர்ல கத்திரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்றதுக்காகவும், மீதி ஒரு ஏக்கர்ல கொய்யா சாகுபடி செய்றதுக் காகவும் நிலத்தை தயார்படுத்திக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னவர், புடலை, பீர்க்கன் சாகுபடி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.
‘‘இடுபொருள்களைப் பொறுத்தவரைக்கும்... அடியுரமா எரு கொடுக்குறேன். விதைப்பு செஞ்ச பிறகு, பயிர் வளர்ச்சி ஊக்கிகளா பஞ்சகவ்யா, செறிவூட்டப்பட்ட வேஸ்ட் டி கம்போஸர், கடலைப்புண்ணாக்கு கரைசல் கொடுக்குறேன். பூச்சி, நோய்த் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த, இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் கரைசலும், எருக்கு இலை கரைசலும் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இடுபொருள்களுக்கு செலவும் ரொம்ப குறைவாதான் ஆகுது.

வருமானம்
இரண்டு நாள்களுக்கு ஒரு தடவை காய்களைப் பறிச்சு சங்கரன்கோவிலில் உள்ள காய் கறிச் சந்தைக்கு எடுத்துக்கிட்டு போயி, வியாபாரிகள்கிட்ட விற்பனை செய்றேன். குட்டைப் புடலையில இரண்டு மாசத்துக்குத் தொடர்ச்சியா காய்கள் கிடைக்கும். பீர்க்கன்ல ஒன்றரை மாசம் மகசூல் கிடைக்கும். போன முறை 50 சென்ட் பரப்புல சாகுபடி செஞ்ச குட்டை புடலை யில மொத்தம் 7,500 கிலோ காய்கள் மகசூல் கிடைச்சது. ஒரு கிலோவுக்கு சராசரி விலையா 15 ரூபாய் வீதம், மொத்தம் 1,12,500 ரூபாய் வருமானம் கிடைச்சது. 25 சென்ட் பரப்புல சாகுபடி செஞ்ச நீள பீர்க்கன்ல போன தடவை 2,500 கிலோ காய்கள் மகசூல் கிடைச்சது. ஒரு கிலோவுக்கு சராசரியா 25 ரூபாய் வீதம், 62,500 ரூபாய் வருமானம் கிடைச்சது.
ஆக, மொத்தம் இந்த 75 சென்ட் பரப்புல சாகுபடி செஞ்ச கொடி வகை காய்கறிகள் மூலம் மொத்தம் 1,75,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல 48,400 ரூபாய் செலவு போக, 1,26,600 லாபமாக் கிடைச்சது. இந்த முறையும் அதே அளவுக்கு லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்’’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தொடர்புக்கு, கணேசன்,
செல்போன்: 94438 25925
ஊடுபயிர் மூலம் தனி வருமானம்
‘‘புடலை சாகுபடிக்கு வரிசைக்கு வரிசை 15 அடி இடைவெளி விடுறது வழக்கம். இதுல ஊடுபயிரா ஏதாவது சாகுபடி செய்யலாம்னு தோணுச்சு. போன வருஷம் புடலை வரிசைக்கு இடையில தக்காளி பயிர் பண்ணினேன். பீர்க்கன் சாகுபடிக்கும் வரிசைக்கு வரிசை 15 அடி இடைவெளி விடுறதுனால, அதுலயும் ஊடுபயிரா தக்காளி சாகுபடி செஞ்சேன். மொத்தம் 75 சென்ட் பரப்புல ஊடுபயிரா தக்காளி சாகுபடி செஞ்சது மூலம், 3,250 கிலோ மகசூல் கிடைச்சது. ஒரு கிலோ தக்காளிக்கு சராசரியா 12 ரூபாய் வீதம் விலை கிடைச்சது. அந்த வகையில தக்காளி விற்பனை மூலமா 39,000 ரூபாய் உபரி வருமானம் கிடைச்சது.

