மகாராஷ்டிராவில் ஒவ்வோர் ஆண்டும் மாம்பழம், திராட்சை, மாதுளை பழங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கும். அதுவும் கொங்கன் பகுதியில் விளையக்கூடிய அல்போன்சா மாம்பழம் மிகவும் பிரபலமாகும். இந்த மாம்பழம் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசு மாம்பழ விளைச்சலை அதிகரிக்க தேவையான ஆராய்ச்சிகளை செய்துகொண்டிருக்கிறது. சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அரான் என்ற கிராமத்தில் தத்தாத்ரேயா கட்கே என்ற விவசாயி தனது தோட்டத்தில் 7 ஏக்கரில் மாமரங்களை நட்டுள்ளார். அவர் ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு சற்று மாற்றி யோசித்து மாமரங்களுக்கு ஹோமியோபதி மருந்துகளையும் கொடுக்க ஆரம்பித்தார்.

இது குறித்து தத்தாத்ரேயா கூறுகையில், ``ஆரம்பத்தில் இயற்கை விவசாயம் செய்தேன். என் தோட்டத்தில் அனைத்து விதமான பழ மரங்களையும் நட்டு இருக்கிறேன். மாமரங்களை அதிக அளவில் நட்டுள்ளேன். அனைத்து நோய்களுக்கும் குணப்படுத்தக்கூடிய ஹோமியோபதி மருந்துகளை கர்நாடகா டாக்டர் வீரேந்திர குமார் பயன்படுத்துவது குறித்து கேள்விப்பட்டேன். உடனே நானும் சோதனை அடிப்படையில் மாமரத்துக்கு ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த ஆரம்பித்தேன்.
ஹோமியோபதி மருந்து பயன்படுத்த ஆரம்பித்த 10 நாள்களில் நல்ல மாற்றத்தைப் பார்க்க முடிந்தது. மாம்பழங்கள் வழக்கத்தை விட மிகவும் அதிக எடை கொண்டதாக இருந்தது. ஒரு மாம்பழத்தின் எடை 2.5 கிலோ வரை இருந்தது. இது போல் 2.5 கிலோ எடையுள்ள மாம்பழங்கள் விளையக்கூடிய 25 மரங்கள் எனது பண்ணையில் இருக்கிறது. இந்த 2.5 கிலோ எடையுள்ள மாம்பழங்கள் விளையக்கூடிய மரத்தை வேறு பல மாம்பழ ரக மரங்களைக் கொண்டு ஒட்டுதல் முறையில் இதை உருவாக்கி இருக்கிறோம்.

அதோடு பல்வேறு விதமான ஹோமியோபதி உரம் மற்றும் மருந்துகளையும் பயன்படுத்தி இந்த அளவுக்கு அதிக எடையுள்ள மாம்பழத்தை விளைய செய்துள்ளோம். சரத்பவார் மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்தபோதுதான் பழங்களின் விளைச்சலை அதிகரிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். எனவே, அவரின் நினைவாக 2.5 கிலோ எடையுள்ள மாம்பழத்துக்கு சரத்பவார் பெயரை சூட்டி இருக்கிறேன். எனது பழத்தோட்டத்துக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளனர். சோலாப்பூரில் சமீபத்தில் மாம்பழ கண்காட்சி நடந்தது. இதில் 2.5 கிலோ எடையுள்ள மாம்பழத்துக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது'' என்று தெரிவித்தார்.
பராமதி வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் ராஜேந்திர பவார் என்ற அறிவியல் விஞ்ஞானி விவசாயத்துக்கு ஹோமியோபதி மருந்தைப் பயன்படுத்துவது குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து வருகிறார். பராமதி கேவிகே விஞ்ஞானிகளும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக துவரை, தக்காளி, கோதுமை, கொத்தமல்லி பொன்ற பயிர்களுக்கு ஹோமியோபதி மருந்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்து பார்த்ததில் நல்ல மகசூல் கிடைத்துள்ளது.

டாக்டர் வீரேந்திர குமார், கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் ஹோமியோபதி மருத்துவம் படித்துள்ளார். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக ஹோமியோபதி மருந்தை விவசாயத்துக்கு பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு பராமதி வேளாண் ஆராய்ச்சி மையம், பராமதி கேவிகே அலுவலகமும் துணையாக இருந்தது. இதன் மூலம் இன்றைக்கு ஹோமியோபதி மருந்தை விவசாயத்துக்கு பயன்படுத்தும் முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி இருக்கின்றனர். மற்ற மாநில விவசாயிகளுக்கும் உதவி செய்ய வீரேந்திர குமார் முடிவு செய்துள்ளார்.