இந்த முறை 50 சென்ட் புடலைக்கு ஊடுபயிரா தக்காளியும், 25 சென்ட் பீர்க்கனுக்கு ஊடுபயிரா செண்டுமல்லியும் சாகுபடி செஞ்சிருக்கேன். தக்காளி, செண்டுமல்லி ரெண்டுமே பறிப்புல இருக்கு. ஊடுபயிருக்குன்னு நாம எந்தப் பராமரிப்பும் செய்ய வேண்டியதில்ல. ஊடுபயிர் மூலம் கிடைக்குற வருமானம், முதன்மை பயிர்களான புடலை, பீர்க்கன் சாகுபடிக்கு ஆகுற செலவுகளை ஈடுகட்டிடும்’’ என்கிறார் கணேசன்.
ஆரம்பகட்ட செலவு
75 சென்ட் பரப்பில் கல் தூண்கள் ஊன்றி, பந்தல் அமைக்க 1,50,000 ரூபாய் செலவாகும். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க 60,000 ரூபாய் செலவாகும். இதற்கு ஒரு முறை முதலீடு செய்துவிட்டால் பல ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும்.
இப்படித்தான் சாகுபடி செய்யணும்!
50 சென்ட் பரப்பில் புடலை, 25 சென்ட் பரப்பில் பீர்க்கன் சாகுபடி செய்ய கணேசன் சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
சாகுபடி செய்வதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவின்போது அடியுரமாக 5 டன் எரு இட வேண்டும். பின்னர், கல் பந்தல் அமைக்க வேண்டும். நிலத்தின் எல்லைப் பகுதியில் தலா 10 அடி இடைவெளியிலும், உள் வரிசையில் தலா 15 அடி இடைவெளியிலும் கல்தூண்கள் நட வேண்டும். தூண்களின் உயரம் 8 அடி இருக்க வேண்டும். பின்னர், கம்பி மற்றும் பிளாஸ்டிக் வயர்களைப் பயன்படுத்தி பந்தல் அமைக்க வேண்டும். நிலத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்த பிறகு, விதை ஊன்ற வேண்டும்.

வரிசைக்கு வரிசை 15 அடி, செடிக்குச் செடி 2 அடி இடைவெளியில் அரை அங்குலம் ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும். 50 சென்ட் பரப்பில் புடலை பயிர் செய்ய 400 கிராம் விதையும், 25 சென்ட் பரப்பில் பீர்க்கன் பயிர் செய்ய 200 கிராம் விதையும் தேவைப்படும். விதை ஊன்றுவதற்கு முன்பாகப் பஞ்சகவ்யாவில் விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியம். பீர்க்கனில் 4 முதல் 5-வது நாளிலும், புடலையில் 8 முதல் 9-வது நாளிலும் முளைப்பு தெரியும். பீர்க்கன் கொடியை 20 முதல் 25-வது நாளிலும், புடலைக் கொடியை 25 முதல் 30-வது நாளிலும் கயிறு கட்டி பந்தலில் ஏற்றி விட வேண்டும்.
விதை ஊன்றிய 15-வது நாளிலிருந்து 10 நாள்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி வீதம் பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 20-வது நாளிலிருந்து 7 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி செறிவூட்டப்பட்ட வேஸ்ட் டீ கம்போஸர் கரைலைக் கலந்து பாசன நீரில் கலந்து விட வேண்டும். 20-வது நாளில் 300 - 500 மி.லி வீதம் கடலைப்பிண்ணாக்கு கரைசலை தூரில் ஊற்ற வேண்டும். 200 லிட்டர் கொள்ளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் 25 கிலோ கடலைப்பிண்ணாக்கை கலந்து 5 - 7 நாள்கள் வரை வைத்திருந்தால் கடலைப்பிண்ணாக்குக் கரைசல் தயார்.

30-வது நாளில் பீர்க்கனிலும், 45-வது நாளில் புடலையிலும் பூக்கள் தென்படும். பூக்கத் தொடங்கியதிலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமிலத்தைக் கலந்து பாசன நீரில் கலந்து விட வேண்டும். பீர்க்கனில் 35-வது நாளிலும், புடலையில் 50-வது நாளிலும் பிஞ்சுகள் தென்படும். பூப்பூத்து பிஞ்சு இறங்கும் நேரத்தில் பழ ஈக்களின் தாக்குதல் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி எருக்கு இலைக்கரைசல் அல்லது 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க்கரைசலை கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். விதை ஊன்றியதிலிருந்து 50 முதல் 55-வது நாளில் பீர்க்கனும், 55 முதல் 60-வது நாளில் புடலையும் பறிப்புக்கு வரும். பந்தல் சாகுபடி முறை என்பதால் களைகள் அதிகம் இருக்காது. எனினும் தேவையைப் பொறுத்து களை எடுத்துக்கொள்ளலாம்.